அகநானூற்றில் அழுகையெனும் மெய்ப்பாடு! (தொல்காப்பிய மெய்ப்பாட்டியலை முன் வைத்து…)

-பேரா.பீ. பெரியசாமி  

முன்னுரை

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆறாவது இயலாக மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது. இலக்கிய மாந்தர்கள் periyasamiஉள்ள உணர்ச்சியால் தூண்டப்படும்போது எவ்வாறு சொற்படுத்த வேண்டும் என்பதை அறிய மெய்ப்பாட்டியல் துணைபுரியும். மெய்ப்பாட்டியல் என்றால் என்ன என்பது பற்றிய விளக்கப் பொருண்மை நூற்பாவைத் தொல்காப்பியர் அமைக்கவில்லை. மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. செய்யுளுக்குரிய உறுப்புகளுள் இன்றியமையாதது மெய்ப்பாடு ஆகும்.  தொல்காப்பியனார் “உணர்ச்சி” என்னாது “மெய்ப்பாடு” எனச் செய்யுள் உறுப்பைக் குறித்ததன் நோக்கம் நுட்பம் வாய்ந்தது.  உணர்ச்சி என்ற சொல்லைத் தொல்காப்பியனார் யாண்டும் குறிக்கவில்லை.  பாடலில் உணர்ச்சியைக் குறித்தால் அதைப் படிப்போர் எளிதில் அறிதல் இயலாது.  ஒருவர் உணர்ச்சியுறுகின்றார் என்றால் அவர் உற்ற உணர்ச்சியை அவரால் மட்டுமே எளிதில் உணரமுடியும்.  காண்போர் அறிய இயலாது.  மெய்ப்பாடுகளால் மட்டுமே உணார்ச்சியை எளிதில் அறிந்துகொள்ள இயலும். அவற்றுள் அழுகை எனும் மெய்ப்பாடு அகநானூற்றில் இடம்பெற்றுள்ளவிதத்தை இக்கட்டுரை ஆராயவுள்ளது.

அழுகை மெய்ப்பாடு

மனித மனத்தின் ஆழமான, நீங்காத உணர்வு அழுகை ஆகும். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையில் அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றும். இதனை, நாவலர். பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அழுகை மெய்ப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, “அவலச்சுவை என்பது வடமொழியில், “சோகரஸம்” என்று குறிப்பிடப்படும். அவலம் எனினும் அழுகை எனினும் ஒக்கும்” (கட்டுரைத் திரட்டு, ப.107) எனப் பேராசிரியர் வழி நின்று அவலச் சுவைக்கு விளக்கம் தருகின்றார். படிப்பவரது உள்ளத்தை உருக்கும் தன்மையதாய் அமைவது அழுகை எனும் மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாடு கேட்போரை எளிதில் ஈர்க்கச் செய்யும் தகுதியுடையது. இதனை, “வாழ்க்கையில் கவலையை வளர்க்கும் துன்பம் கலையுலகில் கவலையைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது என்னும் அவலம் உள்ளச் சுமையைக் குறைப்பதற்கு உறுதுணையாகிறது” (இலக்கிய ஆராய்ச்சி, ப – 69) என்று  மு. வரதராசனார் கூறுவார்.

கி. ஈஸ்வரி அவர்கள் அழுகையின் தோற்றுவாயினை, “அவலத்தை இரக்கம், துன்பம் எனப் பகுத்துப் பார்க்கும்போது, இரக்கத்தின் அடிப்படையில் தோன்றுவது ‘அவலம்’ என்றும், துன்பத்தின் அடிப்படையில் தோன்றுவது ‘அழுகை’ என்றும் தெரிகிறது.” (இலக்கிய மணிகள், ப.52) என்கிறார்.  இதனை, “துன்பத்தின் இன்பமே கவிதைக்கும் கற்பார்க்கும் அவைக்கும் ஆதலின், சங்கச் சான்றோர்கள் பாலைத் துறைகளை விரும்பிப் பலர் பாடினர்” (தமிழ்க்காதல், ப – 98) என வ.சு.ப. மாணிக்கம் கூறுவார். அழுகையானது தனிமனித வாழ்வில் ஏற்படுவதுடன் முடிவெடுக்க இயலாத தன்மையும் கொண்டது. அழுகையெனும் மெய்ப்பாடானது இளிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய காரணங்களால் பிறக்கும். இதனை தொல்காப்பியர்,

இழிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே”(நூ.5) என்பார்.

இவற்றுள், இளிவு, வறுமை என்பது சங்க இலக்கியங்களில் ஓரளவிலேயே சுட்டப்படுகின்றன. வறுமை என்பது களைய வேண்டிய தொன்றே எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இளிவு வரினும் அவை மாறும் தன்மையைக் கொண்டதெனலாம். இதனை, “உணர்ச்சிகள் தோன்றுவதற்குச் சூழலும் மனமும்தான் காரணமாக அமைகின்றன. உயிர்கள் அனைத்தும் இன்புற்றிருக்கவே விழைகின்றன.  இவ்விழைவிற்கு மாறாக எழும் நிகழ்ச்சிகள் அவலத்தைத் தோற்றுவித்தன. அவலத்தை மிகுவிக்கவோ குறைக்கவோ மனநிலையும் சூழலும் காரணமாக அமைகிறது.” (குறுந்தொகையில் அவலச்சுவை, ப.6) என துரைராஜி கூறியுள்ளார்.

ஆய்வாளர்களின் பார்வையில் அழுகை

மேலைநாட்டு ஆய்வாளர்கள் அழுகையினை அவலம், டிராஜடி என்பர். இதனை, “துன்ப உணர்வைத் தருகின்ற கருணைரசம், அதன் தன்மையினின்று நீங்கிச் சுவையை ஊட்டுகிறது என்பர் அவிநவகுப்தர். இங்ஙனம் அது சுவையைத் தருவது இலக்கியத்திலும் நாடகத்திலும் எனலாம்.” (Comparative Aesthetics, Vol.I, P.215 ) என்பர்.

“நிலையற்ற மானிட வாழ்வில் உயர்ந்த நிலையில் அவலத்தைப் பற்றிச் சிந்திக்கையில் மதிப்பிற்குரிய, மிக நெருங்கிய அன்புடையவர் தம் இழப்பும், விபத்துக்கள் ஆகியனவும் அவலமாகும் எனவுரைப்பர்.” (Tragedy and Sanskrit Drama, P – 1) “அறியாமையாலும் ஓரளவு அவலம் ஏற்படுவதுண்டு. சான்றாக ஒரு பித்தனால் அமைதியும் மரியாதைக்குரிய ஒருவன் எதிர்பாராமல் சொல்லப்படுவது அவலத்தை விளைவிப்பதாகும்.” (The Harvest of Tragedy, PP.18-19) “இரண்டாவதாக அவலமாவது நல்வினைப் பயன் தீவினையாக மாறுவதாகும். காண்போரும் இரக்கமும், அச்சமும் மிகுந்த நிலையினை மனதிற் கொண்டே அதனைக் காண்கின்றனர்.” (Principles of Tragedy, p.37)  “அவலத்தைப் படைக்கும் கவிஞன் தனது ஆன்மாவினின்றும் உறும் எல்லா மனிதருக்கும் ஏற்புடையதாக அதனை அமைக்கின்றான். அது மகிழ்ச்சியைத் தரத்தக்கதல்ல எனினும் சிந்திக்க இன்பத்தைத் தருவதாகும்” (The harvest of Tragedy, P – 201)  என்பார்.  ஹேனன் என்பவார், “தவிர்க்க இயலாத வகையில், மிக உயர்ந்த நிலையிலிருந்து மனிதனது வீழ்ச்சியும், இழப்பும் அவலமென்று கூறுவர். அந்நிலை மிகச் சாதாரணமாக ஏற்படுவதன்றென்பர். மேலும், அது ஒருவனுக்கு எளிதாய் ஏற்படுவதில்லை. பிறரால் உண்டாக்கப்படுவதுமில்லை. அது மனிதனுடைய செயல்களினால் தாமே விளைவதாகும்.” (Shakespearean Tragedy, p.6) என்பர்.

அழுகை என்பது தன்னிலையிலிருந்து தாழ்வதனால் ஏற்படுகின்றது. இது இயல், இசை, நாடகம் எனும் அனைத்திலும் வெளிப்படக் கூடியது. மேலும், மற்றவர்களின் மீது நாம் அன்புகொண்டு பழகும்போது அவர்களை இழக்க நேரிட்டாலோ அல்லது அவர்கள்  இறந்துவிட்டாலோ நம்மிடம் அழுகை எனும் மெய்ப்பாடு இயல்பாகவே வெளிப்படுகின்றது.

உளவியலார் பார்வையில் அழுகை

அழுகை ஏற்படுவதற்கான காரணமாக, “ஒருவனுடைய நெருங்கிய தோழன் காட்டிக் கொடுக்கும் போதோ மிகவும் நெருங்கிய ஒருவன் இறக்கும்போதோ ஒருவன் முழுவதும் நிலைகுலைவதைக் காணலாம்.” (Psychology and Effective Behaviour, p.176) என கோலிமேன் கூறியுள்ளார்.

அழுகை என்னும் சொல்லுக்கு அகராதி விளக்கம்

மதுரைத் தமிழ்ப் பேரகராதி “அவலத்திற்கு ஓரலங்காரம், அஃது துயரத்  தோன்றக் கூறுவது எனவும் கிலேசம், கேடு, நோய், மிடி, வருத்தம், பயன்படாதொழிவது, பலவீனம், மாயை, வறுமை, துக்கமாய் முடிவது, கவலை எனவும் பொருள் விளக்கம் கூறும்.” (ப.156.) பிங்கலர் “அழுகையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்துள் கலக்கம், உரோதனம், கலுழ்ச்சி, அரற்றல், இரங்கல், விம்மல், பொருமல், ஏங்கல், இராவனம் ஆகியவற்றை அழுகையின் கூறுகளாகக் கொள்வர். நோய்க்குரிய பல சொற்களில் அவலத்தையும் ஒன்றெனச் சுட்டுகிறது.” (ப.394) “சதுரகராதியில் அவலம் என்ற சொல்லிற்கு, “நோய், வருத்தம்” என்ற பொருள் அமைகிறது.” (ப.13) 

அகநானூற்றில் அழுகை

இளிவு

இளிவு என்பது ‘தாழ்நிலை’. அதாவது, பிறரால் இகழப்பட்டு எளியராகும் தன்மை என்பர். இதனை, “வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே”(அகம். 36(23)) எனும் அகநானூற்று பாடலில் தலைவன் பரத்தையர் சேரியில் தங்கியிருந்து ஒருநாள் மீண்டு இல்லம் வந்தான். அப்போது தலைவி அவனிடம் ஊடல் கொண்டு, தன் வெற்றிப்புகழ் எங்கும் பரவுமாறு  பகைவர் படைகளைக் கொன்று களவேள்வி செய்த காலத்துச் செழியன் வெற்றிவீரர்கள் எழுப்பிய ஆரவாரத்தினைக் காட்டிலும், உன் பரத்தைமை பற்றி ஊரார் பேசும் அல் பெரியதாக இருந்தது என தலைவனை இகழ்கிறாள். இதனால் தலைவனின் ‘தாழ்நிலை’ புலப்படுகின்றது. இதன்வழி இளிவு எனும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.  மேலும், 71(13-15), 73(5-8), 146(13), 340, 189(14-15) ஆகிய வரிகள் இளிவு குறித்த அழுகை மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

இழவு

இழவு என்பது ‘இழத்தல். அதாவது தாய், தந்தை முதலாய சுற்றத்தாரையும், இன்பம் விளைவிக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். இதனை,

மாண்நலம் நுகரும் துணை யுடையோர்க்கே”(அகம். 37 (18)) எனும் அகநானூற்று பாடல், தலைவன் வினைவயின் பிரிந்தான்; சென்றவன் குறித்த பருவத்தில் திரும்ப வரவில்லை. ஆதலால், தலைவி பிரிவாற்றாது வருத்தமுற்றாள்; அதனைக் கண்ட தோழி தலைவன் வருமளவும் ஆற்றியிருத்தலே நன்று என்று வற்புறுத்திய பொழுது தலைவி தன் நெஞ்சிற்கு,  அழகிய இந்த இளவேனில் காலம் மாண்புடைய பெண்மை நலத்தினைத் துய்க்கும் துணையைப் பிரியாதோர்க்கே உரியது; அது கழிந்ததே! நம்முடைய தலைவன் நம்மை மறந்து அங்கே தங்கியிருப்பவர் அல்லர்; ஆயினும், அதனால் நாம் பெற்றது என்ன? இப்பருவத்தில் பிரிந்து வாழ்பவர் ஆற்றியிருத்தல் கூடுமோ? எனக் கூறுகின்றாள். இதில் பருவத்தை (நுகர்ச்சியை) இழந்ததை நினைத்து தலைவி அழுவதினால் இஃது இழவின் பாற்பட்டது. மேலும், 19(9-19), 176(21-26), 73(16 -17), 120 (8-9), 192(12-13), 208(14-16), 338(6-10) ஆகிய பாடல் அடிகள் இழவு குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

அசைவு

அசைவு என்பது ‘தன்நிலை தாழ்தல்’. அதாவது, முந்தைய நல்ல நிலைமையிலிருந்து வேறுபட்டு வருந்துதல் அசைவு. இதனை,

“……………..  ……….. என் உயிர்
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?” (அகம். 71(15 -18)) எனும் அகநானூற்று பாடல் தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றுள்ளான். பிரிவாற்றாது தலைவி வருந்தினாள்; தலைவியை ஆற்றுவிக்கும் தோழி ‘ நீ இவ்வாறு ஆற்றாது வருந்தினால் ஆற்றுவித்தற்கரிய யான் என் கடமையை ஆற்ற இயலாது போகும்; நீ உயிர்விடும் முன்னர் என் உயிர் தானே என் உடம்பை விட்டுப் பிரிந்து போதற்குரிய காலம் வந்து விட்டது என்றே கருதுகிறேன்’ எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறுகின்றாள். இதில் தன்நிலையான ஆற்றுவித்தல் என்பதிலிருந்து தாழ்ந்து தலைவியின் ஆற்றாமையைக் கருதி தன் உயிரும் போகும் காலம் வந்துவிட்டது என தோழி கூறுவதில் ‘அசைவு’ எனும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது. மேலும், 32(11-12), 69(12-20), ,95(3-5), 175(18), 233(1-2), 299 ஆகிய வரிகள் அசைவு குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

வறுமை

வறுமை என்பது ‘போகம் துய்க்கப் பெறாமை’. அதாவது இயலாமை. இதனை,
மென்தோள் பெறநசைஇச் சென்ற என் நெஞ்சே” (அகம்.9(26)) எனும் அகநானூற்று பாடல் வினைமேற் சென்ற தலைவன் வினை முடித்து மீண்டு வரும்போது, விரைந்துச் செல்லும் தேரினை மேலும் விரைவு படுத்துவதற்காகத் ‘தன் நெஞ்சம் தனக்கு முன்பே தன் தலைவிபாற் சென்று விட்டது’ என்று தேர்ப்பாகனிடம், நாணொடு செறிந்த கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் அழகிய இனிய சொல்லினையும் இளமையையும் உடையாளது மெல்லிய தோளை அடைவதற்கு விரும்பி விரைந்து சென்றது என்று கூறுகின்றான். இதிலிருந்து தலைவியைக் காண இயலாத இயலாமையில் தலைவன் இருக்கின்றான் என்பது புலப்படுகின்றது. இதில் வறுமை (தலைவியை அடைய இயலாத நிலை) எனும் மெய்ப்பாடு வந்துள்ளது. மேலும், 19(9-19), 28(14), 123(7), 161(9-14), 164(9), 200(1-3), 337(12) ஆகிய வரிகள் வறுமை குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

முடிவுரை

மெய்ப்பாடு என்பது செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. உள்ளத்து நிகழ்ச்சி புறத்தே வெளிப்படுதல் மெய்ப்பாடு. மெய்ப்பாட்டியல் என்பது உளவியலோடு தொடர்புடையது. மெய்ப்பாடே உலக மக்களின் முதல்மொழி. தொல்காப்பியம் பொதுவான மெய்ப்பாடுகள் எனச் சுட்டிய நகை முதலான எட்டையும் முதலில்வைத்துப் பிறகு அவை தோன்றும் களங்கள் குறித்துப் பேசுகிறது. எட்டு மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நான்கு நான்கு உணர்ச்சிகளைக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.  நானான்கு எனத் தொல்காப்பியனார் கூறுவது, ஒவ்வொரு மெய்ப்பாடும் நான்கு நான்கு உணர்ச்சிகளால் தோன்றும் என்பதையே; இது முப்பத்து இரண்டாய் விரிகின்றது. மனித மனத்தின் ஆழமான, நீங்காத உணர்வு அழுகை ஆகும். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்னிலையிற் தாழ்தல், நல்குரவு ஆகியவற்றால் அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றுகின்றது.

*****

கட்டுரையாசிரியர்
தமிழ்த்துறைத்தலைவர்
DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம்

 

Share

About the Author

has written 1070 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.