செண்பக ஜெகதீசன்

 

தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்                                                               

மெய்வருத்தக் கூலி தரும்.

       -திருக்குறள் -619(ஆள்வினையுடைமை)

 

புதுக் கவிதையில்…

 

இறையருளால்

இயலாது போனாலும்,

மனிதனின்

இடையறாத முயற்சி

அதனளவில்

நல்ல பலனைத் தரும்…!

 

குறும்பாவில்…

 

இடைவிடா முயற்சி,

இறையருளைவிட உழைப்புக்கேற்ற

நற்பலன் தரும்…!

 

மரபுக் கவிதையில்…

 

இறைவன் அருளால் முடியாதது

     எதுவு மில்லை எனுமுண்மை

குறைந்தே முடியா நிலையினிலும்,

     குறையா முயற்சி கொண்டேதான்

நிறைந்த மனத்தொடு மனிதனவன்

     நன்றாய் வருந்திப் பணிசெய்தால்,

மறைந்து விடாதே அவனுழைப்பு

     மிகுந்த பலனைத் தந்திடுமே…!

 

லிமரைக்கூ..

 

மனிதனின் அயராத உழைப்பு,

இறையருளால் இயலாத நிலையினிலும்  

நற்பலன் பெற்றிட அழைப்பு…!

 

கிராமிய பாணியில்…

 

ஒழைக்கணும் ஒழைக்கணும்

ஒடம்புநோக ஒழைக்கணும்

மொயற்சிசெய்து

நல்லபடியா ஒழைக்கணும்..

கடவுளால முடியாததயும்

கடின ஒழைப்பால வாங்கலாமே,

மொயற்சிசெய்து ஒழைச்சாலே

ஒழைப்புக்கேத்த

நல்லபலனப் பெறலாமே..

அதால

ஒழைக்கணும் ஒழைக்கணும்

ஒடம்புநோக ஒழைக்கணும்,

நல்லபடியா ஒழைக்கணும்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *