வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம் கூறும் விழுமியங்கள் – 1

-முனைவர் சு.இரமேஷ்

முன்னுரை

வளர்ந்துவரும் தமிழ்ஆய்வுக் களத்திற்குத் தமிழ்ப் பேரொளியாக விளங்கியவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். தமிழ்மரபு சார்ந்த ஆய்வுகளில் புதுமையான நெறிகளை வளர்ந்து வரும் சமூகத்திற்குக் கொடையாக அளித்தவர். தமது ஆய்வு நூல்களில் தமிழின் தனித்துவத்தைப் புலப்படுத்திச் சிந்திக்கச் செய்தவர். மறைமலையின் ஆய்வுத் திறனும்  திரு.வி.க.வின் மொழிநடையும் ஒருங்கே பெற்ற தமிழ்வல்ல மூதறிஞர். இவர், நுண்மாண் நுழைப்புலத்துடன் எழுதிய ‘வள்ளுவம்’ என்னும் நூலானது புதிய சிந்தனைத் தெளிவினை அளிக்க வல்லதாகும். 1953–இல் பாரி நிலையமும், 1987–இல் மணிவாசகர் நூலகமும் வெளியிட்ட இந்நூலை தமிழ்மண் பதிப்பகம் 2017 –இல் வெளியிட்டுள்ளது.

இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைள் உள்ளன. அவையாவும் தொடர் சொற்பொழிவுகளாக அமைந்துள்ளன. ஆனால் அவையாவும் முன்னும் பேசப்பட்டவை அல்ல. வள்ளுவரை முன்வைத்துப் பேசினாற்போல் எழுதிய கற்பனைச் சொற்பொழிவுகள். நம்மிடை நேரே நின்று உரையாற்றுவதாய் அமைந்துள்ளன. ஏனெனில் “உங்களுக்கும் எனக்கும் நெஞ்சக்கலப்பும் சுற்றப் பிணைப்பும் உண்டாக்கும்” என்று முகவுரையில் பதிவு செய்கின்றார். இலக்கியநெறி உலகில் இஃது ஓர் புதிய உத்தியாகவே கருதமுடிகிறது. வரையறுத்துக் கொண்டு முரணறுத்து எழுதிய முறைநூலாக வள்ளுவம் என்னும் நூல் திகழ்கின்றது. இந்நூலில் உள்ள 12 தலைப்புகளில் முதல் ஆறு கற்பனை சொற்பொழிவுகளான 1. வள்ளுவர் நெஞ்சம், 2. பலநிலையறம், 3. பொருள் நிலை, 4. பொருட் பயனிலை 5. இன்மை நிலை, 6. அறிவுப் பிறப்பு ஆகிய தலைப்புகளில் அமைந்த கற்பனைச் சொற்பொழிவுகளை மட்டும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

வள்ளுவர் நெஞ்சம்

வள்ளுவரின் நெஞ்சத்திற்கும் திருக்குறளுக்கும் தொடர்பு என்னவென்பதை இத்தலைப்பு ஆராய்கிறது. திருக்குறள் வள்ளுவனாரின் அறிவுக்குழவி மட்டுமல்லாது வள்ளுவரின் நெஞ்சோடு நம் நெஞ்சினைப் பிணைக்கும் எண்ணக் கயிறு என்று கருதுமிவர், வள்ளுவரின் நெஞ்சமானது நிலத்தில் இட்ட வித்தாகவும் நெஞ்சம் தந்த அறிவு விதை தோற்றிய மரமாகவும் குறள்கள் மரம் தாங்கிய விதைகளாகவும் இருக்கின்றன என்று கருதுகிறார். பற்பல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல்பெற்ற அறிவின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் திருக்குளை “நவில்தோறும் நூல்நயம் போலும்” (783) என்னும் குறளின்வழி எடுத்துரைக்கின்றார். (வள்ளுவம், ப.8). சொல் ஒருவனின் உள்ளக் கருத்தினை தொடக்கூடியது. அறத்தை ஒளித்துக்காட்டும் பொய்த்திறமும் சொல்லிற்கு உண்டு என்பதை, “வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு” (819), “எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்றன்று” (825) சொல் என்பது மக்களின் நெஞ்சூர்தியல்ல… கருத்தூர்தி என்றுக் கருதுகின்றார்.

நூலாசிரியரின் சொல்வழி நெஞ்சம்காண அவாவ வேண்டும். நெஞ்சம் காண்பதன் பொருள் என்னவெனில் “சொல்லியான் கருத்தாழமும், உணர்ச்சி நுகர்ச்சிகளையும் சொல்லத்தூண்டிய சூழ்நிலையையும், அவன் எதிர்பார்க்கும் பயனையும் உயிராக் காண்பது, இக்காட்சிக்கு அவன் ஆண்ட சொற்களையும் சொன்னடையும் உடலாகக் கொள்வது என்பதோடு கல்வி, ஒழுக்கம், குடிமை, நாகரிகம் என்றினை வாழ்க்கை நிலைகளையும் காணவொல்லும் அறிவூற்று” என்பதற்கு,

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை
உணரப்படும்” –  (குறள்.826) என்ற குறளைச் சான்றாக்குகின்றார்.

மன நோக்கு

நோக்கு என்பது மேலோடான பார்வையன்று அழுந்திக் காண்பதாகும். “பிறன்மனை நோக்காத பேராண்மை” (148) இதில் ‘நோக்காத’ என்பதற்கு பிறருடைய மனைவியை மனத்தில் நினைத்தலே பிழை எனவும், கண்பார்வை பிழையன்று என்றும் குறிப்பிடுகின்றார். இக்குறிப்பறிவை “கூறாமை நோக்கி” (701), “கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின்” (1100) என்னும் காதற்குறளையும் ஆராய்ந்தால் நோக்கு என்பது கண்பார்வையன்று அது மனப்பார்வை” எனப் பொருள்படும் என்கிறார். – (வள்ளுவம், ப.11)

திருக்குறள் முழுவதும் ஓடிப் பரந்து அவரின் நெஞ்சம் நிற்கும். இதனை,  தனி நெஞ்சம் என்கிறார். “ஏனெனில் அந்நினைவு வள்ளுவர் ஒருவர் மாட்டே பிறந்ததால். தனி நெஞ்சம் என்பதாவது செயல் செயல் செயல் சொல்வது செயலுக்கு வரவேண்டும்” என்ற கருத்தை நெஞ்சிலே இருத்திக் கொண்டு குறளை எழுதியவர் வள்ளுவர். மனிதன் வாழ்வாங்கு வாழ்தல் என்பதற்கு திருக்குறகத்து மக்கட்பேறு, விருந்தோம்பல், சுற்றந்தழால், ஈகை, நல்குரவு, மருந்து என்று உலக அதிகாரங்களைக் காண்கிறோம். எனவேதான், திருக்குறளை வாழ்க்கை நூல், செயல் நூல், உலக நூல் என்று அழைப்பது பொருந்தும். (வள்ளுவம், ப.21)

கயமை

கயமை என்பது கீழ்மை, பொதுமை என்பதாகும். (கௌர தமிழ் அகராதி, ப. 225) ஒழுக்கம் கைவரப் பெறாதவனை இகழ்ந்துரைக்கக் கயமையெனும் அதிகாரமே வைத்துள்ளார். ஏனெனில் வள்ளுவர் நெஞ்சக்கொதிப்பின் வெளிப்பாடே கயமையதிகாரம் என்கிறார். “மக்களே போல்வர் கயவர்” (1071), “தேவர்அனையர் கயவர்” (1073), “அறைபறை அன்னர் கயவர்” (1076), “ஈர்ங்கை விதிரார் கயவர்” (1077) போன்ற குறட்பாக்களை எடுத்தியம்புகிறார். அறம் பொருட்பாக்களின் எல்லையதிகாரமாகிய கயமைத் தலைப்பு ஆசிரியரின் மனக்கொதிப்பிற்கு அறிகுறி கற்பதாகும் என்பதை எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர்.

புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகின்றோம் என்பதோடு புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் (538) என்பது தனி வள்ளுவம். செய்யாது குறள் காட்டும் அச்சமுடிபாக இருக்கின்றது. எனவே, யார்க்கும் செயல் வேண்டும் என்பதுதான் வள்ளுவர் காட்டும் உயிர்நிலை என்பதை இச்சொற்பொழிவு விளக்குகின்றது.

பலநிலையறம்

பலநிலையறம் என்னும் தலைப்பானது ஆழ்ந்து விளக்குதற்கு உரியதாகும். வாய்வழி உணவு போலவும் மூக்கு வழி உயிர்போலவும் திருக்குறள் கல்விக்கு இன்றியமையா நேர்வழியாகும்.

உலக மக்கள் ஈட்டல், காத்தல், துய்த்தல், ஈதல்,  இவறல் (ஈயாமை) என்றின்னோரன்ன பொருள் நிலைகளாலும், கற்கும் நோக்கம் நூல் ஆர்வம் முறைகொள் வன்மை, சுவை நுண்மை, ஆழம், அகலம் என்றின்னோரன்ன கல்வி நிலையாலும், இயற்கையறிவு, நூலறிவு, நுண்ணறிவு, புரட்சியறிவு, தொழிலறிவு, ஆக்க அறிவு, படிப்பறிவு, தன்னறிவு என்றின்னோரன்ன அறிவு நிலையாலும் ஒருத்தர் போல் ஒருத்தரிலர். பொருள், கல்வி, அறிவுண்மைகள் ஒரு பாற்கிடக்க, பொருளிண்மை, அறிவின்மை என்ற இன்மை நிலைகளிலுந் தாம் நம்முன் வேறுபாடு கணிக்கத் தரமோ. இனைய நிலைப்பன்மை வேறுபாடுடெல்லாம் நுணிகித் தெளிந்த ஓராசிரியர் வள்ளுவர் ஆவார் என்கிறார்.

“அன்பும் அறமும் பசியும் துறந்து ஈட்டுவாரும், வஞ்சகத்தால் பொருள் செய்து மகிழ்வாரும் பழி மலைந்து ஆக்கம் பெறுவாரும், பிறர் செல்வம் வெஃகித் தம்முடைமை விடுவாரும், இரந்தே வாழப் பயில்வோரும் ஆக உலகம் பொருள் வகையால் பல நிலையாளரைக் கொண்டது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இன்மையும் நிலையாச் செல்வம் நிலையிற்று என்னும் மக்கள் மயக்கமும் சிலர் அறவே ஈயாமையும், துய்யாமையும், சிலர் முற்றும் தாமே துய்த்துலும், சிலர் அனைத்தும் பிறர்க்கே வழங்கலும் எனவாங்கு வள்ளுவப் பேராசிரியர் பொருள் பற்றி மக்கள் பால்கண்ட நிலைகள் பலப்பல” என்று பதிவு செய்கிறார். (வள்ளுவம், ப.32)

ஞானப்பேதைகள்

“நுழைபுலம் இல்லான் எழில்நலம்” (407) என அழகுப்பேதையும் “மேற்பிறந்தாராயினும் கல்லாதார்” (409) எனச் செல்வப் பேதையும்
“கல்லாதான் சொற்காமுறுதல்” (402) என வாய்ப் பேதையும் வள்ளுவர் கண்ட ஞானப்பேதைகள். “இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர்” (650) எனப் பயனில் புலவரையும், அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720) என அவையறியாப் புலவரையும் “கற்றறிந்தும் நல்லாரவை அஞ்சுவார்” (729) என அச்சப்புலவரையும், “பலநல்ல கற்றக் கடைத்தும்” (823) என மாணாப் புலவரையும் “கல்லாத மேற்கொண்டொழுகல்” (845) எனப் பிறதுறை விரிக்கும் சிறிய புலவரையும் கண்டவர்.

செல்வர்முன் வறியவர்போல ஏக்கற்றும் கற்பாரும் அங்ஙன் கற்க நாணிக் கல்லாதொழிவாரும், கல்வியே கண்ணெனப் பெற்றாரும், கண்ணெப் பெயரிய புண்ணுடையாரும், செவிக்குணவாகிய கேள்வி இல்லாத பொழுது பசியாற்றிக் கொள்ளும் செல்வ மக்களும், செவிச்சுவை சிறிதும் அறியா ச்சோற்று மக்களும் வள்ளுவக் காட்சிகள். அறிவுத் தொழுகை செய்வாரும், மக்கள் மனவேட்பக் கலந்து பழகுவாரும், அவையஞ்சா மாற்றம் விடுக்கும் நோக்கொடு நிரம்பிய நூல் பயில்வோரும், பிறரின்பங்கண்டு கல்வி மேன்மேலும் விழைவாரும், கசடறக் கற்று கற்றப்படி நிற்பாரும் எனவாங்கு குறள் முதல்வன் கல்வி பற்றி மக்கற்பால் கண்ட நிலைகள் பற்பல என்று தான் கண்டவற்றைக் குறிப்பிடுகிறார். (வள்ளுவம், ப.33)

சாதி மதங்கடந்தது

திருக்குறள் சாதி, மதம், நாடு முதலிய பொதுமைப் பிறப்பிற்கு நிலைக்களமில்லை என்பதை மூதறிஞர் புலப்படுத்துகின்றார். ஒரேகுடி, ஒரே சாதி, ஒரே நெறி, ஒரே மொழி, ஒரே நாடு என்று நினைப்பவருள்ளும், பிறசாதி, பிற சமயம், பிறமொழி என வேற்றுமைப்பட்டாருள்ளும். நாம் பகுத்தறியத் தகும் வள்ளுவர் நுனித்துக் கண்ட வள்ளுவம் என்னை “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” (134) என்பது அப்பெருமகனார் காட்டிய நெறி நாம் அறையும் புறப்பொதுமையன்று. தனி நெஞ்சத்தூய்மை.

சாதி சமய எண்ணமின்றியே அவற்றை எண்ணுவதும் வேண்டாமலே, உடலறிஞன் ஆள்தோறும் கைந்நாடி பார்த்து மருந்தளித்து உடல் நலம் செய்யுமாப் போலே உள்ளத்தறிஞானாகிய வள்ளுவரும் ஆள்தோறும் மனநாடிப் பார்த்து நிலைக்கேற்ற அறங்கூறி அகத்தூய்மை செய்பவர்.

வள்ளுவர் பேரறிஞர் நிலைகொண்ட உண்மை என்ன? சாதி சமய நாட்டுப்பூசலனையவெல்லாம் எரிமலைபோலும் உள்ளப் பூசலின் வெளிப்பாடு மூட்டிய நீர்க் கொதிப்பும் போலும் நெஞ்சக் கொதிப்பின் புறப்பாடு. “காலம்பார்த்து உள்வேர்ப்பர்” (487) என்றபடி மனவெதுப்பின் வெளிப்பாடு. உள்ளப் பெரும் பூசல் தன் வெளிப்பாட்டிற்கு மடைவாய்ப் போல குடி, சாதி, சமயம், மொழி, கட்சி, நாடு என வரூஉம் பிரிவுகளை வாயிலாகக் கொள்கிறது என்பதன்றி இப்பிரிவுகள் அடைபடுமேல் வேறுபல புதிய வாயில்களை உண்டாக்கிக் கொண்டு முன்னையினும் வேகமாய்ப் பூசல் விளைவிக்கும் என்பதன்றிப் பொதுமை பறையான் உள்ளப்பூசல் அவிந்துவிடாது காண் (வள்ளுவம், ப.41) என்று குறிப்பிடுகிறார். அதாவது வேற்றுமையைக் காணும் எண்ணம் எழுகின்றபோது எப்படியாது வெவ்வேறு வடிவங்களைப் பிரிவினைவாதிகள்  நவீனத் தீணடாமை வடிவங்கள் போலவும், நீட் என்னும் சமூக அநீதித் தேர்வுப் போலவும் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள் என்று குறிப்பிடுகின்றார். ஆனால்  உலக மக்கள் யாவரும் மனத்தூய்மையுடன் வாழ்வதற்கு எழுதப்பட்டது குறள் என்பதை அனைவரும் மறக்கின்றோம்.

“நோய்நாடி நோய் முதல்நாடி” (948) என்ற மருத்துவ முறையைப் பின்பற்றாமல், ஊர், நாடு, அரசு போன்றவைகளால் குழப்பம் ஏற்படுகின்றது. காப்புச் செலவு எல்லாம் மக்கள் பசி தீர்க்கவும், அறியாமை அகற்றவும், மாசொழிக்கவும் பயன்படுத்த வேண்டும்.  மக்கள் நலியப் போர்ச் செலவுப் பெருக்கம், பொதுமைக் குரலால் யாருக்குப் பயன் பிற நாட்டுடன் போர் புரிவதற்கு மக்களின் வரிபணத்தில் பல இலட்சம் கோடிக்கு அணுஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் வாங்கிக் குவிப்பதனால்?  மக்களின் பசிப் பிணி தீராது என்பதை உணர்த்துகின்றார்.

கல்வி

“கற்க கசடற கற்பவை” (391)

“கற்றில னாயினும் கேட்க” (414)

“எனைத்தானும் நல்லவை கேட்க” (416)

“என்ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு” (397)

“கசடற வல்லதூஉம் ஐயந்தரும்” (845)

எனவரும் கல்வி பற்றிய பல குறள்களும் மக்களின் பல்வேறு நிலைகள் நோக்கிப் பிறந்தன என்பது வெளிப்படை. நீ இழந்து விட்டனை. இனி உனக்கு முன்னேற்றமில்லை, இனிமாள்வதுதான் உன் முடிவு எனத் தள்ளிவிடும் சிறுமை வள்ளுவர் உணர்ச்சியில் இல்லை. நீ பெரிதும் உயர்ந்து விட்டாய், இனிப் பெற வேண்டும் என்று புகழ்ந்துபேசும் அழிக்கும் போக்கு அவரிடம் இல்லை. இழிந்தார்க்கும் உயர்ந்தார்க்கும் எந்நிலையிலும் நல்வாழ்வு உண்டு என்னும் அழிவில் கொள்கையுடைவர் என்பதை வள்ளுவம் கொண்டுள்ளது என கூறுப்பிடுகிறார். – (வள்ளுவம், ப.50)

பொருள் நிலை

நம்மைப் பொருள் உடைமைக் காலத்திலும் இல்லாமைக் காலத்திலும் எவ்வாறு வள்ளுவர் வழி நடத்துகிறார் என்பதைக் கூறும்விதமாகப் பொருள் நிலைகுறித்த சொற்பொழிவு அமைகிறது.

திருக்குறள் சந்தை

திருவள்ளுவரை மூதறிஞர், வியாபாரி, வணிகர், மருத்துவர், உழவர் என்று குறிப்பிடுகிறார். பணமிருந்தாலும் சில சரக்குகள் விற்றுத் தீர்ந்துவிடும்; பொருள் கிடைக்காது. ஆனால், திருக்குறள் இக்குறைகள் அற்ற பெரும்சந்தை. வள்ளுவர் வணிகர் மட்டுமல்ல; மருந்தும்தானே செய்து மருத்துவமும் பார்க்கின்ற தமிழ் மருத்துவன் போல், குறளும் தானே விளைவித்துக் கொடுப்பதுவும் தானே கொடுக்கும் உழவர் எனக் குறிப்பிடுகின்றார். ஒருவன் எத்துக்கொடுக்க ஒருவன் வாங்கும் விற்பனைப் பண்டம் போல அல்லாமல் குடங்கொண்டு முகக்கும் குளத்து நீர் போலவும் தாமேகிடைப்பது குறட்பண்டம் என்றுரைக்கின்றார் (வள்ளுவம், ப.57).

பொருளின் ஆற்றல்

பொருள் செயல்வகை, நன்றியில் செல்வம், நல்குரவு, ஒப்புரவறிதல், ஈகை, ஊழ், ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை என்ற அதிகாரங்களில் பொருட் குறள்கள் பரந்து கிடக்கின்றன. பொருளின் ஆற்றலை முழுதும் உணர்ந்த வள்ளுவர் அது நன்மை தீமைக்கும் கருவியாதலை எக்காலத்தும் மறந்தவரல்லர். இன்றியமையாப் பொருளை ஈட்டுவதற்கும் செலவிடுதலுக்கும் மக்கள் உறும் பல மாசுக்களைக் கண்ட வள்ளுவர்.

“பொருளில்லது  இல்லை பொருள்”  (751) என்று சிறப்பித்தவர்

பொருட்செல்வம் பூரியார் கண்ணும்உள”(241) என இழிந்துரைத்தார்.

பொருள் என்பது ஓர் உலகக் கருவி அது குணம் பெருக்கவும் குறை நிரப்பவும் பயன்படவேண்டும். அது பண்டமாற்றும் பொதுக்கருவி என்ற தெளிவு வேண்டும். புறப்பொருளையெல்லாம் நல்லதற்கு தீயதற்கும் பயன்படுத்துதல் ஆளும் மனிதனின் நல்லதீய மனதைச் சார்ந்தது. குணமும் குற்றமும் பொருள் மேல் சார்ந்தது அல்ல. அதனை, ஆள்வோனைச் சார்ந்துள்ளது என்பதைப் புலப்படுத்துகின்றார். அதே நேரத்தில் பொருளாற்றலுக்கு ஓர் எல்லையுண்டு. பொருளிலும் சிறந்த பல பண்புகள் இன்றியமையாதன. அப்பண்புகள் இருப்பின் பொருள்நலஞ் செய்யும் இல்லையெனில் உடையானை கீழறுக்கும் என்பவற்றுக்கு,

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட
தக்கார் செறின்” (897) என்ற குறளை அளவீடாகக் காட்டுகின்றார். பொருளின் பண்பற்ற நிலையைக் குறிப்பிடுகையில்,

நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம்  
செல்வஞ் செயற்கு” (375) என்ற குறளை மேற்கோள் காட்டுகின்றார்.

“செல்வத்தின் இயல்பு நிலையாமை என்பதால் அதனை நிறுத்தப் பாடுபடுதல் பேதைமைக் கருத்து என்று பொருளீட்டுதல் குற்றம் என்றோ வேண்டாம் என்றோ கருத்தாகாது. உடல் நிலையாது என்றதனால் மக்களைப் பெறுதல் இழிவு இல்லறம் இழிவு என்றும் கொள்ளப்படாது. பழம் அழுகிபோகும், பலகாரம் ஊசிப்போகும் எனத் தெரிவிப்பது தவறல்ல. அழுகுவதன் முன்மை என்பதே இயல்பு என்பதற்கு “அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்” (333) என்று அதன் பயனனைக் குறிப்பிடுகின்றார்.” (வள்ளுவம், பக்.67-68)

செல்வத்தை எந்த நோக்கத்துக்கு ஈட்டுகின்றனரோ, எதன்பற்றுக் காரணமாக சேர்க்கின்றனரோ அப்பற்று வழியாகவேத் தூய்மையூட்டல் செய்வதை,

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு
ஏமாப்பு உடைத்து” (112)

என்ற குறளை எடுத்துக்காட்டி நும்பொருள் நும்மக்களைச் சேரவேண்டுமானால் நடுவுநிலைமையோடு பொருளை ஈட்டுமின் என்ற நெறித்தூய்மை விதிப்பர் (வள்ளுவம், ப.74) என்று எடுத்துரைக்கின்றார்.

[தொடரும்]

******

கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
அ.வ.அ.கல்லூரி (தன்.)
மன்னன் பந்தல்,  மயிலாடுதுறை.

 

 

Share

About the Author

has written 1001 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.