எழுத்திலா ஓசையும்  மாத்திரையும்

-முனைவர் ம. பிரபாகரன்

தொல்காப்பியத்தில் மாத்திரை ஓர் அடிப்படைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளப்பட்டுள்ளது. பிற நூல்களில் மாத்திரை அடிப்படைச் செய்யுள் உறுப்பாகக் காட்டப்படவில்லை.  எழுத்தைக் கூறும்பொழுதே மாத்திரையும் உள்ளடங்கி விடுகிறது; அதனைக் கருத்தில் கொண்டே தொல்காப்பியம் தவிர்த்த மற்ற யாப்பிலக்கண நூல்கள் மாத்திரையை ஓர் உறுப்பாகக் கொள்ளாமல் விட்டிருக்கின்றன எனலாம். தொல்காப்பியர் மாத்திரையைத்  செய்யுளியல் முதல் சூத்திரத்தில் செய்யுளுறுப்பாக கூறிவிட்டு, இரண்டாம் சூத்திரத்தில் மாத்திரைக்கு விளக்கம் கூற வரும்போது,  மாத்திரையின் இலக்கணம்  மேற்கிளந்தனவே அதாவது எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகிறார் (தொல்.செய்.2). அதே போல் தொல்காப்பியர் செய்யுளியல் முதல்சூத்திரத்தில்  எழுத்து என்பதையும் மாத்திரைக்கு  அடுத்து வைத்துக் கூறிவிட்டு, இரண்டாம் சூத்திரத்தில்  அதற்கு விளக்கம் கூறும் பொழுது மாத்திரைக்குக் கூறியது போலவே ‘ மேற்கிளந்தனவே ‘ அதாவது எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றே கூறுகிறார்(தொல்.செய்.2).  அதற்குப் பிறகு தொல்காப்பியர்   செய்யுளியலின் பல இடங்களிலும் எழுத்து பற்றி விளக்குகிறார். ஆனால் மாத்திரையைப் பொறுத்த வரை’ மேற்கிளந்தனவே ‘ என்று இரண்டாவது சூத்திரத்தில் கூறிய பிறகு தொல்காப்பியர் செய்யுளியலின்  எந்த இடத்திலும் மாத்திரையைப் பற்றிப் பேசவே இல்லை. மாத்திரையைத் தொல்காப்பியம் முதன் உறுப்பாகக் கூறினாலும் எழுத்திற்கே தொல்காப்பியம் மிகவும் முக்கியத்துவம் தருகிறது. தொல்காப்பியம் எழுத்துவகை அடிகள் கூறியிருப்பது இதற்கு நல்ல உதாரணம் ஆகும். இவ்வெழுத்துவகை அடிகளிலும் மாத்திரையின் முக்கியத்துவத்தை அதாவது ஓரடியில் இத்தனை மாத்திரை உள்ள அடிகள்தாம் வரவேண்டும் என்று தொல்காப்பியர் வலியுறுத்தவில்லை. இங்ஙனம் மாத்திரை என்பது தொல்காப்பியத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறாத உறுப்பாகவே இருக்கிறது. இப்படியிருக்க தொல்காப்பியர் ஏன் மாத்திரையை முதல் உறுப்பாகக் கொள்ள வேண்டும்? மாத்திரையை ஏன் தொல்காப்பியர் ஓர் உறுப்பாகக் கொண்டார் என்பதற்குப் பேராசிரியர் தரும் குறிப்பொன்று நல்லதொரு விவாதத்திற்கு  வழிவகுக்கிறது. அந்தக் குறிப்பாவது:

இனி ஒருசாரார் மாத்திரையென்றது எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர். (தொல்காப்பியம் – பொருளதிகாரம் செய்யுளியல்,பக். 24; 2014, மறுபதிப்பு, மாணவர் பதிப்பகம், சென்னை)

எழுத்தல்லோசையைக் குறிக்கத் தொல்காப்பியர் மாத்திரை என்பதை பயன்படுத்தியுள்ளார் என்று ஒருசார் ஆசிரியர் கூறுவதாக பேராசிரியர் இவ்வுரைப்பகுதியில் கூறுகிறார். இவ்வாறு கூறும் பேராசிரியர் மாத்திரை என்பது எழுத்தல்லோசையாகிய குறிப்பிசையை குறிக்காது என்று அவ்வொருசார் ஆசிரியர்களை மறுத்தும்  கூறுகிறார்:

அக்குறிப்பிசை உறுப்பாக வருஞ் சான்றோர் செய்யுள் யாண்டுங் காணாமையின் நாம் அது வேண்டாமாயினாம் (மேலது, பக். 24) பேராசிரியர் கூறும்  எழுத்தல்லோசையை மாத்திரை என்று குறிப்பிடும் ஒருசார் ஆசிரியர் யாரென்று யாப்பிலக்கண வரலாற்றில் அறிய முடியவில்லை. இது குறித்த க.வெள்ளைவாரணரின் கருத்து இவ்விடத்தில் குறிக்கப்பாலதாகும்:

மாத்திரை என்பதை எழுத்தல்லோசையெனக் கொண்ட ஆசிரியர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்களுள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருசார் ஆசிரியர் ” மாத்திரையென்றதனான் எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர் ” எனவரும். இவ்வுரைத் தொடர் தொல்காப்பியவுரை யாசிரியர்களுள் ஒருசாரார் கூறிய உரைவிளக்கத்தை யுளத்திற் கொண்டு பேராசிரியரால் எழுதப்பெற்றதென்பது, ‘ நாம் அது வேண்டாமாயினாம் ” எனப் பின்வரும் அவரது உரைத்தொடரால் உய்த்துணரப்படும் (பக், 24 அடிக்குறிப்பு, மேலது). நச்சினார்க்கினியர் இது குறித்து ஒன்றும் கூறவில்லை. மாத்திரை என்பது எழுத்தல்லோசையைக் குறிக்க வாய்ப்புண்டா? இது குறித்து இனி விவாதிப்போம்.

பேராசிரியர் எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை உறுப்பாக வரும் செய்யுள் யாண்டும் சான்றோர் இலக்கியங்களில் காணமுடியாமையின் மாத்திரை என்பது எழுதல்லோசையைக் குறிக்காது என்று கூறுவது விவாதத்திற்குரியது. ஏனென்றால் பொதுவாக இலக்கணத்தில் காணப்படும் பல கூறுகளுக்கு இலக்கியம் கிடைக்கவில்லை. உதாரணமாக தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள பலவற்றிற்கு உதாரணங்கள் கிடைக்கவில்லை.தொல்காப்பியர் கூறியுள்ள  எழுத்துவகை அடிகளில் ஒரு சில அடிகளைத் தவிர சங்க இலக்கியத்தில் பெரும்பான்மையாக இடம்பெறவில்லை என்பர் ஆய்வாளர்கள். இதேபோல வீரசோழியர் விளக்கியுள்ள ஏழ்வகை பத்தியக் கவிகளுக்கும் இலக்கியங்கள் இல்லை. எனவே பேராசிரியரின் இந்த வாதம் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை. இத்தொடர்பில் ஒருசார் ஆசிரியர் மாத்திரை எழுத்தல்லோசையைக் குறிக்கும் என்ற கூறிய கருத்து நமக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது; அவர்களின் வாதம் எத்தன்மைத்து, அவர்கள் என்னென்ன உதாரணங்களை எடுத்துக் காட்டினார்கள் என்பது நமக்குக் கிடைத்திருந்தால் இது தொடர்பான ஆராய்ச்சி செய்வதற்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும். எனினும் இது தொடர்பாக ஏதேனும் முடிவைப் பெற முடியாவிட்டாலும் இந்த விவாதம் இது குறித்த சிந்தனையைத் தூண்டும் என்று நம்புவோம்.

மாத்திரை மற்றும் எழுத்தல்லோசை ஆகியவை குறித்துக் கிடைக்கும் கருத்துக்களை முதலில் தொகுத்துக்கொள்வோம்:

யாப்பருங்கல விருத்தி:

யாப்பருங்கலத்தில் மாத்திரை அடிப்படை உறுப்பாகக் கொள்ளப்படாத போதும் யாப்பருங்கல விருத்தி உரைகாரர் மாத்திரை பற்றி விவரித்துள்ளார்:

குற்றெழுத்து ஒரு மாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை அளபெடை மூன்று மாத்திரை எனக் கொள்க. என்னை?

குறிலொரு மாத்திரை நெடிலிரு மாத்திரை
அளபெடை மூன்றென் றறியல் வேண்டும் என்பது பல்காயம். ஆகலின்.

மாத்திரையாவது கண் இமைத்தலொடு கைநொடித்தல் ஒத்த காலம். என்னை?

கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே (தொல் எழுத்து 7)

என்றார் தொல்காப்பியர். 

கண்ணிமை கைநொடி என்றிவை இரண்டும்
மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரைஎன்றார் சங்க யாப்புடையார்.

ஒன்றிரண்டு டொருமூன் றொன்றரை அரைகால்
என்றனர் பொழுதிவை இமைநொடி அளவேஎன்றார் பிறரும்.

விளி முதலாயினவற்றுள் மூன்று மாத்திரையின் மிக்க பல மாத்திரையானும் அளபெடுத்து வருமாயினும். அவை செய்யுட்களுக்குப் பெரியதோர் உபகாரம்பட நில்லா ஆகலின் அவற்றிற்கு இலக்கணம் எடுத்து ஓதினார் இல்லை எனக் கொள்க.
…………………………………………………….

அரைநொடி என்ப தியாதென மொழியின்
நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே(பக். 22,23, யாப்பருங்கல விருத்தி, இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை:1976)

அளபெடையைக் குறித்துப் பேசும்பொழுதும் யாப்பருங்கலவிருத்தி மாத்திரை குறித்து சிந்தித்துள்ளது:

” அளபெடையாவன, மாத்திரை குன்றலிற் சீர் குன்றித் தளைகெட நின்றவிடத்து யாப்பழியாமைப் பொருட்டு வேண்டப்பட்டன. என்னை?

மாத்திரை வகையால் தளைதபக் கெடாநிலை
யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்என்றார் ஆகலின். (பக். 21: மேலது) 

யாப்பருங்கலக்காரிகை குணசாகரர் உரை:

அறிஞருரைத்த அளபும் ‘ என்று சிறப்பித்தவதனால் குற்றெழுத்து ஒருமாத்திரை. நெட்டெழுத்து இரண்டு மாத்திரை. அளபெடை மூன்று மாத்திரை. ஆய்தமும் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் அரைமாத்திரை. ஐகாரகுறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் ஒன்றரை மாத்திரை. ஒற்றளபெடை ஒருமாத்திரை. ஆய்த குறுக்கமும் மகரகுறுக்கமும் ஒரோவொன்று கால்மாத்திரை எனக்கொள்க. என்னை, 

ஒன்றிரண்டொருமூன் றொன்றரை யரைக்கால்
என்றனர் பொழுதிவை இமைநொடி யளவே

கண்ணிமை கைநொடி யளவே மாத்திரை
நுண்ணிதி நுணர்ந்தோர் கண்ட வாறே (தொல். எழுத்7)

அரைநொடி என்பது யாதென வினவின்
நொடிதரக் கூடிய இருவிர லளவே (சங்க யாப்பு) 

ஒற்றுக்கு மாத்திரை யொன்றே அளபெழுந்தாற்
றெற்றக் குறியது வேயாம் 

உன்னல் காலே ஊன்ற லரையே
முறுக்கல் முக்கால் விடுத்த லொன்றேஎன்றாரும் உளரெனக் கொள்க. (பக்.122, 123, யாப்பருங்கலக் காரிகை, வே.பால்ராஜ் பதிப்பு, காவ்யா பதிப்பகம், சென்னை: 2007)

பேராசிரியர்: மாத்திரை எழுத்தினது குணமாகலானும் அசையும் சீரும் அடியும் தூக்கும் பாவும் வண்ணங்களும் என்ற இன்னோரன்ன எல்லாம் மாத்திரை நிமித்தமாகத் தோன்றுவன ஆகலானும் மாத்திரை முன்னர் வைக்கப்பட்டது (தமிழ் இலக்கணப் பேரகராதி, பொருள்-யாப்பு 2,தமிழ்மண் பதிப்பகம், சென்னை, பக் 119:2005)

நச்சர்: மாத்திரையானல்லது செய்யுள் வேறுபாடு உணரலாகாமையின் மாத்திரை செய்யுளுறுப்புகளில் முதலாவதாகக் கூறப்பட்டது. (மேலது, பக்.121)

மேற்கண்ட  விளக்கங்களில் மாத்திரை என்பதற்கு எழுத்துக்களின் கால அளவு என்பதே பொருளாகக் கூறப்பட்டிருப்பதையும் இவ்விளக்கங்களில் எங்கும் மாத்திரை என்பதற்கு எழுத்தல்லோசை என்ற பொருள் இடம்பெறாமையையும் காண்க. இனி நிகண்டுகளில் மாத்திரை என்பதற்கு எழுத்தல்லோசை என்ற பொருள் காணப்படுகிறதா? எனக் காணலாம்:

சேந்தன் திவாகரம்:

அளவு:    மாத்திரை

 1. ”தாறு, கால், மாத்திரை, வரை, துணை, நேரம்
 2. காறு, பரிமாணம், அவதி, அளவு ஆகும்”

இங்கு அளவு என்பதற்கு மாத்திரை பெயராகச் சுட்டப்பட்டிருக்கிறது. இங்கும் எழுத்தல்லோசை பற்றிய குறிப்பு இல்லை.

பிங்கல நிகண்டு:

அளவு: மாத்திரை,

 1. தனையுங் காறுங் தாறுந் துணையும்
 2. வரையும் பிரமாணமு மாத்திரையு மட்டு
  மளவின் பெயரென் றறைந்தனர் புலவர்

மாத்திரை- கால நுட்பம்

கலையும், துடியும், கணமும், மாத்திரையும்,
நொடியும், பிதிரும், நுட்பமும், திட்பமும்
நிமிடமும், கால நுட்பம் (ஆகும்)
மாத்திரை- காலவிரைவு

2.189. கணமும் மாத்திரையும் கால விரைவே

இந்தப் பிங்கல நிகண்டு சூத்திரங்களில் மேலே கண்ட  சேந்தன் நிகண்டு போலவே  அளவு என்பதற்கு மாத்திரை குறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாத்திரை என்பதற்குக் காலநுட்பம் மற்றும் காலவிரைவு என்பது குறிக்கப்பெற்றுள்ளது. இங்கும் காலம் தொடர்பான பொருளே மாத்திரை என்பதற்கு குறிக்கப்பெற்றுள்ளது.

சூடாமணி நிகண்டு:

மாத்திரை

 1. 89. ஒல்லையே, இறையே, (உற்ற
  சிறுவரையறை(யுடன்) இலேசம்
  வல்லை, மாத்திரை(கள்), கால
  விரைவின் (பேர் வகுக்கில் ஆறாம்)

இந்தச் சூடாமணி நிகண்டுச் சூத்திரத்திலும் திவாகரம் பிங்கல நிகண்டுகளைப்  போலவே மாத்திரை என்பதற்கு கால விரைவு குறிக்கப்பெற்றுள்ளது.

இனி எழுத்தல்லோசை என்பதற்குரிய பொருள் இலக்கணங்களிலும், நிகண்டுகளிலும் காணப்படும் தன்மையைக் குறித்து பார்ப்போம்: 

யாப்பருங்கல விருத்தி:

எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும் அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடை அழியாமல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்கப்படும்.

முற்கு – முக்குதல்; வீளை-சீழ்க்கை அடித்தல்;

இலதை – கோழையை வெளிப்படுத்தல்: அநுகரணம் – போலச் செய்வது; அஃதாவது வேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவது போலவும் விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.

எ-டு  ‘ மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
கென்று திரியும் இடைமகனே – சென்று
மறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லே
அறியாயோ அண்ணாக்கு மாறு ‘

என ‘ உஃகுவஃகு ‘ என்று வருதல் போல்வன. இவை இடைக்காடர் பாடிய ஊசிமுறியுள் காணப்படும். ‘ ஊசிமுறி ‘  எழுத்தாணியால் முறையாக எழுத முடியாத எழுத்தல்லாத ஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்ற பெயர். ஊசி- எழுத்தாணி; முறி- தடுமாறச் செய்தல் (பக். 146,தமிழ் இலக்கணப் பேரகராதி)

எழுத்தல் ஓசையைப் பற்றி கிடைக்கும் விரிவான குறிப்பு இதுவே ஆகும். மேலே கண்ட பகுதியில் குறிக்கப்பெற்ற ஊசிமுறி என்ற நூல் தற்போது கிடைக்கவில்லை. அது கிடைத்திருந்தால் எழுத்தல்லோசை குறித்த கூடுதல் செய்தி நமக்கு கிடைத்திருக்கும்.

இனி நிகண்டுகளில் இந்த எழுத்தல்லோசை குறித்து கூறப்பட்டுள்ள தன்மையைக் காண்போம்: 

சேந்தன் திவாகரம்:

அகவல்: ஆசிரியம், எழுத்திலாவோசை

 1. அகவலும் தொகையும் ஆசிரியப் பாவே

1897 பிளிறலும் குளிறலும் பிரற்றலும் சிரற்றலும்
மருளலும், பயிறலும், குரைத்தலும், கனைத்தலும்
முளைத்தலும், அகவலும் எழுத்திலா ஓசை (தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008)

இங்கு  பிளிறல், குளிறல் பிரற்றல், சிரற்றல், மருளல், பயிறல், குரைத்தல், கனைத்தல், முளைத்தல், அகவல் என்பவை எழுத்திலா ஓசையனவாக குறிக்கப்பட்டுள்ளன. இங்கு மாத்திரை என்பது இடம்பெறவில்லை குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு  எழுத்திலா ஓசைக்கு அகவல் என்ற பொருள் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்க.பிங்கலத்தில், சேந்தன் திவாகரம் குறிப்பிட்டுள்ள எழுத்திலா ஓசை என்பது எடுத்தல் ஓசை என்று பதிவாகியுள்ளது. பிங்கலம்,  சேந்தன் திவாகரம் எழுத்திலா ஓசை என்று குறிப்பிட்டுள்ள ஒலிகளோடு சிலவற்றை விட்டுச் சிலவற்றை கூடுதலாக சேர்த்து,   எடுத்தல் ஓசை என்று கூறுகிறது. இது குறித்த பிங்கல நிகண்டு பகுதியாவது:

அகவல்- எடுத்தல் ஓசை

 1. முரல்வும், நரல்வும், முக்கலும், பயிறலும்
  தெளிறலும் ஞெளிர்தலும், சிரற்றலும், பிரற்றலும்
  குளிறலும், குமுறலும், குருமித்தலும், நெளிர்தலும்
  அகவலும் எடுத்தல் ஓசைப் பெயரே (தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008)

அகவல் தொடர்பாக சேந்தன் திவாகரத்தையும், பிங்கலத்தையும் இவ்விடத்தில் ஒப்பிடுவது பயனுடையதாக இருக்கும்:

எழுத்தில்லோசை

சேந்தன் திவாகரம் (எழுத்திலா ஓசை)          பிங்கலம் (எடுத்தல் ஓசை)

பிளிறல்        முரல்வு

குளிறல்       நால்வு

பிரற்றல்       முக்கல்

சிரற்றல்       பயிறல்

மருளல்        தெளிறல்

பயிறல்         ஞெளிர்தல்

குரைத்தல்   சிரற்றல்

கனைத்தல் பிரற்றல்

முளைத்தல் குளிறல்

அகவல் குமுறல்

குருமித்தல்

நெளிர்தலும்

அகவல்

சூடாமணி நிகண்டிலும் எடுத்தலோசை விளக்கப்பட்டுள்ளது (சூத்.718, தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008). ஆனால் அது தரும்  எடுத்தலோசையில் அகவல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூடாமணி நிகண்டு காட்டும் எடுத்த லோசையைக் கீழ்கண்டவாறு அட்டவணைப் படுத்தலாம்:

எடுத்தல் ஓசை

சூடாமணி நிகண்டு

தெளிறல்

முரலல்

முக்கல்

சிரற்றுதல்

பயிலல்

குளிறல்

நரலல்

குருமித்தல்

நெளிர்தல்

பிளிறல்

உளை

பிரற்றல்

நாம் மேலே கண்ட எழுத்திலா ஓசை என்பதும் எடுத்தல் ஓசை என்பதும் பாடவேறுபாடா? என்பது தெரியவில்லை. பாட வேறுபாடாக இருப்பின்  இவ்விரண்டின் பொருளும் ஒன்றா? வேறு வேறா? என்பது பற்றி ஒன்றும் கூற இயலவில்லை. இனி அடுத்து நாம் விவாதிக்க வேண்டியது, எழுத்திலா ஓசையைக் குறிக்க ஏன் அகவல் என்பது சுட்டப்படுகிறது? இங்கு அகவல் என்பது ஒருவகை ஓசை என்பது புரிகிறது. ஆனால் இது ஆசிரியப்பாவின் ஓசையா? என்ற கேள்வியும் இத்துடன்  எழுகிறது. அகவல் என்பதற்கு என்ன பொருள் நிகண்டுகளில், அகராதிகளில்  கொடுக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். அழைத்தல் என்பதன் ஒரு பெயரே அகவல் என்று பொருள் தருகின்றது பிங்கல நிகண்டு:

7: 238. கேதல், உளைத்தல், இகுத்தல், விளித்தல்
மாஎனல், கூவுதல், வாஎனல், மத்தல்
கரைதல், ஆகருடணை (இவையே அன்றி)
அகவல் (என்பதும்) அழைத்தல் (ஆகும்) (சாந்தி சாதனா, சென்னை: 2000)

அழைத்தல் என்பதன் பெயராகிய  அகவல் என்பதற்கும் யாப்பில் வரும் ஆசிரியப்பாவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?  என்ற கேள்வியை இங்குக் கேட்டுவைத்துக்கொள்வோம். இனி அகவல் என்பதற்கு என்ன பொருள் நிகண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்போம்.

பிங்கல நிகண்டு:

அகவல் – மயிற்குரல்

8.8. அகவல், ஆலல், ஏங்கல், மயில்குரல் (சாந்திசாதனா, சென்னை: 2000)

இங்கு அகவல் என்பதற்கு ஆலல், ஏங்கல், மயிற்குரல் என்ற மூன்று பொருளை பிங்கல நிகண்டு தருகிறது. இங்கு அகவல் என்பதற்கு மயில்குரல் என்ற பொருள் இடம்பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது. இந்த மயிற்குரல் அகவல் யாப்போடு ( ” அழைத்தல் ” என்னும் பொருளில்) தொடர்புடையதாக இருப்பது க.கைலாசபதி அவர்களால் தன் தமிழில்  வீரநிலைக் கவிதை என்ற நூலில் கூறப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் கூறுவதாவது:

”அகவுநர், அகவலர் அல்லது அகவர் என்னும் சொற்கள், மயிலைப் போல் ஒலியெழுப்பிப் பாடு, அழை, கூவு எனப்பொருள்படும் ‘ அகவு ‘ என்னும் பொருளடியாகத் தோன்றின” (குமரன் புத்தக இல்லம், பக் 158: 2006).

இதன் மூலம் அகவல் என்பது அழைத்தல் என்ற பொருளுடையது  என்பதைத்  தெரிந்து கொள்கிறோம். ஏற்கெனவே நாம் கேட்டுவைத்திருந்த கேள்வியாகிய அழைத்தல் என்பதன் பெயராகிய  அகவல் என்பதற்கும் யாப்பில் வரும் ஆசிரியப்பாவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?  என்பது குறித்து இனிப்பார்க்க வேண்டும். அகவல் அல்லது அழைத்தல் என்பதற்கும் யாப்பில் வரும் அகவல்பாவிற்கும் தொடர்பு உண்டு என்பதைக் கைலாசபதியின் கீழ்வரும் கூற்று உறுதிசெய்கின்றது:

அகவல் என்பதற்கு அழைத்தல் என்பது பொருள். மகள் என்பது பெண்ணைக் குறிக்கும். இப்புலமகள் தன்மீது தோன்றும் தெய்வத்தை அழைப்பதாக இதனைக் கருதலாம். (பக். 95 மேலது).

அகவுநர், அகவலர் அல்லது அகவர் என்னும் சொற்கள், மயிலைப் போல் ஒலியெழுப்பிப் பாடு, அழை, கூவு எனப் பொருள்படும் அகவு எனும் இச்சொல் அழைப்பவர், கூப்பிடுபவர் என்ற நேர் பொருளை உடையது (பக். 158, மேலது)

இதனை மனத்தில் இருத்திக்கொண்டு இனி,  அகவுநரோடு; அவர்கள் பாடும் அகவல் பாட்டோடு, மாத்திரை என்பது தொடர்புபட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். அகவலுக்கும் மாத்திரைக்கும் உள்ள தொடர்பு கைலாசபதி தரும் ஒரு குறிப்பு வழியாக நம்மால் ஊகிக்கமுடிகிறது. அவர் அகவுநர்கள் பாடும்போது கையில் மாத்திரைக் கோல் ஒன்று வைத்திருப்பர் என்று கூறுகிறார். இம்மாத்திரைக்கோல் என்பது அகவுநர்கள் அகவல் ஓசையை எழுப்பிப்பாடும்போது அவ்வோசையை குறிப்பிட்ட  கால அளவுக்குள்  உட்படுத்தி அல்லது கட்டுப்படுத்திப் பாடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எனவே இந்த  அகவல் என்பது மாத்திரையோடு தொடர்புபட்டதாக அமைகிறது. ஆனால் அகவுநர்கள் பயன்படுத்தும் இந்தக் காலஅளவு என்பது புலமைநிலை படுத்தப்பட்ட, தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள  மாத்திரைக்கு முன்னோடியாக அமைந்தது எனலாம். அதாவது அகவல் என்பது எப்படிப் புலமைநிலையில் அமைந்த ஆசிரியத்திற்கு முன்னோடியாக அமைந்ததோ அதுபோல இந்த அகவுநர் மாத்திரைக்கோலைக் கொண்டு  அளவிட்ட  கால அளவு அல்லது மாத்திரை தொல்காப்பியம் போன்ற புலமைமரபில் பயன்படுத்தப்பட்ட மாத்திரைக்கு முன்னோடி என்று கொள்ள வேண்டும். இப்போது இவ்விடத்தில் நாம் மேலே குறிப்பிட்ட  கைலாசபதியின்  மாத்திரைக்கோல் குறித்த கூற்றை எடுத்துக்காட்டுவது பயனுடைதாக இருக்கும்:

முற்குறித்த நோக்கின் தெளிவில், சில பாடல்கள் இப்பாணர்கள் இசைக் கருவிகளுக்குப் பதிலாக ஒரு மாத்திரைக்கோல் அல்லது கைத்தடியினைக் கொண்டிருந்தனர் என்று கூறுவது ஆர்வமாக நோக்குதற்குரிய கருத்தாகும். இதற்குரிய தமிழ்ச்சொல் ‘ கோல்’ என்பதன் பொருள் தடி, குச்சி, கிளை, கைக்கோல் என்பன. நன்கு துண்டிக்கப்பட்ட மெல்லிய கோல் ஒன்றைக் கையில் கொண்டு பாணர்கள் வெற்றி பெற்றோரைப் போர்களங்களில் புகழ்ந்தனர். மற்றொரு செய்யுளில், இக்கோல் நீண்ட மூங்கில்கள் வளருமிடத்திலிருந்து, ஒல்லியான கணுக்களைக் கொண்ட மூங்கில் தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. ஒல்லியான கோல் எனப்பொருள்படும் ‘ நுண்கோல் ‘ என்ற பெயர் அகவுநர் என்ற பெயரோடு முன்னொட்டாகச் சேர்க்கப்பட்டு ‘ ஒல்லியான கோல் கொண்ட பாணர் ‘ என்ற பொருளைத் தருகிறது. (பக். 160; மேலது)

இங்கு மாத்திரைக் கோல் என்பது அகவுநரோடு தொடர்புபடுவதைக் காணலாம்.

மேற்கண்ட கருத்துக்கள் வழி அகவலுக்கும் மாத்திரைக்கும் இடையே உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ளலாம். எழுத்திலா ஓசையும் அகவலாகக் குறிக்க பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.  அகவல் என்பது ஓசையே ஆகும்; அது  எழுத்திலா ஓசையாகவும் எழுத்துள்ள ஓசையாகவும் ( ஆசிரியப்பா) இருந்திருக்க வேண்டும். எழுத்திலா ஓசை எழுத்துள்ள ஓசையை விட காலத்தாற் முந்தியது எனக்கொள்ளலாம். மாத்திரை அல்லது  காலஅளவைப்  பயன்படுத்தியே எழுத்திலா (அகவல்) ஓசை அளக்கப்பட்டிருக்கிறது என்று ஊகிப்பது தவறாகாது. இதன் மூலம் பேராசிரியர் குறிப்பிடும் மாத்திரை என்பது எழுத்திலா ஓசையை குறித்தது என்ற ஒருசாராரின் கருத்து வலுவுடைத்தாக தோன்றுகிறது. இது மேலும் ஆய்விற்குரியது.

******

சான்றாதார நூல்கள்:

 1. வெள்ளை வாரணர். க – தொல்காப்பியம் – பொருளதிகாரம் செய்யுளியல் உரைவளம், மறுபதிப்பு, மாணவர் பதிப்பகம், சென்னை.
 2. இளங்குமரன் இரா – யாப்பருங்கல விருத்தி, கழகம், சென்னை:1976
 3. வே.பால்ராஜ் பதிப்பு- யாப்பருங்கலக் காரிகை, காவ்யா பதிப்பகம், சென்னை: 2007
 4. கோபாலய்யர் தி.வே – தமிழ் இலக்கணப் பேரகராதி, பொருள் யாப்பு -1,தமிழ்மண் பதிப்பகம் சென்னை: 2005.
 5. சுப்பிரமணியன் ச.வே. – தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, மெய்யப்பன் பதிப்பகம்,சிதம்பரம்: 2008.
 6.  திவாகரம்-பிங்கலம்- சூடாமணி, சாந்தி சாதனா, சென்னை: 2000
 7. கைலாசபதி.க – தமிழ் வீரநிலை கவிதை, குமரன் புத்தக இல்லம் : 2006)

******

கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்,
EFEO,
புதுச்சேரி.

 

 

 

 

 

Share

About the Author

has written 1001 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.