படக்கவிதைப் போட்டி (138)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

24331290_1497455853641942_1587847331_n

பார்கவ் கேசவன்  எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1200 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

13 Comments on “படக்கவிதைப் போட்டி (138)”

 • chandra manoharan wrote on 7 December, 2017, 19:17

  நிலாப் பேச்சு
  ———————

  —சந்திரா மனோகரன்

  தொலைவில் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த வெண்பறவைக்கு
  துயரம் என்பதே இல்லையா ?
  அதன் விழிகளுக்கு யாரைப் பிடிக்கிறதோ தெரியவில்லை
  ஓர் இளம்பெண்ணின் பறவை ஓலம்
  அந்த செவிட்டு நிலவுக்கு எட்டாது !
  அதன் கதகதப்பிலும் அப்பிக்கிடக்கும் இருளிலும்
  அவள் நினைவுகள் நீர்த்துப்போனவை
  இன்னும் பாடு ….இன்னும் பாடு !
  உன் சப்தமற்ற இசையில் விடிந்ததும் கடந்துபோவேன்
  நிலவு பாவம் …துணையற்ற ஏகி !
  ஒருவேளை உன் பிம்பத்தின் சாயலில் நானும் …?
  கடலிலும் , கரையிலும் , மணலிலும்
  சிப்பிபோல் கிடக்கும் உன்னை சேமிப்பேன் அப்போது
  சலசலக்கும் நீர்வெளியில் நீ சரசமாடுகிறாயே
  ஆயுசுக்கு அது போதும் எனக்கு !
  என் மௌனத்தை உடைப்பதும் , கட்டுவதும் …
  உன் பாங்கு ஒப்புமையற்றது !
  சிவந்த கடல்போல் சிலபோது என்மனம் எரிகிறது
  உன் ஒற்றடம் பெரிது அதை அணைப்பதற்கு
  உயிரற்ற அவன் நிழல்களை இனி நீ நனைக்காதே !
  கடந்துபோன நதியின் மிச்சம் இல்லை
  கடலின் கருமையில் கரைய மறுக்கும் என் நினைவுகளில்
  இறந்தவனின் மோனம் நொறுங்கிய சிற்பமாய் ..
  கற்பாறையாய் இறுகிப்போன என் மனசில்
  சிதறும் உன் ஒளிக்கதிர்களில் மிளிரும் என் எதிர்காலம் ..

  ———————————————————————-

 • முழுமதி. wrote on 9 December, 2017, 10:48

  விடியல் கற்கண்டு
  _______________________
  விடியலுக்காக காத்திருந்தது போதும்
  பெண்ணே! ..
  பெண்ணியம் பேசும்
  பெண்ணியம் என்பது
  ஆண்களுக்கு எதிரான
  காழ்ப்புணர்ச்சி அல்ல.!
  பெண்களுக்கான விழிப்புணர்ச்சி!
  பகுத்தறிவாளர்களாக இருக்கவேண்டிய
  சுயமரியாதை எழுச்சி,,!

  சமதர்ம சமுதாயத்தை
  சுயமரியாதையை
  போற்றுகிற ஒரு குரல்!..
  அடக்கு முறைக்கு எதிராக
  ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக.
  .ஒலிக்கும் போராட்டக் குரல்!..
  தனிமனித பழக்கவழக்கத்தின்
  வெளிப்பாடுகளுக்கும்
  அது சார்ந்த உரிமை
  பிரச்சனைகளுக்குமான
  சுதந்திரத் தேடலுக்கான
  ஒரு தார்மீக குரல்..!

  கடவுள் நம்பிக்கையற்ற
  ஓர் ஆணை பகுத்தறிவாளராக
  அறிவு ஜீவியாக
  ஏற்றுக்கொள்ளும் இந்தச் சமூகம்
  எதையும்
  பகுத்து அறியும் ஒரு பெண்ணை
  பெண் நாத்திகவாதியாக
  செயல்பட அனுமதிக்காத
  போலி ஆத்திகத்தை எதிர்க்கும் ஒரு குரல்..

  இயற்கையிலேயே பெண்
  பலவீனமானவள் என்பதை
  முற்றிலுமாக மறுத்தலிக்கப்படவேண்டி
  ஓங்கி ஒலிக்கும் ஒரு கம்பீரக் குரல்

  வேண்டிய ஒரு குரல்
  அப்படியே இருந்தாலும்,
  ஒடுக்குவதற்கு எந்த
  அதிகாரத்தை துஷ்பிரயோகத்தை
  எதிர்ப்பதற்கான ஒரு குரல்..!

  பொதுப்பண்புகளை
  கண்மூடித்தனமாக
  ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம்
  நிலவுவது போல்
  அதை மறுக்கும் சுதந்திரமும்
  பொருட்படுத்த வேண்டி ஒரு குரல் !

  கற்பனாவாத கட்டுப்பாடுகள்
  அவற்றை மீறுவதில் நிலவும்
  சுவாரசியத்தை ஒழுக்க
  மீறலுக்கான வெற்றியாகவும்
  புரட்சிகர சிந்தனையாகவும்
  தவறாக புரிந்துக்கொள்வோரை
  கண்டித்து மன்றாடும் ஒரு குரல்..!

  பெண்ணின் சிந்தனை
  ஆண்களுக்கு விடுதலை அளிக்கவும்
  வல்லமைமிக்கது என்பதை
  உணர்த்த எழுந்த குரல்…!

  மனித மதிப்பிற்கான
  சமூக அளவுகோல்
  மாறும் வரை…
  ஓயாத கடலை போல
  காத்திரமான புயலை போல
  சுதந்திரமான பறவையாய்
  விடியலை கேட்கும் கிழக்காய்
  தொடர்ந்து தொடர்ந்து
  ஒலிக்க வேண்டிய குரல்..!

  பெண்ணே.. !
  உன் உரிமை
  நிழலாய் கசப்பது அல்ல.
  நிஜமாய் இனிக்கும்
  விடியல் கற்கண்டு..!

  முழுமதி .

 • ஹேமா வினோத்குமார் wrote on 9 December, 2017, 18:01

  நீ!!நான்!!தனிமை!!

  பலயுகங்களாய் தனிமையில் நீ
  நாட்களில் நான்!!
  தனிமையில் வெறுப்பு
  இவைகள் தமக்கில்லையோ??
  மும்மாதங்களுக்கு முற்பொழுதில்
  பச்சை நிற பட்டுடுத்தி
  மஞ்சள் முகம் பூசி
  மணங்கமழ மல்லிகைசூடி
  நெற்றித் திலகமிட்டு
  காதிற்கினிய வளையோசையுடன்
  பெற்றோர் மற்றோர் உடனிருக்க
  காதலித்து கரம்பற்றினேன் என் கள்வனை!!
  மும்மாதந்தள்ளி மகிழம்பூவாய்
  ஈரலர்கள் என்னுள் பூத்திருக்க
  பகிர்வதற்குள் விண்ணுலகமாள
  சென்றாரோ என் கணவர்!!!
  அலர் நீ!!அகலம் நீ!!!என்றவர்
  இப்பொழுது ஈசனிடம்!!!
  பெற்றெடுத்த தாயிருக்க
  கரம்பற்றிய நானிருக்க
  அவசர பணியாற்ற
  விண்ணுலகம் சென்றாரோ??
  வெகுண்ட மனதோடு
  மீண்டும் வருவார் என்றெண்ணி
  நம்பிக்கையில்!!
  உன்னைப்போல் நானும்!!!
  தனிமையில்!!!

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 9 December, 2017, 19:26

  வருவானா…

  நீதான் மண்ணில்
  நிலவென்று சொல்லியவன்,
  நினைத்ததை முடித்துச் சென்றுவிட்டான்..

  நிலவே
  உன் கறையை
  எனக்குத் தந்துவிட்டான்..

  சொன்னதுபோல வருவானா,
  நான்
  சோர்ந்துபோக விடுவானா..

  சொல்லிடு நிலவே அவனிடமே,
  சீக்கிரம் வரச்சொல் என்னிடமே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 9 December, 2017, 21:40

  வெளிச்சம் தந்த இருள் :
  உலகிற்கெல்லாம் வெளிச்சம் தர செங்கதிரோன் வந்து விட்டான் பெண்ணே ! இருட்டிலே இன்னும் ஏன் நிற்கின்றாய் பெண்ணே!
  பாரதி பெண் விடுதலைக்கு, குரல் கொடுத்ததற்கும் பின்னே!
  உனக்கு மட்டும் ஏன் விடியவில்லை பெண்ணே!
  குடும்பத்திற்கே வெளிச்சம் கொடுத்தாய் பெண்ணே!
  இருந்தாலும் உன் புகழை மறைத்தார் இருளின் பின்னே!
  கருவறை இருட்டில், உயிர்களைச் சுமந்தாய் பெண்ணே!
  கைமாறாய் கிடைத்தது இருளடைந்த வாழ்வு தானே பெண்ணே!
  ஆண்களை வெளிச்சம் போட்டுக் காட்ட!
  நீ இருட்டாய் இது வரை இருந்தது போதும் பெண்ணே!
  கல்விச் சூரியன் ஒளி படாமல் மறைத்தனர் ஆண்கள்!
  ஞானஒளி உனக்கு கிடைத்து விடும் என அஞ்சித் தானே பெண்ணே!
  ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் வெளிச்சம், குடும்பத்தின் வெளிச்சம்!
  இந்த உண்மையை ஆண்கள் மறந்தது ஏனோ பெண்ணே!
  நீ இருட்டில் இருப்பதற்கு, ஆண்கள் மட்டுமா காரணம் பெண்ணே!
  பெண்களின் பங்களிப்பும் உண்டு இதில்! அறிவாயா பெண்ணே!
  ஒற்றுமை பெண்களுக்குள் குறைவு! வருத்தமான உண்மை இது பெண்ணே!
  இனி, உங்களுக்கு இதமான வெளிச்சம் தர, பெண் நிலாக்கள் அருகிருப்பார் இளம் பெண்ணே !
  உங்கள் உயர்வு உலகெங்கும் நிறைந்திருக்க இளைய ஆண் கதிரவன்கள்
  உன்னோடு இணைந்திருப்பார் அருமைப் பெண்ணே!

 • சத்தியப்ரியா சூரியநாராயணன் wrote on 9 December, 2017, 22:40

  தூது

  அல்லும் பகலும் அலைந்து திரிந்து- இளைப்பாற
  அன்னை மடி தேடி ஓடும் பகலவா..

  எல்லைக் கோட்டில் அல்லும் பகலும் பாடுபடும்
  என் மகன் எப்போது வருவான்
  என் மடி சாய்ந்து ஓய்வெடுக்க…??!!

  கட்டிய கணவனை கயவன் சுட்டானைன்ற சேதி கேட்ட நொடியே
  கட்டிளங்காளையை தட்டி அனுப்பினேன் – தேசங்காக்க

  அவனி முழுதும் வலம் வரும் நீ
  அவனைக் கண்டு தூது சொல்வாயா…??
  அன்னையவள் உனக்காக காத்திருக்கிறாள் என்று..

  தூது சொல்வாயா..
  உயிரைக் கையில் பிடித்து
  உறங்காமல் காத்திருக்கிறாள்
  உனை ஈன்றவள் என்று..

  காத்திருக்கிறேன் இனி உனக்காக
  “பத்திரமாய் திரும்புவான் உன் மகன்” எனும்
  பதில் கொண்டு வரும் வரையில்..
  பகலவா…

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 9 December, 2017, 23:18

  கதிரவன் காதலி..!
  ==============

  செங் கதிரோன்தன் காதலியைக் கனிவுடன் தேடுவதைத்..

  ……….திங்களவள் மறைந்திருந்து அவன் தவிப்பைப் பார்ப்பாள்.!

  பொங்கும் ஆவலால் அவன் முகமுழுதும் சிவந்திருக்கும்..

  ……….தங்காது ஓரிடத்தில் உலகுமுழுதும் ஒருநாளில் சுற்றுவான்.!

  மங்கையவளைக் கண்டதும் மயக்கத் திலவன் மறைவான்..

  ……….மணமேடை காணமுடியா நிலையில் இருவரும் ஒன்றாக..

  சங்கமம் ஆகிவிட்டால் அகிலமனைத்தும் இருள் கவ்வும்..

  ……….சோகத்தினால் அவள் பெருமையை அவனே பாடுகிறான்.!

  எங்கு நோக்கினும் எனக்குள் அவளிருப்பதை அறிவேன்..

  ……….என்னுதவி இல்லையெனில் இவ்வுலகு அவளுதவி பெறும்.!

  பங்கு கேட்காத ஒர்உறவென்றால் அவள் ஒருவள்தான்..

  ……….பற்றுள்ளதாயும் மகவிற்கு அமுதூட்ட ஓடோடி வருவாள்.!

  இங்கிவளைக் கவிதையின் கருவாய் கவிஞரும் கொள்வார்..

  ……….இவளை நினையின் அருந்தமிழ் அருவியென ஓடிவரும்.!

  குங்குமப் பொட்டுக்காரி குவலயத்தின் குறை தீர்ப்பாள்..

  ……….கிரகங்களில் இவள் அழகுக்கு ஒப்பில்லை என்பார்கள்.!

  சிங்கங்கள் இரவிலிரைதேட சிறிதே வெளிச்சம் தருவாள்..

  ……….சிற்றிடைப் பாவையின் வளைந்த புருவம் ஒத்திருப்பாள்.!

  செங்கொன்றை மலரைப் போல சிலநாள் சிரித்திருப்பாள்..

  ……….சட்டென மேகத்தில் மறைந்து பட்டென வெளிப்படுவாள்.!

  பொங்கலிட்டு வழிபட எனக்குமுன் அவள் தோன்றுவாள்..

  ……….சங்கரன் அவளைத் தலைமேல் வைத்தே சிறப்பித்தான்.!

  மங்களம் இனிமை அன்பு அமுதமெனும் சொற்களுக்கு..

  ……….மங்காத நன்மதிப்பை மங்கையருக்குகந் தளிப்பாளவள்.!

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 9 December, 2017, 23:21

  கதிரவன் காதலி..!
  ==============

  செங் கதிரோன்தன் காதலியைக் கனிவுடன் தேடுவதைத்..

  ……….திங்களவள் மறைந்திருந்து அவன் தவிப்பைப் பார்ப்பாள்.!

  பொங்கும் ஆவலால் அவன் முகமுழுதும் சிவந்திருக்கும்..

  ……….தங்காது ஓரிடத்தில் உலகுமுழுதும் ஒருநாளில் சுற்றுவான்.!

  மங்கையவளைக் கண்டதும் மயக்கத் திலவன் மறைவான்..

  ……….மணமேடை காணமுடியா நிலையில் இருவரும் ஒன்றாக..

  சங்கமம் ஆகிவிட்டால் அகிலமனைத்தும் இருள் கவ்வும்..

  ……….சோகத்தினால் அவள் பெருமையை அவனே பாடுகிறான்.!

  எங்கு நோக்கினும் எனக்குள் அவளிருப்பதை அறிவேன்..

  ……….என்னுதவி இல்லையெனில் இவ்வுலகு அவளுதவி பெறும்.!

  பங்கு கேட்காத ஒர்உறவென்றால் அவள் ஒருவள்தான்..

  ……….பற்றுள்ளதாயும் மகவிற்கு அமுதூட்ட ஓடோடி வருவாள்.!

  இங்கிவளைக் கவிதையின் கருவாய் கவிஞரும் கொள்வார்..

  ……….இவளை நினையின் அருந்தமிழ் அருவியென ஓடிவரும்.!

  குங்குமப் பொட்டுக்காரி குவலயத்தின் குறை தீர்ப்பாள்..

  ……….கிரகங்களில் இவள் அழகுக்கு ஒப்பில்லை என்பார்கள்.!

  சிங்கங்கள் இரவிலிரைதேட சிறிதே வெளிச்சம் தருவாள்..

  ……….சிற்றிடைப் பாவையின் வளைந்த புருவம் ஒத்திருப்பாள்.!

  செங்கொன்றை மலரைப் போல சிலநாள் சிரித்திருப்பாள்..

  ……….சட்டென மேகத்தில் மறைந்து பட்டென வெளிப்படுவாள்.!

  பொங்கலிட்டு வழிபட எனக்குமுன் அவள் தோன்றுவாள்..

  ……….சங்கரன் அவளைத் தலைமேல் வைத்தே சிறப்பித்தான்.!

  மங்களம் இனிமை அன்பு அமுதமெனும் சொற்களுக்கு..

  ……….மங்காத நன்மதிப்பை மங்கையருக்குகந் தளிப்பாளவள்.!

 • சபி கௌன் wrote on 9 December, 2017, 23:26

  நீயும் நானும்…

  தொட்டுத் தொடரும் பந்தம் என தோன்றும்
  தொலைவில் இருந்து உனை பார்ப்பவர்களுக்கு

  நெருங்கிச் சென்றால் தான் தெரியும்
  நெருப்புப் பந்தும் நீரும் கலக்கவில்லை என்று..

  மணமுடித்து மாதங்கள் பல உருண்டோடியும்
  மகிழம் பூக்கள் மலரவில்லை என குற்றச்சாட்டு

  உனைப்போல் நெருங்கிச் சென்றாலும்
  உன் கடல் போல் விலகியே செல்கிறான் என்னவன்

  பழி சொல்லும் பந்தங்கள் அறிய வாய்ப்பில்லை
  பக்குவமாய் நிதர்சனம் மறைத்து மனதில் அழுவதால்

  உன்னைப் பார்த்து தேற்றிக் கொள்கிறேன்
  உயிர் வாழ வழி பார்த்துக் கொள்கிறேன்

  நான் படும் துயர் போல்
  நாட்கணக்கின்றி நீயும் பட்டால் கூட
  நானிலம் போற்ற வாழ்ந்து கொண்டிருக்கிறாய்….

 • சொல்லின் செல்வி wrote on 9 December, 2017, 23:49

  ரேகை தொலைத்த தேவதை
  ——————————————–

  அமாவாசையில் ஏதுமற்ற
  வானம் போல நானிருந்தேன்
  வளர்பிறையின் நிலவாய்
  என் வசம் நீ வந்தாய்
  முழுமதியின் நாளின்போது
  பெளர்ணமி காதலாய்
  நாம் மணம் புரிந்தோம்.
  ஆனாலும்
  தேய்பிறை நிலவாய்
  நம் பிரிவில் நான் இழந்தேன்
  மீண்டும்…
  அமாவாசையின் ஏதுமற்ற
  வானம் போல நானிருக்கிறேன்.

  இதோ.. இப்போது
  இந்நிலவைக் காணும் போது
  நம் நினைவலைகளில்
  என் எண்ண அதிர்வுகளில்
  கண்ணீர் வடிக்கிறேன்.
  கண்ணீர் வடிந்த கன்னங்கள்
  மென்மையை தொலைத்துவிட்டன.
  விரல்களில் ரணமேறியதால்
  ரோஜா இதழ்களே
  என் விழிநீரை ஏந்தி
  பதியம் போடுகின்றன.
  ஆம்…
  என் கண்ணீரைத்
  துடைத்து துடைத்தே
  என் கைவிரல் ரேகைகள்
  தொலைத்துவிட்டேன்.

  துளை சரியில்லாத குழல்
  இசை மறுப்பதை போல..
  தூரிகை சரியில்லாத ஒவியம்
  அழகை இழப்பதை போல..
  சாயம் சரியில்லாத சேலை
  நிறம் போவதை போல..!
  சாலை சரியில்லாத பாதை
  தடம் மாறுவதை போல..!
  உளி சரியில்லாத சிலை
  வடிவம் இழந்ததை போல…
  என் வாழ்க்கை அதன்
  வசந்தத்தை இழந்துவிட்டது,

  ஆகவே..
  அன்று வந்த துணைவா..
  எந்தன் இருதயத்திலிருந்து
  உனை வெளியேற்றி
  உனை நுழைக்காத முடியாத
  கடும் மனநிலையாய்
  இருதய தமனிகளால்
  கடும் பூட்டு போட்டுவிட்டேன்
  என்றாலும்
  நம் பெளர்ணமி நாட்களை
  என்னால் மறக்க இயலாது!
  என்றும் மறைக்க இயலாது.!

  -சொல்லின் செல்வி.

 • ரா. பார்த்த சாரதி
  R.Parthasarathy wrote on 10 December, 2017, 0:54

  வெண்ணிலவே செம்மையானதோ பாவை முகம் கண்டு,

  முகத்தின் அழகு அகத்தில் சிலசமயம் தெரிவதுண்டு

  தனிமையில் இனிமை காண முடியாத நிலமையுண்டு

  உன் ஏக்கத்திற்க்கு, என்றைக்கும் உன்னிடமே தீர்வுண்டு

 • சத்தியப்ரியா சூரியநாராயணன் wrote on 10 December, 2017, 15:58

  .

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 17 December, 2017, 10:50

  அந்திப் பொழுதில் !

  சி. ஜெயபாரதன், கனடா.

  சிந்தக்கூட கண்ணீர் இல்லை
  அந்திப் பொழுதில் !
  சென்னையில் அன்று
  நீர்ப் பஞ்சம் !
  நிலப் பஞ்சம் !
  உடைப் பஞ்சம் !
  உணவுப் பஞ்சம் !
  பல்கலைக் கழகங்கள்
  ஊருக்கு
  நாலிருந்தாலும்,
  பணப் பஞ்சம் !
  நகை விற்றுத் தாலியும்
  நூலாச்சு !
  முடிய வில்லை படிப்பு
  மகனுக்கு !
  படிப்பிருந்தால் வேலைப்
  பஞ்சம் !
  வேலை இருந்தால்
  போதிய
  ஊதிய மில்லை !
  என் கவலை
  எப்போது தீரும் ?
  காஷ்மீர் காக்கப் போன
  கணவர்
  மீள வில்லை !
  கதிரோன் தான் சாயுது !
  நாளை மீளும் !
  நாதன் மீளார் ! நாதன்
  மீளார் !

  ++++++++++++++++++++

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.