சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள். சிலவார இடைவெளிக்குப் பின்னால் இம்மடலுடன் உங்கள் முன்னால் வருவதில் பெருமகிழ்வடைகிறேன். வருடம் முழுவதும் வாழ்க்கை எனும் சிக்கல் மிகுந்த புதிருக்கான விடைதேடி ஓடிக்களைத்ததினால் சிறிது இடைவெளி வேண்டி கொஞ்சம் ஓய்வெடுக்க எண்ணியதின் விளைவே எனது சிறிய மறைவுக்குக் காரணம். மிகவும் மகிழ்வான , ஆனந்தமான, அலாதியான ஒரு விடுமுறை என்றுகூடச் சொல்லலாம். நாங்கள் குடும்ப வாழ்வில் இணைந்து இப்போது சுமார் 36 வருடங்கள் ஓடி விட்டன. ஆரம்பகாலத்தில் வாழ்வினைத் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகளைத் தவிர வேறு எதையுமே எண்ணிப்பார்க்க முடியாத ஒரு வாழ்க்கை. அதைத்தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வில் முன்னேற்றமடைந்த ஒரு நிலையில் எமது ஒரே மகனை வாழ்வில் நிலைநிறுத்தும் பணியில் முழுநேரச் செலவு இப்படியாகத்தான் ஓடியது எமது வாழ்க்கை.

சில வருடங்களாகவே குறூஸ் ( Cruise ) எனும் கப்பல் மூலமான விடுமுறையில் ஆர்வம் காட்டி வந்த என் மனைவியின் விருப்பத்தை நான் அறிந்திருந்தேன்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தன்னார்வ ஓய்வெடுத்த பின்னால், என் மகனின் திருமணம் முடிந்த பின்னால் கடந்த வருடம் எனது மனைவியின் பலநாள் கனவு நிறைவேறியது. ஆம் கப்பல் விடுமுறையில் ஆர்வம் கொண்டிருந்த எனது சகோதரிகளும் வேறு சில நண்பர்களும் இணைந்து ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றுக்கான கப்பல் விடுமுறையை கடந்த வருடம் அதாவது 2016 யூலை மாதம் மேற்கொண்டோம். அவ்வகையான் விடுமுறையின் மீதான நாட்டம் அதில் ஈடுபட்ட அனைவருக்குமே அதிகமாகியது.

அவ்விடுமுறையில் இருந்து திரும்பிச் சில மாதங்களிலேயே இவ்வருடம் அதாவது 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றுமொரு கப்பல் விடுமுறைக்கு முன்பதிவு செய்து கொண்டோம். இப்பயணம் வெஸ்டேர்ன் கரிபியன் குறூஸ் ( Western Caribean cruise ஆகும். அதே கூட்டத்துடன் மேலும் இருவர் இணைந்து 14 பேரடங்கிய குழுவாக இப்பயணத்துக்குத் திட்டமிட்டோம். இங்கிலாந்திலிருந்த 12 பேருடன் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இருவர் இணைந்து கொள்வதாக இருந்தது. நவம்பர் மாதம் 23ம் திகதி லண்டன் கட்விக் விமான நிலையத்திலிருந்து 12 பேரும் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒர்லாண்டோ நகருக்கு விமானம் மூலம் பயணித்தோம். எமது நாட்டின் விமான நிலையத்தை எத்தனையோ முறை விமர்சித்த எமக்கு மற்றொரு நாட்டின் விமான நிலையத்தின் அல்லகல்லோலங்களைப் பார்த்ததும் தான் எமது நாட்டு விமான நிலையத்தின் அருமை புரிகிறது போலும் ! அப்பப்பா ஒர்லாண்டோ நாட்டின் விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதி இருந்த பகுதியில் சுமார் 500 பேர் வளைந்து, வளைந்து ஒரு பத்து வளைவுகள் கொண்ட வரிசையாக நின்றிருந்தோம். வியர்வை வழிந்தோடியது அத்தனை பேருக்கும் பொதுவாக ஒரு பெரிய மின்விசிறி மட்டும் நடுப்பகுதியில் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவாறு சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னால் குடிவரவு அதிகாரியின் முன்னால் நானும், மனைவியும் போய் நின்றதன் பின்னால் தான் அமெரிக்க நாட்டு விமானநிலையத்தில் மரியாதை என்பது மட்டளவில் கூடக் கிடையாது என்பதைத் தெரிந்து கொண்டோம்.

ஒருவாரு அனைவரும் இணைந்து அங்கு வந்து எம்மோடு இணைந்த அவுஸ்திரேலிய தம்பதியினரையும் இணைத்து ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் எமக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பங்களாவை நோக்கிச் சென்றோம். எமது வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி எம்மோடு பேசிக்கொண்டு வந்தாலும் அவர் முகம் கடுகடுப்பாக இருந்தது. அப்புறம் தான் புரிந்தது அன்று அமெரிக்க நாட்டின் முக்கிய விடுமுறை தினமான ” தாங்ஸ் கிவிங் டே ( Thanks giving day , அன்று இரவு ஒரு விருந்துக்குப் போக வேண்டிய அச்சாரதி எமது தாமதமான வரவால் அவ்விருந்துக்கு தாமதமாகிக் கொண்டிருப்பதே அவரது கடுகடுப்புக்குக் காரணம் என்பது. ஒருவாரு எம் அனைவரையும் விடுதியில் இறக்கி விட்ட போதுதான் கூறினார் அன்று விடுமுறையாதலால் அனைத்து சாப்பாட்டுக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என்று. எமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இரவு 9 மணிக்குப் பின்னால் ஏதாவது பிட்சா கடை திறந்தாலும் திறக்கும் என்றார். அன்றைய இரவு பட்டினி போலும் என்று எண்ணிக் கொண்டோம்.

பங்களாவினுள் சென்று உடை மாற்றிக் கொண்ட பின்னால் ஆர்வப்பிரியையான என் மனைவி வெளியே சென்று அடுத்த வீட்டு கதவைத் தட்டியுள்ளார். அங்கே இவ்விடுமுறையைக் கழிப்பதற்காக தனது குடும்பத்துடன் வந்திருந்த ஒரு அமெரிக்கரைப் பார்த்துள்ளார். அவரிடம் எமது நிலையை விளக்கிக் கூறிய போது, அவர் சில பிட்சா கடைகளின் தொலைத்தொடர்புகளைக் கொடுத்ததும் அதை வாங்கிக் கொண்டு திரும்ப வந்து தொலைபேசி மூலம் சில பிட்சாக்களுக்கு ஆர்டர் கொடுத்ததும் தான் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது அட பிட்சா இத்தனை சீக்கிரம் வந்து விட்டதே எனும் ஆச்சரியத்தில் கதவைத் திறந்தால் அங்கே அந்த அடுத்த வீட்டு நண்பர் கையில் பல பொருட்களுடன் நின்றார். கோகா கோலா போத்தல், பால் போத்தல் காப்பித்தூள், பாண் என அனைத்தையும் எம்மிடம் கையளித்தார். ஜொஸுவா எனும் அந்த அமெரிக்க நண்பர் அது தமது “தாங்ஸ் கிவிங் டே ” அன்பளிப்பு என்று கூறி பணமமெதுவும் வாங்க மறுத்து விட்டார். அப்போதுதான் கவியரசரின் பாடல் ” பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா ” வரிகளின் உண்மை அர்த்தம் புரிந்தது.

கப்பல் பிரயாணத்தை ஆரம்பிக்கும் முன்னால் இரண்டு நாட்கள் ஒர்லாண்டோவில் கழிப்பது என்பதே எமது திட்டம். அடுத்த நாள் காலை மீண்டும் ஒழுங்கு செய்திருந்த பெரிய கறுத்த காரில் நாம் அருகிருந்த ஒரு ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டோம். அங்கு ஜோடி ஜோடியாக அனைவரும் பிரிந்து சென்று அமெரிக்க கடைகளை ஒரு கை பார்த்துத் திரும்பினோம். திரும்பியது என்னவோ வெறுங் கையுடன் தான். அன்று இரவு எம்முடன் வந்திருந்த ஒரு நண்பரின் மனைவி தான் கொண்டு வந்திருந்த பலசரக்குப் பொருட்களை உபயோகித்து அருமையான சாப்பாடு தயார் பண்ணி விட்டார் போங்கள். அடுத்த நாள் எமது திட்டப்படி ஒர்லாண்டோவில் உள்ள யூனிவர்சல் வேர்ல்ட் எனும் கேளிக்கை இடத்துக்கு விஜயம் செய்தோம். ஆளுக்கு 125 டாலர்கள் கொடுத்து உள்ளே நுழைந்த நாம் பல விடயங்களைப் பார்வையிட்டு விட்டு, சிம்சன் ரைடு எனும் ஒரு ரதத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். அனைவரும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர். அப்பாடா அந்த சுற்றூர்தியில் இருந்து இறங்கியதும் தான் உயிருடன் தப்பி விட்டோம் என்று எண்ணத் தோன்றியது. அத்தனை அபாயகரமான ஆனால் பாதுகாப்பான ஒரு தேரோட்டம். அதைப் போல பல தினுசான வினோதங்களைப் பார்த்து விட்டுக் களைத்துப்போய் வீடு திரும்பினோம். அடுத்த நாள் எமது கப்பல் பிரயாணத்தைத் தொடங்குவதற்காக மயாமி நகருக்குச் செல்வதற்காக எம்மை அழைத்துச் செல்வதற்கு இரண்டு வாகனங்கள் வந்திருந்தன. சுமார் நான்கு மணி நேர பிரயாணத்தின் பின்னால் மயாமி கப்பற் தளத்தை வந்தடைந்தோம்

மிகுதி அடுத்த வாரம் தொடரும்

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *