படக்கவிதைப் போட்டி (148)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

27591778_1549687218418805_1882047159_n

ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (17.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1177 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

6 Comments on “படக்கவிதைப் போட்டி (148)”

 • Ar.muruganmylambadi wrote on 12 February, 2018, 23:49

  இணைந்த உயிர்கள்!!
  ==💝💝💝💝💝💝💝==
  #மாசிமாதம் ஓரிரவு…
  மகிழ்ச்சி ததும்பும் தேனிலவு!
  ஜோடி போட்ட மாடப்புறா
  சொக்கவைக்கும் காதல்நிலா!!
  #வண்ணப்பறவைகள் ரெண்டு
  வற்றாத பேரன்பு கொண்டு
  காதலின் உச்சத்தைக் கண்டு
  காட்டிடும்தோரணை கற்கண்டு!!
  #விரும்பும் துணையின் அருகிலே
  விசனம் மறந்த நிலையிலே
  விளிகள் பேசும் மொழியிலே
  விழுந்தன மனங்கள் மையலிலே!!
  #சாதி மதம் பார்க்கவில்லை
  சாதகத்தைத் தேடவில்லை
  சம்மதிக்கும் உள்ளங்களை
  சாய்க்கத்தடைகள் உலகிலில்லை!!
  #உண்மை அன்பு மலர்ந்துவிட்டால்
  உடைப்பதென்ன சுலபமா??
  உயிர்கள்இங்கு இணைந்துவிட்டால்
  உளிகள் கூட உறவுதான்!!
  #வேசமில்லாப் பாசத்துக்கு
  மோசமென்றும் கிடையாதே!!
  மோட்சம் பூமியில் உள்ளதெனும்
  சூட்சுமம் அறிவோர் மெய்காதலரே!!!
  🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
  ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
  பவானி…ஈரோடு….
  9442637264….
  🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

 • ஆ. செந்தில் குமார்
  ஆ. செந்தில் குமார் wrote on 14 February, 2018, 12:33

  புறாக்கள் சொல்லும் பாடம்
  ***************************
   -ஆ. செந்தில் குமார்.

  பிறன்மனை நோக்காமை பேராண்மை!
  பகன்றது வள்ளுவன் சொல்லாண்மை!
  தன்னிணை மண்ணில் வாழும்வரை
  தரங்கெட் டடுத்ததை நாடாமல்
  உயரிய வாழ்க்கை வாழ்ந்திடுதே
  உலகில் உள்ள புறாக்கூட்டம்!
  மனிதா உனக்கு உரைக்கிறதா?
  மனதில் ஏதேனும் பதிகிறதா???

  கூட்டங்கூட்டமாய் வாழ்ந்திடுமே! புறாக்கள்…
  கூடி உண்டுக் களித்திடுமே!
  காக்கைக்குருவி எங்கள் சாதி!
  கவி பாடினான் பாரதி!
  மனிதா… மனிதா… நீ…
  சகமனிதனுடன் மோதி..
  சுடுகாட்டிலும் சாதி.. 
  சுட்டிக்காட்டுவதென்ன நீதி???

  கீழ்மேல் என்றெல்லாம் பாராது!
  காழ்ப்புணர்ச்சி தம்முள் இருக்காது!
  சமாதானத் தூதுவன் நம்
  சமுதாயத்திற்குச் சொல்லிடும் பாடமிது!
  தன்னலம் கொண்ட மனிதரெல்லாம்…
  தரணியில் படைத்த சாதிமதங்கள்…
  கூட்ட உணர்வைக் கொண்டுளது!
  கூட்டு உணர்வைக் கொண்டுளதா???

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 17 February, 2018, 19:13

  தெரிந்திடுவீர் எம்காதல்…

  கடவுள்களில் பேதமில்லை எங்கும் இருப்போம்
  கோபுரத்தில் வாழுகிறோம் குடும்பத் தோடே,
  அடுத்துள்ள தேவாலயம் மசூதியும் வீடே
  அங்கிருந்தே இரைதேடிச் செல்வோம் காடே,
  இடையில்வரும் காதலிலே இணைந்தே செல்வோம்
  இடைஞ்சலாக எவருமெங்கள் இனத்தில் இல்லை,
  நடைமுறையில் மனிதர்போல் நாங்க ளில்லை
  நாட்டுப்புறா எம்காதல் தெரியும் தானே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 17 February, 2018, 20:58

  உண்மைக் காதல் : நெருங்கி நிற்கும் இரண்டு வண்ணப் புறாக்கள்!
  காதல் வானில் சிறகடித்துப் பறக்கும்!
  அருமைப் புறாக்கள்!
  ஆண் புறாவின் அருகில் மயங்கி நிற்கும்!
  பெண் புறா!
  இந்த பெண் புறாவின் இணையென்ற மகிழ்வில்
  ஆண் புறா!
  காதலர் தினத்தை கொண்டாடுகின்றனவோ!
  இந்தப் புறாக்கள்!
  இல்லை! இல்லை!
  உண்மை காதலருக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தானே!
  அழகைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
  மனதைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
  வசதியைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
  குணத்தைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
  அன்பின் வடிவம் காதல்!
  புரிதலின் பொருளே காதல்!
  தோழமை என்பது காதல்!
  ஒற்றுமை என்பது காதல்!
  விட்டுக் கொடுப்பது காதல்!
  “நான் “ மறைவது காதல்!
  “நாம்” என்று தெளிவது காதல்!
  சுயநலம் மறப்பது காதல்!
  உன் துயர், எனதென நினைப்பது காதல்!
  யாசித்துப் பெறுவதா காதல்!
  தானாய் மலர்வது காதல்!
  மாலையால் இணைவதா காதல்!
  மனதால் இணைவதே காதல்!
  உயிரைத் தருவதா காதல்!
  உயிராய் வாழ்வது காதல்!

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 17 February, 2018, 22:59

  மனிதனும் புறாவும்..!
  ===================

  மாடத்தில் மட்டுமே கூடுகட்டி வாழும்
  ……….மனிதனோடு பழகும் பண்பு கொண்டது..!
  ஆடலுடன் பாடலும் செய்யும் அதையே
  ……….அதிசயித்து நமைப் பார்க்கத் தோன்றும்.!
  கூடயிருக்கும் குஞ்சுப் புறாவுக்குத் தன்
  ……….குரல்வளைச் சேர்த்த உணவு ஊட்டும்..!
  ஊடல் கொள்ள இணையாய் ஒன்று
  ……….உரு வானால் வேறொன்றை நாடாது..!

  துணையாய்த் தேடி வந்த சோடியுடன்
  ……….தன் தலைசாய்த்து வட்டமிட்டு ஆடும்..!
  இணையிடும் முட்டையை தன்னல மின்றி
  ……….இரவுபகல் அடை காக்கும் குணமாம்..!
  பிணைக் கைதி போலதனை அடைத்து
  ……….பின்னர்ச் சோடி பிரித்து பறக்கவிடுவார்.!
  கிணற்றுத் தவளைபோல வாழு மதற்குக்
  ……….கிட்டுமா இனியும் சுதந்திர வாழ்க்கை..!

  பந்தயத்தில் பறக்கவிட புறா வளர்ப்போர்
  ……….பாங்கா யதனைக் காப்பார் பணமாக்க..!
  பந்தமென வரும்போது ஒன்றாகக் கூடியே
  ……….பாங்காகப் பிரித் துண்ணும் தானியத்தை.!
  குந்தகமும் ஆபத்தும் நிறைந்த வாழ்வில்
  ……….குணமுள்ள பறவை யெனப் புகழுண்டு..!
  அந்தகனை அடையாளம் காணத் தெரியா
  ……….அகப்பட்டுக் கொள்வ ததன் விதியோ..!

 • எஸ். கருணானந்தராஜா wrote on 17 February, 2018, 23:52

  சேவல்-
  என்னடி ஹப் அடிக்குது? எதைத் திண்டு தொலைச்சே
  கீழ் மாடி மேசையிலே கெடக்குதே பழங்களெல்லாம்
  கூடத்துக் கோணியெல்லாம் குவிஞ்சிருக்கே தானியங்க
  அதையெடுத்துத் தின்னாம ஆட்டுக்கறி தின்னியா?
  குவிச்சிருந்த விதவிதமாப் பழத்தையெல்லாம் விட்டுப்பிட்டு
  கவுச்சியில ஆசப்பட்ட போக்கத்த புழுப் பொறுக்கி

  அடச்சே! உன்னால பெரிய பேஜாராப் போச்சு
  இந்த நாத்தத்தோட எப்படியுன்னை
  நான் பக்கத்தில வச்சுக்கிறது.
  ஓடு போ சீக்கிரம் சொண்டைக் கழுவிட்டு வா!

  பேடு-
  எதுக்காம்?

  சேவல்-
  ஏன் உனக்குத் தெரியாதா
  புதுசாக் கேக்கிறியே! அதுக்குத்தான்.
  பழம் மணக்கும் சொண்டோட
  பக்கத்த வந்து நில்லு.
  இழவுக் கவுச்சி மணம் எனக்குச் சகிக்காது
  ஓடு போய் வாய ஒடனே கழுவிட்டுவா
  ஒட்டி உரசிக்கலாம் உயிரைக் கலந்துக்கலாம்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.