மாணிக்கவாசகரின் பக்தி

ஒரு அரிசோனன்

 

Image result for சைவ குரவர்

சைவக் குருமார் நால்வரின் பக்தி நோக்கு:

சிவபெருமானின்மீது சைவக் குருமார் நால்வரும் நான்குவிதமாகப் பக்திசெலுத்தினார்கள்.  சிவபெருமானைத் தந்தையாக எண்ணிய திருஞானசம்பந்தர் அவ்விதமாகவே அவர் இயற்றிய தேனினுமினிய தேவாரப் பாக்களில் தன்னுடைய பக்திப் பரவசத்தை வெளிப்படுத்தினார்.  பெரும்பாலான பாடல்களில் சிவபெருமானையும், உமையவளையும் தனது தாய்தந்தையராகவே ஏத்தி உயர்த்துகிறார்.  தந்தையால் குளக்கரையில் தனித்துவிடப்பட்டு, ஏங்கியழுதபோது, உலகத்தாய் பார்வதி கருணைகொண்டு அவருக்கு ஞானப்பாலைப் புகட்டியது அவரைச் செல்லப் பிள்ளையாக்கியதுடன் காழிப்பிள்ளையார் என்ற சிறப்புப் பட்டத்தையும் தேடித்தந்தது போலும்!

சுந்தரமூர்த்தி நாயனாரோ சிவபிரானைத் தமது தோழனாகவே கருதினார்.  அந்தத் தோழமையே எம்பெருமானைப் பித்தா என்று அழைக்கவும், பரவை நாச்சியாருக்கு தன்னுடைய காதலை எடுத்துச்சொல்ல ஒரு தூதுவனாகவும் அனுப்பவும் வைத்தது. எனவே, அவர் தம்பிரான் தோழர்[1] என்ற தனிச் சிறப்பையும் பெற்றார்.  மேலும், அவரது தேவாரப் பாக்கள் அவர் சிவபிரானின்மீது எடுத்துக்கொண்டிருக்கும் உரிமையை உள்ளங்கனி நெல்லிக்காயாக்குகின்றன.

நீலகண்டப் பெருமானின் பணியாளராகவே பக்திசெலுத்தினார், நாவுகரசரான அப்பர் பெருமான்.  பெருமான் தரிசனத்திற்கு வரும் அடியார்களின் கால்களின் குத்தாமலிருக்கவேண்டும் என்று கோவில் பிரகாரங்களில் இருக்கும் முட்களைக் களைய எப்பொழுதும் தன் கையில் உழவாரத்தை ஏந்தி உழவாரப் பணிசெய்து சிறந்தவர் அவர்[2].  இந்த மனப்பாங்கு அவருடைய மிகவும் புகழ்பெற்ற, “தன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணிசெய்து கிடப்பதே,”[3] என்னும் வரிகள் எம்பெருமானிடம் எப்படிப்பட்ட பக்திநிலையைக் கொண்டிருந்தார் என்று காட்டுகிறது.

இருப்பினும், திருவாதவூரார் மாணிக்கவாசகருக்கும் சிவபெருமானுக்கும் இடையே உள்ள உறவு முற்றிலும் வேறாகவே வெளிப்படுகிறது.  அன்பிற்சிறந்த அப்பனுக்கும், வழிதவறிய மகனுக்கும் உள்ள அன்புப் பிணைப்பாகவே அது வெளிப்படுகிறது. அதை அவர் தனது திருவாசகத்தில் பலவிடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.  சிவபுராணத்தில், நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே[4],” என்பது தம்மைத் தாழ்த்திக்கொண்ட மனப்பாங்கையும், சிவபெருமான் தாயைவிடக் கருணைகொண்டு அருளி ஆட்கொண்டார் என்றும் தெளிவுபடுத்துகிறார். அதுவே, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து,” என்று அவர் ஈசனைத் துதிப்பதிலிருந்து தெரிகிறது.

இவண், நாம் மாணிக்கவாசகரின் பக்திப் பெருக்கையும், அவர் நமக்குத் தெரிவிக்கும் அறிவுரையையும் அறிந்துகொள்ள முயல்வோம்.

சிவனின் கருணையைப் பெறும் வழி:

தினந்தோறும் கடவுளர்பால் நாம் பக்திப்பாடல்கள் பலவற்றை முணுமுணுக்கிறோம்.  இப்படிச் செய்வது நமக்கு இறைவனின் அருளைப் பெற்றுத் தருமா?  வாழ்வு முடிந்ததும் நம்மால் அவர்களின் இருப்பிடத்தை எட்ட இயலுமா? சிவலோகத்தை அடைந்து முக்திபெறும் வழி என்ன? மாணிக்கவாசகர் அதற்கான வழியைக் காட்டுகிறார்:

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்

பல்லோருமேத்தப் பணிந்து[5].        — சிவபுராணம்: 93-95

சிவபுராணத்தில் அவர் செப்பிச்சென்ற மூன்று வரிகளும் இறைவனைத் துதிப்பதைப் பற்றிய நமது பல குருட்டுநம்பிக்கைகளை அடியோடு புரட்டிப் போட்டுவிடுகின்றன.  கிளிப்பிள்ளைபோல சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்வதனால் பயனேதுமில்லை என்பதே அவரது கருத்து.  ஒரு டேப் ரிகார்டரோ, ஐபாடோ, டாப்லெட்டோ, சி.டி. பிளேயரோ நம்மைவிடச் சிற்ப்பாக துதிப்பாடல்களைப் பிழையேதுமின்றிப் பல்லாயிரம்முறை சொல்லும் திறன்படைத்தவை. பொருளறியாமல் சொல்லும் அவற்றிற்குக் கிடைக்காத முக்தியா, பிழையுடன் பொருளறியாது சொல்லும் நமக்குக் கிட்டிவிடும்?

 எப்படிப்பட்ட பாடல்களாலும், சுலோகங்களாலும், வேதமந்திரங்களாலும் நாம் சிவபெருமானைத் துதித்துப் புகழ்ந்தாலும், அவற்றின் பொருளை — அவை என்ன சொல்லுகின்றன என்பதின் அர்த்தத்தை — அவை சொல்லும் இறையுணர்வை — அறிந்து உணருவதுதான் சிவலோகம் செல்லச் சிறந்த வழி என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்லுகிறார்.  எப்பொழுது நாம் நமது துதிப்பாடல்களின் பொருளையும், அதனுள்ளிலிருக்கும் இறை உணர்வையும் அறிந்து மெழுகாய் உருகிநிற்கிறோமோ, அப்பொழுதே நமது துதி ஈசனைச் சென்றடைந்து அவனது கருணையை நம்பால் திருப்பிவிடுகின்றது என்று அறிவிக்கிறார்.

எப்படிப்பட்ட சீர்திருத்தவாதியாக இருந்தால் அவரால் இப்படி வழிகாட்டமுடியும்!

அவரின் அறிவியல் திறன்:

எப்படிப்பட்ட விஞ்ஞான அறிவையும், கண்டுபிடிப்பையும் மேலைநாட்டாருக்கே தத்தம்செய்வதுதான் நம்முடைய தியாக உணர்வுக்குச் சான்றாக இருந்துவருகிறது.  சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் அவர்கள் சொல்லும் எதையும் நாம் வேதவாக்காக அல்ல, அதற்கும் மேலாகவே எடுத்துக்கொள்கிறோம்.  ஆராய்ந்து நோக்கினால் உண்மை அதுவல்ல என்று உணரலாம்.  பள்ளிகளில் கற்பிக்கப்படும் பரிணாம வளர்ச்சிக் கொள்கை [The theory of evolution]’ சார்லஸ் டார்வினால் உருவாக்கப்பட்டது என்றே மாணவருக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இக்கொள்கை டார்வினுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்தி ளைத்தேன் எம்பெருமான்[6]                        சிவபுராணம்– 26-31

Image result for டார்வின்

உயிரினங்கள் மனிதராவதுவரைக்கும்தான் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை டார்வின் எடுத்துரைக்கிறார்.  ஆயினும், மாணிக்கவாசகரோ, மனித வளர்ச்சியையும் தாண்டி, ஆவியுலகத்து உயிர்களையும், விண்ணுலக, பாதாள உலக — மண், விண் இரண்டிலும் வசிக்கக்கூடிய, கண்ணுக்குப் புலப்படாத தேவர்களையும் பரிணாம வளர்ச்சியில் சேர்த்துவிடுகிறார்.  அவர் வரிசைப்படுத்தியிருப்பதும் மனித இனம்வரை டார்வினை ஒத்ததாகவே அமைந்துள்ளது.  இந்த அறிவு அவருக்கு இல்லாதிருந்தால் எப்படிக் கோர்வையாக எடுத்தெழுதியிருக்க இயலும்?

மேலும், உலகம் உருண்டை என்பதைக் கலீலியோ கலிலி [Galileo Galilei] என்ற இத்தாலிய விஞ்ஞானிதான் கண்டுபிடித்தார் என்றும், அதுவரை உலகமக்கள் உலகம் தட்டையாக இருந்தது என்றும் நினைத்தனர் என்றும் நமக்குச் சொல்லித்தரப்படுகிறது.  இது உண்மையல்ல, சைவத் தமிழ் குரவரான மாணிக்கவாசகர் அதை எழுதிவைத்துவிட்டார் என்றும் திருவாசகத்திலுள்ள திருவண்டப்பகுதியில் காணலாம்:

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்ப ரும்தன்மை வளப்பெரும் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறியவாகப் பெரியோன்; — 1-6

இந்த அண்டமானது உருண்டைகளான உலகங்களால் ஆனது, அவை அளவிடமுடியாதவை, மிகவும் அழகாகத் தோன்றுபவை, அவற்றின் அழகினை ஒவ்வொன்றாக ஒப்பிட்டு விவரித்தால், அவை நூறுகோடிக்கும் மேலாக [எண்ணவியலாத அளவுக்கு அதிகமானவை] விரிந்து பரந்திருக்கின்றன, கூரையிலுள்ள சிறு ஓட்டை மூலம் வீட்டுக்குள்ளே  நுழையும் சூரிய ஒளிக்கற்றையில் தெரியும் துகள்களுடன் அவற்றை ஒப்பிடலாம்.  பரம்பொருளான சிவனோ இவை அனைத்தையும்விடப் பெரியவன் என்று சிவபெருமானின் பெருமையை நமக்கு எடுத்து இயம்பும்போது தனது வானவியல் அறிவையும் அழகாக எடுத்துணர்த்துகிறார்.

maxresdefault

சிவபெருமான் எவ்வளவு பெரியவர் என்பதை நமது கோணத்திலிருந்து நமக்கு விளக்கமுனைகிறார்.  அவர் விவரித்திருக்கும் அண்டம், அதனுள் அடங்கியிருக்கும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அவற்றின் எண்ணிக்கைகள் அனைத்தையும் விஞ்ஞானிகளும் விவரித்திருக்கிறார்கள் என்பதை நாமும் அறிவோம்.  நாம் புகழ்ந்துரைக்கும் மேலைநாட்டோர் உலகம் தட்டையானது, அதை யாராவது எதிர்த்துப் பேசினால், கம்பத்தில் கட்டிக் கொளுத்துவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது அனைத்து உலகங்களும், விண்மீன்களும் உருண்டையானவை, அவை எண்ணிலடங்கா என்று எதற்கும் கவலைப்படாது மணிவாசகர் எயிற்றியிருப்பதைக் கண்ணுறும்போது நம்மால் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

அடுத்து, அவரது மருத்தவ அறிவைப் பற்றிக் காண்போம்.  ஒரு கரு தாயின் கருப்பையில் எப்படி வளர்கிறது, அது வளரும்போது எப்படிப்பட்ட ஆபத்துகளைச் சந்தித்து, தாண்டித் தப்பிப் பிழைத்துப் பிறப்பெடுக்கிறது, எப்படிப்பட்ட வேதனைகளை அது அனுபவிக்கிறது என்பதையும் போற்றித் திருவகலில் விளக்குகிறார்.

யானை முதலா எறும்பு ஈறாய

ஊனமில் யோனியில் உண்வினை பிழைத்தும்

மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்(து)

ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்

இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்

மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்

ஈர்இரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்

ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்

எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்

தக்க தசமதி தாயொடு தான்படும்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்                                 போற்றித் திருவகலல்11-25

மிகப்பெரிய யானையாக இருந்தாலும், மிகச்சிறிய எறும்பாக இருந்தாலும், குறையில்லாத கருப்பையில்தான் கரு வளரமுடியும்;  அப்படி வளரத் துவங்கினாலும் அக்கரு கருப்பையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கிருமிகளிடமிருந்து தப்பிப் பிழைத்தால்தான் முழுவளர்ச்சி அடையமுடியும். இதை முதலில் சொல்லிவிட்டு, மாணிக்கவாசகர் மனிதத்தாயின் வயிற்றிலிருக்கும் கருப்பையில் எந்த அளவுக்குக் கரு வளர்க்கிறது, அது எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், வேதனைகளையும் சந்திக்கிறது என்பதை மாதவாரியாகப் பட்டியலிடுகிறார்:

தாயின் கருப்பையிலிருக்கும் முட்டையில் தந்தையின் விநது சேர்ந்து தனது வளர்ச்சியைத் துவங்கும் கரு கிருமிகளிடமிருந்து தப்பித்து, முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவே பெரிதாகிறது.  அது இரண்டாகப் பிளக்காமல் தப்பவேண்டும்.  அப்படி இரண்டாகப் பிளக்காமல் ஒன்றாக இருப்பினும், இரண்டாம் மாதவளர்ச்சியின்போது இடைவிடாத எதிர்ப்புகளிலிருந்து தப்பவேண்டும்.  மூன்றாம் மாதம் கொழுப்பு கலந்த நிணனீரில் முழுகி இறப்பதிலிருந்து தப்பவேண்டும்.  நாங்காம் மாதம் கூரிருட்டில் நிலைகுலையாது இருக்கவேண்டும்.  ஐந்தாம் மாதம் கருப்பையில் அதிகமாகச் சுரக்கும் நீரில் முழுகாமல் பிழைக்கவேண்டும்.  ஆறாம் மாதம் தாங்கமுடியாத உறுத்தலுக்கும் எரிச்சலுக்கும் பலியாகாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும்.   ஏழாம் மாதம் கனத்தால் கீழிறங்கும் தாயில் வயிற்றிலிருந்து நழுவிவிழாமல் தப்பவேண்டும்.  எட்டாம் மாதத்தில் எப்பொழுதும் கருப்பை தன்னைச் சுற்றி அழுத்தும் வலியைப் பொறுத்துக்கொள்ளவேண்டும். ஒன்பதாம் மாதத்திலேயே பிறந்துவிடாமலிருப்பதால் ஏற்படும் வலியைத் தாங்கவேண்டும்.  பத்தாம் மாதத்தில் பிரசவத்தில் வெளிவரும்போது தாயுடன் வேதனைப் பெருங்கடலில் நீந்தி வெளிவருவதோடு மட்டுமல்லாமல் இறப்பாய்யும் ஏமாற்றிப் பிழைக்கவேண்டும்.

மனிதக் கருவுக்கு ஏற்படும் இத்தனை சோதனைகளையும், வேதனைகளையும் மாணிக்கவாசகர் விவரிக்கும்போது — பிரசவத்தில் ஒரு தாய்படும் வேதனையை, வலியை அறிந்து போற்றும் நாம், ஒரு கருவும் எப்படிப்பட்ட வேதனையும், கண்டங்களையும், வலியையும் பொறுத்து வெளிவருகிறது என்பதை அறியாமல்தான் இருந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொண்டு, அச்சிசுவின் பெருமையை உணர்கிறோம்.

ஒரு சிசு தனது வேதனைகளை எடுத்துச் சொல்ல இயலாததால் பத்து மாதங்களும் அது தாயின் வயிற்றில் சுகமாக வாழ்கிறது என்று நாம் எண்ணக்கூடாது என்பதை மாணிக்கவாசகரின் மருத்துவ அறிவு தெளிவுபடுத்துகிறது. மேலே கொடுத்துள்ள இந்த விளக்கம் மருத்துவர்கள் அறிந்ததே.  மணிவாசகர் ஒப்பிலாச் சிவனடியார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அவர் பக்தியைத் தவிர வேறொன்றும் அறியாதவர் என்று நாம் எண்ணக்கூடாது என்பது அவரது பாடல்களில் தெரிகின்றது.

கவி வன்மை:

திருவாதவூராரின் செய்யுள்களையும் பாக்களையும் படித்துக் கற்கும்போது அவற்றின் பலதரப்பட்ட சுவைகளையும், கவிதையமைப்புகளையும், சொல்லும் திறமையையும் கண்டு நம்மால் வியக்காமல் இருக்கமுடிவதில்லை.  அவர் ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் போன்று பல அமைப்புகளில் தமது செய்யுள்களையும், பாக்களையும் வடிவமைத்துள்ளார்.

அவரது பாடல்கள் நம் இதயத்தில் அடிப்பகுதியில் ஆழத்தில் பதிந்து நிற்பதோடு மட்டுமல்லாமல், நமது உள்ளத்தை உருக்கி, நம் அகந்தையையும் அழிக்கின்றன.  இதனாலேயே, ‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்ற அடைமொழியும் உருவாயிற்று போலும்!

பலமுறை தன்னை ‘நாயினும் கடையேன்’ என்று தாழ்த்திக்கொள்கிறார், திருவாதவூரார்.  இப்படிப்பட்ட தன்னடக்கமே நமது இதயத்தைக் கொள்ளைகொண்டுவிடுகிறது.

சிவபுராணத்தில் அவர் சிவபெருமானின் ஆதியும் அந்தமும் இல்லாத பழமைத் தன்மையையும், பெருமைகளையும், குணநலங்களையும் தமிழில் வேதமாக ஓதி உணர்த்துகிறார்.

கீர்த்தித் திரு அகவலில் தமிழ்நாட்டிலிருக்கும் பல சிவத்தலங்களை எண்ணிக்கையிட்டு, அவற்றின் தலபுராணச் சுருக்கத்தையும் கொடுத்து, தமது வாழ்க்கையைப்பற்றியும் சிறிய விவரிப்பைத் தருகிறார்.  அச்சமயம் சிவபெருமானின் மகிமையை உயர்த்தவும் தவறாமலிருப்பதே அவரது சிறப்பு.  இந்தச் செய்யுள் தொகுப்பில் தமது வழிதவறிய நடத்தையையும், சிவபெருமான் கருணையையுடன் மௌனகுருவாகத் தன்னைத் தடுத்தாட்கொண்ட சீர்மையையும் செப்புகிறார்.

திருவண்டப் பகுதியில் சிவபெருமானின் பெருஞ்சிறப்பையும், அவர் நாமிருக்கும் மாபெரும் அண்டத்தைவிடப் பெரியவர் என்ற பேருண்மையையும் முன்னுக்குக் கொணர்கிறார்.

மரகதத் திருவுருவமாக ஆடுங்கோலத்தில் கோவிலில் குடிகொண்டிருக்கும் உத்தரகோசமங்கை மூதூரின் மன்னனான சிவபெருமானிடம் தன் உலகப்பற்றுகள் அனைத்தையும் நீக்கித் தன்னை அவன் திருவடியில் சேர்த்துக்கொள்ளும்படி அழுது முறையிடுகிறார், தமது நீத்தல் விண்ணப்பம் செய்யுள் கோர்வையில்.

மார்கழி மாதந்தோறும் காலையில் பாடும் இருபது திருவெம்பாவைப் பாடல்களை நோக்குவோம்.  தூங்கும் தமது தோழியரை எழுப்பி, நீராடி, தமக்கு வாய்க்கும் கணவர் எப்படியிருக்கவேண்டும், தாம் எப்படிப்பட்டவருடன் பழகவேண்டும், எப்படிப்பட்ட குணநலன்கள் தமக்கு இருக்கவேண்டும் என்று சொல்வதைக் கவின் நயத்துடன் உரைத்து, தாம் தொழப்போகும் சிவபெருமானின் அருமைபெருமைகளைப் புகழும் இளம்பெண்டிராகவே அக்கவிதைகளில் மாறிவிடுகிறார்.

இதே கவிதை லயத்திலேயே – என்றுமே இமைமூடாத முக்கண்ணனின் சிறப்பைப் பாடி, அவனைத் துயில்நீக்கமுயலும் தாயாகவே திருப்பள்ளியைழுச்சியில் மாறுகிறார்.  கோவிலில் அவனது காலைத் தரிசனத்திற்காக்கக் காத்திருக்கும் அடியார்களைப்பற்றியும், அவர்களின் கோலத்தையும், இயற்கையின் எழிலைப்பற்றியும் பாடிப் பரவசமடைந்து நம்மையும் பரவசப்படுத்துகிறார்.

நாம் அவரது கவித்திறனைப் பற்றி எழுத ஒரு பெரிய புத்தகமே போதாது.

ஒவ்வொரு இந்துவும், அவரது தாய்மொழி எதுவாக இருப்பினும், மாணிக்கவாசகரின் மணிமணியான சொற்களைத் தன்னுள் கொண்டிருக்கும் திருவாசகத்தின் சில பாடல்களையாவது கற்று, அவற்றின் உட்பொருளை அறிந்துணர்ந்து, இறையுணர்வைப்பெற்று, சிவபெருமானைத் துதிக்கவேண்டும்.  இந்துவல்லாத மற்ற தமிழரும், அவரது கவிதைச் சுவைக்காகவாவது உள்ளமுருக்கும் திருவாசகத்தைப் படித்தறியவேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி1 எந்நாட்டவற்கும் இறைவா போற்றி!! போற்றி, போற்றி!!!!

***

நூல் உதவி:

  1. திருவாசகம் – மூலமும் உரையும், கா. சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகம், 1997
  2. திருவாசகம் – மூலமும் உரையும், சுவாமி சித்பவானந்தா, ராமகிருஷ்ண மடம் வெளியீடு.

[1]    Sundarar:  http://www.skandagurunatha.org/deities/siva/nayanars/63.asp

[2]   Thirunavukkarasar Darisanam:  https://www.dharisanam.com/pages/thirunavukkarasar-appar

[3]   அப்பர் தேவாரம்.

[4]   மாணிக்கவாசகரின் திருவாசகம்:  சிவபுராணம் வரிகள்: 60-61

[5]   Ebid. வரிகள்: 93-95

[6]   Ebid. வரிகள்:26-31

Share

About the Author

has written 27 stories on this site.

அமெரிக்கா வாழ் தமிழன்; பொறியாளன்; எழுத முயற்சி செய்கிறேன்.

One Comment on “மாணிக்கவாசகரின் பக்தி”

  • Raju Rajendran wrote on 20 January, 2018, 0:33

    தமிழர்கள் (அல்லது இந்தியர்கள்) உலகம் தட்டை என்று கருதாததால் அது உருண்டை என்பதை வலியுறுத்தவில்லையே ஒழிய உலகம் உண்டை என்றே கருதினர்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.