க.பாலசுப்பிரமணியன்

இறைவனை அடைய எந்த வழி சிறந்தது ?

திருமூலர்-1-3

பற்றற்ற நிலையை அடைய மனம் எவ்வளவோ துடிக்கின்றது. ஆனால் முடியவில்லையே. எவ்வளவோ முயற்சி செய்தும் ‘மனம் ஒரு குரங்கு’ என்ற மொழிக்கேற்ப நமது மனம் மீண்டும் மீண்டும் தேவையற்ற சிந்தனைகளில் அடைக்கலம் கொள்ளுவதேன்? இதை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? மனதை ஒருநிலைப் படுத்த எந்த விதமான யோகத்தை அல்லது பயிற்சியை  நாம் பின்பற்றலாம்? மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறந்த வழியென்ன? கீதையில் கண்ணன் கூறிய மூன்று வழிகளான – அறிவுப் பாதை (ஞான யோகம்)  செயல் பாதை (கர்ம யோகம்) மற்றும் பக்திப் பாதையில் சிறந்து எது? இப்படிப்பட்ட பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.

இந்தக் கேள்விகளால் துயரத்தில் வீழ்ந்த பட்டினத்தாரோ இவ்வாறு சொல்லி வருந்துகின்றார் :

வாயார வாழ்த்தி மகிழ்ந்துன்னைதான் போற்றாமல்

காய மெடுத்துக் கலங்கினேன் பூரணமே.

இதே துயர் நிலையை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம்

பலவிடத்தே மனதை பாயவிட்டுப் பாராமல்

நிலவரையி னூடேபோய் நேர்படுவதெக்காலம் ?

இவ்வாறு பலவிதமாக துயரப்பட்ட அடியார்களில் சிலர் ஞான மார்க்கத்தையும் சிலர் கர்ம யோகத்தையும் சிலர் பக்திப் பாதையைம் பின்பற்றி அந்தப் பேரறிவாளனை அறிந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர். எந்த முறையாக இருந்தாலும் சரி முழுவதுமாக அவனிடம் சரணடைந்து நம்முடைய ஆணவ மலத்தை விலக்கிநின்றால் அவனுடையதரிசனம் நிச்சயமாகக் கிடைக்கும். அவன்காட்டும் ஒளியும் நமக்குத் தென்படும்.

திருமூலர் கூறுகின்றார் :

காண்டற்கு அறியான் கருத்திலன் நந்தியும்

தீண்டற்கு சார்தற்கும் சேயெனத் தோன்றிடும்

வேண்டிக் கிடந்து விளக்கொளியான் நெஞ்சம்

ஈண்டிக் கிடந்தது அங்கு இருள் அறும் ஆமே.

ஒளிப்பிழம்பாய் உள்ளத்துள் வருகின்ற அந்த இறைவனை மனதில் ஏற்று உள்ளே  நிறுத்தி பக்தியுடன் போற்றினால் அவனுடைய அருளுக்குத்  தடையேது? அதனால்தான் அடியார்களெல்லாம் அவன் தங்களுடைய மனத்தை விட்டு விலகாத்திருக்கவும் அவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினர். இதே கோரிக்கையை திருநாவுக்கரசர் இறைவன் முன் வைக்கின்றார்‘

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா

உன்அடி என்மனத்தே

வழுவாதிருக்க வரம் தர வேண்டும்

இவ்வையகத்தே.

தன்னுடைய பதவி பொருள் அத்தனையும் ஒதுக்கித்த தள்ளி  ஊரார்கள் கேலிக்கு ஆளாகி இருந்தும் இறைவனை மட்டும் மனதில் நிறுத்தி அந்தப் பரவச நிலையில் தன்னையே மறந்த மாணிக்க வாசகர் கூறுவதென்ன?

உத்தமன் அத்தன் உடையான்

அடியே நினைந்து உருகி

மத்த மனதோடு மால் இவன்

என்ன மன நிலையில்

ஒத்தன ஒத்தன சொல்லிட

ஊர் ஊர் திரிந்து எவரும்

தம் தம் மனத்தன பேச

எஞ்ஞானறுகொல் சாவதுவே

ஞான மார்கத்திலோ, பக்தி மார்கத்திலோ அல்லது கர்மவழியிலோ நம் சிந்தையை நிறுத்தி நாம் செயல்பட்டாலும் பல நேரங்களில் அறிந்து அறியாமலும் தவறுகள் செய்கின்றோம். ஆணவ மலத்தில் சிக்கி “நாம்” என்ற மாயையில் நமது சிந்தனையும் தவமும் சிதறிப் போகின்றது. ஆகவே, இதையெல்லாம் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கின்றானா? நமக்கு நியாயமும் அருளும் முழுதாகக் கிடைக்குமா ? அது எவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்கும் என்று மனம் சந்தேகிக்கின்றது. இதற்கு விடையளிப்பது போல் அமைந்துள்ளது திருநாவுக்கரசரின் கீழ்கண்ட பாடல்,

தொழுது தூமலர் தூவி துதித்து நின்று

அழுது காமுற்று அரற்றி நின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

அவனுடைய அருள் நமக்குக் கோவிலில் கிடைக்குமா? குன்றத்திலே கிடைக்குமா? குளங்களில் நீராடி கொய்தமலர் தூவிப் போற்றிடவே கிடைக்குமா? ஊழ்வினையால் வறுமையில் அவதிப்படுவோருக்கு உதவுவதில் கிடைக்குமா? அத்தனையும் துறந்து காட்டிலே கண்மூடி அமர்ந்தால் கிடைக்குமா? தெளிவு வேண்டுமே .. எங்கு செல்ல?

திருமூலர் எங்கெல்லாம் இறைவனைக் கண்டார்? இறைவன் அவருக்கு எப்படியெல்லாம் தரிசனம் தந்தான்? இதற்கு அவரே சொல்லும் பதில் நம்மை உண்மையில் சிந்திக்க வைக்கும்.

பூதக்  கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்

வேதக் கண்ணாடியில் வேறே வெளிப்படும்

நீதிக்கண் நாடி நினைவார் மனத்துளன்

கீதக் கண்ணாடியில் கேட்டு நின்றேனே

(தொடருவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *