படக்கவிதைப் போட்டி (141)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

26034585_1516492711738256_1208685319_n
ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

5 Comments on “படக்கவிதைப் போட்டி (141)”

 • ஆ. செந்தில் குமார்
  ஆ. செந்தில் குமார் wrote on 28 December, 2017, 11:55

  யானைப் பாகனும் யானையும்…
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

  மரகதப் பச்சைக் கம்பளம் போன்று 
  மரங்க ளடர்ந்து மலை காட்சியளிக்க
  பளிங்கு நீரை மிகுதியாய்க் கொண்ட
  பரந்தத் தடாகம் அதனடியை வருட
  பாகனொருவன் தான் அழைத்து வந்த
  பருத்த யானையின் தந்தத்தைப் பிடித்து
  பரிவுடன் அதையே நீராட்டி மகிழ்ந்தான்!

  கார்மேகம் போன்ற கரிய உருவமும்
  குருகுரு வெனவே விழிக்கும் கண்களும்
  தூரிகைப் போன்றொரு சிறிய வாலும்
  கூரிய வெள்ளைத் தந்தங்க ளிரண்டும்
  தூணினைப் போன்று கால்கள் நான்கும்
  தன் சிறப்பெனக் கருதும் தும்பிக்கையோடு
  தண்ணீரில் அமர்ந்து யானை இருந்தது!

  கனிவுடன் உணவை யானைக் களித்து
  கடின வேலைகள் பலவும் சொல்லி
  அங்குசம் ஒன்றின் துணைக் கொண்டு
  ஆனைப் பாகன் அதைப் பயிற்றுவிப்பான்!
  தன்வாயால் பாகன் கட்டளை இடவே
  தன்வலிமை என்ன வென்பதை மறந்து – அதை
  தலையாய செயலெனச் செய்து வாழும்!

  மானிடர் பலரும் இவ்வானையைப் போன்று
  மூளையின் ஆற்றலை அறவே மறந்து
  தன் தோள்களின் வலியை உணர மறந்து
  தன்னை விடவும் ஆற்றல் குறைந்த
  அயலான் ஒருவன் பாதம் பணிந்து
  அஞ்சி அஞ்சி வாழ்வைக் கழித்து
  அடிமைச் சேவகம் செய்து மறைவர்!!!

   -ஆ. செந்தில் குமார்.

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 30 December, 2017, 20:15

  பிச்சையெடுக்க விட்டவன்…

  தும்பிக் கையினை நம்பிநல்ல
  துணிச்சல் கொண்ட யானையது
  வம்பே யின்றி சுதந்திரமாய்
  வலமாய் வந்ததைப் பிடித்தேதான்,
  தந்த மதனின் வலிமையையும்
  தானே மறக்கப் பழக்கியதைச்
  சொந்த நலனில் இரந்திடவே
  செய்து விட்டான் மனிதனவனே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • எஸ். கருணானந்தராஜா
  எஸ். கருணானந்தராஜா wrote on 30 December, 2017, 20:49

  காக்க காக்க களிற்றினந் தன்னை….

  சிங்க மராட்டியரின் கவிதை கொண்டு
  சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
  என்று அருங் கவிஞன் எங்களது பாரதியின்
  தங்கத் தமிழ் வாய் தவறி உரைத்ததனால்
  ஆத்திரத்தை யானை அவன்மீது காட்டியதோ!

  என்று மனங்கலங்கி-

  அழிகின்ற ஆனைகள் மேல்
  அனுதாபம் காட்டாத
  பழிவந்து சேராமல்,
  பாரதியென் சொற்குருவின்
  ஓடித் தவறிவிட்ட ஓர்கவிதைக் கீடாக

  ஓர் கால்-

  ”ஈழத்து வேழநிரை பல பிடித்தே
  ஏற்றன்பு செய்பவர்க்கே அனுப்பி வைப்போம்
  பாழும் பணத்தினுக்காய் அவற்றைக் கொன்றே
  பல்லைப் பிடுங்கி விற்கும் கொடுமை செய்யோம்”

  என்று கவி பாடிட வே என்னை மனம் தூண்டியது.

  இங்கே
  நல்ல பெறுமதி என்றுள்ளூர எண்ணி
  பல்லைத் தடவும் பாகனிடம்
  கொல்ல நினையாதே என்னையென்று
  சொல்லத் தெரியா, வாய்
  இல்லா மிருகம்
  மெல்லத் தன் கை கூப்பி
  வேண்டுகிறகிற காட்சியிதா?
  அல்லாவிடிற் தன் அழகு மிகு தந்தத்தை
  பாலிஷ் செய்கின்ற பாகன் மேல் அன்பு வைத்து
  கையுயுாத்தி நன்றிதனைக் காட்டுகிற காட்சியதா!

  எப்படியா யிருந்தாலும் –

  காட்டில் சுதந்திரமாய் கட்டற்று வாழ்கின்ற
  ஆனைகளைப் பிடித்து அங்குசத்தாற் குத்தி
  வேதனைக்கு உள்ளாக்கி வேலை பல வாங்கி
  பாதகங்கள் செய்யாதீர் பாவமந்த ஜன்மங்கள்.

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 30 December, 2017, 21:08

  கம்பீரத்தின் வீழ்ச்சி :::::: கணபதிக்கு முகம் தந்த அன்பின் விளக்கம் நீ!
  இந்திரனுக்கு பெருமை சேர்த்த ஐராவதம் நீ!
  கடின உழைப்பிற்கு இலக்கணம் ஆனாய் நீ!
  ஆலய வாசலின் அனைவரையும் வரவேற்கும் அன்புத் தோழன் நீ!
  போரில் முன் நின்று சண்டையிடும் இனையில்லா வீரன் நீ!
  நீ நடந்து வரும் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை !
  உனைப் பார்த்து மகிழாத பிள்ளை யாருமில்லை!
  உருவத்தால் மட்டுமில்லை! பாசத்திலும் பெரியவன் நீ!

  குழந்தையை தாய் சுமக்கும் காலமோ பத்து மாதம்!
  உன் குட்டியை நீ சுமப்பாய் இரு பத்து இரண்டு மாதம்!
  கூட்டமாய் வாழும் கொள்கை உடையவள் நீ!
  பெண் யானைக்கு மட்டும் தான் தலைமைப் பதவி!
  மனித இனத்தில் மட்டுமல்ல !யானை இனத்திலும்
  பொறுப்பானவர்கள் பெண்களே! எனவே இப்பதவி!
  உனைப் பற்றிச் சொல்ல எத்தனை செய்திகள்!
  உன் நினைவாற்றல் அரியது!
  மோப்ப சக்தியால் நீர் நிலைகளை அறியும் அற்புத ஆற்றல்
  வியப்புக்குரியது!
  சைவ உணவின் சக்தியை உலகிற்கு உணர்த்தியது!
  உனக்கோ பல பெயர்கள்!
  வேழம், வாரணம், மாதங்கம், களபம்
  குஞ்சரம், மதகயம். போதகம்
  என்திசை காக்கும் அஷ்ட திக் கஜங்கள் ஆனாய்!
  அஸ்வத்தாமாவாய் நீ வந்து பாரதக் கதை மாற்றினாய்!
  அளப்பரிய ஆற்றல் இருந்தாலும், அங்குசத்திற்கு அடி பணிவாய்!
  அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதை அழகாய் புரிய வைத்தாய்!
  பாகன் கட்டளைக்கு அடி பணிந்து, வேலை பல விரைந்து முடித்திடுவாய்!
  நீர் நிலையைப் பார்த்து விட்டால் குளித்து மகிழ்ந்திடுவாய்!
  தும்பிக்கையில் நீர் எடுத்து உன் மேல் ஊற்றிடுவாய்!

  நின்றபடி தூங்கிடுவாய்!
  யானைக்கு மொழி உண்டாம்! ஆய்வில் கண்ட உண்மை!
  பிளிறல் கேட்கையிலே ஏதோ புரிகிறது!
  ஆண் யானைகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது!
  தந்ததத்தை எடுப்பதற்கு, யானைகளை கொல்கின்ற
  அவலம் நெருப்பாய் சுடுகிறது!
  கம்பீரமாய் வலம் தந்த யானை கனவாய் போகலாமா!

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 30 December, 2017, 22:22

  யானை வரும் முன்னே..
  அதன் பெருமை வரும் பின்னே.!

  கோட்பாடு கொண்ட பாலூட்டும் பாசக்குடும்பம்..
  ……….கோட்டுக்காக வேட்டைக் கிரையாகுமோர்க் களிறு.!
  வேட்டஞ் செய்மனிதரும் போற்றும் வகையில்நீ..
  ……….வேகமின்றி நிதானமாய் அற்புதச் செயல்புரிவாய்.!
  ஆட் கொண்டானுனை வாகனமாய் இறைவனும்..
  ……….அறிவிற் சிறந்து விலங்கில்நீ வேறுபட்டதாலே.!
  காட்சிப் பொருளாய் இன்றும்நீ காண்பதற்கரிய..
  ……….கண்ணுக்கு விருந்தளிப்பாய் சிலையாய் உயிராய்.!
  .
  .
  .
  .
  ஆகம சாத்திரத்தில் ஆனையும் ஓரங்கமாகும்..
  ……….ஆலய சிற்பங்களில் சிந்தனைக்கு விருந்தாகும்.!
  ஏகபோகம் எல்லாம் அனுபவிக்கும் ராஜாவும்தன்..
  ……….எதிர்பகை வெல்வானுன் படைத் துணைகொண்டு.!
  மேகவாகனுன் கரியநிறத்தை வெள்ளை யாக்கி..
  ……….மேல்சவாரி செய்ததால் மேலுலகத்திலும் புகழ்.!
  தேகப்பயிற்சி இலாமலே திரண்ட உடலமைப்பும்..
  ……….திகைக்கும் திறன்மிகு உன்தும்பிக்கை அதிசயம்.!
  .
  .
  .
  .
  வாகனமாய்க் கடவுளுக்குப் பணி செய்வாய்..
  ……….வேழமுக வினையகனாக வடிவ மெடுப்பாய்.!
  ஊகத்துடன் பாகனின் சைகையறிந்து செயலை..
  ……….உறுதியுடன் செய்வாய்!ஒன்றாகக் கூடிவாழ்வாய்.!
  பாகனிடம் பரிவுண்டு! ஆனால் மதம்பிடித்தால்..
  ……….பந்தாடி பரலோகம் அனுப்பிடுவாய் அறியாது.!
  சோகத்தை நிகழ்த்துகின்ற இச்செயலாலே உன்..
  ……….சாதனைக்கு இழுக்காக இதுவொரு பங்கம்தான்.!
  .
  .
  .
  .
  லோகத்தை இரட்சிக்கும் பரந்தாமனும் உன்மீது..
  ……….லாவகமாய்ப் பவனிவந் தவனியைக் காப்பான்.!
  சாகசத்தில் சர்க்கஸில் சறுக்கி விளையாடினும்..
  ……….சற்றுதுள்ளிக் குதிக்கத் தெரியாத அப்பாவியாம்.!
  பாகனின் அரையடி அங்குசமுனை அடக்கும்..
  ……….படுத்து எழுந்திருப்பதற்கு படுங்கஷ்ட மதிகம்.!
  வாகாக வளைத்துதன் தும்பிக்கைக் கொண்டுனை..
  ……….வணங்கும் பக்தருக்கு ஆசிர்வாதம் செய்வாய்.!

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.