வெண்ணிலவில் ஒரு கருமுகில் (22)

1

பவள சங்கரி

அன்னபூரணி ஓரமாக அந்த மலர் மஞ்சத்தில் சுருண்டு கிடந்தாள்!
திருமண அலைச்சலும், களைப்பும் கூட அவளுக்கு தூக்கம் வரவழைப்பதாக இல்லை. மனதில் ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்ற எச்சரிக்கை மணி ஒலிப்பது போலவே இருந்ததால் ஒரு படபடப்பும் தொற்றிக் கொண்டது. சிறிது நேரத்திற்கு ஒரு முறை கணவனின் முகத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய ஒரு சிறு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் வலி நிவாரணிகள் கொடுத்த மெல்லிய மயக்கத்தில் கண்ணயர்ந்திருந்தாலும் ஏனோ அவளுக்கு மட்டும் உறக்கத்தின் சாயல்கூட இல்லை.

அடுத்த நாள் காலை தூக்கம் மறந்த சிவந்த கண்களுடனும், அலங்காரம் கலையாத துவண்ட மலரென வந்து நிற்கும் புதிய மருமகளைப் பார்த்தவுடன் விடயம் புரிவதில் சிரமம் இருக்கவில்லை மாமியாருக்கு…….. லேசான பதட்டத்துடனே அவளை நெருங்கி தலையை மெதுவாக வருடி, “என்னம்மா….. மிதிலன் தூங்குகிறானா. இன்னும் எழுந்திருக்கவில்லையா? “ என்றாள்.

“ ஆம் அத்தை, அவருக்கு இரவு காய்ச்சல் அதிகமாக இருந்தது. மாத்திரை போட்டார். அதனால் இன்னும் அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். “
சூழ்நிலையின் இறுக்கத்தை தளர்த்தும் வகையில், மாமியார் தன் மருமகளை அணைத்து, “ போய் குளித்து விட்டு வாம்மா.பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்றார்.

மிதிலன் எழுந்த போதும் காய்ச்சல் குறையாதது கண்டு மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்து கிளம்பினாலும் அடுத்து வந்த நாட்கள் அன்னபூரணியின் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு கொடுமையான காலம்…….

இருபது ஆண்டுகளுக்கு முன் மருத்துவ வசதியில் அந்த அளவிற்கு பின்னடைவு அடைந்திருந்த காலம் அல்ல என்றாலும், நோயின் தன்மை அதனை பின்னுக்குத் தள்ளி விட்டது எனலாம். ஆம் மிதிலனுக்கு அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் எண்ணவும் நடுக்கம் ஏற்படுத்தும் விசயங்கள். பலவிதமான மருத்துவ சோதனைகள். மருத்துவமனை வாசம் என்று புது மணப்பெண் என்ற கிளுகிளுப்பே இன்றி வாழ்க்கை கோரமான தன் முகத்தை காட்ட ஆரம்பித்திருந்தது. வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அடிக்கொரு முறை தங்கி மருத்துவம் பார்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு, இறுதியில் மூன்றே மாதத்தில் உயிரற்ற உடலாக வீடு திரும்பினான், அனைவர் தலையிலும் பெரிய கல்லாகத் தூக்கிபோட்டபடி…….

அதற்குப் பிறகு அன்னபூரணியின் பெற்றோரும், மிதிலனின் பெற்றோரும் எவ்வளவோ சொல்லியும் மறுமணத்தில் நாட்டமே இன்றி பல காலங்களையும் இப்படியே கடந்ததோடு, அதற்கு பிறகு பல சேவைகள் மூலம் தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வாட்ச்மேன் சாந்தநாதன் மூலமாக அன்னபூரணி அம்மாளின் கதையைக் கேட்டு அசந்து போய் நின்றிருந்தான் ரிஷி.

அவந்திகாவிற்கு ஏன் தான் ஞாயிற்றுக் கிழமை வந்தது என்று இருந்தது. ரம்யா ஊருக்குச் சென்று இந்த ஒரு வாரத்தில் அலுவலகம், வீடு என்று இருந்தாலும், ஞாயிற்றுக் கிழமை வந்தவுடன் தனிமை சற்று கொடுமையாகத்தான் இருந்தது. ஏனோ மாறனின் நினைவும் வந்தது. அந்த ஊரில் அலுவலக நண்பர்களைத் தவிர அவள் அறிந்த ஒரே நபர் அல்லவா….. காலை 6 மணிக்கே முழிப்பு வந்தாலும், எந்த வேலையும் ஓடவில்லை. எங்கேனும் வெளியில் சென்று வந்தால் தேவலாம் போல் இருந்தது. மாறனிடம் கேட்கவும் தயக்கமாகவும் இருந்தது. தினமும் அவளை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதும், திரும்ப வீட்டில் கொண்டுவந்து விடவும் என்று இத்தனை பெரிய உதவி செய்பவனிடம் ஞாயிற்றுக்கிழமை கூட வெளியில் கூட்டிப் போகும்படி தொந்திரவு செய்ய விரும்பவில்லை அவள். மேலும் இந்த ஒரு வாரத்தில் ஒரு சிநேகிதமான பார்வைகூட அவனிடமிருந்து வரவில்லையே என்று யோசிக்கவும் தோன்றியது. இப்படி ஏதேதோ சிந்திக்கும் வேளையில் , செல்பேசியின் இனிய பாடல் அழைப்பு அதைக் கலைத்தது.

“ ஹலோ, …….”

“ ஹலோ” என்று சொல்லும் போதே திடீரென ஏனோ முதன் முதலில் சில நாட்கள் முன்பு வாஷிங்டனில் கேட்ட அதே பரிவான, காதலுடனான அந்த இனிய குரல் நினைவில் வந்ததோடு உடலும், உள்ளமும் சிலிர்க்கவும் செய்தது.

“ஹலோ”

அவந்திகாவின் குரலில் இருந்த இந்த மாற்றம் மாறனுக்குத் தெளிவாகப் புரிந்ததாலும், காரணம் புரியாமல் ஆச்சரியமாக இருந்தது………..

“ ம்ம்…… நான் மாறன் அவந்திகா. நீங்கள் எழுந்து விட்டீர்களா. அல்லது தூங்கும் போது தொந்திரவு செய்கிறோனோ என்று நினைத்தேன்.  இன்று துலிப் மலர் காட்சிக்குப் போகலாம் என்று என் நண்பர்கள் கூறினார்கள். நீங்கள் விரும்பினால் எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம் . வருவதானால் நாங்கள், வந்து உங்களை பிக் அப் செய்து கொள்கிறோம். 9 மணிக்கு ரெடி ஆக முடியுமா?”

படபடவென அவன் பேசி முடித்தாலும் அவள் காதுகளில் தேன் பாய்ந்தது போல் இருந்தாலும், அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்து கொள்வதற்கு சற்று நேரம் பிடித்தது. துலிப் மலர்கள் என்ற வார்த்தை மட்டும் காதில் விழுந்தது……..

அந்த துலிப் மலர்களின் அழகு நினைவில் வர உள்ளம் ஏனோ இன்று இனம் புரியாத ஒரு இன்ப நிலையில் பரவசமாக மலர்ந்தது………….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வெண்ணிலவில் ஒரு கருமுகில் (22)

  1. வாட்ச்மேன் சாந்தநாதன் மூலமாக அன்னபூரணி அம்மாளின் கதையைக் கேட்டு அசந்து போய் நின்றிருந்தான் ரிஷி.

    ~இந்த மாதிரி ஒரு கதை சொல்லியை அழைத்து வந்து, கதையின் போக்கை அநாயசமாக மாற்றி அமைப்பது, நல்ல்தொரு உத்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *