பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

26754309_1529076437146550_1328870918_n
வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.01.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி (143)

  1. அகவைக்குரிய கல்வியளிப்போம்! அன்னை மொழியைக் காப்போம்!!
    **********************************************************************

    நீலக் கடலோரம்
    நிலமகளின் மடித்தவழும்
    பொன்னிற மணற்பரப்பில்
    பொங்கிவரும் பூரிப்பில்
    பள்ளி விடுமுறையில்
    பக்கத்துக் கடற்கரையில்
    புத்தகப் பொதிதுறந்து
    பாடத்தின் சுமைமறந்து
    மனவழுத்தம் நீங்கும்படி
    மனதினிக்க விளையாடி
    பொழுதைக் கழிக்கின்ற
    பாலகரின் இனிக்கின்ற
    உளக் களிப்பினூடே
    உலகத்தைச் சிந்திப்போம்!

    இந்தத் தலைமுறையின்
    இளம் பிஞ்சுகளின்
    சின்னஞ் சிறுமுகத்தில்
    சிங்காரத் திருமுகத்தில்
    இம்மி அளவேனும்
    இருக்கிறதா பூரிப்பு?
    கருவிலிருக்கும் குழந்தைக்கும்
    கல்வி புகட்டுகின்ற
    கலிகால உலகமிது!
    தன்னிகர் இல்லாத
    தாய்மொழியைப் புறக்கணித்து
    அலங்கார மொழியாக
    ஆங்கிலத்தைத் தலையில்வைத்து
    வியப்புடன் கொண்டாடும்
    விந்தை உலகமிது!

    அகவைக்குரிய அளவின்றி
    அதிகளவு சுமையேற்றி
    பயிற்றுவிக்கும் கல்வியினால்
    பள்ளிக் குழந்தைகளும்
    சிறகொடிந்தக் கிளியாகி
    சிரிப்பறியா விலங்காகி
    பெற்றோரின் ஆசிரியரின்
    பேராசைக்கு உட்பட்டு
    வதைக்கு ஆட்பட்டு
    வாடிப்போய் நிற்கின்றார்!
    அன்னைமொழி கொண்டு
    ஆங்கிலமொழி களைந்து
    அகிலத்தில் கோலோச்சும்
    அயல்நாடுக ளேராளம்!

    இதையே மனதிற்கொண்டு
    இனியேனும் குழந்தைகளைப்
    பாடாய்ப் படுத்தாமல்
    படிப்பின் சுமைக்குறைத்து
    பக்குவப்பட்ட நிலையுடனே
    பரந்த மனதுடனே
    நீதிநெறிகள் புகட்டி
    நற்பண்பு பலகொண்ட
    நல்லக் குழந்தைகளை
    நாளைய தலைமுறையை
    ஒழுக்கத்தில் சிறக்கும்படி
    ஒற்றுமை பேணும்படி
    உருவாக்கி உலகுக்களிப்போம்!
    உன்னத நிலையடைவோம்!

     -ஆ. செந்தில் குமார்.

  2. தேடு தேடு…

    சின்னப் பிள்ளைகள் மணலினிலே
    சிதறிய காசைத் தேடுதல்போல்,
    மின்னல் போலே மறைந்துவிடும்
    மிகவும் சிறிய வாழ்வினிலே,
    இன்னல் எவர்க்கும் செய்யாமல்
    இணைந்தே ஒன்றாய் வாழந்திடவே,
    அன்பைத் தேடு மனிதரிடம்
    அறிவைத் தேடிடு அகிலத்திலே…!

    -செண்பக ஜெகதீசன்…

  3. சின்னப் பசங்களா என்ன பண்றீங்கடா
    இன்னும் பள்ளிக் கூடம் போகலையா
    மண்ணைக் குமிச்சிப் பொய்மாளிகை கட்டவா
    எண்ணி இருக்கீங்க வாண்டுகளா!

    கட்டிடும் வீட்டைக் கடலலை வந்து
    கரைச்சிக் கொண்டோடிடும் தம்பிகளா
    கற்குமறிவை அழித்திட எந்தக்
    கடலலையாலும் முடியாதடா!

    எட்டுமறிவை இளமை இழந்திடில்
    நட்டம் பலவுண்டு நம்புங்கடா.
    விட்டு விட்டாலெங்கள் கல்வியை வீணில்
    விலைகொடுத்தாலும் கிடைக்காதடா!

    மண்ணைக் குவித்துப் பல் மாளிகை கட்டினும்
    வாழப் பொருந்துமோ வாண்டுகளா
    உண்ணவுணவும் உறையுளும் சேர்த்திட
    எண்ணத்தைக் கல்வியில் வையுங்கடா

    கற்பனைகூட்டிக் கடற்கரை மீதில் மண்
    கட்டிடம் கட்டுதல் இன்பமடா
    சொற்பமும் கல்வியில் அக்கறை யின்றியே
    சோம்பிடிலோ வரும் துன்பமடா

    கைப்பணி, சித்திரம், சிற்பமென்றே பல்
    கலைகள் பழகவும் வேண்டுமடா
    கற்பதிலும் நம் கவனமிருந்திடில்
    அற்புதமாகிடும் வாழ்க்கையடா

    எப்படியாச்சும் உம் கல்விக்கு முன்னிடம்
    என்றும் கொடுங்களெம் தம்பிகளா
    அப்புறம் ஓய்வில் அனைவரும் சேர்ந்து
    அடியுங்கள் லூட்டி அஃதின்பமடா.

  4. விளையாட்டுப் பருவம்:::::: இறைவன் வழங்கிய பிள்ளைப் பருவம்!
    கவலைகள் தெரியாத இனிய பருவம்!
    துள்ளித் திரிந்த இனிய தருணம்!
    விளையாடி மகிழ்ந்த வசந்த காலம்!
    மணலில் வீடு கட்டி மகிழ்ந்திருந்தோம்!
    கண்ணாமூச்சி விளையாடி களித்திருந்தோம்!
    இன்னும் எத்தனை, எத்தனை விளையாட்டு!
    ஓடிப் பிடிக்கும் விளையாட்டு!
    கபடி விளையாட்டு!
    பச்சைக் குதிரை தாண்டும் விளையாட்டு!
    கிளித்தட்டு விளையாட்டு!
    கல்லா, மண்ணா விளையாட்டு!
    பாடம் படித்த நேரம் குறைவு!
    விளையாடி மகிழ்ந்தது மனதிற்கு நிறைவு!
    இன்றோ அசையாத பதுமைகளாய் பிள்ளைகள்!
    பாதி நேரம் தொலைக்காட்சி!
    மீதி நேரம் கையில் அலை பேசி!
    நான் சொல்வதை கொஞ்சம் யோசி!
    ஆடாத மயிலை கண்டதுண்டா!
    பாடாத குயிலைப் பார்த்ததுண்டா!
    விளையாடாத பிள்ளைப் பருவமுண்டா!
    நீ ஒன்று சேர்ந்து விளையாடு!
    மனம் மகிழ்ந்து கொண்டாடு!

  5. மண் வீடு..! மனக்கோட்டை..!
    =======================

    மண்ணில் உழலுகின்ற பல்லுயிரிலே…மனிதர்களுக்குள்..
    .
    ……….மனதிலாசை பேராசை இல்லாதவர் உண்டோசொல்.?
    .
    மண்ணில் பிறந்தவரெலாம் பாவச்செயல் செய்தாலும்..
    .
    ……….மேலுலகுநரகுக்குச் செல்லாரெனச் சொல்ல முடியுமா.?
    .
    மண்ணில் பிறந்தமனித வுயிரொன்று இந்நிமிடம்வரை..
    .
    ……….மனதாலும் பாவம்செய்விலார் யாரெனக் கூறுவாயா.?
    .
    அண்டக் கோள்கள் தங்களுக்குள் சண்டையிட்டால்..
    .
    ……….உண்டிதான் கிடைக்குமா.? உலகம்தான் செழிக்குமா.?
    .
    .
    .
    .
    மண்ணுலகை ஆட்சிசெய்த மன்னனின் மனதிலெழும்..
    .
    ……….நல்லெண்ணம் எல்லாவற்றும் வெல்வதில்லையே ஏன்.?
    .
    மண்ணுலகு வாழ்வே நிரந்தரமென நிலையாய்நம்பும்..
    .
    ……….மாந்தர்களும் இவ்வுலகில் இல்லாமல் இல்லையேஏன்.?
    .
    பண்டுநாம் உணர்ந்தபல அனுபவங்களே நம்வாழ்வில்..
    .
    ……….பயன்கொடுக்கும்!எண்ணிநாம் செயல்படும் தருணமிது.!
    .
    மண்ணிலே மணல்வீடு கட்டியழிக்கும் செய்கைபோல..
    .
    ……….மனக்கோட்டை கட்டிநிறைவிலா வாழ்ந்திடல் தகுமோ.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *