க. பாலசுப்பிரமணியன்

வாழ்க்கை ஒரு போராட்டமோ போட்டியோ அல்ல 

வாழ்ந்து பார்க்கலாமே!

விமானத்திற்கு உள்ளே செல்வதற்கான பயணிகள்  வரிசையாகச் சென்றுகொண்டிருந்தார்கள். நானும் அந்த வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். எனது இருக்கைக்கு  அருகில் வந்ததும்  எனது இருக்கை அந்த வரிசையின் நடு இருக்கையாக இருந்ததால் அதற்கு முன் இருக்கையில் இருந்தவர் சற்றே எழுந்து எனக்கும் என் இருக்கைக்கு முன் இருந்தவருக்கும் உள்ளே செல்ல வழி விட வேண்டிய  நிலை இருந்தது. எங்கள் இருவரையும்  ஒரு மாதிரியாகப் பார்த்த அவர் “நீங்கள் இருவரும் நான் அமருவதற்கு முன்னாலேயே வந்திருக்கவேண்டும்” என்று சற்றே முனகினார். எனக்கு சற்று வியப்பாக  இருந்தது. கூட இருந்த நபரோ பதிலுக்கு “நாங்களும் வரிசையில் தான் வந்து கொண்டிருக்கின்றோம். சற்று பின்னே… ” என்று சொல்லி முடிப்பதற்குள் “அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் உட்காருவதற்கு முன்னே நீங்கள் வந்திருக்க வேண்டும்” என்று மீண்டும்  சொன்னார்

அவருக்கு பதில் ஏதும் சொல்லாமல் நாங்கள் எங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரத்தில் கீழே எதையோ தேடிய அந்த நபர் கீழே விழுந்திருந்த தன்னுடைய சிறிய தொப்பியைக் கைகளால் எடுத்துக்  கொண்டே “உங்களுக்காக எழுந்ததால் தான் தொப்பி கீழே விழுந்து விட்டது” மீண்டும் ஒரு கசப்பான வார்த்தையை வெளிப்படுத்தினார். சிறிது நேரத்தில் பணிப்பெண்கள் சிற்றுணவுகளை விற்பதற்காக வந்தபொழுது  ஏதோ ஒன்றை வாங்கிய அவர், அந்த பணிப்பெண்ணிடம்  “இதற்குத் தொட்டுக்கொள்ள சட்னி எங்கே?” என்று வினவினார். பணிப்பெண்ணோ இதற்குத் தொட்டுக்கொள்ள ஒன்று கிடையாது” என்று சொல்ல, அவர் துர்வாச முனிவராகவே மாறிவிட்டார். “நீங்களெல்லாம் ஏதோ சொர்க்கத்திலிருந்து எங்களுக்குப் பணி செய்ய வந்தது போல் உங்களுக்கு நினைப்பு” என்று விரும்பத்தகாத வரையில் பேசினார். அனைவரும் அவருடைய பேச்சையும் நடவடிக்கைகளையும் பார்த்துச் சிரித்தனர். மொத்தத்தில் அவரைச் சுற்றி உள்ள எல்லா நடவடிக்கைகளிலும் அவர் போராட்டம் வெளிப்பட்டது.!

 பலபேர் இவ்வாறு வாழ்க்கையில் தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்திலும், தோல்விகளைச் சந்திக்கவும் ஏற்றுக்கொள்ளவும்  இல்லாத ஒரு மனநிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

“கற்க கசடறக் கற்பவை

கற்றபின் நிற்க  அதற்குத் தக”  – என்பது வள்ளுவம்.

கற்றல் என்பது ஒரு இடத்தில் நிகழக்கூடிய நிகழ்வு அல்ல.   அது ஒரு மனிதனை வாழ்கைக்குத்  தயாரிக்கும் நிகழ்வு.  நல்லவற்றையும் பயனுள்ளவைகளையும் கற்றுக்கொண்டு அவைகள் வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் அவற்றை அமைத்துக்கொள்ளுவதுதான் கல்வியின்  நோக்கமே.

சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பப் பள்ளியில் காலெடுத்து வைத்த பொழுது சொல்லிக்கொடுக்கப்பட்ட முதல் தாரக மந்திரம் “அறம் செய்ய விரும்பு ” . மனித நேயத்தை வளர்ப்பதற்கான முதல் படி கல்வியின் நோக்கமே ஒரு தனி மனிதனை சமூகத்திற்கு உபயோகமுள்ளவனாகவும் மனிதநேயம் உள்ளவனாகவும் வளர்ப்பதே.

மாறாகத் தற்காலத்தில் இளம் வயதிலிருந்தே போட்டி மனப்பான்மையையும் ஆதிக்க எண்ணங்களையும் வளர்ப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துவிட்டது.  இதனால் இளம் வயதிலிருந்தே  போட்டிகளால் ஏற்படக்கூடிய உணர்வுகளான பொறாமை, இயலாமையினால் வரக்கூடிய தோல்வி மனப்பான்மை, தன்னம்பிக்கை இழத்தல், தன்மானப் பிரச்சனைகள்,  தாழ்வு நோக்கங்கள், பொறுமையின்மை, எரிச்சல்கள்  உணர்வுப் போராட்டங்கள் வாழ்க்கையில்  மகிழ்ச்சியை அழித்துக்கொண்டிருக்கின்றது. இந்தக் கட்டத்தில் சிறுவர்களுக்கு வாழ்க்கைக் கல்வியின் தேவை  அத்தியாவசியமாகின்றது.

குழந்தை வளர்ப்பு வல்லுநர்கள் ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிக்கு சிறிய வயதில் அவர்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலைகளை முன்னுதாரணமாக வைக்கின்றார்கள். வீடுகளில்  குழந்தைகளை மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் வளர்த்தால் அவர்கள் மனநலம் நல்ல முறையில் வளர்ந்து வளமான வாழ்விற்கு வித்தாக அமைவதாகக் கூறுகின்றார்கள் ஒரு குழந்தைக்கு முக்கியமானது தாயின் அன்பும் தந்தையின் அரவணைப்பும் மிக்க அவசியம். வீடுகளில் தங்கள் நிர்பந்தங்களுக்கு நடுவிலும் சிறிது நேரம் குழந்தைகளுக்காகவே  ஒதுக்குதல் அவசியம்.

அலைபேசியில் வர்ணிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி. அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு குடும்பம் வாழ்ந்துவந்தது. அந்த குடும்பத் தலைவர் மாதத்தில் பல நாட்கள் தொழில் நிமித்தம் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஒருநாள் மாலை தன்வீட்டில் இரவு உணவுக்காக அவர் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கின்ற அவருடைய சிறிய மகன் தந்தையை அணுகி ” நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றான். உடனே அவனும் தந்தையைப் பார்த்து “உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான சம்பளம் எவ்வளவு?” எனக் கேட்டான். வியப்படைந்து தயங்கிய தந்தை, சற்று யோசித்த பின் “எனக்கு ஒரு மணி நேரத்திற்கு பத்து டாலர் கிடைக்கிறது.” என்கிறார். உடனே மகனோ “அப்பா, எனக்கு ஒரு ஐந்து டாலர் கடனாகக் கொடுக்க முடியுமா. நான் அப்புறமாகத் திருப்பித் தருகின்றேன்.” எனச் சொல்ல மீண்டும் வியந்த தந்தை தயங்கிக்கொண்டே தன்னுடை பர்சிலிருந்து ஒரு ஐந்து டாலரைக் கொடுக்கின்றார். அதை வணங்கி கொண்டு சென்ற அவர் மகன் தன்னுடைய படுக்கையறைக்குச் சென்று தலையணைக்குக் கீழே வைக்கப் பட்டிருந்த சில காசுக்களை எடுத்து எண்ணுகின்றான். அதுவும் ஒரு ஐந்து டாலர் இருக்கின்றது., இரண்டையும் சேர்த்து பத்து டாலராக எடுத்துக் கொண்டு தந்தையிடம் சென்று “அப்பா, இதோ பத்து டாலர் இருக்கின்றது, எனக்காக நீங்கள் ஒரு மணி நேரம் வேலை பார்க்கமுடியுமா?” எனக் கேட்க, அதிர்ச்சியடைந்த தந்தை அவனிடம் “உனக்காகவா? என்ன செய்ய வேண்டும்?” என்றவுடன் “நீங்கள் ஒரு மணி நேரம் என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்” என்று கேட்கின்றான். தந்தையின் கண்கள் கலங்குகின்றன.

இது பல வீடுகளில் நடக்கும் வாழ்க்கை முறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க்கை வெறும் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல. வாழ்க்கையை நாம் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். “ஒரு மனிதனின் எண்ணங்களே அவன் வாழ்கையையே வடிவமைக்கின்றது” என்பது பல அறிஞர்களின் கருத்து, வாழ்க்கையைப் பற்றி நம்முடைய சிந்தனை தான் என்ன?

(தொடருவோம் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *