-செண்பக ஜெகதீசன் 

வினைபகை யென்றிரண்டி னெச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.  (திருக்குறள் -674:வினைசெயல்வகை) 

புதுக் கவிதையில்… 

செய்யும் செயல்,
ஒழிக்கும் பகை இவற்றில்
முடிக்காது மிச்சம் வைத்தல்
என்பது,
அணைக்காது மிச்சம்வைத்த
நெருப்புபோல்
கெடுதலே தரும்…! 

குறும்பாவில்… 

செயல் பகை இரண்டையும்
முடிக்காது மிச்சம்வைப்பது, அணைக்காமல்
மிச்சம்வைத்த தீபோல் கெடுதல்தரும்…!      

மரபுக் கவிதையில்… 

செயலைச் செய்யத் தொடங்கிவிட்டால்
-செய்து முடித்திடு மிச்சமின்றி,
தயவு யேதும் காட்டாமல்
தொடரும் பகையை முடித்துவிடு,
அயர்வு கொண்டே யிவையிரண்டில்
அணுவள வேனும் மீதிவைத்தால்,
உயரும் தீயை அணைக்காமல்
விட்ட மீதியாய்க் கெடுதிதானே…! 

லிமரைக்கூ… 

செயல்பகையில் வைக்கவேண்டாம் மிச்சம்,
முற்றிலும் அணைக்காமல் விட்டதீபோல்
இதுதருமே அழித்துவிடும் அச்சம்…! 

கிராமிய பாணியில்… 

வேண்டாம் வேண்டாம் மிச்சம்வேண்டாம்
வேலசெய்யிறதுல மிச்சம்வேண்டாம்…
முழுதும் வேலய செய்யாமலே
மிச்சம் வச்சாலும்,
மோதவாற பகய முழுசா அழிக்காம
மிச்சம் வச்சாலும் ஒண்ணுதான்…

இந்த ரெண்டுமே
முழுசா அணைக்காம
மிச்சம்சவச்ச தீபோல
முழுசாத்தருமே கெடுதியையே…

அதால,
வேண்டாம் வேண்டாம் மிச்சம்வேண்டாம்
வேலசெய்யிறதுல மிச்சம்வேண்டாம்…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *