நிர்மலா ராகவன்

ஏமாறாதே, ஏமாற்றாதே

நலம்

விழாக்காலங்களில் துணிக்கடைகளிலும் பேரங்காடிகளிலும் `மலிவு விற்பனை’ என்று பிரமாதமாக விளம்பரப்படுத்துவார்கள். 70% தள்ளுபடி என்று போட்டிருந்தால், யாருக்குத்தான் ஆசை எழாது? கூட்டம் அலைமோதும்.

சாப்பாட்டுச் சாமானாக இருந்தால், இன்னும் எத்தனை நாட்களுக்கு அல்லது மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்று பார்க்கத் தோன்றினால் பிழைத்தோம். இல்லாவிட்டால், `ஏமாத்திட்டான் கடங்காரன்!’ என்று திட்டுவதோடு திருப்தி அடைய வேண்டியதுதான். இப்படி ஏமாறுவதும், ஏமாற்றுவதும் பேராசையால்தானே!

சே! இவ்வளவுதானா இவ்வுலகம்!

உலகில் எல்லாருமே நல்லவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள்வது ஆரம்பத்தில் வருத்தத்தை விளைவிக்கலாம். நாளடைவில், இந்த உண்மையை ஏற்கும்போது ஏற்படும் அறிவு முதிர்ச்சியால் பிறரைச் சமாளிக்கும் வழிகள் புலப்படுகின்றன. இருந்தாலும், நாம் ஏமாறுவதை அறவே தவிர்க்க முடிவதில்லை.

தர்மம் தலைகாக்கும்

`அறம் செய்ய விரும்பு’. நமக்குக் கற்பிக்கப்பட்ட முதல் பாடம். இதைத்தான் சுயநலக்கார்கள் எப்படியெல்லாம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்! கோயில்களுக்கு வெளியே வரிசையாக அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இதற்குச் சாட்சி.

கோலாலம்பூரில் ஒரு தைப்பூசத் திருவிழாவின்போது, அங்கக் குறைபாடுள்ள பிச்சைக்காரர்கள் கிட்டத்தட்ட நூறுபேர் இருந்தார்கள். இதற்கென சில தீய அமைப்புகளால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்!

கதை

குண்டர் கும்பலுக்குத் தகுதியான ஆளைச் சிறு வயதிலேயே இனம் கண்டுகொள்கிறார்கள்.

ஒரு பதின்ம வயதுப்பையன் தன் அனுபவத்தை என்னிடம் விவரித்தான்: “எங்க வீடு புறம்போக்கில இருன்ச்சு. எப்பவும் வீட்டு வாசல்ல வ்ளாடிட்டிருப்பேன். ஒருக்கா நாலஞ்சு பசங்க என்னை அடிக்க ஆரம்பிச்சாங்க. பக்கத்து டீக்கடையில ஒரு தமிளாள் இருந்தாரு. நான் `அண்ணே! அடிக்கிறாங்கண்ணே!’ன்னு கூவினேன். அவரு, `டேய்! சின்னப்பய, பாவம்! அவனை விடுங்கடா!’ன்னு சத்தம் போட்டாரு. அவங்க பயந்து ஓடிட்டாங்க. எனக்கு அப்போ புது பலம் வந்தாப்போல இருன்ச்சு. அப்றமேல அவரு சொன்னதையெல்லாம் கேக்க ஆரம்பிச்சேன்!”

ஏழைப்பையன். படிப்பிலும் நாட்டமில்லை.

அவனுக்குப் பத்து வயதிலேயே மதுப்பழக்கத்தை ஏற்படுத்தி, பிறரை அடித்துத் தன் வழிக்குக் கொண்டுவருவதையெல்லாம் கற்பித்தார் அந்த `அண்ணன்’. அவருடைய ஆணைப்படிதான் முதலில் தன்னை அடித்தார்கள் என்பது அவனுக்குப் புரியவேயில்லை.

“குடிச்சா, வீட்டுக்குத் தெரியாதா?” என்று கேட்டேன்.

“பேசாம போய் படுத்துத் தூங்கிடுவேன். `என்னடா இப்படித் தூங்கறே?’ன்னு அம்மா கேப்பாங்க. அவ்வளவுதான்!”

ஐந்து வருடங்களுக்குப்பின், ஒரு பாதிரியாரின் உரை கேட்டுத் திருந்தியதாகச் சொன்னான்.

“சின்னப்பிள்ளையா நான் இருந்த காலமே போச்சு. நாங்க சம்பாதிச்சுக் குடுத்ததிலே, பாஸ் பென்ஸ் கார்ல போறாரு!” என்றவனின் குரலில் பெருங்கசப்பு.

தான் இப்படி ஏமாந்துவிட்டோமே, தன்னை இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்ற ஆத்திரம் அவனுக்கு அடங்கவேயில்லை. காவல் துறையினரிடம் தண்டனை பெற்றிருக்கிறான். பேச்சு குளறுகிறது. மந்தமாக இருக்கிறான்.

பெற்றோரிடம் நடந்ததை வருத்தத்துடன் கூறி, தான் திருந்தி வாழ விரும்புவதாகத் தெரிவித்ததும், அவர்கள் அவனை மறுபேச்சின்றி ஏற்றார்கள்.

“நல்லவேளை, ஒன்னைத் திட்டலியே!” என்றேன்.

“என்னோட கூட்டாளி ஒத்தனுக்கு அப்படி ஆயிடுச்சு. `நீ எங்க புள்ளையே இல்ல!’ன்னு வீட்டில வெரட்டிட்டாங்க. அவன் திரியும் (திரும்பவும்) அந்தக் கும்பல்லே சேர்ந்துட்டான்!” என்றான், யதார்த்தமாக.

தந்தை இவனை ஒரு வேலையில் சேர்த்தார். ஆனால், ஏமாற்றமும், நாட்பட்ட மதுப்பழக்கத்தால் மூளையில் ஏற்பட்ட பாதிப்பாலும், கார் ரிப்பேர் செய்யும் இடத்தில் முதலாளியின் மண்டையை ஒரு பெரிய ஆயுதத்தால் தாக்கி இருக்கிறானாம். இதைச் சொல்லிவிட்டு, எதையோ சாதித்ததுபோல் அவன் சிரித்தபோது, எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ஏன் ஏமாந்தான்?

இப்பையன் உலகம் அறியாதவன். பழக்கமே இல்லாத ஒரு புதிய நபர் தனக்குப் பரிந்து ஒரு நன்மை செய்தபோது, அவரை முழுமையாக நம்பலாம், நமக்குக் கெடுதல் செய்யமாட்டார் என்று தோன்றிவிட்டது.

வீட்டிலும் அவன்மேல் அதிக கவனம் செலுத்தவில்லை. பத்து வயதுச் சிறுவன் சிறுவன் இரவில் நேரங்கழித்து வீட்டுக்கு வந்து, தூங்கியபடியே இருந்தால், உடலில் ஏதோ கோளாறு இருக்கலாம் என்று மருத்துவரிடம் அழைத்துப் போயிருக்கமாட்டார்களா?

நம்மைப்போலவே பிறரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருக்கும்வரை ஏமாறத்தான் செய்வார்.

`பணக்காரர் ஆவது எப்படி?’ என்பதுபோன்ற புத்தகங்களை வெளியிடுவோர்தாம் பணக்காரர் ஆகிறார்கள். அவைகளைப் படித்து எத்தனைபேர் செல்வந்தர்களாக ஆகியிருக்கிறார்களோ!

குழப்பத்தால் நமக்குத் தெரியாததை நம்புகிறோம். மனோதிடம் இல்லாதவர்களை அச்சுறுத்தி, அதனால் ஏமாற்றி, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வர் பலர்.

பள்ளிக்கூடக் கதைகள்

1 எங்கள் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியையாக இருந்தவள் எல்லாரையும் படாதபாடு படுத்தினாள்.அவளுக்கு மேலதிகாரியாக வேறொருத்தி வரவிருந்ததைத் தடுக்கப் பெருமுயற்சி செய்தாள்.

“வரப்போகிறவள் புலிமாதிரி – கொடுமைக்காரி! உங்களுக்குத் தெரியுமா?” என்று பயமுறுத்திவிட்டு, “எனக்கும்தான் பதவி உயர்வு கிடைத்தாக வேண்டும்,” என்று தன்னிரக்கத்துடன் கூற, பயந்த அனைவரும் கல்வி இலாகாவிற்கு ஒரு மனு அனுப்பினார்கள் – இவளேதான் தலைமை ஆசிரியையாக வேண்டும் என்று. நான் மட்டும் கையெழுத்துப் போட மறுத்துவிட்டேன்.

`நாம் இவளை வேண்டாம் என்று சொல்லி, அப்புறம் இவளே பதவிக்கு வந்தால், இன்னும் கஷ்டப்படுத்துவாளே! வரப்போகிறவள் இன்னும் மோசமாக இருந்தால்?’ என்று சில ஆசிரியைகள் கூற, எனக்கு ஒரே ஆத்திரம். மனிதர்கள் ஏன் இவ்வளவு பயந்த சுபாவமாக இருக்கிறார்கள்!

(நல்ல வேளை, அவளை வேலை மாற்றம் செய்துவிட்டு, பதவி உயர்வு கொடுத்தார்கள். புதிய இடத்தில் அவள் அதிகாரம் செல்லவில்லை, ஆசிரியர்கள் அவளை மிரட்டிவைத்தார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம்).

2 ஒரு நோட்டுப் புத்தகத்தைத் திருத்துகையில், என் கையெழுத்து வேறுமாதிரி போடப்பட்டிருப்பதுகண்டு சந்தேகம் எழுந்தது. பல பக்கங்களில் இதேபோன்று இருந்தது. அட்டையில் மாணவனின் பெயரைப் பார்த்துவிட்டு, அவன் இருந்த திசையை நோக்கினேன். அவன் – ரசாலி –கண்கொட்டாமல், என்னையே சற்று பயத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

அவனை அழைத்து, “இது உன் கையெழுத்துதானே?” என்று கேட்டதுமே ஒப்புக்கொண்டான், அழுகையுடன். (அதிகம் ஏமாற்றிப் பழகவில்லை!)

“ஏன் இப்படிச் செய்தாய்?” என்று துருவ, “எல்லாரும் கொடுத்தபோது, நான் எழுதி முடிக்கவில்லை!” என்று பதிலளித்தான் ரசாலி.

நான் அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாது, வகுப்பில் பொதுவாக, `ஏமாற்றினால் எப்போதாவது மாட்டிக்கொள்வீர்கள்,” என்று எச்சரித்தேன்.

3 கமலா, விமலா என்ற இரு மாணவிகள் தம் மதிப்பெண் அட்டைகளைத் திறந்து வைத்துக்கொண்டு, மாடிப்படி அருகே நின்றுகொண்டிருந்தார்கள் – மணிக்கணக்கில்.

“எதற்குத் தண்டனை?” என்று வேறோரு ஆசிரியையிடம் விசாரித்தேன்.

“குறைந்த மதிப்பெண்களை வாங்கி, அவைகளை வெள்ளை மை (correction liquid) உபயோகித்து அழித்து, தேர்ச்சி பெற்றதுபோல் வீட்டில் காட்டியிருக்கிறார்கள் – வசவுக்கும், அடிக்கும் பயந்து!” என்றாள் சிரிப்புடன்.

ஏமாற்றத் தோன்றும் அறிவை நல்லபடியாகப் பயன்படுத்தி இருக்கலாமே!

ஏமாற்றப் பழக்குவது

நாம் முதலில் ஏமாற்றுவது குழந்தைகளை. சில சமயம் பயமுறுத்துகிறோம். நம்மைப் பிறர் புகழ்ந்தாலும், அவரை நமக்குப் பிடித்துப்போக, அவர் சொற்படி நடக்க முற்படுகிறோம்.

`சமர்த்தா சாப்பிடு. இல்லாட்டா, பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் குடுத்துடுவேன்!’ என்று பயமுறுத்துவதை குழந்தை நம்பலாம். ஆனால் எந்தத் தாயாவது குழந்தையைப் பிறர் பிடித்துக்கொண்டு போவதை அனுமதிப்பாளா? மனமறிந்து பொய் சொல்கிறாள். உலகப்போக்கை உணரும் வயது வராத குழந்தையும் தாயின் பேச்சை நம்புகிறது.

கதை

எனது இடைநிலைப் பள்ளிநாட்களில் சொல்லிவைத்தாற்போல், பல ஆசிரியைகள், கேட்பார்கள்: “உலகிலேயே மிகச் சிறந்த நாடு எது?”

“இந்தியா!” என்று மகிழ்ச்சியுடன் கோரஸ் ஒலிக்கும். நான் மட்டும் மௌனமாக இருப்பேன். ஏனெனில், எனக்குப் பல நாடுகளில் வாழ்ந்த பழக்கம் இருக்கவில்லை. அவைகள் எப்படி இருக்கும் என்றே தெரியாத நிலையில், எப்படி நம் நாட்டுடன் ஒப்பிட முடியும் என்று என் அறிவு விவாதித்தது.

அடிக்கடி இப்படிக் கேட்பதால் பள்ளிச்சிறுமிகளின் நாட்டுப்பற்று வளர்ந்துவிடும் என்று ஆசிரியைகள் நினைத்திருப்பார்கள். ஆனால், நமக்குப் போதிக்கப்பட்டபடி நாடு அப்படி ஒன்றும் மேன்மையானது இல்லை என்று புரியவந்ததும் விளையும் ஏமாற்றம் கசப்பில் முடிகிறது. எவர் சொல்வதையும் நம்பிவிடக்கூடாது என்ற உறுதி பிறக்கிறது.

எவரையும் நம்பாது இருப்பது ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். ஆனால், இக்குணம் ஒருவரைத் தனித்துவிடும். இல்லையேல், தாமும் பிறரை ஏமாற்றும் வழிகளை ஆராய்வார்.

கூடியவரை, பிறர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து, புகழ்ச்சிக்கு மயங்காது இருத்தல் ஏமாறுவதை ஓரளவு தவிர்க்கும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *