சிவப்பிரகாசம் குறிப்பிடும் மூவகை வாசகர்கள்

2

-முனைவர் த. சரவணன்

தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
தோன்றிய
நூல்எனும் எவையும் தீதாகா”

மேற்கண்ட பாடலடி உமாபதி சிவாசாரியார் இயற்றிய சிவப்பிரகாச அவையடக்கப் பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலடி தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் செல்வாக்குப் பெற்றது. பழமையை மட்டும் போற்றிப் புதுமையை இகழ்வதை இப்பாடலடி கண்டிக்கின்றது.  இவ் அவையடக்கப் பாடலில் இப்பாடலடியைத் தொடர்ந்து வரும் அடிகளில், ஒரு பனுவல் மூன்று வகை வாசகர்களால் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்பது விளக்கப்படுகின்றது. எனவே இக்கட்டுரை சிவப்பிரகாச அவையடக்கப் பாடல் குறிப்பிடும் மூவகை வாசகர்களைப் பற்றி எடுத்து இயம்புகிறது.

எழுதப்பட்ட ஒரு பனுவல் (Text), தனக்கான வாசகர்களாலும் உருவாக்கம் பெறும்போதுதான் அதற்குப் பன்முகப் பரிமாணம் கிடைக்கிறது. மேலும் எந்த ஒரு பனுவலும் தனக்கான வாசகர்கள் என்ற நினைப்பு இல்லாமல் உருவாவதில்லை. படைப்பு உருவாக்கத்தில் நிலவும் இந்தத் தன்மைதான் ஆற்றல் வாய்ந்த ஒன்றாக வாசித்தல் விளங்குவதற்கு அடிப்படை ஆதாரமாகிறது.

வாசகர் என்கிற ஒரு கூட்டத்தாரின் பல்வேறு வகையான புலனுணர்வுகளால் உணரத்தக்க ஒரு நிகழ்வுதான் இலக்கியம். அவரவர் புலனுணர்வுகளுக்குத் தக்கவாறு ஒரு படைப்பிலக்கியம் எவ்வாறு புரிந்துகொள்ளப்படும் என்பதை இன்றைய திறனாய்வாளர்கள் வாசகர்கள் ஏற்புடைமைத் திறனாய்வில் (Readers Response theory) குறிப்பிடும் கூறுகளை உமாபதி சிவாசாரியார் சிவப்பிரகாச அவையடக்கப் பாடலில் குறிப்பிடுகின்றார்.

உண்மையான வாசகர் (Actual reader), மேலான வாசகர் (Super reader), அறிவார்ந்த வாசகர் (Informed reader), இலட்சிய வாசகர் (Ideal Reader), மாதிரி வாசகர் (Model Reader), உள்ளுறை வாசகர் (Implied Reader), கொள்கை வாசகர் (Encoded reader) என்று வாசகர்கள் பல்வேறு திறனாய்வாளர்களால் பெயரிட்டழைக்கப்படுகின்றனர்.(Jeremy Hawthorn. 2011. A Glossary of Contemporary Literary Theory, pp.289-292) ஆனால் உமாபதி சிவாசாரியார்  பின்வரும் பாடலில் துணிந்த நன்மையினார், நடுவாம் தன்மையினார், ஆராய்ந்தறிதல் இன்மையினார் என்னும் மூவகை வாசகர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்
நவையாகா தெனஉண்மை நயந்திடுவர் நடுவாந்
தன்மையினார் பழமைஅழ காராய்ந்து தரிப்பர்
தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவரே திலருற்
றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றிலரே.            (சிவப்பிரகாசம் பாடல் எண்.12)

துணிந்த நன்மையினார்

துணிந்த நன்மையினார் என்பவர் ஒரு நூலைப் படித்த உடனேயே அதனுடைய பழமையும் புதுமையும் சொற்குற்றமும் கொள்ளாமல் அப்படியே ஏற்றுக்கொள்வர். அது எவ்வாறெனில் நல்ல இரத்தினமானது ஒரு நாய்த்தோலிலே கட்டியிருந்தாலும் இரத்தினமறிந்தவர்கள் தோலின் குற்றம் கொள்ளாது மாணிக்கத்தின் நன்மையை மட்டும் கைக்கொள்ளுவர். இங்கு மாணிக்கத்தின் நன்மையைக் கொள்ளுபவரைப் போலத் துணிந்த நன்மையினார் என்பவர் குறிப்பிடப்படுகின்றார்.

