திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 43

க. பாலசுப்பிரமணியன்

பற்றற்ற நிலைக்கு எப்படிச் செல்வது?

திருமூலர்

எல்லா உறவுகளையும் விலக்கிவிட்டு இறைவனோடு சிந்தனையால் ஒன்றாகி இருப்பது என்பது விரும்பத்தக்க ஒன்றுதான். ஆனால் ஒரு குடும்பத்தில் ஒரு சமூகத்தில் அங்கத்தினராக இருக்கின்ற நாம் எவ்வாறு அனைத்தையும் துறந்து வாழமுடியும்? உலகம் என்பது அனைத்து மக்களோடும் சேர்ந்து இருப்பது தானே என்ற எண்ணம் நமக்குள் எழுகின்றது. எல்லோராலும் உண்மையான துறவு என்ற நிலைக்குச் செல்லமுடியாது. அதற்கான அவசியமும் இல்லை. இறைவனை உணருவதற்கு நாம் இந்த சமூகத்தில் அங்கத்தினராக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், இந்த உறவுகளுக்குள் ஏற்படும் பற்றுக்களை ஆசாபாசங்களை நாம் அறிந்து கொண்டு அவைகளுக்கு அடிமையாகாமல் இருப்பது அவசியம். உறவுகள் அன்பை வளர்க்கவும் செய்யும். ஆனால் அதே உறவில் அளவற்ற பற்று வைத்துவிட்டால் அதுவே துன்பத்திற்கு அடிப்படையாக அமையவும் வாய்ப்புக்கள் உண்டு. அதனால்தான் முன்காலத்தில் நமது பெரியோர்கள் “தாமரையிலைத் தண்ணீர் போல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்கள்.

இந்த சம்சார வலைக்குள் விழுந்து துயரப்பட்ட பட்டினத்தாரோ இவ்வாறு புலம்புகின்றார்:

மெய்வாழ்வை நம்பி விரும்பிமிக வாழாமல்

பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே

 பெண்டுபிள்ளை தந்தைதாய் பிறவியுடன் சுற்றமிவை

உண்டென்று நம்பி யுடலழிந்தேன் பூரணமே

உறவு என்னும் பந்தத்தில் இருந்து ஆசைக்கு அடிமையாகி பிறப்பு-இறப்பு என்னும் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு படுகின்ற துயரை தனக்கே உரிய பாணியில் மாணிக்கவாசகர் கூறுகின்றார்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யே உன் பொன்னடிக் கண்டின்று வீடுற்றேன்

இந்தத் துயரை நாம் வள்ளலாரிடமும் காண்கின்றோம்.

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன

தான்பிறவி யுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

தாரணியை யாண்டுமென்ன …

…,,,,,,,,,,,,,,

யார் மீது உன்மன மிருந்தாலு முன்கடைக்

கண்பார்வை யது போதுமே…

இதனை அறிந்தபின்பும் கூட நாம் வாழ்க்கை என்ற மாயச்சக்கரத்தில் விழுந்து ‘எனக்கு இது வேண்டும் அது வேண்டும்” என்றும் “இது இல்லாமல் நான் எப்படி உயிர் வாழ்வது’ என்பது போன்ற தவறான கருத்துக்களை வாழ்க்கைக்கு முதலீடாக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் ப்பாடல்

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண்ணாடி

நினைப்பின் அதனில் நிழலையும் காணார்

வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்

புறக்கடை இச்சித்து போகின்ற வாறே

மனப் பக்குவம் அடையாதவருக்கு நமது மனம் ஒரு மாயக்கண்ணாடியாகத் தான் விளங்கும். இந்த மாயையை அறிந்துகொள்வதும், அதன் நிழலிலிருந்தும் விடுபட்டிருப்பதும்தான் வாழ்க்கையின் சீரிய நோக்கம்

இந்த உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த, உறவு சார்ந்த  மாயப் பற்றினை அறிந்திட   முயற்சித்தல் மிக்க அவசியம். பற்றற்றவர்களாகத் திரிந்த ஞானியர்கள் யோகிகள் இந்தக் கருத்தைப் பின்பற்றியது மட்டுமின்றி அதே குறிக்கோளுடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு இருந்த ஒரே பற்று இறைவனின் திருவடி ஒன்றுதான். இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்

கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்

சுற்றற் றவர்சுற்றி நின்றாய் சோதியைப்

பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரன்றே

இந்தப் பற்றற்ற நிலையை அடைவதற்கு அந்த இறைவனின் தாள்களையே சரணடைய வேண்டும். இந்தக் கருத்தை வள்ளுவரும் அழகாக வலியுறுத்துகின்றார்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

ஆனால் நிஜ வாழ்க்கையில் பலர் பற்றற்றவர்கள் போல் நடித்து உள்ளத்தில் பற்றுக்களை பேணிக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் வருகின்றனர். இதைவிடக் கொடிய செயல் ஒன்றுமில்லை என்பது வள்ளுவர் கருத்து

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணா ரில்

பற்றற்ற நிலையை அடைவதற்கு இறைவன் அருள் தேவைப்படுகின்றது. ஆனால் இறைவனிடம் நம்பி சரணடைந்தால் நமக்கு அவனுடைய பரவச நிலையின் அடையாளம் தெரிகின்றது. அந்தப் பரவச நிலையை நம்மிடையே மாணிக்க வாசகர் தெளிவாக்குகின்றார்

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

தனிச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை

எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை

அனைத்துலகத் தொழுந்தில்லை  அம்பலத்தே கண்டனே …

(தொடருவோம்)

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 413 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.