நிர்மலா ராகவன்

 

மூக்கை நுழைக்கலாமா?

“உங்கள் கணவர் எதுவரை படித்திருக்கிறார்?” நேர்முகத் தேர்வில் ஒரு இளம்பெண்ணைக் கேட்டார்கள்.

“அதற்கும் நீங்கள் விளம்பரம் செய்திருக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று எதிர்க்கேள்வி கேட்டவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவள் செய்தது சரியென்றே தோன்றுகிறது.

பிறர் என்ன செய்கிறார்கள் என்றறியும் வேண்டாத ஆர்வம் உடையவர்கள்தாம் அத்தகைய கேள்விகளைக் கேட்பார்கள். இவர்களுக்கு யாராவது நிம்மதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருந்தால் பிடிக்காது. எப்போதும் அவர்களது அதிகாரமே ஓங்கியிருக்க வேண்டும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது இவர்களுக்கு.

கதை

ராஜன் ஒரு படித்த முட்டாள். நாம் குடித்துவிட்டு, வெகு நேரம் கழித்து வீட்டுக்குப் போனோமே, நம்முடன் இருந்த நண்பனும் அப்படித்தானே வீட்டில் `பாட்டு’ வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பான்?’ என்று அறியும் நப்பாசை அவனுக்கு.

தொலைபேசியில் நண்பனின் வீட்டை அழைத்து, “நேற்றிரவு உன் அப்பா எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தார்?” என்று நண்பனின் மகளைக் கேட்டான் – மிக முக்கியம்போல்! “ஐந்து மணிக்கு என்று என்னிடம் சொல்கிறார். பொய்தானே?”

“உங்களிடம் அப்பா சொல்வதை நம்பாமல், என்னிடம் கேட்கிறீர்களா? நல்ல நண்பர் நீங்கள்!” என்று சாடி, தந்தையின் கௌரவத்தைக் காப்பாற்றினாள் மகள்.

சரிதான், வேறு திசையில் தன் கைவரிசையைக் காட்டலாம் என்று முடிவெடுத்தான் ராஜன்.

“என் மனைவி உன் மனைவியைவிட கண்டிப்பானவள்!’ என்று பெருமை பேச ஆரம்பித்தான் நண்பனிடம். “நான் குடித்துவிட்டு வந்தால், எப்படிக் கத்துவாள், தெரியுமா?”

பிறரது வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கவே சிலர் இம்மாதிரி பேசுகிறார்கள் என்பது புரிந்தால், அலட்சியப்படுத்தலாம்.

ஏன் அப்படிச் செய்கிறார்கள்?

ராஜனைப்போல் பிறரது விவகாரங்களில் அநாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள் தம் பிரச்னைகளை நினைக்கவும் விரும்பாதவர்கள் . ஏதோ காரணத்தால் நிம்மதி குலைந்து போயிருக்கலாம். பிறர் நன்றாக இருந்தால் மட்டும் எப்படிப் பொறுப்பார்கள்? தாம் உற்ற நண்பர்தான் என்று நம்பவைப்பதுபோல், சாமர்த்தியமாக அவ்வப்போது வீட்டுக்கு வந்து, பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் தவறுவதில்லை இவர்கள்!

இத்தகைய சிலர் நண்பர்களின் துணைவியரையும் விட்டு வைப்பதில்லை. வேடிக்கை என்றெண்ணி, சீண்டிப் பார்ப்பர். `நேற்று உங்கள் கணவர் இரண்டு, மூன்று பெண்களுடன் காரில் போவதைப் பார்த்தேனே!’

வாகன வசதி இல்லாதவர்களுக்கு உதவியாகப் போயிருக்கலாம். அல்லது, அவர்களில் ஒருத்திக்கு உடல்நலக் குறைவாக இருக்கலாம்.

பிறரது குடும்ப விவகாரத்தில் தலையிடும் இதுபோன்ற நபர்களின் பேச்சை அலட்சியம் செய்வது நல்லது. அதைவிட்டு, கணவரிடம் அதுபற்றி சந்தேகத்துடனோ, கோபத்துடனோ பேசினால் ஒன்றுமில்லாத சமாசாரம் பூதாகாரமாக வெடிக்கும்.

வாழ்க்கைத் துணைவரையோ, பெற்றோரையோ, உற்றவரையோ அவமரியாதையாகப் பேசுபவரின் உறவைத் துண்டித்துக்கொண்டால்தான் நிம்மதி நிலைக்கும். இல்லாவிட்டால், சிறுகச் சிறுக நம்மை அவர் பக்கம் சாய்க்கப் பார்ப்பார்.

தம்பதியரின் பிணைப்பு

இருவருக்குள் மட்டுமே இருக்க வேண்டியது தாம்பத்திய உறவு. பலருடனும் தமது உறவை, அதன் குறைகளைப்பற்றிப் பேசுபவர் தன்னையும் அறியாது பிறரது குறுக்கீட்டை வரவேற்று, நிலைமையை இன்னும் மோசமாக்குகிறார். பிறரின் குறுக்கீடு எப்போதும் நன்மையை விளைவிப்பதாக இருக்காது.

`மகனுக்குத் தன்மேல் இருந்த அன்பில் பங்கு கேட்க வந்துவிட்டாளே!’ என்ற பொருமலுடன், மருமகள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் குறுக்கிடும் மாமியாரும், “எல்லாரும் உன்னைப்போல் பெண்டாட்டிதாசனாக இருப்பார்களா!’ என்று கேலி செய்யும் நாத்தனாரும் ஒரு குடும்பம் இன்பமாக வாழவிடாது தடுக்கும் எதிரிகள்.

இவர்கள் ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று தம்பதியர் அமைதியாக ஆராயும்போது, அவர்கள் உறவு பலப்படுகிறது. பொறுக்க முடியாது போய்விட்டால், நம்பகமான ஒருவருடன் பகிர்ந்து, தீர்வைத் தேடலாம்.

மூக்கை நுழைப்பதால் நன்மையா?

சில சமயங்களில், குறுக்கீடுகூட நன்மை விளைவிப்பதாக இருக்கிறது.

கதை

எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஏலியம்மாவின் வாசற்கதவு எப்போதும் தாளிடப்பட்டிருக்கும். அக்கம்பக்கத்தில் யாருடனும் பேச்சு வைத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.

ஒவ்வொரு இரவும், பத்து மணிக்குமேல் தன் மூன்று வயதுக் குழந்தையை அடிப்பாள் ஏலியம்மா. குழந்தை, எமிலி, `அம்மா! அம்மா!’ என்று கதறும்.

என்னால் பொறுக்கவே முடியவில்லை. பகலிலும் வாய் ஓயாது எமிலியைத் திட்டுவாள்.

எந்தத் தாயாவது இப்படிச் செய்வாளா?

யார், எப்படி குறுக்கிடுவது?

ஒரு முறை, அவளுடைய கணவரின் குரல் கேட்டது: ”ஏய்! சும்மாச் சும்மா பிள்ளையை விரட்டாதே!” (எமிலி தந்தையின் சாயல்).

“பால் குடிக்காம தூங்குதுங்க! எப்படிச் சும்மா விடறது?” என்ற ஆத்திரக்குரல் கேட்டது, இரவின் நிசப்தத்தில்.

அந்தக் குழந்தையோ இளைத்துக்கொண்டே போயிற்று.

ஒரு சாயந்திர வேளை, எங்கள் வீட்டின் இன்னொரு பக்கத்தில் இருந்த இளம்பெண்ணிடம் இதுபற்றி பேசினேன்.

“எனக்கும் கேட்டிருக்கிறது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழந்தையின் பரிதாபமான குரல் கேட்கும்,” என்று அவள் கலக்கத்துடன் ஆமோதித்தாள்.

குடும்ப விவகாரம், நாம் என்ன செய்வது என்று எங்கள் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தினோம்.

அன்றிரவு. “Hey, next door lady!” என்று என்னைக் கூவி அழைத்தாள் ஏலியம்மா. `நான் உன்னுடன் பேச வேண்டும்,’ என்றாள், அதிகாரமாக. தமிழச்சிதான். ஆனாலும், ஆங்கிலத்தில் கத்தினாள்.

“உனக்குப் பேச வேண்டுமானால், நீ இங்கே வா!” என்றேன், அலட்சியமாக.

அவள் வரவில்லை. நான் ஏன் அவள் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டும், பிறருடன் அவளைப்பற்றிக் கண்டபடி பேசுகிறேன் என்றெல்லாம் கத்திக்கொண்டே இருந்தாள்.

என்னை மிரட்ட முடியவில்லையே என்று மறுநாள் என் மூன்று வயது மகளை ஒரேயடியாகத் திட்ட, பயத்தில் அவளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது.

என் கணவர் அவள் வீட்டுக்குப் போய், “என் குழந்தைக்கு ஏதாவது ஆனால், உன்னைச் சும்மா விடமாட்டேன்!” என்று திட்டிவிட்டு வந்தார்.

“உங்கள் மனைவி மிக நல்லவள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்! அவளோ..!” என்று அவள் கத்தியது என் காதில் விழுவதற்காகவே என்று எனக்குப் புரிந்தது.

“எனக்கு என் மனைவியை நன்றாகத் தெரியும்!” என்று சொல்லிவிட்டு வந்தாராம். (பிறர்முன் தம்பதியர் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் இருந்தால், அவர்கள் பிணைப்பு இறுகும்).

மறுநாளிலிருந்து ஒரு நல்ல திருப்பம். அதற்குமுன் எப்போதும் கிழிந்த ஆடைகளில் காணப்பட்ட குழந்தை எமிலி பட்டுப்பாவாடையில் மிளிர்ந்தாள். தினமும், என் குழந்தைகளுக்கு எங்கள் வீட்டில் பூத்த டிசம்பர் பூவைத் தொடுத்து தலையில் சூட்டுவேன். ஏலியம்மாயும் தேடிப் பிடித்து அதே மலர்களை வாங்கி, தன் குழந்தையின் தலைகொள்ளாமல் வைப்பாள்! அன்பாக நடத்துகிறாளாம்!

ஏலியம்மா மகப்பேறில்லாதவள், மைத்துனரின் குழந்தையை தத்து எடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று பிறகு கேள்விப்பட்டேன்.

பொதுவாக, பிறரது விஷயங்களில் குறுக்கிடுவது நல்லதல்லதான். இதனால் சண்டை மூளும். நிம்மதியும், அமைதியும் சிறிது காலம் பறிபோகும். இவைகளைத் தவிர்க்கவே பலரும் தம் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகிறார்கள் என்றே தோன்றுகிறது.

ஆனால், நன்மை விளையுமானால், துணியலாம். யாரும் குறுக்கிடாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகுமே!

(மலேசியாவில், சில வருடங்களுக்குமுன் இதேபோல், அடுக்குமாடி வீடொன்றில் ஒரு குழந்தை இரவு பகலாக ஓயாது அழ, அக்கம்பக்கத்தினர் அதைக் கேட்டும் கேளாததுபோல் இருந்துவிட்டார்கள். அந்தச் சிறுவன் உடலெல்லாம் தீயால் சுட்ட காயத்தால் இறந்ததும் அவர்கள் குற்ற உணர்வால் துடித்துப்போயினர். அதன்பின்னர் குழந்தை வதை செய்பவர்களைத் தண்டிக்க சட்டம் அமலுக்கு வந்தது).

அடுத்த வீட்டு விவகாரத்தில் நான் செய்ததில் எனக்கு வருத்தமோ, அவமானமோ கிடையாது. எப்போதாவது அந்தக் குழந்தை எமிலியின் நினைவு வரும். தாய் தனக்கு இழைத்த கொடுமை மாறி, எப்படித் தன்மீது இப்படி (போலியாகவாவது) அன்பைப் பொழிகிறாள் என்று அதற்குத் தெரிந்திருக்காது. அதற்காக எனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது ஒரு சிறு சிரிப்பு எழும்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *