-மேகலா இராமமூர்த்தி

அண்ணாந்து எதையோ ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கும் வண்ணக்கிளியைத் தன் சின்ன படப்பெட்டிக்குள் அடைத்துவந்திருக்கிறார் திரு. சாய். இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றி!

”மண்ணில் வந்த நிலவோ
மணம் பரப்பும் மலரோ
கண்ணில் வழியும் அழகோ
எண்ண இனிக்கும் தமிழோ”
என்று இந்த மழலையைப் புகழ்ந்து பிள்ளைத்தமிழ் பாடத் தோன்றுகின்றது.

கொள்ளையோடு அழகோடு நெஞ்சையள்ளும் இந்தக் குழவியைப் பாடக் கவிஞர்கள் குழாம் அடுத்து வருகின்றது.

*****

”ஆகாயம் நோக்கும் அழகுச் செல்லமே! சந்திர மண்டலமும், செவ்வாய் மண்டலமும் தொட்டுவிடும் தூரமாகிவிட்ட இக்காலத்தில், நீ துணிவைத் துணையாக்கினால் உலகுக்குத் தூணாவாய்” என்று குழந்தைக்கு வீரமூட்டுகின்றார் திரு. ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி.

ஆனந்த வாசல்

ஆகாயத்த அண்ணாந்து பாத்து
அதிசயிக்கும் செல்லமே!!!
அது தொட்டுவிடுந்தூரந்தான்!
ஆழ்ந்த சிந்தனையில்
அமிழ்ந்திருக்கும் ஆரணங்கே!!
கள்ளிப்பாலு..வரதட்சணை
கட்டையில போயாச்சு!!!
பொண்ணோ..ஆணோ…
போதும் ஒண்ணுன்னு..
புரிஞ்சுக்கிறகாலம்வந்தாச்சு!
சந்திராயன் ஏறி நிலவுக்கு
சுற்றுலா போகலாமா??
மங்கள்யானில் பயணித்து
செவ்வாய்தோசம் கழிக்கலாமா?
மங்கையரின் பேராண்மை
கங்கையைப்போல் பிரவாகித்து
எங்கும் பிரகாசிக்கும்
இந்த நூற்றாண்டில் உதித்து
மந்தகாசப் புன்னகையில்
எதிர்கால யோசனையோ??
துணிவையே துணையாக்கி
துயரங்களை உரமாக்கி
துவளாமல் நீ வளர்ந்து
தூணாவாய் உலகத்துக்கு!!

*****

”மின்னிடும் விண்மீனும், தண்ணிலவும், தணற் சூரியனும் அந்தரக் கோள்களும் காட்டும் சுந்தர வித்தைகளின் காரணத்தைக் கற்றுத்தெளிவாய் கண்மணியே” என்று குழந்தையிடம் வேண்டுகின்றார் திரு. ஆ.  செந்தில் குமார். 

சிந்தித்துத் தெளிவாய் பாப்பா…!

அண்ணார்ந்துப் பார்த்து அதிசயிக்க
ஆயிரம் உண்டிங்கு பாப்பா…

ஒளியை உமிழும் கதிரவன்
உலகுக்கே ஆதாரம் பாப்பா…

முகிலில் உறைந்து மறைந்த
மழைத்துளி அதிசயம் பாப்பா…

வெள்ளொளிச் சிதறல் வானவில்
வானின் அதிசயம் பாப்பா…

எல்லையேயின்றி நீளும் பெருவெளி
எத்தனை அதிசயம் பாப்பா…

அங்கு அந்தரத்திலிருக்கும் கோள்கள்
அனைத்தும் அதிசயம் பாப்பா…

மனதின் சிறகுகள் விரிந்தால்
மலையும் மடுவாகும் பாப்பா…

மின்னிடும் விண்மீன் கூட்டம்!
தண்ணொளி வழங்கிடும் நிலவு!
தனலாய்க் கொதிக்கும் ஆதவன்!
பளிச்சென வெட்டும் மின்னல்!
பொழிந்திடும் தூய மழைத்துளி! இன்னும் 
எத்தனை! எத்தனை! எத்தனை!
எத்தனை அதிசயம் இயற்கையில்!
இவையனைத்துக்கும் காரணம் யாதென 
சிந்தித்து தெளிவாய் பாப்பா…!

*****

”குழந்தையிவள் நடைகண்டு கோலமயில் வெட்கும்; கூனல்பிறை நெற்றிகண்டு நிலவுகூடச் சொக்கும்” என்று வண்ணமகளின் வடிவழகை எண்ணத் தூரிகையால் எழிலாய் வரைந்துகாட்டியிருக்கின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன்.

வண்ணமகள் வடிவுகண்டு வானவில்லும் நிமிரும்
வானம்கூட கீழிறங்கி வணக்கம்சொல்லி சிரிக்கும்
கூனல்பிறை நெற்றிகண்டு நிலவுகூட சிலிர்க்கும்
குழந்தையிவள் நடைகண்டு கோலமயில் வெட்கும்!

கன்னங்குழி சிரிப்பினிலே கவிதைகளும் விளையும்
காலையிளங் கதிர்போல கண்கள்கூட ஒளிரும்
பிஞ்சுமகள் ஸ்பரிசத்தில் பிரளயங்கள் அடங்கும்
பஞ்சுநிகர் மெல்லடியில் பாவங்கள் கரையும்!

குழலோடு யாழொலியும் கூடி நின்று ஒலிக்கும்
குழந்தையிவள் மழலையிலே இசையரங்கு நடக்கும்
குட்டிமகள் அணைப்பினிலே கோடைகூட குளிரும்
குற்றால சாரலென கொஞ்சும் மொழி பேசும்!

எழுந்திவள் நடக்கையிலே என்நாடு உயரும்
எட்டெட்டுத் திசையெங்கும் என்தமிழும் மிளிரும்
அழகியிவள் கைகளாலேஅற்புதங்கள் நிகழும்
அனைவரையும் ஒன்றாக்கி அகிலத்தை வெல்லும்!

*****

”சின்ன நிலாவின் எண்ணத்தில் உலா வருவதென்ன? காசுக்கு விலைபோகும் கல்வியா? தாய்வழிக் கல்வியின் புறக்கணிப்பா? முதியோரின் அவல வாழ்வா?” என வினாத் தொடுக்கின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

பெண் தெய்வம்

வானத்து நிலவை ரசிக்கின்றதோ!
இந்த அழகுச் சின்ன நிலா!
அழகுக் கண்ணம்மா உன்னை நிலா என நினைத்து!
நட்சத்திரக் கூட்டம் பூமிக்கு வந்து விடப் போகிறது!
ஆசைக் கண்ணம்மா! வானத்து நிலா, உன் அழகில் நாணி!
ஓடி ஒளிந்து கொள்ளப் போகிறது!
சின்னக் கண்ணம்மா! உன் முகத்தை மலரென நினைத்து!
வண்டுகள் தேனெடுக்க வந்து விடப் போகிறது!
அது சரி! நீ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்!
காசுக்கு கல்வியை விற்கும் நிலையை நினைத்தாயோ!
தமிழ் வழிக் கல்வியை புறக்கணிப்பதை நினைத்தாயோ!
ஓடி விளையாட மறந்த பிள்ளைகளை நினைத்தாயோ!
ஆண், பெண் அனைவரும் அலை பேசிக்கு அடிமையானதை
நினைத்தாயோ!
தாத்தா, பாட்டிக்கு, முதியோர் இல்லம், நிரந்தரமானதை
நினைத்தாயோ!
அனைத்தும் மாறும் மயங்காதே!
நல்லதே நடக்கும் கலங்காதே!
நாளைய உலகம் உங்கள் கையில்!
ஆண் உயர்வு பெறுவது பெண்ணாலே!
நல்லது நடப்பது பெண்ணாலே!
கருவில் சுமப்பது பெண் தானே!
பெற்றுக் கொடுப்பது பெண் தானே!
தாயாய்,தமக்கையாய், தங்கையாய்!
மனைவியாய், தோழியாய், மகளாய்!
பல உருவெடுத்து, உலகைக் காக்கும்!
தெய்வமும் பெண் தானே!

*****

கள்ளிப்பாலுக்குத் தப்பிய பெண் குழந்தைகள், வளர்ந்தபின் காமுகரின் கைகளிலிருந்து தப்ப வேண்டும்; மணவாழ்வில் மாமியார்க் கொடுமையிலிருந்து தப்ப வேண்டும் என்று எதிர்காலத்தை எண்ணிக் கலங்கும் பெண் மகவைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

குழந்தையின் கேள்வி

கள்ளிப் பாலுக்கும்
கழனி நெல்லுக்கும்,
கடை மாத்திரைக்கும்
தப்பிப் பிறந்துவிட்டோம்..

பிஞ்சென்றும் பாராத
வஞ்சகரின்
காமக் கண்களில் படாமல்
கவனமாய் வளரவேண்டும்..

பாகுபாட்டுடனே
கிடைக்கும் கல்வியிலும்,
பணியினிலும்
கிடைப்பதில்லை பாதுகாப்பு..

தடைகள் மிக்கக்
காதல் வாழ்வைக் கடந்து,
காலடி வைக்கும்
மணவாழ்விலும்
மலைபோல் தடைகள்-
மாமியார்,
மண்ணெண்ணெயென்று பல..

பெரும்பாடுபட்டு
பிள்ளைகளை வளர்த்துவிட்டு,
பின்னாளில்
போவோமோ முதியோர் இல்லம்..

இப்படி இருக்குது
பல கேள்வி எம்போலப்
பெண்கள் வாழ்வினிலே..

இதற்கென்ன பதில்,
இறைவா நீசொல்
இப்போதே…!

*****

மங்குலை யொத்த குழலோடும், முகையவிழ் மலர் சிரிப்போடும், செங்கனிவாய் சிந்தும் முறுவலோடும் சிந்தைகவரும் பெண்மகவுக்கு சுந்தரத் தமிழில் தாலாட்டுப் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

தாலாட்டு!

மங்கல வேளையில்நீ வந்து பிறந்தாய்
………..மாங்கல் யத்துக்குக் கிடைத்த பரிசாக
மங்காத செல்வத்தையும் கொடுப் பாய்
………..மண்ணை யாள வந்தாயோ தாலேலோ.!

மங்குலை யொத்த கருங் குழலொடும்
……….. முகையவிழ் மலர் போல் சிரிப்பொடும்
செங்கனி வாய்ச் சிவந்த இதழொடும்
………..சிரிக்கு மென் செல்லமே கண்ணுறங்கு.!

ஐயமில் வளர்ந்து நாளைநீ வீட்டையும்
………..ஆளப் போகும் முத்தே முத்தாரமே
வையகமே மாதரால் சுகம் பெறுமாம்
………..பொய்யிலா நிலை யுறுவாய் தாலேலே.!

பாராய் எனை…உனைநான் புகழ்வேன்
………..பாங்குடன் உனைத் தாலாட் டுவேன்.!
ஆராயென் மனதை வளைய வருவாய்
……….ஆர் கண்ணும்படு முன்நீ கண்ணுறங்கு.!

விரும் பியே நானுனைப் பாடுவேன்
……….விரலால் தூளி யசைத்து அயர்ந்தேன்
துரும்பாவேன் நீயும் தூங்கவிலை யெனின்
……….சோதியே சுகமாய் நீ கண்ணுறங்கு.!

அம்மா வெனும் மழலைச் சொல்லால்
……….அனைத் தையும் நானுடன் மறப்பேன்
சும்மா நானினி இருப்பேனோ என்
……….சுகமானது சூரியன் போலுதய மாகும்.!

*****

”பிணையேர் மடநோக்கை விட்டு, நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையொடு பாரதியின் புதுமைப்பெண்ணாய்ப் பாரில் வாழ்ந்து, வரலாற்றில் தடம் பதிப்பாய்!” என்று அண்ணாந்துபார்க்கும் எழில்நிலவுக்கு நன்மொழி புகட்டுகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

அண்ணாந்து பார்க்கும் அழகுப் பெண்ணே!

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டு
பாரதி காட்டிய புதுமைப் பெண்ணாய்
பாரினில் வாழ பழகு இப்போதே.

பிணைநேர் மடநோக்கும் நாணும் உனக்கு
அணியல்ல அவை பிணிகள்
‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்‘
என்றுரைத்த பாரதியின் இலட்சியப் பெண் நீயன்றோ!

புலி விரட்ட முறமெடுத்தாள் அக்காலத் தமிழச்சி
பகை விரட்டப் புலியானாள் தற்காலத் தமிழச்சி.
அந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் பூத்தவள் நீ –உன்
சொந்த வரலாற்றைப் பொன்னெழுத்திற் பொறி.

காற்றிலேறு விண்ணைச்சாடு ககனமெங்கும் தாவித்திரிந்து
ஆற்றல் மிக்குற அண்டமளந்து
அறிவின் திருவாய் அவனியில் மிளிர்

ஆழக்கடலின் அடிவரை சென்று வா
அகிலத்திருக்கும் மலைமுடிகளிலே
ஏறிச் சென்று இயற்கையை அளந்திடு
இருக்கும் அனைத்திலும் உன்தடம் பதித்திடு

புதிய கலைகள் பூத நுட்ப
விதிகள் கூறும் வேதியல், இயற்பியல்
எதிலும் சளையாதுன்றன் திறனை
எடுத்துக்காட்டி எங்கும் வியாபி.

*****

குழந்தையின் எழிற்தோற்றத்தில் ஈடுபட்டு, அற்புதக் கவிதைகளைப் படைத்துத் தந்திருக்கின்றார்கள் கவிஞர்கள். அவர்கட்கு என் பாராட்டு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வானது இனி…

ஆற்றலென்றனை பால சக்தி!

காந்தப் பார்வையில் ஆகாச கோசமோ
காந்தள் பிடியில் பிரிந்த வஞ்சுருளோ
மோந்தா மூச்சில் எதிர்விசைச் சாடலோ
ஏந்தாப் புதிர் விடுக்கும் செந்தாள் ஊசலோ

அந்தாரத்திலெழும் மந்தார மாயத்தால்
சாந்தாச் சிமிழியில் புலவாத பேச்சோ
சேந்தாவடுக்கில் வெளிநிலை விளக்கமோ
சிந்தாச்சிந்தையே ஆற்றலென்றனை பால சக்தி!

சின்னஞ்சிறு மழலையின் காந்தப் பார்வையையும் அதன் காந்தள் பிடியினின்று பிரிந்துநிற்கும் காகிதச் சுருளையும் கவினோடு காட்சிப்படுத்தியிருக்கின்றது இக்கவிதை.

கவிதைக்கு அழகு சொற்சிக்கனமும்; கருத்துச் செறிவும். அவ்வகையில் சிறிய சொற்களில் விரிந்த பொருளை நுட்பமாய் அடக்கித் தந்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. அவ்வைமகளை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 149-இன் முடிவுகள்

  1. அன்பு மேகலா இராமமூர்த்தி அவர்களே!
    வணக்கம்
    தங்கள் ஊக்கத்திற்கு நன்றி!
    அன்புடனும் உண்மையுடனும்
    அவ்வைமகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *