லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம்

0

-முனைவர். ஹெப்ஸி ரோஸ் மேரி. அ

தொல்காப்பியம் என்னும் பேரிலக்கணம் தமிழ்மொழியில் காணப்படும் நூல்களில் முதல் நூலாக விளங்குகிறது. இது முந்து நூல் கண்டு இலக்கணம் அமைத்ததோடு வழக்குமொழிக்கும் செய்யுள் மொழிக்கும் சேர்த்து இலக்கணம் அமைத்ததை அதன் சிறப்புப் பாயிரம் உணர்த்துகிறது.  தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய இலக்கண நூல்கள் தொல்காப்பிய மரபைப் பின்பற்றியும் மொழி வளர்ச்சிக்கேற்பப் புதிய மாற்றங்களையும் புதுமையான கருத்துக்களையும் சேர்த்துக் கூறின. அவ்வகையில் தமிழ்மொழியில் தொல்காப்பியத்திற்குப் பின்தோன்றிய இலக்கண நூல்களில் தொல்காப்பிய மரபு நிரம்ப இருப்பதைக் காணலாம்.  அவ்வண்ணமே தமிழுடன் நெருங்கியத் தொடர்பு கொண்ட திராவிட மொழியாகிய மலையாள மொழியின் முதல்  இலக்கண நூலாகிய லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவற்றை இனங்கண்டு விளக்க முயல்கிறது  இக்கட்டுரை.

மலையாள இலக்கண மரபு

மலையாளத்தில் கி.பி 14 ஆம் நூற்றாண்டில்  தோன்றிய லீலாதிலகம் கி.பி.1851 – ல் குண்டர்ட் எழுதிய  மலையாள மொழி இலக்கணம், கி.பி.1895 – ல்   ஏ. ஆர். இராஜராஜ வர்மா எழுதிய கேரளபாணினீயம் போன்றவற்றை மலையாள மொழியின் முக்கியமான மூன்று பேரிலக்கண நூல்கள் எனக் குறிப்பிடலாம். அவற்றுள் லீலாதிலகம் தான் மலையாளத்தின்  முதல் இலக்கண நூல். எனினும்  இன்று கேரளத்தில்  பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்புவரை மிகுந்த பயிற்சி பெற்று விளங்குவது கேரளபாணினீயமே.  தமிழ் மலையாள இலக்கணங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது கால வேறுபாடு ஒருபுறம் இருந்தாலும் மலையாள இலக்கண நூல்கள்  வடமொழி தமிழ் நூல்களின் சார்பு அல்லது வழி நூல்களாக உள்ளன.  அதாவது அவற்றுள் சில வடமொழி நூல்களை மொழிபெயர்த்தனவாகவும் தமிழ் நூல்களைப் பின்பற்றுவனவாகவும்  தழுவல்களாகவும் காணப்படுகின்றன.

மலையாள இலக்கண நூல்களில் பழமையான லீலாதிலகம் வடமொழியில் எழுதப்பட்டுள்ளது.   பின்புதான் மலையாள மொழியில் நூல்கள் எழலாயின.  பிற திராவிட மொழிகளிலும் முதல் இலக்கண நூல்கள் வடமொழியில்தான் தோன்றியதாகப்   பேரா. கி. நாச்சிமுத்து குறிப்பிடுகிறார். ஆனால் தமிழில், தமிழ் தவிர்த்த பிறமொழிகளில்  போலப் பழைய தமிழ் இலக்கணங்கள் வடமொழியில்  எழவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.  அதுபோலவே தமிழுக்கு உரிய கலைச் சொற்களையும் இவற்றில் காணலாம்.  இவை தமிழில் தமிழ் வழியான தனி இலக்கண மரபு ஓன்று வளமாக இருந்ததையே காட்டுகின்றன. தமிழில்  ஐந்திலக்கண மரபு உள்ளதைப் போன்று லீலாதிலகத்தில் மூன்று இலக்கண மரபு அமைந்துள்ளது.  லீலாதிலகம்  அணி நூலாயினும் ஏனைய இலக்கணங்களைப் பற்றியும்  கூறிச் செல்வது தமிழ் மரபை ஒட்டி உள்ளது.  எனினும் இந்நூலின் போக்கு வடமொழியை ஒட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

லீலாதிலக எழுத்திலக்கணத்தில் தொல்காப்பியம்

எழுத்துக்கள் தம்முள் புணர்வதைத் தமிழில் புணர்ச்சி என்றும் வடமொழியில்   ‘ சந்தி’ என்றும் அழைப்பர். தொல்காப்பியர் சந்தியை ஐந்து இயல்களில் விரித்துக் கூறுகிறார்.  லீலாதிலகம் புணர்ச்சி விதிகளை விரிவாகவும் விளாக்கமாகவும் கூறாமல் ஒரே இயலில் விளக்கியுள்ளது.  இது தமிழ்ப்புணர்ச்சி விதிகளையே பின்பற்றியுள்ளதாகக் கே.என். எழுத்தச்சன் குறிப்பிடுகிறார்.  லீலாதிலகம் வெளிப்படையாகப் தமிழ் விதிகளைக் கையாண்டுள்ளது.  அன்றைய கால மொழியானது தமிழ் மலையாள மொழிகளின் கலப்பு மொழி (proto Tamil Malayalam)என்பது அக்காலத்தெழுந்த இராமசரிதம் போன்ற நூல்கள் வாயிலாக அறியலாம்.  லீலாதிலக காலத்தைய  பழைய மலையாளத்துக்கும் அன்றைய தமிழ்மொழிக்குமிடையே இடைவெளி அதிகம் இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.   எனவே தொல்காப்பியர் கூறும் சந்தி விதிகள் பல லீலாதிலகத்தில் கூறப்பட்டிருப்பது இருமொழிகளின் ஒன்றுபட்ட தன்மையினால்தான் என்று முடிவு செய்யலாம். லீலாதிலகம் புணர்ச்சிக்கு 28 விதிகள்தாம் கூறியுள்ளது. அவர் கூறும் விதிகளை உயிர் முன் உயிர், உயிர் முன் மெய், மெய் முன் மெய், மெய் முன் உயிர்  என்ற அமைப்பில் பிரிக்கலாம். தொல்கப்பியமும் மலையாள இலக்கண நூல்களும் கூறும்  புணர்ச்சி விதிகளில் சிலவற்றைக் காண்போம்.

தொல்காப்பியர் ,

சுட்டின் முன்னர் ஞ, ந, மத் தோன்றின்
ஒட்டிய
ஒற்றிடை மிகுதல் வேண்டும்  ( தொல். எழு.206)

இந்நூற்பாவைப் பின்பற்றியே லீலாதிலகம் செல்வதைக் காணலாம். அது வினாப்பொருளில் வருகின்ற ‘எ’கரத்தின் முன்னும் தனிக் குறிலாகிய அ,இ, ஆகியவற்றின் முன் வரும் ஞ, ந, ம, வ, க, ச, த, ப ஆகியவை வந்தால் இரட்டும் .

எ.டு

எ+ஞாண் = எஞ்ஞாண், எந்நூல், எம்மரம், எக்காலம்

அ+ஞாண்= அஞ்ஞாண், அந்நூல், அம்மரம், அக்காலம், இ+ நூல்= இந்நூல், இக்காலம்

சில இடங்களில் அ,ஆ,இ, ஊ ஆகியவற்றின் முன் க, ச, த ப வரின் இடையில் அவற்றின் மெல்லினம் தோன்றும் .

எ.டு

முளெ + கொம்பு =முளெங்கொம்பு, அமெ+கொம்பு=அமெங்கொம்பு

இவ்வாறு லீலாதிலக ஆசிரியர் கூறுவது ‘யாமரக் கிளவி………..மெல்லெழுத்துமுடிமே             ( தொல் . எழு.230) என்ற தொல்காப்பிய நூற்பாவைப் பின்பற்றியே ஆகும்.

ணகரத்தின் முன் வரும் தகரம் ‘ட’கரமாகும், ணகரத்தின் முன் வரும் ‘ ந’ கரம் ‘ண ‘ கரமாகும்; ளகரத்தின் முன் வரும்  நகரம் ‘ன’கரமாகும். என்று லீலாதிலகம் கூறுவது தொல்காப்பிய நூற்பாக்களைப் பின்பற்றியே ஆகும். (தொல்.எழு.303,156,398)

 

எ.டு

மண் + தீது= மண்டீது த>ட, முண்+ நன்று=முண்ணன்று  ந>ண, முள்+நன்று =முள்ளன்று  ந > ள

நகரம் மட்டுமன்றி ‘ள’ கரத்தின் முன் மகரம் வரினும் ளகரமானது நகரமாய்  உறழும் என்று லீலாதிலகம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் பொதுவாக ளகர ஈற்றுச் சொற்களின் புணர்ச்சியினைக் கூறும்போது மெல்லெழுத்து இயைபின் ’ன’ கரமாகும் என்று கூறுகிறார். (தொல் . எழு.398).

எ.டு

வாள்+ மேல் = வான்மேல், தோள் + மேல் = தோண்மேல்

உடம்படுமெய்

நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிரெழுத்துக்கள் வரின் அவ்விடத்து விட்டிசைத்தலைத் தடுக்க யகரம், வகரம் ஆகிய மெய்கள் உடம்படுமெய்யாக வரும்.’தொல்காப்பியர் ‘உடம்படுமெய்யின் உருபுகொளல் வரையார் (தொல். எழு 144) எனப்பொதுவாக் கூறுகிறாரே ஒழிய இன்ன இன்ன மெய்கள் உடம்படுமெய்களாக வரும் என்றும் இன்ன உயிர்முன் இன்ன உயிர்வரும் என்றும் குறிப்பிடவில்லை ( தொ.எழு 141).  சுட்டுகளைத் தொடர்ந்து உயிர்கள் வரும்போது ’வ’கரவுடம்படுமெய் வருமென்பதை (தொ.எழு 238,255) ஆகிய சூத்திரங்களிலிருந்தும் அறிய முடிகிறது. லீலாதிலகம் இரண்டு உயிர்களுக்கு இடையில் ‘ய’கரம் தோன்றும் என்றும் தனித்து நிற்கும் அ, இ ஆகிய உயிர்களின் முன் உயிர் வரின் ‘வ’கரம் தோன்றும்  என்றும் (லீ.தி38) குறிப்பிடுகிறது.

எ.டு

மல+அது=மலயது, ஆன+அது=ஆனயது,
அ+அழகு=அவழகு, இ+அழகு=இவழகு

பழைய மலையாளத்தில் வகரம் இரட்டிக்காமல் வழங்கியது. பொதுவாக இருமொழிகளிலும்  வகரம் அடிப்படை உயிரின் பின்னர்த் தோன்றுகிறது. லீலாதிலகம் ஒகரம் வருமொழியாக வருவதனை நோக்க அது தமிழில் உகரமாக உள்ளது .  ஆனால் பேச்சுத்தமிழில் ஒகரமாகவே வழங்குகின்றது.

எ.டு

உரல் – ஒரல்,உலக்க-ஒலக்க, உண்டு –ஒண்டு

மலையாளச் சொல்லிலக்கண மரபும் தொல்காப்பியமும்

மொழிக்கு இன்றியமையானது சொற்கள். சொற்கள் பல சேர்ந்து மொழிகளின் உட்கூறும் அமைகின்றன.  அவ்வாறு அமையும்போது அச்சொற்கள் ஒரு மொழிக்கு மட்டுமே உரியதாக இருப்பதில்லை.  பல சொற்கள் பிறமொழிகளின் சேர்க்கையால் புகுந்தனவாக அமைகின்றன. தொல்காப்பியர் கூறியிருக்கும் இயற்சொல் திரிசொல் எனும் இருவகைச் சொற்களை நாட்டுமொழிச்சொல் எனும்பிரிவில் கூறி இவ்வகை நாட்டுமொழிச் சொற்கள் இடுகுறிச் சொற்களாகும் என்று லீலாதிலக ஆசிரியர் காட்டியிருக்கிறார்.  (லீ.லா13).

பால்காட்டும் விகுதிகள்

தமிழ்மொழியில் திணையின் உட்பிரிவாகவே பால் அமைந்துள்ளது. இதனை, சேனாவரையர்’திணை உணராக்கால் அதன் உட்பகுதியாகிய பால் உணர்தல் ஆகாமையின் (கிளவி 11) எனவும் தெய்வச்சிலையார் ‘பால் எனவே திணையும் அடங்கும் ‘ என்றும் உரை எழுதியுள்ளனர்.  தொல்காப்பியர் இருதிணை ஐம்பால்களைக் கிளவியாக்கம், பெயரியல், வினையியல் ஆகிய மூன்று இயல்களில் விளக்கிச் செல்கிறார் . லீலாதிலக ஆசிரியர் ஆண்பால் பெண்பால், ஆண் பெண் அற்றது எனப்பால் மூன்றுவகைப்படும் என்று கூறுகின்றார். தமிழில் உயர்திணையில் மூன்று பால்களும் அஃறிணையில் இரண்டு பால்களும், ஆக ஐந்துவகைப் பால்கள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியர் ஆடூஉ அறிசொல், மகடூ அறிசொல், பல்லோர் அறியும் சொல் என்று மூன்று பால்களைக் ( தொல் சொ.2,3) கூறுகின்றார்.. லீலாதிலகம் ஆண்பால் , பெண் பாலைக் குறிப்பிடுகின்றது.  ஆனால் பலர் பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய மூன்றையும் ஆண், பெண் அற்றன என்னும் ஒரே வகையினுள் அடக்கி மூன்று பால்களாக வகைசெய்துள்ளது. மேலும் ஜாதி ஆணோடுள்ள உறவுச்சொற்கள் விகுதியாக ‘ இ’யைக் குறிப்பிடுகிறார்.

எ.டு     கேசவன் வந்நான், நாராயணி வந்நாள், செட்டிச்சி, குறத்தி

லீலாதிலகம் மட்டுமே இந்த விகுதிகளைக்குறிப்பிடுகிறது. ஏனைய மலையாள இலக்கண நூல்கள் இதனைக் குறிப்பிடவில்லை.  தமிழ் இலக்கண நூலார் வினையினைக் கூறும் முகத்தான் வினை விகுதிகளை அமைக்கும்போது அதனுள் பால் விகுதிகளையும் பாகுபாடு செய்து அமைக்கின்றனர்.  லீலாதிலகம் பெயரில் வரும் வேற்றுமை உருபுகளைக் கூறிவிட்டு அடுத்துப் பால் விகுதிகளைத் தருகின்றது.  தமிழில் உயர்திணை அஃறிணை அடிப்படையில் பால்களைக் கூறுவது போன்று லீலாதிலகம் திணையின் அடிப்படையில் பாலைக் கூறவில்லை.

லீலாதிலக வேற்றுமையில் தொல்காப்பியம்

தொல்காப்பியர் மூன்று இயல்களில் வேற்றுமைகளை முழுமையாக எடுத்தியம்புவதோடு  எழுத்ததிகாரத்தில்  புணரியல் (112 -116), வினையியல் (781), இடையியல் (735) எச்சவியல் (895,896) ஆகிய இயல்களிலும் வேற்றுமைகளைக் கூறிச் செல்கிறார்.  தொல்காப்பியர் வேற்றுமை பற்றிய  செய்திகளை ஒரே இயலில் குறிப்பிடாமல் வெவ்வேறு இயல்களில் கூற லீலாதிலகம் இரண்டாம் சிற்பத்தின் ஒரு பகுதியாக வேற்றுமையைக் குறிப்பிடுகின்றது.  வேற்றுமையை மூன்று இயல்களில் விளக்கமாகக் கூறும் தொல்காப்பியர் வேற்றுமையின் இலக்கணம் கூறவில்லை. பொருள்களை வேற்றுமை செய்வன வேற்றுமை
(தொல் .546) என இளம்பூரணர் வேற்றுமைக்கு உரையெழுதியுள்ளார்.

லீலாதிலகம் ”அர்த்தவிசேஷ அஸ்யா பரபாகசுவிசேஷ”   என்று வேற்றுமைக்கு இலக்கணம் கூறுகிறது.   அதாவது  வேற்றுமை உருபுகளும் பால் விகுதிகளும் பொருள்களை வேற்றுமை செய்வதற்கென்றே நாட்டுமொழியில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். வேற்றுமையை லீலாதிலகம் துதியை, திருதியை  (லீ. தி.21) என்று பெயரிட்டுள்ளது.

தமிழிலும் மலையாளத்திலும் முதல் வேற்றுமைக்கு உருபுகள் இல்லை. ‘எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே’ ( தொ. சொ.65) என்று தொல்காப்பியர் நூற்பா அமைக்கிறார். லீலாதிலகம் இதற்குப் ‘பேர்’ என்று பெயரிட்டு ’ கண்டன் (தலைவன்) ,ஆன(யானை),  மரம்  என்பனவற்றை எடுத்துக்காட்டாகத்  தந்துள்ளது.

தமிழில்  இரண்டாம் வேற்றுமை உருபாக ‘ ஐ ‘ என்பதனையே எல்லா இலக்கண நூல்களும் கூறியுள்ளன. மலையாளத்தில் ‘ எ ‘ என்பதும் பழைய மலையாளத்தில்  ‘ அ ‘ என்பதும் உருபாக இருந்துள்ளது.  இது செயப்படுபொருள் வேற்றுமையாக அமையும் இதனை மலையாளத்தில் கர்மம் என்று கூறுகின்றனர்.

எ.டு     மாணவியைப் பார்த்தேன் (த),    அவனே கண்டு (ம)

காவலோனக் களிறு அஞ்சும்மே’ என்னும் சங்க இலக்கியத் தொடரில் ‘ அ ‘ இரண்டாம் வேற்றுமை உருபாக வந்துள்ளது. இத்தன்மையே பழைய மலையாளத்தில் வந்துள்ளது..’13 ஆம் நூற்றாண்டு வரை கேரளமொழியில் இரண்டாம் வேற்றுமைக்குப் பெரும்பாலும் ‘ ஐ’ உருபு பயன்படுத்தப்பட்டது. லீலாதிலக காலத்திலும் ‘ஐ’ உருபு பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஒரு நூற்றாண்டு கழிந்து (1500 ல்) ஐ உருபு கைவிடப்பட்டது ‘ என்ற இளங்குளத்தின் கருத்து இங்கு ஒப்பிடத்தக்கது.( லீ. தி பக் 65).

தொல்காப்பியர் மூன்றாம் வேற்றுமையின் உருபாக ‘ ஒடு’ என்பதனைக் காட்டுகிறார்.    ( தொ. சொ.73). . லீலாதிலகம் ஆல், கொண்டு  என்னும் இரண்டு உருபுகளையும் குறிப்பிடுகிறது. இவ்வாறு இவர் கொண்டது தொல்காப்பிய மரபை பின்பற்றியே ஆகும் .  தமிழிலும் கொண்டு , உடன் என்பன சொல்லுருபுகளாக உள்ளன.

எ.டு     அவனால் வஞ்சிக்கப் பெட்டு ,  கத்தி கொண்டு வெட்டி.(ம)

தொல்காப்பியர் ’ கு ‘ என்னும் உருபை நான்காம் வேற்றுமையின் உருபாகக் கொள்கிறார்.  லீலாதிலகம் ’க்கு’,’ அன்னு’, ’இன்னு’ ஆகிய மூன்று  உருபுகளையும் நான்காம் வேற்றுமையின் உருபுகாளாகக் கொண்டுள்ளது.

எ.டு     அவள்க்குப் புத்ரன் உண்டாயி – க்கு –  ( ம் )

அவனு பேனா கொடுத்து   – அன்னு- (ம)

தொல்கப்பியர் ஐந்தாம் வேற்றுமையின் உருபாக ‘ இன்’ என்னும் உருபைச் சுட்டுகிறார்.தொ.சொ.77). லீலாதிலகம்  நின்று, மேல்நின்று, பக்கல்நின்று போன்ற உருபுகளைக் கொள்கின்றது. மேலும் ஒப்பு, உறழ்பொருள்  ஆகியவற்றை உணர்த்தும்போது ‘ காட்டில் ‘ என்பது உருபாய் வரும் என்றும் குறிப்பிடுகிறது.

எ.டு   பஸ்ஸீந்நு இரங்ஙி –  ந்நு – நீக்கல்,            திருவனந்தபுரத்தினு கிழக்கோட்டு – ன்னு – எல்லை

அவனேக்கால் சுந்தரனானோ – கால் – ஒப்பு, என்னேக்காட்டிலும் வலுதாணோ – காட்டிலும் –ஒப்பு

ஆறாம் வேற்றுமையின் உருபு ‘அது’ ஆகும். அது தற்கிழமை, பிறிதின் கிழமை என இருவகைப் பொருளுடையது எனத் தொல்காப்பியர் (தொ.சொ.79) கூறியுள்ளார்.  இவ்வேற்றுமைக்கு ‘ அ’உருபும் உண்டு என உரையாசிரியர்கள் உரைக்கின்றனர். ஒருமைக்கு ‘அது’வும் பன்மைக்கு ‘அ’ வும் உருபுகள் என்பது அவர்கள் கருத்து. மலையாளத்திலும் இவ்வேற்றுமை உடைமைப் பொருளில் வருகிறது. லீலாதிலகம் ’ன்னு, க்கு, இடெ, எடெ, றெ ஆகியவைகள் ‘கொடையெதிர் கிளவி அப்பொருள் ஆறற்கும் உரித்தாகும் ( தொல். சொல்95), அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அது என் உருபு கெடக் குகர வருமே (தொ.சொ.90) எனத் தொல்காப்பியர் தொக்கு நிற்கும் என்ற குகரத்தை லீலாதிலகம் விரித்துக் கூறிற்று.

எ.டு. எனது மகன் ( த),         ஜானகியுடெ புஸ்தகம் (ம),           அவன்றெ புஸ்தகம் (ம)

ஏழாம் வேற்றுமையில் இடப்பொருளை உணர்த்தும் உருபுகள் ‘இல், கண்’ என்பன. தொல்காப்பியர் கூறிய கண் முதலிய 19 சொற்களைச் சேனாவரையர் சொல்லுருபு எனக் கூறியுள்ளார்.  லீலாதிலகம் இல், இலெ, மேல், கல், பக்கல் என்னும் ஐந்து உருபுகளைக் கூறுகிறது. லீலாதிலகம் கூறும் பக்கல் இன்றும் மலையாளத்தில் வழக்கில் பயின்று வருகிறது.

எ.டு     திருவனந்தபுரத்தில் இருந்தான் (த),    என்றபக்கல் உண்டு (ம)

முடிவுரை

லீலாதிலகத்தில் தொல்காப்பியத்தின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றே. எனினும் தொல்காப்பியத்தில் காணப்படுவது போன்ற நுட்பமான உச்சரிப்பொலியியல் லீலாதிலகத்தில் காணப்படவில்லை. சந்தி இலக்கணத்தில் தொல்காப்பியர் கைக்கொண்ட அல்வழி வேற்றுமை என்ற தொடரியல் அணுகுமுறை மலையாள இலக்கணங்களில் இல்லை.  லீலாதிலகம் கூறும்   பெரும்பான்மையான விதிகள் தொல்காப்பியத்தை அடியொற்றி அமைந்துள்ளன. தொல்காப்பியர் கூறும் பலவிதிகள் இன்றைய மலையாள வழக்கில் பயின்றுவர இலக்கண நூல்கள் இதைப் பற்றி கூறாதது வியப்பே. வேற்றுமை உருபுகளைப் பார்க்கும்போது இருமொழிகளிலும் வேறுபாடுகள் பெரிய அளவில் இல்லை என்றே   கூறலாம். லீலாதிலகம் கூறும் வேற்றுமை உருபுகள் பெரும்பான்மையானவைத் தமிழ் உருபுகளாகவும் அதன் திரிந்த வடிவங்களாகவுமே உள்ளன. இவ்வொற்றுமை மொழிகளின் அமைப்பில் காணப்படும் பொதுத்தன்மையே எனலாம்.

*****

பயன்பட்ட நூல்கள்:

இளம்பூரணர் – தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தென்னிந்திய சைவசிதாந்த நூற்பதிப்புக் கழகம், நெல்லை, 1988

இளையபெருமாள்.மா – லீலாதிலகம் (மொ.பெ), தமிழ்ப்புத்தக நிலையம், சென்னை 1971

கால்டுவெல் – திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், முல்லை நிலையம் , சென்னை,2004

நாச்சிமுத்து.கி – இலக்கண ஆராய்ச்சி கட்டுரைகள்,கி. நா. மொழிப் பண்பாட்டு மையம், கோவை2007

Tolkappiyam  – A Proto Tamil Malayalam Grammar (Article)

Ezhuthachan.K.N – The History of the Grammatical Theories in Malayalam, DLA, Trivandrum

*****

கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்
கேரளப் பல்கலைக்கழகம்
திருவனந்தபுரம்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *