-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண்,  அவுஸ்திரேலியா

நிலவென்போம்  மலரென்போம்  நீதானே  உலகென்போம்
அழகெல்லாம்  உன்னிடத்தே  ஆரம்பம்  ஆகுதென்போம்
வரமாக  வந்திருக்கும்  வாழ்வென்று  கூறிநின்று
வையத்தில்  மகளிர்தமை  வாழ்த்தியே  மகிழ்ந்திடுவோம்!

பொன்னென்போம்  புகழென்போம்  பொறுமைக்கு  நிகரென்போம்
மண்ணினையும்  பெண்ணென்போம்  மதிப்புடனே வணங்கிடுவோம்
ஓடுகின்ற  நதியினுக்கும்  பெண்பெயரைச்  சூட்டிநின்று
உலகினிலே  பெண்மைதனை  உயர்வென்றே  வாழ்த்திநிற்போம்!

மனிதனது  வாழ்க்கையிலே  மகளிர்நிலை உயர்வாகும்
மகளிர்நிலை  தாழ்வுற்றால்   மனிதவாழ்வு  கீழாகும்
ஒழுக்கமுடை  மகளிர்தாம்  உன்னதத்தின் இருப்பிடமே
ஒழுக்கமது  குலைந்துவிடின்  உலகவாழ்வே  சீரிழக்கும்!

நாடுயர  வீடுயர  நல்மகளிர்  தேவையன்றோ
நல்லொழுக்கப்  பிறப்பிடமே  நல்மகளிர்  பிறப்பாகும்
தீயொழுக்கம்   மகளிரிடம்  குடிகொண்டு விட்டுவிட்டால்
திறலுடைய  சமுதாயம்   சிறப்பிழந்து போகுமன்றோ!

அடக்கு  முறைக்குள் அடங்கிநின்றார்  மகளிர்கள்
அவர்வாழ்வில்   சோதனைகள்  அலையலையாய்  வந்தனவே
இலக்கியத்தில்  உயர்வாக  வலம்வந்த  மகளிர்கள்
இவ்வுலகில்  இடர்ப்பட்டு  ஏக்கமுற்று  இருந்தனரே!

பாரதியின்  பாட்டாலே  பலமகளிர்  துடித்தெழுந்தார்
பட்டதுன்பம்  எடுத்தெறிய  பாய்ச்சலுடன்  வந்தார்கள்
எட்டய  புரத்தாரின்  வழிவந்த  பலபுலவர்
கொட்டிநின்ற  வார்த்தைகளால்  கொடிபிடித்தார்  மகளிரெலாம்!

மகளிர்தொடா துறைகளிப்போ  மாநிலத்தில்  இல்லையன்றோ?
மண்தொட்டு  விண்வரைக்கும்   மகளிர்தமைக் கண்டிடலாம்
பட்டம்பல  பெற்றுவிட்டார்  திட்டம்பல  தீட்டுகிறார்
பாருலகில்  மகளிரிப்போ  பகலவன்போல் வந்துவிட்டார்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *