க. பாலசுப்பிரமணியன்

அறவழி நில்லாத வாழ்க்கையின் பயனென்ன ?

திருமூலர்-1-1-2

அறம் சார்ந்த வாழ்க்கையை எப்பொழுது தொடங்கவேண்டும்?  உணர்ச்சிகளால் உந்தப்பட்டு உலக மாயைகளில் உழன்று குடும்ப வாழ்க்கையில் முழுதான கவனம் செலுத்தி, வருங்காலத்திற்காக சொத்து சேமித்து வைக்கும் நேரத்திலா? அல்லது வாழ்ந்து முடித்துவிட்டோம் என்று எண்ணி எல்லாம் துறந்த நிலையிலே மனம் இருக்கும் நேரத்திலா? இந்தக் கேள்விக்கு எங்கே சரியான பதில் கிடைக்கும்?

வாழ்ந்து அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையில் நாம் உலக மாயையில் இங்கும் அங்குமாகப் பறந்து கொண்டிருக்கின்றோம். தேவையுள்ள பொருள்களை மட்டுமின்றி தேவையற்ற பொருள்களையும் சேர்த்து பொருட்சுமை மட்டுமின்றி மனச்சுமையிலும் மூழ்கிக்கொண்டிருக்கின்றோம். அறத்தை மறந்து வாழ்கின்ற வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் குணாதியங்களை எப்படி வர்ணிக்கலாம் ? பட்டினத்தாரின் இந்தப் பாடல் அதற்கு ஒரு உதாரணமாக விளங்குகின்றது.

ஓயாமற்  பொய்ச்சொல்வர் நல்லோரை நிந்திப்ப ருற்றுப்பெற்ற

தாயாரை வைவர் சதியா யிரஞ்செய்வர் சாத்திரங்கள்

ஆயார் பிறற்குப காரஞ்செய் யார்தமை யண்டினர்க்கொன்

றீயா ரிருந்தென்ன போயென்ன காண்கச்சி யேகம்பனே

இந்த குணாதிசயங்களுடன் அறத்தைப் பற்றி சற்றும் நினையாதவர்கள் வாஸ்க்கை எப்படிப்பட்டது? “இன்றிருப்பார் நாளையில்லை என்னும் பெருமை படைத்த இவ்வுலகில்” கிடைத்த சிறிய வாழ்வில் நல்ல பல செயல்களை செய்யாமல் அதைத் தள்ளிப் போட்டு வாழ்க்கை வீணடிப்பவர்களுக்கு என்ன புத்திமதி கூற முடியும்? திருமூலரின் இந்தப் பாடல் அதற்கு பதில் அழிப்பது போல் அமைந்துள்ளது.

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே

விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்

குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்

விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே

எல்லாப் பொருள்களும் தோன்றி மறைகின்ற நிலையில் இருக்கும் நிலையை அறியாத மனம் எல்லாம் தனதே என்ற கருத்தை வைத்துக்கொண்டு அறத்தை செய்யாமல் வீணாக வீழ்கின்றதே என்ற திருமூலரின் கருத்து எவ்வளவு உண்மையானது. !

அறத்தைச் சாராத வாழ்க்கையை வாழ்ந்து தேவையற்ற பொருள்களை மிகுதியாகச் சேர்த்து வைத்து பிற்காலத்தில் “இந்தப் பொருளை எங்கு விட்டுச் செல்வேன்? இதை யார் பாதுகாப்பார்கள்?” என்ற கவலையை மனதில் கொண்டு கூற்றுவனின் அழைப்பினை ஒதுக்கமுடியாமல் அவதிப்படுகின்ற உள்ளங்கள் தான் எத்தனை! உடலை விட்டு நீங்கும் நேரத்தில் இந்த அறிவு கிடைத்து என்ன பிரயோசனம்? இந்த மாயையில் அகப்பட்டு அவதிப்படும் நெஞ்சங்களை நோக்கிப் பட்டினத்தார் பாடுகின்றார்:

வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்

பீடிருக்க வூணிருக்கப்  பிள்ளைகளுந் தாமிருக்க

மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்

கூடிருக்க நீபோன  கோலமென்ன கோலமே.

எவ்வளவு ஆழமாக உண்மைகளை நம் முன்னே எடுத்து நிறுத்துகின்றார் பட்டினத்தார்!

இந்தக்  கருத்தை வலுப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்த வரிகள்

குடமுடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்

உடல் உடைந்தால் இறைப்பொதும் வையாரே !

பட்டினத்தாரைத் தொடர்ந்து இந்தப் புலம்பலை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம்.

வேடிக்கை யுஞ்சொகுசு மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்

வாடிக்கை யெல்லா மறந்திருப்ப தெக்காலம் ?

பட்டுடை பொற்பணியும் பாவனையுந் தீவினையும்

விட்டுவிட் டுன்பாதம் விரும்புவதெக்காலம் ?

இவ்வாறு உலக மாயையில் விழுந்து எல்லாம் எனக்கே என்ற எண்ணம் கொண்டு தன் உண்மை நிலையை அறியாது ஆசைப்படும் நெஞ்சங்களுக்கு தாயுமானவரின் இந்த வரிகள் உண்மை நிலையை விளக்கும்

ஆசையும் பெருங்காற்றூடு இலவம்பஞ்சு

எனவும் மனது அலையும் காலம்

மோசம் வரும்;  இதனாலே கற்றதும்கேட்

டதும்தூர்ந்து, முக்திக்கு ஆன

நேசமும்நல் வாசமும் போய்ப் புலனாய் இல்

கொடுமை பற்றி நிற்பர்: அந்தோ

தேகபழுத்து அருள்பழுத்த பராபரமே !

நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *