க. பாலசுப்பிரமணியன்

 

திருக்கடல்மங்கை (மகாபலிபுரம்)

அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள்

 26219293_1732776533440727_6333504764046447991_n

கடலோரம் கால்நீட்டிக் கண்ணயர்ந்த கோவிந்தா

கல்லெல்லாம் கலையான மாமல்லை மாதவனே

கற்பனையைக் கையிறக்கிக் கல்லுளியில் வடித்தவனே

கரையில்லா அன்பிற்கு கண்ணனென்ற பெயர்சொன்னாய் !

 

பாற்கடலில் இருந்தவண்ணம் உனைக்காணும் பரவசத்தை

பார்போற்றும் புண்டரீகன் தவமிருந்து வேண்டிநிற்கப்

பசிதீர்க்க வேண்டுமென்று  வந்தாயே   பரந்தாமா

பாற்கடலை படைத்தங்கே பேரருளாய் அமர்ந்தாயே!

 

பஞ்சரதம் இருந்தாலும் பார்த்தனுக்கே சாரதியாய்

பாஞ்சாலி துயர்நீக்கப் பாண்டவரின் துணையிருந்தாய்

பாஞ்சஜன்யம் எடுத்தவனே பாரதத்தை வென்றவனே

பாற்கடலில் அயர்ந்தபடி பாரெல்லாம் காப்பவனே !

 

கோதையர்கள் புடைசூழக் கோலாட்டம் ஆடியவனே

கோபியர்கள் நெஞ்சமெல்லாம் குழலூதி நின்றவனே

கோவர்தனம் கையேந்திக் குலமெல்லாம் காத்தவனே

கோலமகள் இராதையுடன் குழலேந்தி வருவாயே !

 

நல்மகனாய் தயரதனுக்குப் பெருமை சேர்த்தாய்

நலம்காத்த யசோதையை தாயாக்கித் தாள்பணிந்தாய்

நம்பிவந்த அனுமனையோ அரவணைத்தது நின்றாய்

நாரணனே ! நாயகனே ! நற்கதியே தந்தருள்வாய்

 

சொல்லினிலே நீயிருந்தால்  சுவையெல்லாம் புதிதாகும்

சொல்லாமல் உள்வந்தால் சுடர்மேனி ஒளியாகும்

சோதனைகள் விலக்கிடுவாய் சுகமெல்லாம் தந்திடுவாய்

சோலையென வாழ்விருக்கச் சொந்தமாக நீவேண்டும் !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *