மீ.விசுவநாதன்

பகுதி: 20
பாலகாண்டம்

 
“அமுதம் தோன்றுதல்”

ஸ்ரீராம-தர்ம-சரிதம்
சந்தியா வந்தனம் செய்து
தன்னுடைய குருமுகத்தை வணங்கி
வந்துள படகினில் ஏறி
வடபுறமே சென்றிடுவோம் என்று
புந்தியில் புனிதராம் இராமன்
புகன்றவுடன் அனைவருமே சென்றார்
இந்திர லோகமாய்க் காணும்
இவ்விடத்தின் பெருமைசொல்வீ ரென்றார் !

நானறி செய்தியை உனக்கு
நன்றாகச் சொல்கிறேன்கேள் என்றார் !
“மானிடப் பிறவியில் மூப்பும்
மரணமுமே சுற்றிதினம் தாக்கும்
நாமதை வென்றிட வேண்டும்
நல்லமுதை உண்டாலே அந்த
தேவதை நிலைதனைக் கொள்வோம்
திகட்டாத பேரின்பம் காண்போம் !

ஆதலால் வாசுகிப் பாம்பை
ஆற்றலுடைக் கயிறேனவே கொண்டு
தோதென மந்திர மலையைத்
தூக்கிவைத்து மத்தெனவே செய்து
காதலால் பாற்கடல் கடைந்தார்
கடும்பலத்தோர் அசுரதேவர் சேர்ந்து !
மாதவ முனியினைப் போன்ற
மருத்துவ”தன் வந்திரி”யே வந்தார் !

அப்புவாம் நீர்க்கடல் கடைய
“அப்சரசாம் அழகிகளும் வந்தார்
இப்படி அடுத்ததாய் வருணன்
எழில்மகளாம் வாருணியும் வந்தாள் !
ஒப்பிலாக் குதிரையாம் அழகு
உச்சைசிரம், ரத்னமாலை வந்தது !
அப்படி மீண்டுமே கடைய
அமுதத்தேன் குடமங்கு வந்தது !

“திதியின் தவம்”

அமுதினைக் கொண்டிட சண்டை
அசுரர்க்கும் தேவர்க்கும் நடக்க
சமயமாய் விஷ்ணுவே தோன்றி
சரியான தேவர்க்கே தந்தார்
தமதுயிர்ப் பிள்ளையர் மாள
காரணமாம் இந்திரனை வெல்ல
உமதருள் வேண்டினேன் என்று
உயிர்க்கணவன் காசியபர் முன்னே

திதியவள் பணிவுடன் கேட்டாள் !
வேண்டியதன் வரத்தினையே பெற்று
புதியதோர் மகன்தனைக் கொள்ள
புறப்பட்டாள் கடுந்தவமே செய்ய !
உதவியைச் செய்கிறே னென்று
ஓடிவந்தான் இந்திரனாம் தேவன் !
விதிவழி திதியவள் கர்பம்
விலகிடவே இந்திரனும் செய்தான் !

“விசால நாடு”

தவத்தினை செய்துள இடமே
தர்மவானாம் “அலம்புசனின்” நாடு !
சகத்திலே நன்மையே செய்யும்
சக்ரவர்த்தி இஷ்வாகுவின் பிள்ளை !
இகத்திலே இனியபேர் விசாலன்
இவனாண்ட தேசமே”வி சாலம்” !
முகத்திலே ஒளிமிகு “சுமதி”
முறையுடனே இன்றாளும் ராஜா!

என்றதோர் முனியவர் வாக்கை
இன்பமெனவே கொண்டிட்டான் ராமன் !
கன்றினைக் காத்திடும் பசுவாய்
கவனமுடன் ஆளுகின்ற “சுமதி”
நன்றியைக் கூறியே வருக
ஞானியரே என்றுவர வேற்றார் !
ஒன்றிய மனத்துடை முனியும்
ஓரிரவு தங்கிடவும் செய்தார் !

(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 45, 46, 47ம் பகுதி நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *