க. பாலசுப்பிரமணியன்

வீட்டில் வளரும் நம்பிக்கையின் உத்தரவாதங்கள்

வாழ்ந்து-பார்க்கலாமே-1-1-1

வாழ்க்கை என்பது என்ன? அதைப் பற்றி எந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது? அதற்கான விளக்கங்களை எங்கே நாம் பெறலாம்? அப்படி மற்றவர்களால் எழுதப்பட்ட வாழ்க்கை முறைகள் நமக்குப் பயனுள்ளதாக இருக்குமா? அவ்வாறு படித்தவை நமக்கு வாழத் துணிவும் தன்னம்பிக்கையும் கொடுக்குமா? “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?” என்பது வழக்குமொழி. எனவே ஏட்டுக்கல்வி வாழ்க்கைப் பயணத்திற்கு உதவுமா?

உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லான் அறிவிலாதான் 

என்று வள்ளுவன் கூறினானே! அப்படியென்றால் உண்மையான அறிவு கல்விச்சாலைகளில் கிடைக்கிறதா அல்லது வாழ்க்கைச் சாலையில் கிடைக்கிறதா? என்றெல்லாம் பல கேள்விகள் நம் மனத்தை அவ்வப்போது துளைத்துக்கொண்டிருக்கின்றன.

“கல்வி என்பது ஒரு தனிமனிதனை வாழ்க்கைக்குத் தயார் செய்வதே” என்று ஒரு கருத்தும் “கல்வியே வாழ்க்கையின் பயிற்சிதான்” என்று ஒரு வாதமும் இருக்கின்றன. வீட்டிலும் வெளியிலும் கல்விக்கான கற்றலுக்கான ஏணிப்படிகள் இருக்கின்றன. கல்வி என்பது வெறும் புள்ளிவிவரங்களையோ அல்லது சரித்திர நுணுக்கங்களையோ அல்லது அறிவியல் கண்டிபிடிப்புக்களின் பயன்களையோ கற்றுக்கொள்ளுவது மட்டும் அல்ல.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகக் கல்வியின் போக்கும் நடைமுறையும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி யுனெஸ்கோ (Unesco) நிறுவனம் உலகளாவிய குழு அமைத்து பிரெஞ்சு முன்னாள் அமைச்சர் திரு ஜாக்கஸ் டெல்லோர்ஸ் (Dr. Jacques Dellorss) என்பவர் தலைமையில் பரிந்துரை செய்தது.  இந்தியாவின் தரப்பில் ஒரு மிகச் சிறந்த கல்வியாளரும் மேதையுமான ஜம்மு காஷ்மீரின் முன்னாள் அரசர் டாக்டர் கரன்சிங் (Dr. Karan Singh) அதில் பங்கேற்றார். அந்தக் குழு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கல்வி நடைமுறைக்கான நால்வழிப் பாதையை முன் வைத்தது.  அவை:

  1. அறிவுக்காகக் கற்றல் (Learning to Know)
  2. செயலுக்காகக் கற்றல் (Learning to Do)
  3. கூடிவாழ்வதற்க்காகக் கற்றல் (Learning to Live together)
  4. தன்னிறைவுக்காகக் கற்றல் (Learning to Be)

இந்த நான்குமே வாழ்க்கையின் முழுமைக்கும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதவை. இவைகளை ஒரு குழந்தையின் இளம் பிரயாத்திலிருந்தே வீடுகளில் வாழ்க்கை வழிகளோடும் முறைகளோடும் இணைத்து சொல்லிக்கொடுத்தல் அவசியமாகின்றது. “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்பது வெறும் வழக்குமொழி அல்ல. மூளை வளர்ச்சிகளின் ஆராய்ச்சிகளில் இளம் வயதில் கற்றலிலும் அனுபவங்கள் மூலமாகவும் உணர்ச்சிபூர்வமான செயற்பாடுகள் மூலமாகவும் பதிவு செய்யப்படுகின்ற கற்றல்கள் எவ்வாறு வாழ்வு முழுவதும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று விளக்கப்பட்டும் உறுதிசெய்யப்பட்டும் இருக்கின்றது.

சிறுபிள்ளைப் பருவத்தில் என்னுடைய பாட்டி மற்றும் வீட்டில் இருந்த பெரியவர்கள் கூறிய கதைகள், அனுபவச் சொற்கள், நிகழ்வுகள் வாழ்க்கையை வளப்படுத்த வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள உதவி செய்துள்ளன என்று நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. இன்று சிந்திக்கும் திறன்கள் பற்றி வெளிவந்துள்ள பல ஆய்வுகள் –  பக்கவாட்டுச் சிந்தனை, (Lateral Thinking) ஆய்வுச் சிந்தனை,(Analytical Thinking) நுண்ணறிவுச் சிந்தனை (Critical thinking) மற்றும் இணைச் சிந்தனை  (Parallel Thinking)- போன்ற பல சிந்தனைத் திறன்கள் விளையாட்டாகக் கதைகள் மூலமாகவும், விடுகதைகள் மூலமாவும், கூட்டு விளையாட்டுக்கள் மூலமாகவும் வளர்க்கப்பட்டன. அன்று குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்ட  தெனாலி ராமன் கதைகள், பீர்பல் கதைகள், மரியாதை ராமன் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள் போன்ற பல அவர்களை சிந்திக்கவும் வழிப்படுத்தவும் உதவின. வாழ்க்கையை சந்திப்பதற்கான கருத்துக்களை அள்ளித் தந்தன. வாழ்க்கை வாழ்வதற்கே என்றும், வாழ்வில் தோல்விகளை சந்திக்காத தயங்கக்கூடாது என்றும்,  எழுந்து நில், நிமிர்ந்து நில் என்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்க்கவும் மன நலத்தை வலுப்படுத்தவும் அந்தக் கருத்துக்களும் உந்துதல்களும் மிகவும் உதவின.

கல்லூரிப் பருவத்தில் திருமதி சிவசங்கரி அவர்கள் எழுதிய “சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது” என்ற ஒரு நூலை நான் ஒரு நூறுமுறையாவது படித்திருப்பேன். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக்கொடுக்காத நுண்ணறிவை அந்த நூல் ஊட்டி வளர்த்தது. ஒவ்வொரு முறையும்  ஏதாவது ஒரு பிரச்சனையை சந்திக்கும் பொழுது அந்த நூலைப் படித்து விட்டால் போதும். உங்களுக்கு விடை கிடைத்துவிடும். அதேபோல் திரு உதயமூர்த்தி அவர்கள் எழுதித் தொடராக வந்த “உன்னால் முடியும் தம்பி”  என்ற கட்டுரைகள் எத்தனை இளைஞர்கள் இதயத்தில் வாழ்க்கைக்கான நம்பிக்கை ஒளியை ஏற்றியது !

வாழ்க்கையில் தவறி விழுவது ஒரு சாதாரணமான செயல். ஆனால் கீழே விழுந்து விட்டபின் ‘விழுந்தேனே, விழுந்தேனே” என்று அழுதுகொண்டிருப்பதை விட எழுந்து அடுத்த படிக்கு கால்களை முன்வைப்பதே புத்திசாலித்தனமான செயல்

“சாதனை என்பது ஒவ்வொரு முறை தோல்வி அடைந்தபின்னும் மீண்டும் தோல்விக்கு நம்மைத் தயார் செய்து கொள்வதுதான்” என்று சர் வின்ஸ்டன் சர்ச்சில் என்ற முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கூறினார். தன்னுடைய எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகொள்ளும் முயற்சியில் முதன்முறை தோல்வியடைந்த பின் திரு எட்மண்ட் ஹில்லாரி இமயத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னாராம் ” இமயமே ! உன்னால் இதற்கு மேல் உயர முடியாது. என்னால் என் முயற்சியில் இன்னும் உயர முடியும்.”

நம்பிக்கை ! தன்னம்பிக்கை ! வாழ்வின் வெற்றிக்கு ஆணிவேர் !

தன்னம்பிக்கையோடு வாழ்ந்து பார்க்கலாமே !

(தொடருவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *