வ.சுப. மாணிக்கனார் பார்வையில் வினைத்தொகை

-முனைவர் த. சரவணன்

தமிழுக்கே உரிய சிறப்புக் கூறுகளாக எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்து எழுத்துக்களைக் கூறுவர். அதேபோன்று சொல்லாக்க முறைகளில் வினைத்தொகை என்னும் தொகைச்சொல் வடிவமும் தமிழுக்கே உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வினைத்தொகைபற்றி இலக்கணிகள் குறிப்பிடுவது பற்றியும் வ.சுப. மாணிக்கனார் அவற்றில் இருந்து வேறுபடுவது பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

வினைத்தொகை

வினைத்தொகையானது இரண்டு சொற்கூறுகளைக் கொண்டது. அதன் முதற்கூறு வினையடியாகவும் இரண்டாவதுகூறு பெயராகவும் காணப்பெறும். சான்றாகக் கொல்களிறு என்ற சொல்லில் உள்ள கொல் என்பது வினையாகவும் களிறு என்பது பெயராகவும் காணப்படுகிறது.

வினைத்தொகையைப் பற்றித் தொல்காப்பியர்

வினையின் தொகுதி காலத் தியலும்” (தொல். எச்சவியல். 19) என்கிறார். இதில் வினைத்தொகை என்பதை வினையின் தொகுதி என வழங்குகிறார் அவர். வினைத்தொகையானது கால இடைநிலை தொக்குப் பொருள் தரும் என்பது இந்நூற்பாவால் பெறப்படுகிறது.

     நன்னூலார் வினைத்தொகையை,

     “காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” (நன்னூல். 364)

என்கிறார். வினைத்தொகையை விரித்துப் பொருள் கொள்ளும்பொழுது எச்சமாக மாற்றியே பொருள்உரைக்க முடிகிறது. சான்றாகக் கொல்களிறு என்பதைக் கொன்ற களிறு என்னும்போது இறந்தகாலப் பெயரச்சமும், கொல்கின்ற களிறு என்னும் போது நிகழ்காலப் பெயரெச்சமும் கொல்லும் களிறு என்னும் போது எதிர்காலப் பெயரெச்சமும் இடம்பெறுகிறுகிறது. எனவே இப்பெயரெச்சங்களைத் தொகையாக்கிக் கூறும்போது வினைத்தொகை உண்டாகிறது என்பது பொதுவான கருத்து.

வினைத்தொகை என்னும் சொற்கூட்டின் முதற்கூறு வினையும் வினைப்பெயரும் தோன்றுவதற்குரிய வேர்ச்சொல்லாக அமைந்து இருக்கின்றது. வினை என்பது காலம் காட்டும் தன்மை உடையது ஆகும். ஆகவே வினைத்தொகையும் காலமொடு வருகிறது. வினைத்தன்மையே அச்சொற்கூட்டில் இருப்பதால் வினைத்தொகை என்று பெயர்கொடுக்கப்பெற்றுள்ளது. எனவே வினைத்தொகை என்பதற்கு  வினைத்தன்மை அதாவது காலம்காட்டும் நிலை தொக்கது என்று விளக்கம் அளிக்கலாம்.

வ.சுப.மாணிக்கனார் பார்வையில் வினைத்தொகை

வ.சுப. மாணிக்கம் அவர்கள் A Study of Tamil verbs என்னும் நூலில் வினை வடிவங்களை அடையாளம் காண்பதில் உதவும் காரணியாக வினைத்தொகையைக் காண்கிறார்.

 “வினைத்தொகையைக் கட்டமைக்கும் அச்சொற்கூட்டின் முதல் பகுதியானது எந்த ஒரு வினையின் மூலவடிவத்தையும் உறுதிசெய்வதற்குத் தவிர்க்க இயலாக் காரணியாக விளங்குகிறது. சான்றாக ஆகூழ், ஆகாறு, ஆகிடன், அளவாகு மொழிமுதல் ஆகிய சொற்களில் ஆகு என்னும் தூய வினைவடிவத்தை நாம் காணமுடியும்” (A Study of Tamil verbs, ப.37)

ஏவல் வடிவங்கள் வினையின் உண்மையான வடிவத்தைக் காட்டுவதில் தோல்வி அடையும்போது வினைத்தொகை வடிவங்களே நம்மைக் காப்பாற்றுவதாகவும் வ. சுப. மாணிக்கனார் குறிப்பிடுகிறார். மேலும் சிக்கலுக்குரிய வினைவடிவமாகிய வா, தா என்பவற்றின் வினையடியாக வரு, தரு என்பதையே கொள்ளலாம் என்பதைப் பின்வரும் கூற்றின் மூலம் விளக்குகிறார்.

“ஐயத்திற்குரிய எந்த ஒரு வினைவடிவத்தின் உண்மையான மூலத்தையும் அடையாளம்காண நமக்கு உதவுவது வினைத்தொகையின் முதற்கூறான வினையடியே. பின்வரும் சான்றுகளில் வரு, தரு என்னும் சொற்கள் வினைத்தொகையில் அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரு    விசிப்புனல் (தொல்.1008) வரு விருந்து (குறள்.83) புனல்தரு பசுங்காய் (குறுந்தொகை. 292)” (A Study of Tamil verbs, ப.44)

வினைத்தொகை பற்றிப் பிற்கால இலக்கணிகள் கொண்டிருந்த கருத்துக்கு மாற்றாகத் தொல்காப்பியரைப் பின்பற்றி, வினைத்தொகையில் இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் மட்டுமே  உணரமுடியும் என்பதைப் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.

“இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் குறிப்பிடும் இரண்டு பெயரெச்சங்களை மட்டுமே      தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

அவ்வறு பொருட்குமார் அன்ன உரிமைய
செய்யும் செய்த என்னும் சொல்லே (தொல். 718)

கொல் களிறு போன்ற சொற்களில் நிகழ்காலத்தையும் இறந்தகாலத்தையும் மட்டுமே விளங்கிக்கொள்ள முடிவதாகஅவர் எண்ணுகிறார். இதற்குச் சான்றாகப் பின்வரும் நூற்பாவைக் குறிப்பிடலாம்.

செய்யும் செய்த என்னும் கிளவியின்
மெய்யொருங்கு இயலும் தொழில்தொகு மொழியும்” (தொல். 482)”                                                                                  (A Study of Tamil verbs, ப.102)

மேற்கண்ட கூற்றில் தொழில்தொகு மொழியாகிய வினைத்தொகையில் செய்யும் செய்த என்னும் இரண்டு காலமே அதன் விரியில் வருவதை எடுத்துக்காட்டி இடைக்கால இலக்கணிகள் குறிப்பிடும் முக்காலமும் காட்டும் என்பதனை வ.சுப. மாணிக்கனார் மறுப்பதை அறியமுடிகிறது.

“உம் ஈறு நிகழ்காலத்துக் குரியது எதிர்காலத்துக்குரியதாவது எதனாற் பெறுதும்? என்பது வினா. பெயரெச்ச விகுதிகளுள் அகரம் இறப்பு நிகழ்வுக் காலங்கட்குரியது. உம் நிகழ்வுக்குரியது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லையாதலின் உம் விகுதியைக் கொள்ளவேண்டும்.” (தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் – எச்சவியல், பக்.132) என்று ஆ. சிவலிங்கனார் குறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லாமையாலேயே இரண்டு பெயரெச்சங்களே வினைத்தொகையில் காணப்படுகின்றன என்று வ.சுப. மாணிக்கனார் முடிவு செய்கிறார். தொல்காப்பியர் வினைத்தொகையைப் பற்றிக் குறிப்பிடும் நூற்பாவில் காலத்தியலும் என்று பொதுப்படையாகக் கூறி இன்ன காலம் என்று குறிப்பிடாமல் சென்றுள்ளதும் இதற்குக் காரணமாகும்.

இறுதியாக, வினைத்தொகை என்பதில் கடந்த கால, நிகழ்காலப் பெயரெச்சங்களே தொக்கி நிற்கின்றன என்பதும் வினையடியின் தூய வடிவைக் கண்டறிவதில் வினைத்தொகையின் முதற்கூறு உதவுகிறது என்பதும் வ.சுப. மாணிக்கனாரின் இலக்கணப் பார்வையின் மூலம் அறிய முடிகிறது.

******

துணைநின்ற நூல்கள்:

Manickam,V.Sp. 1972. A Study of Tamil Verbs. Annamalai Nagar: Annamalai University.

சிவலிங்கனார், ஆ. 1998. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (உரைவளம்) எச்சவியல்.  சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

******

கட்டுரையாசிரியர்
இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
இலக்கியத்துறை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
#40, ஐ.ஆர்.டி வளாகம், நூறடிச்சாலை,
தரமணி, சென்னை – 113.

 

 

 

Share

About the Author

has written 889 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]


× 4 = twelve


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.