க. பாலசுப்பிரமணியன்

 

பொறுத்தார் பூமி ஆள்வார்

“அவசரப் படாதீர்கள். நிதானமாகச் செயல்படுங்கள்” என்று நாம் சொல்லும்பொழுது “ என்ன சொல்கின்றீர்கள் அய்யா. நாமெல்லாம் ஒரு அவசரமான உலகத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடித்தால்  நாம் பின்னுக்குத் தள்ளப்படமாட்டோமா”  என்று பலர் முணுமுணுப்பது காதில் விழுகின்றது. ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். வேகம் வேறு, அவசரம் வேறு. சில நேரங்களில் ஒரு செயலைக்  குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்காகவோ அல்லது செயல்படுத்துவதற்காகவோ நாம் வேகமாகச் செயல்பட முனைகின்றோம். ஆனால் வேகமாகச் செயல்படும்பொழுதும் நாம் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். நிதானமில்லாத செயல் தவறுகளுக்கும் குழப்பதிற்கும் வழிவகுக்கும்.

வேகம், அவசரம், நிதானம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவது நமது மனமே. நமது விருப்பு வெறுப்பு மற்றும் தேவைகளுக்குத் தகுந்தவாறு மனம் செயல்பட்டு அதனால் ஏற்படும் உந்துதல்களால் உணர்வுகள் பாதிக்கப்பட்டு நமது மூளைக்கு அனுப்பப்படும் தாக்கங்கள் நம்முடைய செயல்களின் வடிவங்களை நிர்ணயிக்கின்றன. உடல்-மூளை இவற்றின் இணைந்த செயல்களைப் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதற்கு அழகான விளக்கம் அளிக்கின்றன.

மனம் போன போக்கில் போகக்கூடாது என்று பல அறிஞர்களும் சமயத் தலைவர்களும் மன இயல் நிபுணர்களும் வலியுறுத்தியிருக்கின்றார்கள். மனத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான செயல். அது நினைத்தவுடன் நடக்கக்கூடிய செயல் அல்ல. சிறிது சிறிதாகப் பழக்கத்தின் மூலமாகத் தான் அதை நாம் செயல்படுத்த முடியும்.

ஒரு மனிதனுடைய சொர்கத்தையும் நரகத்தையும் நிர்ணயிப்பது அவன் மனமே, என ஆங்கிலத்தின் மிகப்பெரிய கவியாக விளங்கிய மில்டன் தனது காப்பியத்தில் கூறுகின்றார். “நீ உன் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள் இல்லாவிடில் நீ அதன் கட்டுப்பாட்டில் வாழ நேரிடும்’ என்ற மனித மேம்பாடு மற்றும் வள இயலில் மேதையாக விளங்கும் நெப்போலியன் ஹில் என்பவர் கூறுகின்றார்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களில் பலர் வாழ்க்கையில் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்தவர்கள். உலகின் மிகப்பெரிய அறிவியல் மேதையாகவும் கண்டுபிடிப்பாளராகவும் விளங்கிய ஐசக் நியூட்டன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. -“ஒரு நாள் அவர் தன்னுடைய கண்டுபிடிப்புக்களின் குறிப்புக்களைத் தன்னுடைய மேசையின் மீது வைத்துவிட்டு சற்று வெளியே சென்றிருந்தார் . அங்கே வெளிச்சத்திற்காக ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டு அது ஒளிர்விட்டுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவர் செல்லமாக வளர்த்த அவருடைய பூனை மேசையின் மீது தாவிட அதிர்வில் மெழுகுவர்த்தி கீழே விழுந்திட அந்தக் குறிப்புக்கள் தீக்கிரையாகின. திரும்பி வந்த நியூட்டன் தன்னுடைய இவ்வளவு கடினமான உழைப்பின் குறிப்புக்கள் தீக்கிரையானதைக் கண்டும் சிறிதும் அதிர்ச்சி அடையாமலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமலும் அந்தப் பூனையை அன்புடன் தடவிக் கொடுத்தார். இது அவர் தன் உணர்வுகள் மீதும் மனதின் மீதும் கொண்டுள்ள கட்டுப்பாட்டை தெளிவாக விளக்குகின்றது.

நம்முடைய மனத்தைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால் நாம் செய்யும் வேலைகளில் நிதானத்தையும் பொறுமையையும் முன்வைத்து அந்தச் செயலை விவேகத்துடனும் அழகாகவும் சரியான முறையிலும் செய்யமுடியும்.

பொறுமையும் நிதானமும் ஒரு மனிதனின் தயக்கத்திற்கு அறிகுறி அல்ல. பொறுமையும் நிதானமும் ஒரு மனிதனின் அறியாமைக்கோ அல்லது இயலாமைக்கோ அறிகுறி அல்ல. பொறுமையும் நிதானமும் ஒரு மனிதனின் கவனக்குறைவின் அறிகுறி அல்ல.

பல நேரங்களில் பொறுமையும் நிதானமும் தெளிவான சிந்தனைக்கும் சரியான முடிவுகள் எடுப்பதற்கும் வழித்துணையாக அமைகின்றது. அவசர புத்தியும் நிதானமின்மையும் கொண்டவர்கள் பல நேரங்களில் தவறுகள் செய்வது மட்டுமின்றி நேரத்தையும் , வளங்களையும், ஆதாரங்களையும் தொலைத்து நிற்கின்றனர்.

“இமயத்தின் முனிவர்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் நான் படித்த கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு அனுபவமும் முதிர்ச்சியும் வாய்ந்த முனிவருக்கு சில சீடர்கள் இருக்கின்றார்கள். இதில் ஒரு சீடனுக்குத் தன்னுடைய குருவின் மீது கோபமும் ஆத்திரமும் வருகின்றது. அவர் தமக்குத் தெரிந்த வித்தைகளையும் திறன்கள் அனைத்தையும் நமக்கு ஏன் உடனே கற்றுத் தரமாட்டேன் என்கிறார் என்ற கோபம். விரக்தி அடைந்த அந்தச் சீடன் இவரை விட்டு நீங்கி இன்னொரு குருவைத் தேடிச் செல்ல விழைகின்றான். இவனுடைய குருவும் சிரித்துக்கொண்டே அவனுக்கு ஆசி வழங்கி வழியனுப்புகின்றார்.

சுமார் இருபது ஆண்டுகள் கழித்து அந்தச் சீடன் பல திறன்களைக் கற்றுக்கொண்டு இந்த குருவிடம் வந்து தன் திறன்களை வெளிக்காட்ட நினைத்து மிக கர்வத்துடன் வருகின்றான். அவனை வரவேற்ற குருவிடம் தன பெருமைகளை எடுத்துச் சொல்ல அவர் ” நீ அறிந்த திறன்களில் மிகவும் சிறப்பானதான ஒன்றைச் சொல்” எனக் கேட்கின்றார். அவனும் பெருமையுடன் ” குருவே, நான் என் வாயைத் திறந்தவுடன் என்னுடைய நாக்கிலிருந்து நெருப்பை வரவழைக்க முடியும்” என்று சொல்கின்றான்.

உடனே அந்த குருவும்  ” அற்புதம்! பாராட்டுக்கள் ! பெருமைப்படுகின்றேன்.  ஆனால் இந்தத் திறனைப் பெற உனக்கு எத்தனை காலம் ஆனது? ” என்று கேட்கின்றார். அதற்கு  அவனும்  ” இதைக் கற்றுக்கொள்ள எனக்கு இருபது ஆண்டுகள் ஆனது. மிகவும் கடினமானப் பயிற்சி” என்றான்

குரு  சிரித்துக்கொண்டே சொன்னார்  “அட முட்டாளே, ஒரு சிறிய தீக்குச்சியால் உரசினால் சில வினாடிகளில் கிடைத்துவிடும் நெருப்புக்கு உன்னுடைய வாழ்க்கையின் இருப்பது ஆண்டுகளை வீணடித்துவிட்டாயே ”

ஒரு செயலில் நாம் ஈடுபடுவதற்கு முன்னால் நன்கு யோசிக்க வேண்டும். பொறுமையுடனும்  நிதானத்துடனும் தெளிவுடனும் அலசி ஆராய்ந்து அதில் ஈடுபடவேண்டும்.

வாழ்க்கையில் சற்று பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்துப் பார்க்கலாமே !

 

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *