நிர்மலா ராகவன்

கட்டுப்படுத்துதல் அன்பா? (கட்டுரை)

நலம்-1-2-1-1
”நான் வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக்கொண்டால்தான் உனக்கு என்மேல் அன்பு இருக்கிறதென்று அர்த்தம்!” கணவனின் `அன்பு’க் கட்டளை.

அவளுக்கும் அந்தப் புடவை பிடிக்குமா என்று அவன் யோசிப்பதில்லை. இதில் அன்பில்லை. மனைவியைக் கட்டுப்படுத்தும் முயற்சிதான் இது.

ஆரம்பத்தில் விட்டுக்கொடுப்பவள், போகப் போக தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் கணவன் தலையிடும்போது, `அவர் என்ன சொல்வாரோ?’ என்று எதைச் செய்யும்போதும் யோசிக்க ஆரம்பித்து, அவனைக் கேட்கிறாள். இப்போது சலித்துப்போய், `உனக்கு சுயபுத்தியே கிடையாதா?’ என்று கணவன் ஏசக்கூடும்.

ஆனால், எல்லாப் பெண்களும் விட்டுக்கொடுத்துப் போவதில்லை.

கதை

“கல்யாணத்திற்குமுன் நாங்கள் மூன்று வருஷங்கள் பழகினோம். அப்போது லதா நான் சொல்வதையெல்லாம் கேட்பாள். இப்போது ஏறுக்கு மாறாகச் செய்கிறாள்!” என்று என்னிடம் முறையிட்டான் ஓர் இளைஞன்.

`என் மனைவி நான் சொல்கிற பேச்சைத் தட்டுவதில்லை!’ என்று நெருங்கிய நண்பர்களிடம் பெருமை பேசிக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமோ!

`காதல்’ என்ற பெயரில் கட்டுப்படுத்துபவருக்கு தான் பெரிய பராக்கிரமசாலி என்ற கர்வம் எழலாம்.

ஆனால் கணவர் சொல்கிறபடியெல்லாம் ஆடினால் தனக்கு சுதந்திர உணர்ச்சியே போய்விடும் என்று லதாவுக்குப் புரிந்திருந்தது.

ஏன் கட்டுப்படுத்துகிறார்கள்?

தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாதவர்கள் பிறரைக் கட்டுப்படுத்தி, அதிலேயே நிறைவு அடைந்துவிடுகிறார்கள்.

அவர்கள் விரும்பியபடி வாழ்க்கை அமையவில்லை என்ற ஏமாற்றமே அடிப்படை காரணம்.

கதை

குடும்பப் பொறுப்பைச் சுமக்க விரும்பாது, மனைவியையும், ஆறு குழந்தைகளையும் நிர்க்கதியாக விட்டுச் சென்றவர் ரவியின் தந்தை. மூத்த மகன் ஆனதால், பதின்ம வயதிலேயே வேலை பார்த்துக்கொண்டு, அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ரவிக்கு ஏற்பட்டது.

தம்பி, தங்கைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப் பிரயத்தனப்பட்டதில், எவருடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டாலும், அப்பாவைப்போல் அவரும் தன்னை விட்டுப் போய்விடுவாரோ என்று மனத்தடியில் ஏற்பட்ட பயம் நிலைத்தது. எவரையும் நம்ப முடியவில்லை ரவியால்.

திருமணம் ஆனபின்னரும், மனைவி மக்கள் தான் சொல்வதை அப்படியே கைப்பிடிக்க வேண்டும் என்ற பிடிவாதம். அவர்கள் கேட்காவிட்டாலோ, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பான்.

காதலியோ, மனைவியோ, தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயத்தில் அவள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும், அவளுடன் பழகும் ஒவ்வொருவரையும் கவனிப்பது உறவுகளை பலகீனமாக்கிவிடுகிறது.

மேற்காணும் கதையில் `ரவி’ என்ற பெயருக்குப் பதிலாக `ரமா’ என்று போட்டாலும், விளைவு ஒன்றுதான். அவநம்பிக்கை, சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம், நாட்கணக்கில் மௌனம் சாதிப்பது எல்லாம் இருபாலருக்கும் பொதுவான குணங்கள்தாமே? பெண்களுக்குக் கூடுதலான ஓர் ஆயுதம் உண்டு – கண்ணீர்!

தான் ஒருவரை மிஞ்ச முடியாவிட்டால், அவரைக் கட்டுப்படுத்தி, கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல் என்று பலவித அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவரைக் கீழே கொண்டுவர வேண்டும் என்ற மனநிலை உடையவர்களும் உண்டு. அதன்மூலம் சுயக்கட்டுப்பாடு அற்ற தங்கள் குறையை ஈடு செய்ய நினைக்கிறார்கள். தாங்கள் செய்வது பிறரை எப்படிப் பாதிக்கும் என்ற யோசனையோ, அக்கறையோ இவர்களுக்குக் கிடையாது.

கதை

தன்னைவிட படிப்பிலும் அந்தஸ்திலும் உயர்ந்த பெண்ணை மணந்துவிட்டோம் என்ற சந்திரனுடைய கர்வம் விரைவிலேயே மறைந்தது. எல்லாம் நண்பர்களின் தூண்டுதலால்தான். `அவளை இப்படியே வளரவிடாதே. அப்புறம் உன்னை எங்கே மதிக்கப்போகிறாள்!’ என்று தூபம் போட்டார்கள்.

மனைவி தாராவை ஓயாது மட்டம் தட்டினான். பிறர் முன்னிலையிலும் பழித்தான். விரைவில், அவளுடைய உடல்நிலை கெட்டது. அதிசயமாக, அப்போது தன் போக்கை மாற்றிக்கொண்டான் சந்திரன். அவள்மேல் அன்பைப் பொழிந்தான்.

கணவனின் அன்பைப் பெற தான் நோய்வாய்ப்பட வேண்டும் என்று அவளையுமறியாமல் மனதில்பட, தாரா அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். பல முறை இப்படி ஆனபின், நடந்ததில் தன் தவறு எதுவுமில்லை என்று தெளிந்தாள். தானும் உயரலாம் என்ற உத்வேகம் அவனிடம் இல்லை என்று புரிந்தது. தன் தேக ஆரோக்கியம் கணவனது அன்பைவிட முக்கியம் என்று உணர்ந்தபின், கணவனது ஏச்சுப் பேச்சை அசட்டை செய்ய முடிந்தது.

அக்கறையா, சந்தேகமா?

தம்பதியரில் ஆணோ, பெண்ணோ, மற்றவரின் ஒவ்வொரு நிமிடமும் எப்படிக் கழிந்தது என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

`இன்று நீ வேலைபார்க்கும் இடத்தில் என்ன நடந்தது?’ என்று கணவன் விசாரித்தால், அவருக்குத்தான் தன்மேல் எவ்வளவு அக்கறை என்ற மிதப்பு ஆரம்பத்தில் ஏற்படக்கூடும். போகப் போக, தன்மேல் உள்ள கரிசனத்தால் அவர் இப்படிக் கேட்கவில்லை, பொறாமையும் சந்தேகமுமே இதன் அடிப்படை என்று புரிய, கசப்பு ஏற்படும். ஒருவரது

கைத்தொலைபேசி, மின்னஞ்சல்வழி யார் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று பார்ப்பதும் பரஸ்பர நம்பிக்கை இல்லாததால்தான்.

எப்படிச் சமாளிப்பது?

தம்மைக் குறைவாக எடைபோடுகிறவர்களுக்கு எப்போதும் பாராட்டும், புகழ்ச்சியும் தேவைப்படுகிறது. தனித்துப்போய்விடுவோமோ என்று பயப்படுகிறவர்களுக்கு, `நான் உங்களை விட்டுப் போகமாட்டேன்!’ என்ற உறுதி அவசியமாகிறது.

கட்டுப்படுத்த எத்தனையோ வழிகள். பெற்றோரையும் அது விட்டு வைப்பதில்லை.

கதை: என்னை விட்டுப் போகாதே!

என்னுடன் வேலைபார்த்த ஸலேஹா தன் மனக்குறையை யாரிடமாவது தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியிருக்க வேண்டும். தானே என்னிடம் வந்து முறையிட்டாள்: ”எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. என் காதலர் என்னை வெளியே அழைத்துப்போக அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்,” என்று ஆரம்பித்தவள் உணர்ச்சிவசப்பட்டாள். “ஒவ்வொரு முறையும், என் அம்மா, `நெஞ்சு வலி,’ `மண்டையிடி’ என்று ஏதாவது வியாதி சொல்வார். நானும் அம்மாவைக் கவனித்துக்கொள்ள வீட்டிலேயே தங்கிவிடுவேன். இப்படிப் பலமுறை நடந்தபின், என் தாயிடம் அழுதேன், `நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்றால் வெளிப்படையாகச் சொல்லிவிடு,’ என்று”.

தந்தையை இழந்த பெண். சம்பாதிப்பவள். மகளும் தன்னைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயம் வந்திருக்கலாம் தாய்க்கு.

கட்டுப்படுத்துதலும் வதையே, அன்பில்லை!

நான்கு வயதுச் சிறுவன் ராமு ஒரு பெரிய தட்டில் குவித்து வைத்திருந்த சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, “அம்மா! முடித்துத்தேன்!” என்று தான் முடித்துவிட்டதைப் மகிழ்ச்சியுடன், மூச்சிறைக்க, அறிவித்தான். தான் அம்மாவை மகிழ்விக்க வேண்டுமானால் அவள் என்ன, எப்போது, எவ்வளவு உணவளித்தாலும் சாப்பிட வேண்டும் என்று அவன் மனதில் பதிந்திருந்தது.

பள்ளிக்கூடத்தில், `குண்டு’ என்று நண்பர்கள் கேலி செய்யும்போது, ராமுவைப்போன்ற குழந்தைகள் ஒடுங்கிப்போகிறார்கள்.

ராமுவைத் தற்காப்புப் பயிற்சியில் சேர்த்தார்கள். வளைய, ஓட, குதிக்க, உதைக்க, தாண்ட என்ற எல்லாவித பயிற்சிகளும் பெற உடல் ஒத்துழைக்க வேண்டாமா! அவனையொத்தவர்களைவிட மிகவும் கீழ்நிலையில்தான் இருக்க முடிந்தது. அவர்கள் கேலியாகச் சிரிக்க, அந்த முயற்சியில் ஆர்வம் போயிற்று.

பதின்ம வயதில், ராமுவை மருத்துவரிடம் அழைத்துப்போனார்கள் – `ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறான். படிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடிவதில்லை!’ என்று.

`அவன் பருமனாக இருப்பதைப்பற்றியே பேசாதீர்கள். மனம் நொந்துவிடுவான்!’ என்றாராம். (தாய் என்னிடம் கூறியது).

`அன்பான கவனிப்பு’ என்ற பெயரில் அளவுக்கு மீறி உணவளித்தது தன் தவறு என்று அவள் ஒப்புக்கொள்ளத் துணியவில்லை.

தாம் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்கும் குழந்தைகள்தாம் தம்மீது அன்பு செலுத்துபவர்கள் என்ற தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் கட்டுப்படுத்தும் தாய்மார்கள். ஆகவே, பல குழந்தைகள் இருந்தாலும், அவர்களில் ஒரு குழந்தை துணிந்து, தன்னிச்சைப்படி நடக்கும்போது, தன்னை அவள் மதிக்கவில்லை என்ற ஆத்திரம் எழுகிறது.

மாறாக, தங்களைச் சார்ந்தவர்களைச் சற்று சுதந்திரமாக விட்டு, அவர்களுடைய போக்கிற்கு மதிப்புக் கொடுத்து நடத்தினால் அன்பும் மரியாதையும் நிலைக்கும். ஆனால், தங்களிடம் குறை இருக்கிறது என்று யார்தான் ஒப்புக்கொள்வார்கள்!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *