திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -39

0

க. பாலசுப்பிரமணியன்

இறைவனின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

திருமூலர்-1-3-3

பல நேரங்களில் நம்முடைய மனதில் எழுகின்ற ஒரு ஐயம் – இறைவனை எப்போது வணங்கினால் அவனுடைய பார்வை நம் மீது விழும்? காலையிலா. மாலையிலா அல்லது நண்பகலிலா? அவனை எப்படி பூசிப்பது? என்ன மலர்களைக் கொண்டு வழிபடலாம்? என்ன சொற்கள் கொண்டு போற்றலாம்? இறைவனுக்கு என்ன உணவு பிடித்தமானது? என்ன உணவுகளை படைக்கலாம்? என்ன செய்தாவது, அவனுடைய கடைக்கண் பார்வையில் நிரம்பி வழியும் அருளுக்குப் பாத்திரமாகி விட வேண்டும் என்ற எண்ணம்.

இந்த ஐயத்தினை விளக்கும் வகையிலும் தடுமாறுகின்ற உள்ளங்களுக்கு வழிகாட்டும் வகையிலும் திருமூலர் கூறுகின்றார் :

பகலும் இரவும் பயில்கின்ற பூசை

இயல்புடை யீசர்க் கிணைமல ராகப்

பகலும் இரவும் பயிலாத பூசை

சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே 

அதுமட்டுமல்ல.. அவன் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்

வானுற மாமல ரிட்டு வணங்கினும்

ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது

தேனமர் பூங்குழல் சேரவொண் ணாதே 

“ஊனினை நீக்கி உணர்தல்” – ஒரு சாதாரண மனிதனால் எப்படி முடியும்? இதற்கு நாம் வெளி உலகத்தைத்  தேடும் புற அறிவினை விட்டு உள்நோக்கிச் செல்லுதல் அவசியம். உள்ளிருந்து நமக்கு வழிகாட்டும் பேரொளி தான் நமக்கு ஐம்பொறிகளின் தூண்டுதலால் ஏற்படுகின்ற துயரங்களிலிருந்து விடுதலை தரும்.

இந்த நிலைக்குச் செல்ல நாம் என்ன முயற்சி செய்ய வேண்டும்? முன்காலத்தில் அடியார்கள் வேண்டியதெல்லாம் “இறைவா., எனக்கு இருளிலிருந்து ஒளியை நோக்கிச் செல்ல வழிகாட்டு; பொய்மையிலிருந்து வாய்மை நோக்கிச் செல்ல வழிகாட்டு: அநித்தியத்திலிருந்து நித்தியத்தை நோக்கிச் செல்ல வழிகாட்டு.” என்பதே. இருளிலிருந்து ஒளியைத் தேடித் செல்ல நாம் முயற்சிக்க வேண்டாமா? இதை எப்படிச் செய்யலாம்? திருமூலரே நமக்கு வழிகாட்டுகின்றார்:

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்

விளக்கினின் முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே ! 

என்ன அருமையான சொல்லாடல் ! என்ன ஆழமான கருத்துக்கள்!

“உங்களுடைய உள்ளத்தில் ஞானவிளக்கினை ஏற்றுங்கள். அதன் துணையோடு உள்ளத்தில் இருக்கும் மலங்களை நீக்கி அருளொளியை அடைய முயலுங்கள்” என்ற கருத்தை அழகாக முன்வைக்கின்றார் .

சித்த விகாரத்தால் சின்மயனைக் காணாமல்

 புத்தி கலங்கிப் புகுந்தேன் பொறிவழியே.” 

என்று துயரத்தில் வாடுகின்ற பட்டினத்தாரும் அவனைக் “கல்லுளிருந்த கனலாகக்” காண்கின்றார்

சொல்லுக்கடங்கான்காண் சொல்லிறந்து நின்றவன்காண்

கல்லு ளிருந்த  கன்னலொளிபோ னின்றவன்காண். 

என்று அவனை உள்ளிருக்கும் சோதியாகக் கருதியே வழிபடுகின்றார்.

அவனுடைய அருள் மட்டும் நமக்குக் கிடைத்துவிட்டால் அகத்தில் உள்ள மலங்களெல்லாம் நீங்கி உள்ளத்தில் பேரொளியாக அவன் திகழ்வானே ! இதற்கும் அவன் அருள் தானே வேண்டும். இந்த அருள் பெற்ற நிலையை வர்ணிக்கும் மாணிக்கவாசகர் இவ்வாறு கூறுகின்றார்:

இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து

எழுகின்ற ஞாயிறே போன்று

நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்

நீ அலால் பிரித்து மற்று இல்லை

சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்று ஆம்

திருப்பெருந்துறை உறை சிவனே

ஒன்றும் நீ அல்ல அன்றி ஒன்று இல்லை

யார் உன்னை அறியகிற்பாரே.

பரந்து நிற்கும் பரஞ்சோதியை தங்கள் எண்ணத்துக்குள் அனுபவத்திருக்குள்ளும் சொற்களுக்குள்ளும் கட்டுப்படுத்தி அவனை ஒரு வர்ணனைக்குள் கட்டுப்படுத்த நினைக்கும் மாந்தரைப் பார்த்து திருமூலர் கூறுகின்றார் :

உறையற்ற தொன்றை யுரைசெய்யு மூடர்காள்

கரையேற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ? 

(தொடருவோம் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *