நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சங்க இலக்கியம் கற்பித்தல்

-முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

நவீன உலகில் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்து உறவாடிக்கொண்டிருக்கும் கருவியாகத்  தொழில்நுட்பம் செயல்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குவது மனிதனின் ஆறாம் விரலாகக் கருதப்படும் தொலைபேசி. தொழில்நுட்பங்கள்  நுழையாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்குத் தொழில்நுட்ப சாதனங்கள் எல்லாத் துறையையும் ஆக்கிரமித்துக் கொண்டன.  இத்தகைய தொழில்நுட்பங்களும் தொழில்நுட்ப சாதனங்களின் பெருக்கமும் ஒருபுறமிருந்தாலும் அவ்வளர்ச்சியில் பங்குபெறாத, கண்ணேறிட்டுப் பார்க்காத சமூகமும் நம்மைச் சுற்றி காணப்படத்தான் செய்கின்றது.  தொழில்நுட்பங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் கல்வித்துறையும் இத்தொழில்நுட்பங்களுடன் இணைந்து பல எட்டாக்கனிகளைத் தனதாக்கியுள்ளன. மொழிதவிர்த்த ஏனைய கல்வித்துறையில் தொழில்நுட்பங்கள் வேரூன்றிக் காய்காய்த்துக் கனியத் தொடங்கிய நிலையில் தமிழ்மொழியும் இதில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. பழம்பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நாம் அப்பழமையான இலக்கியங்களைப் பழமையான கல்விமுறையிலேயே கற்றும் கற்பித்தும் வருகின்றோம். பழமையான இலக்கியங்களை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்பிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் என்பது கசப்பான உண்மையாகும்.  இக்கட்டுரை சங்க இலக்கியத்தை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை எடுத்தியம்புகிறது.

மரபுசார்ந்த  கல்வி முறைகள்

கல்வி முறைகளில் சிறந்திருந்த ஆதிமனிதன் குருகுலக் கல்வி முறையை மேற்கொண்டான்.  மன்றங்களில் தொடங்கிய கல்வி முறையில் சாதியம் புகுந்து கோயில்களில் வைத்துக் கல்வி கற்பிக்கப்பட்டது.  எல்லாருக்குமாக இருந்த கல்வி ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு எனச் சுருங்கியது.  பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இது ஒழிக்கப்பட்டு எல்லாரும் கல்வி கற்கும் முறை உருவானது.  நன்னூல் கூறும் கல்வி முறையைப் பார்க்கும்போது( நன் 40, 41 )  சோழர் காலத்துக் கல்வி முறை இதில் பதிவாகியுள்ளது என்பது உறுதி.  அதாவது, வினாவை எழுப்பி அதற்கு பதில்கூறும் ஒருவகைக் கல்வி முறையே இருந்தது.  சான்றாக  மு.வை அரவிந்தன் உரையாசிரியர்கள் என்னும் தம் நூலில் ( 1996:6,7) மேற்கோளாகக் காட்டும் உரைப்பகுதி இதற்குத் தக்க சான்றாக அமையும். “கட்டுவிச்சியை வினவ, அவள் அறியாதவள் போல இக்கருமம் முடித்தற் பொருட்டு இவ்வகை சொன்னாள். என்னை? வரைவு பொருட்டுத் தலைமகன்போக அவன் வரைவு நீட்டித்தலான் இவளது ஆற்றாமையான் உண்டாகிய நோயை முருகனால் வந்தது என்று வினவலாமோ? இஃது அங்ஙனம் ஆயின் குறி என்பது பொய்யேயாம் என்பது கடா. அதற்கு விடை : குறியும் பொய்யன்று இவளும் பொய் கூறினாள் அல்லள்”  என்னும் திருக்கோவையார் பேராசிரியர் உரையைப் பார்க்கும்போது கேள்வி கேட்டு விடையளிக்கும் கல்வி முறையே அன்றைய சமூகத்தில் இருந்தது எனத் தெரிகின்றது.

மேலும் நன்னூலில் இடம்பெரும் “செவி வாயாக நெஞ்சு களனாக” பாயிரம் 49 என்னும் தொடர், காதால் கேட்டு மனத்தில் நிறுத்தும் முறையை உணர்த்துகிறது. அதாவது மனப்பாடம் செய்யும் முறை வழக்கில் இருந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.  இம்மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்ததையும் இதற்கான காரணத்தையும் சீனி வேங்கடசாமி பின்வருமாறு விளக்குகிறார். “கணக்காயரிடம் பொருள்அறியாது மனப்பாடம் செய்த மாணவர்கள் பிறகு தகுந்த புலவரிடம் சென்று அவர்களிடம் தாம் மனப்பாடம் செய்த நூல்களுக்கு உரை கேட்பர்.  அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகளும் கிடைப்பது அருமையாக இருந்த காலத்தில்  இம்முறை ஏற்றதாக இருந்தது. மாணவர்கள்  உருப்போட்டு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னூல், நிகண்டு போன்ற  நூல்களைக் கற்றனர்” என்று குறிப்பிடுகிறார்.  (2001:51) மாணவர்கள் ஆசிரியனிடம் பாடம் கேட்கும்போதும் ஒருவகையான கசப்பு உணர்வை பெற்றனர் என்பதை உ.வே.சா தமது என்சரிதம் என்னும் நூலில் ’அம்பலவாண முனிவரிடம் தம் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பெற்ற கசப்பான அனுபவத்தைப்          ( 1956:44) பதிவாக்கியுள்ளார்.  ஆங்கிலேயர் ஆட்சியில் பல கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் அச்சுக்கூடங்களும் தோன்றின.  அச்சுநூல்கள் பரவலாக வெளிவரத் தொடங்கின. இதனால் மனப்பாடக் கல்வி மறைந்தது. சமய எல்லைகளைக் கடந்து பலவகையான இலக்கண இலக்கியங்களைப் பயிலவும் அவற்றைப் பிற இலக்கியங்களுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் கல்வி முறையும் நடைமுறைக்கு வந்தது.

கல்வித்துறையில் நவீன தொழில் நுட்பங்கள்

பழங்காலக் கல்விமுறை ஆசிரியனை மையமிட்ட கல்விமுறையாக இருந்தது.  நவீனக் கல்வி முறை  ஆசிரியரை மையமிட்ட கல்வி முறையிலிருந்து மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு நகரும்போது கற்பித்தலில் முக்கியப்பங்கு வகித்த ஆசிரியரின் இடம் கேள்விக்குறியாக ஆக்கப்படுவதும், ஆசிரியரின் இடத்தைக் கருவிகள் பிடித்துக் கொள்வதும் இயங்கியல் நிலை என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில்நாம் இருக்கிறோம். மரபான வகுப்பறைக் கல்வியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்து வரும் கருவிகள் கரும்பலகைகளும் வெண்கட்டிகளும். ஆசிரியனின் குரலால் மட்டுமே தகவல்களையும், சூத்திரங்களையும், கருத்துக்களையும், விளக்கங்களையும், வழிமுறைகளையும் சொல்லி, மாணவர்களின் மனத்தில் பதியவைக்க முடியாத நிலையில் கரும்பலகையும் வெண்கட்டிகளும் பயன்பாட்டில் வந்தன.  இந்நிலை தற்காலம்வரை தொடர்கிறது. ஆசிரியரின் உடல் நலம் கருதி வண்ணப் பலகைகளும் எழுதுகோல்களும் பின்னர்ப் பயன்பாட்டுக்கு வந்தன.

இன்று கற்றல் கற்பித்தலில்  தொழில் நுட்பக்கருவியான  கணினி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இக்கணினி வகுப்பறைகளில்  புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இது கற்பிக்கும் ஆசிரியர்களின் வேலைப் பளுவை இலகுவாக்குவதோடு கற்பித்தல் உத்தியையும் மாற்றி மாணாக்கர்களின் கற்றல் முறையையும் மாற்றிவிடும் கருவியாகவும் செயல்படுகிறது.

ஓர் ஆசிரியன் ஒரு மடிக் கணினியையும் தனது பயன்பாட்டிற்கெனக் குரல் பதிவானையும் (Voice Recorder), தகவல் சேமிப்பானையும் (Pen Drive) வாங்கி வைத்துக் கொண்டால் நூலகம், வகுப்பறை, தேர்வுக்கூடம் என அனைத்திலும் நவீனத்தொழில் நுட்பத்தின் உதவியோடு கற்பிக்கும் தொழிலைச் செய்துவிட முடியும். ஆசிரியரின் நேரடி வருகை இல்லாமலேயே கூட இக்கருவிகள் அவரது இடத்தை நிரப்பிவிடும் தன்மை கொண்டவை. கணினியின் திரவப் படிகத் திரை வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையின் மாற்று வடிவமாக விளங்கத் தக்கது. அதனை இணையத்தின் மூலம் இணைத்து விடும் நிலையில் அதுவே ஒரு நூலகம். சாதாரண நூலகம் அல்ல உலக நூலகங்கள் அனைத்தோடும் இணைத்துக் கொள்ளும் மாபெரும் நூலகம். அந்நூலகத்தில் அச்சிட்ட நூல்கள் மட்டுமே கிடைக்கும் என்பதில்லை. குரல் வடிவ நூல்களும் காட்சி வடிவ நூல்களும் கூடக் கிடைக்கின்றன.

அது மட்டுமல்லாமல் இப்போது கற்பித்தலில் வல்லுநர்களை வரவழைத்து அவரிடம் பாடம்கேட்கும் முறைக்கு மாறாக, இணையவழி வகுப்பறைகளில் வல்லுநரும் மாணாக்கரும் இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்து கொள்ளலாம். பாடம் நடத்தலாம்; பங்கேற்கலாம். தேர்வு எழுதலாம்; மதிப்பீடு செய்யலாம். தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களாகவும் வல்லுநர்களாகவும் விளங்குபவர்களின் குறிப்புகளைக் குரல் பாடமாகவும், நகரும் காட்சிப் படிமங்களாகவும் மாற்றிவிட்டால், அவரது இன்மைக்குப் பின்வரும் அடுத்த தலைமுறை மாணவனும் அவரிடம் பாடங்கேட்க முடியும்.

கற்பித்தலின் மற்றொருகூறு சக்தி மையம் அல்லது பவர் ஆகும். இது கறபித்தல்-கற்றல் வினையில் முக்கியப் பங்காற்றும் தன்மை கொண்டது. கரும்பலகையில் எழுதிப்போட்டுப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக வண்ண வண்ண எழுத்துக்களோடும் படங்களோடும் கூடிய பாடங்களை வெண்திரையில் வழங்கலாம். தேவையான காலஅளவில் நிறுத்தித் தங்கள் விருப்பம் போலப் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பாடம் நடத்தலாம். அல்லது ஒவ்வொரு பக்கமும் இத்தனைக் கால அளவிற்குத் தெரிய வேண்டும் என முடிவு செய்து நகர்த்தும் வாய்ப்புகளும் உண்டு. நகரும் குறிப்புகளுக்கேற்ற விளக்கங்களை ஆசிரியர் நேரடியாக இருந்து விளக்கவும் செய்யலாம். அல்லது அவற்றைக் குரலாகப் பதிவு செய்துவிட்டு இயக்கவும் செய்யலாம்.  இத்தகைய தொழில் நுட்பங்களை நாம் எட்டிவிட்டோம் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். 

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சங்க இலக்கியத்தைக் கற்றல்

தொழில்நுட்பச் சாதனங்கள் கல்வித்துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்டோம்.  இனி இத்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு சங்க இலக்கியத்தைக் கற்கலாம் என்பதைக் காண்போம். இன்று இணையம் வழியாகக் கல்வி கற்கவும் தேர்வு எழுதவும் பட்டம் பெறவும் உதவும் வழியில் பல திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் தோன்றியுள்ளன. அவ்விணையம் வழியாகப் பாடம்கேட்கும்போது ஆசிரியர் ஒருவர் நின்று பாடம்எடுக்கும் முறை காணப்படுகிறதே ஒழிய நாம் மேற்கூறிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய ஒரு வகுப்பைக் காண்பது இயலாத ஒன்றாகப் காணப்படுகிறது.. அதாவது அவ்விணையம் வழியாகவும் மரபுசார்ந்த கல்வி முறையே புகுத்தப்படுகிறது. ஆசிரியர் தகவலாளராகவும் மாணவர்கள் தகவல் பெறுபவர்களுமாகவே காணப்படுகின்றனர். அரசு கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய வகுப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அரசின் உதவித்தொகையில் பல ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்று அரசு கல்லூரிகளில் பள்ளிகளிலும்  நிறுவப்பட்டிருப்பினும் அது பயன்படுத்துவாரின்றியே காணப்படுகின்றன. ஒரு சில தனியார் கல்லூரிகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.  இதற்குக் காரணம் முறையான பயிற்சி இல்லாமையும் ஆங்கிலப் புலமை இல்லாததுமே காரணமாகும்.

கான்பூசியசின் கருத்துப்படி “நான் கேட்கிறேன் மறக்கிறேன், நான் பார்க்கிறேன் நம்புகிறேன், நான் செய்கிறேன் புரிந்து கொள்கிறேன்” மாணவர்கள் கண்டு, கேட்டு, உணர்ந்து கற்கும் ஒரு கல்வி முறை அவசியமாகிறது.  அத்தகைய ஒரு கல்வி முறையைக் கொடுக்க நவீனத் தொழில்நுட்பங்கள் பெருமளவிற்கு உதவிசெய்கின்றன. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சங்க இலக்கியத்தைக் கற்பிக்கும் முறையை இங்குக் காண்போம்.சங்க இலக்கியப் பாடல்களை இசையோடு பாடி மாணவர்களைக் கேட்க வைக்கலாம்.

  • சங்கப்பாடல்களில் வரும் காட்சிகளை வரைந்து ஓவியங்களாக்கிக் காட்சிப்படுத்தலாம்.
  • இணைய நூலகம் வழியாகச் சங்க மொழியை, அதன் பொருளைப் புரிந்துகொள்ள வைக்கலாம்.
  • சங்கப் பாடல்களில் வரும் காட்சிகளை மாணவர்களை வைத்தே நடித்துக் காட்டலாம்.
  • சங்கப் பாடல்களில் வரும் வரலாற்றுப் பதிவுகளைக் கதை போன்று கூறி மாணவர்களுக்குப் புரியவைக்கலாம்.
  • சங்கப் பாடல்களில் பயின்று வரும் அணி, உவமைகளை எடுத்துவிளக்கி தொடர்களில் பயின்றுவரும் இலக்கண அமைதிகளையும் அக்கால மொழி அமைப்பையும் எடுத்துரைத்து விளக்கலாம்.
  • சங்கப்பாடல்களில் பயின்றுவரும் மரம், செடிகொடிகள், பூ வகைகள் விலங்குகள் இவற்றைக் காட்சிப்படுத்தி கற்பிக்கலாம்.
  • சங்கப் பண்பாடுகளையும் கலைகளையும் நிகழ்த்திக்காட்டலாம்.

இம்முறைகளைப் பயன்படுத்தினால் சங்கப்பாடல்களை எளிதில் புரிந்து கொள்வதோடு அப்பாடல்களின் பொருளும் காட்சிகளும் மாணவனின் மனத்தைவிட்டு நீங்காமல் என்றும் நின்று நிலைக்கும் தன்மையோடும் காணப்படும் என்பதில் ஐயமில்லை.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபு நிலையில் கற்பித்தல்

மரபு முறையாகக் கற்பித்தலில் சங்க இலக்கியப் பாடல்களைக் கூறி அதன் திணை, துறை ஆகியவற்றை விளக்கி சிறப்புக்கூறுகளான முன்னம், உள்ளுறை, இறைச்சி, அணிநயம் போன்றவற்றை எடுத்தியம்பி இலக்கியத்தின் ரசனையைப் பெருக்கலாம். 

முன்னம்

சங்க அகத்திணைப் பாடல்களுக்கு யார் கூற்று, யாரிடம் கூறியது என்ன காரணத்திற்காகக் கூறியது என்பனவற்றை விளக்கிக் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்பே முன்னம் எனப்படுகிறது. இதைத் தொல்காப்பியர்,

இவ்விடத்து இம்மொழி இவர் இவர்க்கு உரிய என்று
அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பதை முன்னம் (தொல் 1463)

என்று விளக்கியுள்ளார். குறுந்தொகையில் வரும் பாடல்கள் அனைத்தும் கூற்றுகளாக வருவதால் ‘முன்னம்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் கற்பித்தல் மிக மிக அவசியமாகிறது.  குறுந்தொகையில் தலைவன் கூற்றாக 61 பாடல்களும் தலைவி கூற்றாக 180 பாடல்களும் தோழி கூற்றாக 141 பாடல்களும்  நற்றாய் கூற்றாக 9 பாடல்களும் பரத்தை கூற்றாக 5 பாடல்களும் பிறர் கூற்றாக 5 பாடல்களும் அமைந்துள்ளன. முன்னம் பற்றிய அடிக்குறிப்புகள் பிற்காலத்தில் தொகுத்தவர்கள் எழுதி இருக்கலாம். பாடலைப் படிக்கும்போது யார் யாரிடம் கூறியது என்ற முன்னம் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எ.கா:

செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
கழல் தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. ( குறு.1)

போர்களத்தில் இரத்த வெள்ளம் பெருக அவுணர்களைக் கொன்றழித்த, குருதிதோய்ந்த அம்பினையும் குருதிபடிந்த கொம்புகளுடைய யானையையும் உடைய முருகன் இருக்கும் குன்றம் இரத்தம் போன்ற காந்தள் பூக்கள் நிறைய உடையது என்று கூறி தலைவனிடம் தோழி கையுறை மறுத்தது என்று துறை வகுத்தனர் சான்றோர்கள். இப்பாடலின் காட்சிகளைக் கண்களுக்குப் புலப்படும் காட்சிகளாகக் காட்டலாம்.

இதே பாடலுக்கு நச்சினார்க்கினியர் ‘இது தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’  என்ற துறை வகுத்துள்ளார்.  அதாவது முருகனது குன்றின் மேல் குருதிபோலப் பூக்கும் காந்தள் பூக்கள் நிறைய உள்ளன.  நான் அப்பூக்ளைப் பறித்துவரச்செல்கிறேன் நீ இங்கேயே இரு” என்று கூறித் தோழி தலைவியைப் பிரிகிறாள்.  எனக் கூறியிருப்பதும் பொருத்தமே ஆகும்.  இவ்வாறு ஒவ்வொரு பாடலையும் வேறுபட்ட முன்னத்தின் அடிப்படையில் கற்பித்தால் பாடலின் நயம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை. பல உரையாசிரியர்களின் உரைகளைக் கொண்டு ஒரேஇடத்தில் இவ்வுரைகளைக் கண்டும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.

உள்ளுறை

உள்ளுறை என்பது தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளுறுத்துக் கூறும் உவமையாகும்.  அதாவது புலவன் தான் கருதிய பொருளை உட்பொருளாக வைத்து வெளிப்படையாக உவமையை மட்டும் கூறுதலாகும். குறுந்தொகையில் பல பாடல்களில் இதுபோன்ற உள்ளுறை உவமம் வந்துள்ளமையைக் காணலாம்.

வேரல் வேலி வேர்கோட் பலவின்
சாரனாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. ( குறு.18)

சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவது போல இத்தலைவியின் உயிர் மிகச் சிறுமையை உடையது காமநோய் மிகப் பெரியது. அதனை அறிந்தவர் யார்? ஒருவரும் இல்லை. இவள் உயிர்விடுதல் நேரவும் பெறும் அல்லாமல் பிறர் வரைந்தும் கொள்வர் என்ற உள்கருத்தை மிகத் சாதுரியமாகச் சொல்லிச் செல்கிறார் புலவர்.  இதேபோன்ற குறுந்தொகைப் பாடல் ஒவ்வொன்றிலும் மேம்போக்காகக் கூறப்பட்டிருக்கும் உவமைகளுக்குள் ஓர் ஆழ்ந்த பொருள் மறைந்திருப்பதை வெளிக்கொணர்ந்து கற்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இறைச்சி

இறைச்சி என்பது கருப்பொருள்களின் ஒரு பகுதியாகிய ஆடு, மாடு, மான், மயில் முதலிய விலங்குகளையும் பறவைகளையும் குறிப்பதாகும்.

எ.டு:

நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
பிடிபசி களைஇய பெருங்க வேழம்
மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின் தோழி அவர் சென்ற ஆறே. (குறு: 37)

தலைவன் சென்ற வழியானது யானை தன் பிடியின் பசியை நீக்குவதற்காக யாமரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்தும் காட்சிகளை உடையது.  என்று கூறுவதன் மூலம் தலைவன் அந்தக் காட்சிகளைக் கண்டு தலைவியின் நினைவு ஏற்பட்டு விரைவாக வந்து சேர்வான் என்ற பொருள் கொள்ளப்படுகிறது. இப்பாடலில் வரும் யாஅ மரத்தின் தன்மைகளை விளக்கியும் அதன் சிறப்புக்களைத் தொழில்நுட்பம் வாயிலாக எடுத்துரைத்தும் இப்பாடலைக் கற்பிக்கலாம்.

இன்று வளர்ச்சி அடைந்துள்ள பல துறைகளின் அடிப்படையிலும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.  இலக்கியக் கல்வியின் நோக்கம் மாறுபடுவதற்கேற்ப இலக்கியத்தின் பொருளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.  மக்களின் வாழ்க்கைத்தரம் சமூக உறவுநிலை பொருளாதாரம் நாடுகள் பற்றிய செய்திகள் போன்ற சமூகவியல் செய்திகளும் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

எ.டு:

கோடுஈர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
ஈங்கிவ ணுறைதலும் உய்குவமாங்கே. ( குறு: 11)

என்ற பாடலில் வடுகர் பற்றிய செய்திகளும் கட்டி என்ற மன்னன் பற்றியும் மொழிதெரியாத நாட்டின் குறிப்புக்களும் பொருள்தேடி வேற்று நாட்டிற்குச் செல்லும் குறிப்பும் உள்ளன.  மேலும் இப்பாடலில் முல்லைநில மக்களின் சமூக வரலாற்றுச் செய்திகளும் பதிவாகியுள்ளன.  நிலவியல் அமைப்புகளைக் காட்சிப்படுத்தி விளக்கலாம்.

உளவியல்

இலக்கியங்களை உளவியல் அடிப்படையில் அணுகி பல முடிவுகளைக் கண்டறிந்து கூறுவது புதிய ஆய்வு முறையாகும். குறுந்தொகையில் மனித உணர்வுகளை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் பல பாடல்கள் உள்ளன.  நீண்ட நாள் பிரிவு கழிந்து தலைவன் வந்துவிட்டான் என்ற செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். அந்த இன்ப அதிர்ச்சியை ஒரு தலைவி எப்படி வெளியிடுகிறாள் என்பதை மிக அருமையாக இப்பாடல் காட்டுகிறது.

நீ கண்டனையோ? கண்டோர்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார் வாய் கேட்டனை காதலர் வரவே.  (குறு: 75)

 நீ பார்த்தாயா? பார்த்தவர்கள் கூறக் கேட்டாயா? யாராயிருந்தாலும் அவர்களுக்கும் பாடலிபுரத்தைப் பரிசாக அளிப்பேன் என் காதலர் வரவை யார் கூறினார்கள் என்று ஒரு பெண் ஆர்வமாகக் கேட்கும் வடிவில் அமைந்துள்ளதைக் காணலாம்.  தலைவியின் மன நிலையைக் காட்சிகளாக எடுத்துரைக்கலாம்.

தொழில் நுட்பங்கள் பெருகிவரும் இக்காலத்தில் அவற்றைப் பயன்படுத்தி விளக்குவதால் சங்க இலக்கியத்தைக் கற்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வுபெறும். தொழில்நுட்பத்தின் துணைகொண்டு எளிதில் கற்கலாம். சங்கத்தமிழின் மொழி நடையையும் எளிதில் புரிந்துகொள்ள இவை வழிசெய்யும். பழமையான இலக்கியங்களைக் கற்பிப்பதற்குத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும்போது அதன் சாத்தியங்கள் விரிவடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பயன்பட்ட நூல்கள்

  1. உ.வே.சா- குறுந்தொகை, உவேசா நூல் நிலையம், சென்னை
  2. சுப்பிரமணியன். நா – சங்ககால வாழ்வியல், நீயூ சென்சுரி புக் , சென்னை.
  3. ராமசாமி. அ – தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

*****

கட்டுரையாளர்,
உதவிப்பேராசிரியர்,
கேரளப் பல்கலைக்கழகம்

 

 

Share

About the Author

has written 1096 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.