நடுவாந்தன்மையினார்

இவர் முற்சொன்னவரைப் போல் அல்லாமல் ஒரு பனுவலை வாசித்தவுடன் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் வேதாகமத்தைப் பின் செல்லுகின்ற நூல் என்றும் நன்மையை உடையது என்றும் மெதுவாக ஏற்றுக்கொள்வார்.

ஆராய்ந்தறிதல் இன்மையினார்

இவர் குணமும் குற்றமும் பொருளிடத்தில் பொருந்தியுள்ள முறைமையை ஆராய்ந்து அறியாதவராய் இருப்பார். ஒரு நூலை உத்தமர்கள் கொண்டாடினால் கொண்டாடியும் ஒரு நூலின் மீது பொறாமை கொண்டோர் இகழ்ந்துரைத்தால் அதற்கு ஏற்றவாறு  அந்த நூலை இகழ்ந்தும் உரைப்பார். இவர் தமக்கென்று நன்மை தீமையைத் தீர்மானிக்கும் அறிவு இல்லாமல் திகழ்வார்.

தொல்காப்பியர் இந்த மாந்தர்களைக் குறித்துக்

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே”–      தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூற்பா எண். 27

எனச் சுட்டுகிறார். அத்தகைய உணர்வில்லாத மாந்தருக்குப் பனுவலின் பொருள் புலப்படாது  என்றும் பதிவு செய்கிறார். ஆக, தொல்காப்பியர் வாசகர்/மாந்தர் என்று கருதுவது பனுவலோடு இரண்டறக் கலந்த ஒருவரைத்தான் எனத் தெரிகின்றது. நவீனத் திறனாய்வும் பனுவலின் பண்பாக்கத்தோடு உருவாகும் ஒருவரைத்தான் வாசகர் என்று கருதுகிறது. இங்குச் சிவப்பிரகாசப் பாடல் குறிப்பிடும் முதல்வகை வாசகர்/மாந்தர் என்பவர் பனுவலோடு இரண்டறக் கலந்த உணர்வுடைய ஒருவர். மூன்றாம் வகை வாசகர்/மாந்தர் கண்ணினும் செவியினும் உணர்வில்லாத ஒருவர்.

முடிவுரை

சிவப்பிரகாச அவையடக்கப் பாடல் வெறும் அவையடக்கப் பாடலாக மட்டுமல்லாமல் இன்றைய இலக்கியத் திறனாய்வாளர் குறிப்பிடும் வாசகர் ஏற்புடைமை பற்றியும் விளக்குவதை அறிய முடிகிறது. ஒரு தத்துவ இலக்கியப் பனுவல் மூன்றுவகை மாந்தர்களால்/வாசகர்களால் மூன்றுவிதமாக புரிந்துகொள்ளும் முறையும் இப்பாடலால் விளக்கப்படுகிறது.

துணைநின்ற நூல்கள்

1.திருவிளங்கம், மு. (உ.ஆ.). 1933. கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த சிவப்பிரகாசம் மூலம். சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை.

2.கணேசையர், சி. (ப.ஆ.). 1943. தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பின்னான்கியல்களும் பேராசிரியமும். சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்.

3.Jeremy Hawthorn. 2011. A Glossary of Contemporary Literary Theory. New Delhi: Heritage Publishers.

 ******

கட்டுரையாளர்
இளநிலை ஆய்வு அலுவலர்
இலக்கியத்துறை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
தரமணி, சென்னை -113

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சிவப்பிரகாசம் குறிப்பிடும் மூவகை வாசகர்கள்

  1. வாசகர் பற்றிய தொன்மையான விளக்கம். நன்று

  2. வணக்கம். தங்களின் கட்டுரையை வாசித்தேன். நான் எவ்வகையான வாசிப்பாளன் என என்னைச் சிந்திக்கவைத்தது. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *