அகநானூற்றில் வரைவுக்கு வழிவகுக்கும் மெய்ப்பாடுகள்

0

-பேரா.பீ. பெரியசாமி

முன்னுரை

களவுக் காலத்துத் தலைவனோடு ஒருங்கிணைந்து ஒழுகிய தலைவியின் உள்ளத்தில் வரைவு வேட்கை எழுகின்றது.  உள்ளத்து வரைவு வேட்கையை மெய்ப்பாடுகளாகத் தலைவனுக்கு உணர்த்துகின்றாள்.  வரைவு நீட்டிக்கும் தலைவனுக்கு எதிரான குறிப்புகளை உணர்த்தும் வண்ணம் மெய்ப்பாடுகளாக இவை நிகழும்.  இம்மெய்ப்பாடு தலைவனுக்குக் கடமை உணர்வை உணர்த்தும். இது ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்ட பின்பு ஒருவர் விருப்பத்தை இன்னொருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.  இம்மெய்ப்பாடுகளைத் தலைவன் உணர்ந்து வரைவுக்கு முற்பட வேண்டும் என்பதால் இவை தலைவியிடம் நிகழ்கின்றன. இதனை, 

முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்
அச்சத்தின்
அகறல் அவன்புணர்வு மறுத்தல்
தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்
காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்
றாயிறு நான்கே அழிவில் கூட்டம்.”(நூ.23) எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

முட்டுவயிற்கழறல்

வரைவு நீட்டிப்பால் உண்டாகும் தடைகளையெல்லாம் வரைவு வேட்கையை உட்கொண்ட தலைவி, தலைவனிடம் கழறுகின்றாள். இதனை, “களவொழுக்கத்திற்கு முட்டுப்பாடுகள் வந்த பொழுது இவ்வாறு இருந்ததெனக் கழறியுரைத்தல் முட்டுவயிற்கழறல் என்னும் மெய்ப்பாடாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.185.) என்பர்.

நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர்
புறங்காட்டு அன்ன,
பல்முட் டின்றால் தோழி! நம் களவே.”   (அகம்.122(21-23))

எனும் அகநானூற்று பாடலில் ‘நம் களவானது தித்தனின் வேலி நிறைந்த, கற்பாறைகள் நிறைந்த, காவல் மிகுந்த உறந்தை எனும் ஊரை அடைவதைப் போன்ற பல்வேறு இடையூறுகளைக் கொண்டது.’ எனுமிடத்தும், 20(11-16), 72(17-22), 112(1-8), 147(1-10), 288(17) எனும் பாடலடிகளும் முட்டுவயின்கழறல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

முனிவு மெய்ந்நிறுத்தல்

திருமணத்தில் நாட்டம் இல்லாமல் காலத்தை நீட்டிக்கும் தலைவனுக்குத் தலைவி தன் உள்ளத்து வெறுப்பை மெய்ப்பாட்டுக் குறிப்பால் உணர்த்துவது இம்மெய்ப்பாடாகும். இதனை உளவியலார், “பிற மனிதர் மேலுள்ள வெறுப்பைத் தன் முகமாய்த் திருப்பிக் கொள்ளல் என்பது தன்முகத் திருப்பம்.” (Elements of Psychopathology, p.87)  என்பர்.

இன்னுயிர் கழிவது ஆயினும், நின்மகள்
ஆய் மலர் உண்கண் பசலை,
காம நோய் எனச் செப்பாதீமே.”(அகம்52(13-15))

எனும் அகநானூற்று பாடலில் ‘என்னுடைய இனிய உயிரானது என்னை விட்டுப் பிரிவதாக இருந்தாலும், நும் மகளினது  அழகிய மலரினை ஒத்த  மையுண்ட கண்களில்  படர்ந்துள்ள பசலை நோய்க்கு  தலைவன் பால் கொண்ட காமநோயே காரணம் என விளக்க உரையாதே’ எனுமிடத்தும், 50(13-14) எனும் பாலடியும் முனிவு மெய்ந்நிறுத்தல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

அச்சத்தின் அகறல்

தலைவனோடு தாம் கொண்டுள்ள களவொழுக்கம் ஊராருக்கும் ஏனையோருக்கும் தெரிந்து அலராகுமோ? அல்லது இற்செறிக்கப்படுவோமோ? தலைவன் வரும் வழியில் அவனுக்கு ஏதேனும் கொடிய விலங்குகளினாலும் பிறவற்றானும் தீங்கு நேருமோ எனும் அச்சத்தின் காரணமாகவும் தலைவனை விட்டு அகன்றிருத்தல் இம்மெய்ப்பாடாகும். இதனை, “தலைவனின் களவொழுக்கத்தால் தலைவி, ஊரார் அலருக்கு அஞ்சுவதாக் கூறலும், தலைவன் வரும் வழியில் ஏதங்களால் தீங்கு நேருமோ என அஞ்சுவதாகக் கூறலும் அச்சத்தின் அகறல் என்னும் மெய்ப்பாடாகும். தலைவனை வரைந்து கொள்ளத் தூண்டலே இம்மெய்ப்பாட்டின் நோக்கமும் பயனுமாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், பக்.187-188.) என்பர்.

 “உள்அவன் அறிதல் அஞ்சி உள் இல்,”(அகம்.32(11))

எனும் அகநானூற்று பாடலில் ‘என் உள்ளத்து நிலையினை அவன் அறிந்துக் கொள்வதை நினைத்து யான் அஞ்சினேன்’ எனுமிடத்தும், 128(1-15), 118(6) எனும் பாலடிகளிலும் அச்சத்தின் அகறல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

அவன் புணர்வு மறுத்தல்

தலைவனும் தலைவியும் தங்கள் களவொழுக்க இன்பத்தை அனுபவிக்கக் கருதி இரவிலும் பகலிலும் கூடுவர். இக்கூட்டத்தினை குறியிடம் என்பர். அவ்வாறு கூடி மகிழ்ந்த தலைவி, தோழியிடம் களவு நீட்டிப்பதைப் பற்றிக் கூறுவாள். அதனை உணர்ந்த தோழி இரவில் வருவானைப் பகலில் வாவென்றும், பகலில் வருவானை இரவில் வாவென்றும் அலைக்கழிப்பாள். சில நேரங்களில் இருகுறியும் மறுத்துரைத்தலும் உண்டு. இதற்குக் காரணம் அவன் விரைவில் தலைவியை வரைந்து கொள்ளல் வேண்டும் என்பதுவே ஆகும். இதனையே தொல்காப்பியர் ‘அவன் புணர்வு மறுத்தல்’ எனும் மெய்ப்பாடாக அமைத்துள்ளார். இது வரைவு வேட்கையின் வெளிப்பாடு.

நல் வரை நாட! நீ வரின்
மெல்லியல்
ஓரும் தான் வாழலளே”   (அகம்.12(13-14))

எனும் அகநானூற்று பாடலில் ‘நீ இரவுக் குறிக்கண் வருவாயாயின் மெல்லிய தன்மையுடைய இத்தலைவி உயிர் வாழமாட்டாள்’ எனுமிடத்தும், மேலும் 25(12-18), 47(16-19), 58(11-12), 88(7-15), 59(3-9), 92(1-13), 148(11-14), 160(16-19), 182(12-13), 194(16-19), 196(13), 240(9-15), 270(13-16), 308(7-16), 369(10-19) எனும் பாடலடிகளிலும் அவன் புணர்வு மறுத்தல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

தூது முனிவின்மை

திருமணத்தின் மீதான வேட்கை அதிகரிக்கத் தலைவி தன் நிலையைத் தலைவனுக்கு எடுத்துரைக்க நினைந்து மேகம், நிலவு, பறவை, விலங்கு  போல்வனவற்றிடம் என்னை விரைந்து மணந்து கொள்ளுமாறு தலைவனிடம் கூறுங்கள் எனத் தூதுவிடுதல் தூது முனிவின்மை என்னும் மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாட்டினை உளவியலார், “மனத்தில் அழுந்திக் கிடக்கும் சிக்கல்களை மறுபடியும் வெளிக்கொணர்ந்து அவற்றை மறுபடியும் நினைவின் மூலமாக அனுபவிக்கும்படி செய்துவிட்டால் அந்தச் சிக்கலினால் ஏற்படும் கோளாறுகள நீங்கிவிடுகின்றன.”; (அடிமனம்,ப.16.) என்றும், “துன்பம் மிக்க நேரங்களில் பேசினால் புரிந்துகொள்ள ஆகாத பொருள்களை விளிக்கவும் செய்கின்றனர். அஃறிணைப் பொருள்களிடமேனும் பேசி வெளிப்படுத்துதலால் உணர்ச்சியின் எழுச்சி அடங்குகின்றது. உள்ளத்தின் அழுத்தம் தளர்கிறது. உள்ளத்தின் செறிவைச் சொற்களில் கூறிச் செயல்படுத்தி விடுவதால் இத்தளர்ச்சி நேர்கின்றது.” (சங்க இலக்கியத்தில் உளவியல், ப.186.) என்றும் கூறுவர். இதனை வ.சுப. மாணிக்கம், “………. இன்ப வெள்ளத்தால் துன்பப் புயலால் நெஞ்சு அலையும்போது, அவற்றைப் பிறரிடம் பேசினால் ஆறுதல் உண்டாகும்.” (தமிழ்க்காதல், ப.53.)   என்பதாலே தலைவி தூதுவிடுகின்றாள் எனக் கூறியுள்ளார். இதனை,

 “தூதும் சென்றன தோளும் செற்றும்”  (அகம்.251.(1))

எனும் அகநானூற்று பாடலில் ‘நாமும் தலைவர்பால் தூதுவர்களை அனுப்பியுள்ளோம்; செறிவாக அணியப் பெற்ற அணிகள் நெகிழ்ந்து வீழப்பெற்றுத் தலைவனைப் பற்றிய நினைவுத் துன்பத்தால் வருந்தி இருக்கும் நம் நிலையை அவர்களும் எடுத்துக் கூறுவார்கள்’ எனுமிடத்தும், 170(1-8), 244(11), 255(17-19), 333(17-22), 338(15-16) எனும் பாடலடிகளிலும் தூது முனிவின்மை எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

துஞ்சிச் சேர்தல்

துஞ்சிச் சேர்தல் என்பது மனையகத்துப் பொய்த் துயிலோடு மடிந்து வைகுதல். அஃதாவது, வரைவு நீட்டுந் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமாய்தல். வேண்டியவாறு  கூட்டம் நிகழப் பெறாமையின் தலைமகனோடு புலந்தாள் மடிந் தொன்றும் என்பதாகும். இதனை, “என்ன செய்வது என்று தெரியாத இயக்கமற்ற நிலையே சோர்வு ஆகும். தீவிரமான துன்பம் வளர்ந்து பாதிக்கப்பட்ட நிலையே உள்ளச் சோர்வு.” (A Study of Psychology, p.49.) என்பர் உளவியலார். மேலும், “வரைவு நீட்டித்து ஒழுகுந் தலைவன் வரவால் தலைவி மகிழாது மனமாழ்கித் தன் உள்ளத்து வருத்தத்தை வெளிப்படுத்துதல் துஞ்சிச் சேர்தல் என்னும் மெய்ப்பாடாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.194.) என்பர்.

 “துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர் வோய்”  (அகம்.198(11))

எனும் அகநானூற்று பாடலில் ‘ஊர் உறங்கும் நேரத்தில்  (நள்ளிரவில்) நம்மைத் தழுவி மகிழ்ந்து மீண்டு போயினள்’ எனுமிடத்தும், 26(4-5) எனும் பாடலடியிலும் துஞ்சிச் சேர்தல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

காதல் கைம்மிகல்

தலைவி, தலைவனது வரைவு நீட்டிப்பால் காதல் மிகப் பெற்று உள்ளம் வருந்துவாள்.  தன் காதல் மிகுதியைக் கூறவும் செய்வாள்.  இதுவே காதல் கைம்மிகல் என்னும் மெய்ப்பாடாகும். இதனை, “வலிமை மிகுந்த பாலின உந்தானது (Sex Drive) குலைக்கப்படும் போது மனவெழுச்சி விரிப்புகள் தோன்றுகின்றன. சமூக அங்கீகரிப்புள்ள முறைகளில் இவைகளைச் செலுத்தப் போதுமான மாற்றுவழிகள் இல்லாத நிலையில், இவை ஆளுமையைப் பாதிக்கும்.” (இளையோர் உளவியல், தொகுதி -1, ப.76.) என்பர் உளவியலார். இதனை, மு.பொன்னுசாமி, “பிரிந்த தலைவன் தன்னைத் துறந்துவிட்டான் என்ற நிலையில் தோன்றுவனவே தலைவியின் காம மிக்க கழிபடர் கிளவிகள். இவற்றில் வரைவு நீட்டிப்பால் காதல் கைம்மிகப் பெற்ற தலைவியின் வருத்தம் இழையோடியிருக்கும். காதல் கையிகந்த நிலையில் வரைவு வேட்கையை உட்கொண்டு கூறவும் செய்வாள், கூறாமலே மெய்ப்படு குறிப்புகளால் உணர்த்தி ஒழுகவும் முற்படுவாள்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், பக்.194-195.) என்பர்.

 “நிறுத்த நில்லா நெஞ்சமொடு  நின்மாட்டு”   (அகம்.2(12))

எனும் அகநானூற்று பாடலில் ‘இவளும் தடுத்து நிறுத்தவும் அவ்வளவில் நில்லாது ஓடும் நெஞ்சினை உடையவளாய் நின்னிடத்து இத்தகைய காதல் மிகுதியும் உடையவளாயினள்’ எனுமிடத்தும், 266(8-9),128(3-5;14-15), 135(14), 258(14-15), 273(13-14), 276(7-15), 285(12-15), 322(3), 340(1-5), 367(14-16) எனும் பாலடிகளிலும் அவன் காதல் கைம்மிகல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

கட்டுரையின்மை

தனது திருமண ஆசையினை நேரடியாகத் தலைவனிடம் சொல்லும் மரபு அக்காலத்தில் தலைவிக்கு இல்லை. அவ்வாறு இருக்கத் தன்னுடைய அவாவினை தன் உடற்குறிப்பினால் உணர்த்துவது இம்மெய்ப்பாடாகும். இதனை, “சொல்லாகா நிலையில் சொல்லாது நிற்றல் ஒரு மென்மையும் எளிமையுமான துறப்பமைவு நடத்தை” (சங்க இலக்கியத்தில் உளவியல்,ப.65.) என்பர் உளவியலார். இதனை, மு.பொன்னுசாமி, “அச்சம், நாணம், மடம் என்னும் அரும் பண்புகள் காரணமாகத் தலைவி தலைவனிடம் ஒருபோதும் தன் வரைவு வேட்கையினை வாய்விட்டுக் கூறமாட்டாள். களவொழுக்கம் நீட்டிக்கும் தலைவனிடம் உடனுறை வாழ்க்கையை விழையும் தலைவி, “என்னை வரைவுகொள்” என வெளிப்பட உரைக்க மாட்டாள். தலைவி தன் உள்ளக் கருத்தினை உரையாது வரைவு தூண்டல் கட்டுரையின்மை என்னும் மெய்ப்பாடாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.197.) என கூறியுள்ளார்.

 “நீங்குக என்று யான் யாங்கனம் மொழிகோ!”  (அகம்.90(8))

எனும் அகநானூற்று பாடலில் ‘இக்களவொழுக்கத்தில் இருந்து நீங்குக என்று யான் எவ்வாறு உரைப்பேன்’ எனுமிடத்து கட்டுரையின்மை எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

முடிவுரை

வரைவு வேட்கை உணர்ச்சியே இம்மெய்ப்பாடுகள் பிறக்கக் காரணமாகின்றது.  இம்மெய்ப்பாடுகள் தலைவியிடம் தோன்றுகின்றன.  இவை “ஒன்றித் தோன்றும் தோழிமேன” என்பதற்கிணங்கத் தோழியிடமும் நிகழ்கின்றன. வரைவு கடாவும் நோக்கிலேயே இம்மெய்ப்பாடுகள் அமைந்துள்ளன.  தலைவனுக்குக் கடமையுணர்வை உணர்த்தி, மணம் புரிந்து வாழும் உடனுறை இன்ப வாழ்விற்கு இம்மெய்ப்பாடுகள் வழிவகுக்கின்றன. காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் தனித்திருந்த தங்கள் காதலை வெளிப்படுத்துகின்ற தருணத்தில் பெண் தன்னுடைய வேட்கையைத் தன் காதலனிடம் கூறமாட்டாள். காதலியின் அக உணர்வைப் புரிந்துகொண்ட காதலன் அவளிடம் கேட்கும் பொழுதுகூட அதைத் தன்வார்த்தைகளால் கூறாது புதுமண்கலத்தில் ஊற்றப்பட்ட நீரானது புறத்தே கசிவது போல தன் குறிப்பால் வெளிப்படுத்துவாள் என்கின்றார். தனித்திருக்கும் வேளையிலும் தன் புலன்களை அடக்கும் ஆளுமைப் பண்பு கொண்ட அறிவுசால் பெண்ணின் தலைமை இல்லறத்தை இனிது நடத்தும் என்பதை தொல்காப்பியர் புலப்படுத்துகிறார். காதல் வயப்பட்ட பெண் வரம்புக் கடக்காதவளாக இருத்தல் நலம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

*****

கட்டுரையாளர்,
தமிழ்த்துறைத்தலைவர்
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அழைக்க: 9159577065

                                   

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *