அவனருள் கும்பிடடா!

 
நல்லவை சுமந்து நன்மைகள் ஆற்றின்

நாடு போற்றுமடா – நல்லது

அல்லவை சுமந்து அல்லல்கள் வளர்ப்பின்

அகிலம் தூற்றுமடா!
பிறப்பின் பயனும் பிறர்க்கெனச் சொல்லும்

பணியை ஆற்றிடடா – தனிச்

சிறப்பை அதிலும் செலுத்தியும் வாட்டும்

சிறுமை தூற்றிடடா!
வாழ்வின் பயனும் புகழெனச் சொல்லும்

வாழ்வை அமைத்திடடா – மிகத்

தாழ்வுறும் நினைவை அறவே தள்ளியும்

தர்மம் சமைத்திட்டா!

 
ஏற்றமும் இறக்கமும் இரட்டைப் பிறவிகள்

என்பதை அறிந்திடடா – நிலை

மாற்றியும் இயற்கை காட்டுதல் உணர்ந்து

மமதை எறிந்திடடா!

 
காற்று என்றும் ஓர்திசை தன்னில்

காலமும் வீசாது – நலம்

ஆற்றும் செயலில் நன்மைகள் விளையின்

நாடுனை ஏசாது!
நல்லவை விதைப்பின் நன்மைகள் விளையும்

நினைவில் ஏற்றிடடா – துயரில்

தள்ளிடும் நினைவுகள் தன்னைத் தள்ளும்

தர்மம் போற்றிடா!
நாடுனைப் போற்றும் வண்ணம் நடந்து

நற்பெயர் பெற்றிடடா – பெரும்

கேடன் என்றுனை ஊரார் சாடா

கொள்கையில் முற்றிடடா!

 
மகிழ்ச்சி என்பது மனத்துள் உள்ளது

மறந்தும் போகாதே – நிகழும்

நிகழ்ச்சிகள் யாவும் ஈசன் செயல்தான்

எவரையும் நோகாதே!

 
இறைவன் வழங்கும் கடுகுள் மலையும்

இருக்கும் நம்பிடடா – கூர் அறிவும்

காலமும் சமமாய் வழங்கிய

அவனருள் கும்பிடடா!

 
04.02.2018
கவிஞர் இடக்கரத்தான்.

Share

About the Author

has written 1096 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.