-மேகலா இராமமூர்த்தி 

படக்கவிதைப் போட்டி 150ஆவது வாரத்தைத் தொட்டு வெற்றிநடை போட்டுவருகின்றது. இதனைச் சாத்தியமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் வல்லமையின் நெஞ்சார்ந்த நன்றி.

உணவூட்டி மகிழும் காகங்களை அழகாய்ப் படம்பிடித்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. படக்கவிதை போட்டிக்கு இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஆற்றல்மிகு இவ்விரு மகளிரும் என் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியோர்.

காகத்தின் சிறப்பியல்புகளாகச் சுட்டப்பெறுபவை இரண்டு. ஒன்று இனத்தைக் கூவியழைத்துப் பகுத்துண்ணும் அவற்றின் உயர்பண்பு.

இதனை,

”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள” என்பார் வள்ளுவப் பேரறிஞர்.

மற்றொன்று, வீட்டுக்கு விருந்தினர் வரப்போவதை முன்கூட்டியே அறிந்து அறிவிக்கும் ஆற்றல் அவற்றிற்குண்டு எனும் நம்மவரின் நம்பிக்கை.

”…….பல்லா பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன்
விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்
தேந்தினுஞ் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த
செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.” (குறுந்: 210

என்ற குறுந்தொகைப்பாடல் காகம் கரைந்தவாறே பொருள்தேடச் சென்றிருந்த தலைவன் மீண்டமையால் அதற்கு ஏழு கிண்ணங்களில் நெய்பெய்த வெண்ணெல்லரிசிச் சோற்றைப் பலியாக இடுவதும் சிறிதே என்று தோழி கூறுவதைப் பதிவுசெய்திருக்கின்றது. இப்பாடலில் காக்கையைப் புகழ்ந்துபாடிய நச்செள்ளையார் எனும் பெண்பாற்புலவர்க்குக் ’காக்கைபாடினியார்’ எனும் சிறப்புப்பெயரே கிடைத்துவிட்டமை அறிந்து மகிழத்தக்கது.

இனி, நம் புலவர்கள் காக்கையின் புகழ்பாடும் நேரம்…

”அள்ளிக்கொடுக்கும் மனமிருந்தால் துள்ளிவந்திடும் மனமகிழ்ச்சி; வள்ளல் குணத்தையும் தாய்ப்பாசத்தையும் கற்றுத்தரும் பள்ளிக்கூடமாய்த் திகழ்கின்றன இந்தக் காக்கைகள்” என்கிறார் திரு. ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி.

பகிர்வதே அமிர்தம்!!

காக்கா காட்டுது தாய்பாசம்_அவை
கத்துக்கொடுக்கிறபள்ளிக்கூடம்!!
சோக்காவாழ்கிற பாலபாடம்_அதை
சொல்லிக்கொடுக்கிறகுருபீடம்!!
இயற்கைஇடர் வந்த நேரம்
இன்னல் நீக்க இணைந்தோம்!
அதனால் அதிலே மீண்டோம்
ஆறுதல் நாமே ஆனோம்!!!
இன்னும் இருக்குது ஏழ்மை
இருப்போர்இதயம் கூர்மை
அன்பில் விலகும் வறுமை
அப்படி வாழ்ந்தால் பெருமை!!
கோடிகோடியாச்சம்பாதிச்சுட்டு
கொட்டிவச்சுட்டு செத்துட்டாலும்
கொண்டுபோறது ஒன்னுமில்ல!!
கொடுத்துச்சிவப்பவர்மரிப்பதில்ல!!
பாவம்செய்கிற மனிதருக்கும்
பலனைத்ததருவது செய்தருமம்!
பண்ணிடும்புண்ணியம்கூடவரும்
முன்னையவினைகளும்ஓடிவிடும்!
அள்ளிக்கொடுக்கும் மனமிருந்தால்
துள்ளிவந்திடும் மனமகிழ்ச்சி!!
சல்லிக்காசில் ஆனந்தமில்லை
வள்ளல்களுக்கு வானமேஎல்லை!!

*****

”கடமைகளைக் கேள்விகளால் சிதைக்காத, தலைமுறை காக்கும் அன்பெனும் அருங்குணத்தைச் சிறிய பறவைகள் சிறப்பாய் நம் சிந்தையில் புகுத்துகின்றனவே” என்று வியக்கிறார் திரு. சக்தி சக்திதாசன்.

ஊட்டி விடும் அழகு
அன்றிலிருந்து இன்றுவரை
நாகரீகம் எனும் சொல்லுக்கு
விலை போகாத அன்பு
காலம் காலமாய் தமக்குள்ள
கடமையை கேள்விகள் எனும்
பெயரில் சிதைத்திடாமல்
தலைமுறையைக் காத்திடும் பண்பு
இயற்கை எனும் இறை உலகில்
ஈந்தது அனைவர்க்கும் ஒன்றே
மனிதர் எனும் இனம் மட்டும்
அறிவால் உணர்ந்து விட்டோம் எனும்
ஆணவத்தால் தம் அடிப்படைப்
பண்புகளை ஆழமாய்ப் புதைத்து விட்டு
கொக்கரித்து நிற்கும் வேளையில்
சிறிய இந்தப் பறவைகள் எமக்கு
சிந்தையில் புகுத்துவது ஏனோ
முள் போல் தைக்கிறது

*****

”காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அற்புதக் காட்சி; பாசத்தின் மேன்மைக்குச் சிறந்ததோர் சாட்சி! குயிலின் முட்டையையும் அடைகாக்கும் காகம்; உயிர்தந்த பெற்றோரையும் புறக்கணிக்கும் மாந்த இனம். கண்ணியமாய் வாழ்வதெப்படி எனக் காக்கையிடம் கற்றுக்கொள்ளுங்கள் மானிடரே!” என்று ஆலோசனை சொல்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

பொது நலப் பறவை

காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அற்புதக் காட்சி!
பாசத்தின் மேன்மைக்கு இதுவே சாட்சி!
உணவைப் பார்த்ததும்! அனைத்தும் மறந்து போகும் மனிதனுக்கு!
உணவைப் பார்த்ததும்! சுற்றம் நினைவு வரும் காகத்துக்கு!
தனித்துண்ணும் மனிதனைப் பார்ப்பது வழக்கமான காட்சி !
பகிர்ந்துண்ணும் காக்கை கூட்டத்தைப் பார்ப்பது!
கண் கொள்ளாக் காட்சி!
குயிலின் முட்டையை அடை காப்பது காகத்தின் வழக்கம்!
பெற்றோரைக் கைவிடுவது பிள்ளைகள் பழக்கம்!
காகம் ஒன்று மரணித்தால், காக்கைகள் ஒன்று கூடி
ஓலமிடும்!
மனிதன் ஒருவன் மரணித்தால் மனித இனம்
வேடிக்கை பார்த்து நிற்கும்!
இயற்கை இடரை இனம் கண்டு, மனிதருக்கு,
எச்சரிக்கை ஒலி எழுப்பும் காக்கை இனம்!
காக்கையை கொன்றழித்து!
கறி விருந்து, தின்றிருக்கும் மனித இனம்!
காரியம் முடிப்பதற்கு, பொய்யாய் புகழுரைக்கும் செய்கை தனை!
காக்காய் பிடிப்பதாய் உரைப்பது முறையாமோ!
சுயநலச் செயலுக்கு! பொது நல காக்கை தனை!
ஈடாய் சொல்வது சரியாமோ!
காக்கை வாழ்க்கையை அடி ஒற்றி மனிதன் நடந்திட்டால்!
பொது நல சமுதாயம் நிச்சயம் உருவாகும்!

*****

”மைவண்ணக் காக்கை, தன் கைவண்ணத்தால் உருவாக்கிய கூட்டில் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொறித்து, இரையூட்டும் காட்சி கண்ணுக்கும் கருத்துக்கும் அளிக்குதே மாட்சி” என்று காகத்தின் தாய்மைப் பண்பைத் தீந்தமிழில் விதந்தோதியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட தாய்மைப் பண்பு

மைவண்ணம் கொண்ட அக்காக்கை தன்
கைவண்ணம் கொண்டொரு கூட்டைக் கட்டி யாரும்
இலாவண்ணம் பார்த்து தன்னிணையோடு சேர்ந்து
நிலாவண்ணம் கொண்டநல் முட்டைகளை இட்டு
நிலைவண்ணம் கொண்டதை அடைகாத்துப் பேணி
கலைவண்ணம் கொண்டதன் குஞ்சொன்றை பொறித்தது!

கண்ணைக் காக்கின்ற இமைகளைப் போன்று
விண்முட்டும் அளவுக்கு பேரன்பைக் கொண்டு
எண்ணத்தில் தன்குஞ்சின் பசிப்போக்க உன்னி
மண்முழுதும் பறந்தோடி உழன்று தான்
உண்ணாது கொணர்ந்த இரையை தன்குஞ்சின்
தொண்டைக்குள் திணித்து அன்பைச் சொரிந்தது!

கண்ணுக்கு இனிதாகி விளங்கும் இக்காட்சி
விண்போற்றும் தாய்மைக்கு சிறந்ததோர் அடையாளம்
எண்ணத்திற்கும் அப்பாற்பட்டது தாயின் அன்பு
மண்ணுலகில் இருக்கின்ற அனைத்துயிர்க்கும் தாய்மை
உணர்வென்பது இயல்பான ஒன்று பகுத்தறிவும்
உணரஇயலாது தாய்மை யெனும் பண்பு!

*****

”பள்ளியில் பாடம் பயிலாத காகத்திடம் ஒற்றுமை எனும் உயர்பண்பு ஒளிர்கிறது; தாய்மை எனும் தனிப்பண்பு மிளிர்கிறது” என்று உளம் பூரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உதாரணமாய்…

குயிலதன் முட்டையும் சேர்த்தேதான்
கூட்டில் வைத்தே அடைகாக்கும்,
பயில வில்லைப் பண்பிதனைப்
பள்ளி யெதிலும் சேர்ந்தேதான்,
செயலில் ஒற்றுமை காட்டுமினம்
சேயைப் பேணிடும் சிறப்பைப்பார்,
உயர்ந்த தாய்மைச் சிறப்பினுக்கே
உதாரணம் என்றும் காக்கையாமே…!

*****

”அன்பெனும் ஊற்று பெருக்கெடுக்க, தன் குஞ்சுகளுக்குக் கவளம் ஊட்டிக் காத்துநிற்கின்றது காக பட்சி. நம் மக்களோ வீடுகளில் பிள்ளைகளுக்கு ஊட்டலை நிறுத்தி, ஓட்டல்களுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டதால் தாய்மைப் பண்பு நலிந்து உடலில் நோய்மை மலிந்துவிட்டது. ஆதலால், பட்சியைப்போல் நற்பெற்றோராய் வாழ்ந்து பிள்ளை போற்றுங்கள்” என்று வேண்டுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

பட்சி போற்றுதும்! பிள்ளை போற்றுதும் ! நற்பெற்றோரெனவே நீடு வாழுதும்!

பட்சி பறக்கா பசி பறக்க, புசிக்க பரக்காய் அலகெடுக்க
தட்சி நெருங்கி புயம் நெருக்கி நல்லுடல் நெளிய நின்றிருக்க
புட்சி ரசொக்க, கவளம் தர, ரசமும் ருசியும் செரிசொரிக்க
தீட்சி கொடுக்கும் காட்சிமையில் அன்பெனுமூற்று பெருக்கெடுக்க
கட்சி கரத்தொரு கருத்துயர பசிப்பிணியென்னும் பாவமற
குட்சி நிறைக்க அமுது கொடை நற்கருமங்கள் நாளுமெழ
முட்சி குறைக்க ஊட்டமிடும் சத்துச் சோற்றில் கவனமுற
நீட்சி விளைக்கும் மாட்சியொடு, ஈலாக்குழவி முகங்கண்டிரங்கும்
தேட்சி பெருக்கும் பிதாமகரும் ஈங்காயிரமாய் அறச்சாலையொடு
ஆட்சி மேவினர், காகம் போற்றினர், காக்கை சூத்திரம் கற்று தேறினர்
வீட்சி காணா பெருவரலாறும் அவனியில் ஆங்கே அவரெழுப்பினர்!
தாட்சி வந்தது, தளர்ச்சி மிகுந்தது, அன்னைதந்தையர் பலரும் இல்லமொழிந்தனர்
பிட்சி மலிந்தது அவலமிகுந்தது ஊட்டும் கதைக்கும் முறையும் ஒழிந்தது
உட்சி கோதி உள்ளம் கலக்க பெற்றோர் இல்லா முறைமை வளர்ந்தது
காட்சிப் பொருளாய் கடைப் பொருளாய்ப் பிள்ளைகள் பேணும் இழிவுமிகுந்தது
திட்சி கழித்து நல்லடிசிலிட்டு பார்த்துப் பரிமாறாக் கேடும் வந்தது
மாட்சிமை மறத்தல் வாடிக்கையென்றே மானுடப்பாதை மாறலானது!
வெட்சி மலராம் எம்மக்கள் ஊட்டல் துறந்தனர் ஓட்டல் புகுந்தனர்!
காட்சி காட்டும் அனைத்துணவும் திணிந்தன அவர்தம் இரைப்பைதனில்
நெட்சி நிகழுது, மானுடம் வீழுது! உண்டியும் திண்டியும் நாசம் செய்யுது!
இரட்சி போற்றுதல் ஈங்கிலையென்றால் முழுதாய் அழிவு நேருதல் உறுதி!

வேட்சி வேண்டும் அவா மீதுறவேண்டும் மக்கட்ச்செல்வம் நாம் பேணுதல் வேண்டும்!
மீட்சி நிறுத்தும் வேகமெழ ஞானக் கமண்டலமிங்கே உருண்டுருள காகப்
பட்சி போற்றுதும்! பிள்ளை போற்றுதும் ! நற்பெற்றோரெனவே நீடு வாழுதும்!

*****

”நிறம் கறுப்பாக இருந்தாலும் காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சே!” அண்டவெளி கறுப்பு; காலைப்பொழுது உருவாவதோ காரிருளின் கருப்பத்தில்” என்று கறுப்பின் சிறப்பைப் பேசுகின்றார் அறிவியல் கவிஞர் திரு. ஜெயபாரதன்.

கறுத்த நிறமாயினும், காண
வெறுப்பளிப்பினும்,
வாயில் முத்தமிட மனம்
மறுப்பினும்,
பஞ்ச வர்ணக் கிளிபோல்
பிஞ்சு பிறக்காத போதினும்,
காக்கைக்கும்
தன்குஞ்சு பொன்குஞ்சே !
அண்டவெளி நோக்கின்
அதுவும் கறுப்பு !
கருந்துளை ஒன்றில்
பிரபஞ்சம் உருவானது !
காரிருள்
கர்ப்பத்தில் உதயம் ஆவது
காலைப் பொழுது !
கதிரோன் கண்மூடினால்
காரிருள் திறக்கும் !
காரிருள் இல்லாத தாரணியில்
பேரொளிக்குப்
பிழைப்பில்லை ! சிறப்பில்லை !
என் புதல்வியின் நிறம்
அடுப்புக் கரி!
பிறந்த என் பேத்தியோ
பொன்னிலா!

*****

காகத்தின் சிறப்பைத் திறம்படத் தம் கவிதைகளில் பதிவுசெய்திருக்கின்றார்கள்  கவிஞர் பெருமக்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு..!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கடைச் சங்ககாலப் பெண்புலவரும் “விருந்துவரக்
……….கரைந்த காக்கையது பலி’யெனப் புகழ்ந்துரைத்தார்.!
உடனொத்த பொய்யாமொழிப் புலவன் மிகையாக
……….இதனைக் ‘கரவா கரைந்துண்ணும்’ குணமென்றான்.!
‘நடப்பதுவே நிற்பதுவே’ எனப்பாடிய மகாகவியோ
……….நந்த லாலாவைக் கண்டான் ‘காக்கைச் சிறகினிலே’.!
படத்தினிலேநான் காணுகிறேன்!பகுத்தறிவுளக் கரிய
……….பகிர்ந்துண்ணும் ஜீவியாக! பகவானின் வாகனமாக.!

பாட்டி வடைசுட்ட காக்காக் கதையும் காலத்துக்கும்
……….பகன்றுரைத்த பாடம்தானந்த “காகத்தின் தந்திரம்”.!
கொட்டிக் கிடக்கும் பணமிருந்தும் ‘எச்சிற்கையால்
……….காக்கா ஓட்டாதார்’ எனச்சிலருக்குப் பெயருண்டு.!
வேட்டியை மடித்துக்கட்டி அரசியல் சூழ்ச்சிசெயும்
……….வித்தகரை ‘காக்கா பிடித்து’ முன்னேரியவரென்பார்.!
வேட்டையாடி உண்ணும் ‘கருத்த மனமுடையோர்’
……….விட்டு வைக்கவில்லை குணமுடைய காக்கையும்.!

அண்டத்தில் பறைவையினம் ஆயிரமாம்! அதிலே
……….அருங் குணமுளது காக்கையினம்!அதனால்தானோ.!
அண்டங்காக்கை பரிமளம் மணிக்காக்கை எனப்பல
……….உருவமதில் வடிவம் கொண்டாராம் காகபுஜண்டர்.!
அண்டமுழுதும் பரந்துதிரிந்து கொண்ட ஞானத்தால்
……….அழியாத்தமிழில் உபநிடத மொன்றைப் படைத்தார்.!
அண்டத்தின் தேவையறிந்த மகேஸ்வரனும் அதை
……….ஆதாரத் தத்துவமாக்க அவருக்கருள் செய்தானே.!

காகத்துக்கு விருந்துவைக்க எண்ணிய சங்ககாலத் தோழி தொடங்கி, காகத்தில் நந்தலாலாவைக் கண்டுகளித்த பாரதிவரை காகம் குறித்த அரிய தகவல்கள் பலவற்றையும் தன் கவிதையில் பாங்குற அறியத் தந்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்புக்குரியவராகின்றார். அவருக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி 150-இன் முடிவுகள்

  1. பறவை இனங்களின் எத்துணையோ பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம், அதேபோல அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வீட்டுச் செல்லப்பிராணிகளாக கூண்டிலடைத்து வளர்க்கிறோம், அழகு பார்க்கிறோம் கொஞ்சுகிறோம்.

    ஆனால் பறவைகளிலேயே மிகவும் பாவப்பட்ட ஜன்மம் காக்கை ஒன்றுதான், அதன் நிறத்தாலே அதற்குப் பெருமை இல்லை, ஆனால் குணத்தால் பெருமையுண்டு. ஏனோ தெரியவில்லை அதனை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்ததாக இதுவரை சரித்திரமில்லை.

    ஒரு வழக்கம் மட்டும் இன்று வரை தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது, அது காக்கைக்கு உணவிடுவது, அதுவும் பித்ருக்களின் தோஷத்தை நீக்கும் என்கிற நம்பிக்கையால் மட்டுமே.

    ஒரு அம்மா காக்கைக்கு உணவிட்டு வருவதையும், அவருக்காகவே பல காக்கைகள் அவரைச் சுற்றி வட்டமிடுவதோடு மட்டுமல்லாமல், அவர் மடியில் அமர்ந்து கொண்டு கையிலிருக்கும் உணவை மட்டுமே எடுத்துச் சாப்பிடும் அற்புதத்தை யு டியூபில் பார்த்தேன். பொதுவாக காக்கை மனிதரிமிருந்து சற்று விலகியே இருக்கும், நாம் வளர்த்தாலும் அது நம்மேல் அது உட்காராது. இதுவும் ஒர் ஆச்சரியம்தான்.

    விஷயத்திற்கு வருவோம். படக்கவிதையில் காக்கைப் படத்துக்குக் கவிதை எழுதிய அனைத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் வல்லமையின் சார்பாக “காக்கைக்கு அர்ப்பணிப்போம்”. கவிஞர்களின் காக்கை பற்றிய சிந்தனையால் இன்று காக்கையின் பெருமை பலருக்குத் தெரிய வருகிறது.

    இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகவும், சிறந்த கவிதையாகவும் தேர்ந்தெடுத்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், கவிதைக்குப் படத்தை எடுத்த திருமிகு ராமலஷ்மி, படக்குழுமத்தின் ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பனுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நீண்ட நாட்களாக ஒரே ஒரு விண்ணப்பத்தை இங்கே வைக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த விண்ணப்பம் படத்தைத் தேர்ந்தெடுக்கும் ஆசிரியருக்கு மட்டுமே சம்பத்தப் பட்டது. அதாவது போட்டிக்காக வைக்கப்படும் படும் “பொதுவானதாக இயற்கை, வாழ்க்கை, அனுபவம், காதல், நட்பு” இப்படி பல துறைகளில் முற்றிலும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

    ஒருவரின் சொந்தப் படத்தைப் போட்டு கவிதை எழுதுவதை இதற்கு முன் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார், இனிவரும் போட்டிகளில் இதுபோன்ற சொந்தப் படங்கள் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். ஏனென்றால் பெரும்பாலான தின, வார, மாத இதழ்களில் வெளிவருகின்ற கவிதைகள் அனைத்துமே இவ்வித கொள்கையோடுதான் வெளிவருகிறது.

    அன்புடன் பெருவை பார்த்தசாரதி.

  2. எனது நண்பர் ஒருவர் காகபுஜண்டரைப் பற்றிக் கேட்டிருந்தார், காகபுஜண்டர் நினைத்த மாத்திரத்தில் காகவடிவம் எடுத்து உலகை வலம் வரக்கூடியவர், தன் புஜங்களிலே காகத்தை ஏந்தியிருப்பதாலும், காகவடிவமெடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளதாலும் இவரை “காகபுஜண்ட சித்தர்” என வரலாறு கூறுகிறது.

    மேலும், இவர் தாம் மட்டுமே தனியாக வழிபடவேண்டுமென தனக்கென ஒரு சிவலிங்கத்தை, அம்மையகரம் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம், இதன் சிறப்பை இங்கே உள்ள இணைப்பில் காணலாம்..

    http://temple.dinamalar.com/New.php?id=604

  3. காக்கைக்கா காகூகை
    “காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
    கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
    காக்கைக்குக் கைக்கைக்கா கா”
    – காளமேகப் புலவர்

    அர்த்தம் –
    காக்கை பகலில் ஆந்தையை ( கூகையை ) வெல்லும்.
    கூகை இரவில் காக்கையை வெல்லும்.

    அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும்.

    கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட கையாலாகி விடக்கூடும்

  4. காக்கைக்கா காகூகை [காக்கைக்கு ஆகா கூகை] – காகத்திற்கு கூகை (ஆந்தை) ஆகாது, இரவில் அது காக்கையை வெல்லும்
    கூகைக்கா காகாக்கை [கூகைக்கு ஆகா காக்கை] – கூகைக்கு காகம் ஆகாது, பகலில் இது கூகையை வெல்லும்
    கோக்குக்கூக் காக்கைக்குக் [கோக்கு கூ காக்கைக்கு] – கோ [மன்னன்] கூவை [உலகை/ நாட்டை] காக்க வேண்டுமாயின்
    கொக்கொக்க [கொக்கு ஒக்க] – கொக்கை போல இருக்க வேண்டும், அஃதாவது கொக்கு தனக்கு இரையாக மீன் சிக்கும் வரை காத்திருப்பதை போல மன்னவன் சரியான நேரம் பார்த்து செயலாற்ற வேண்டும், அவ்வாறு இல்லையென்றால்,
    கைக்கைக்கு காக்கைக்கு – கைக்கைக்கு [பகையிடமிருந்து] காப்பதற்கு
    கைக்கைக்கா கா [கைக்கு ஐக்கு ஆகா] – ஐக்கு [தலைவனுக்கு] கைக்கு ஆகா [செய்ய இயலாது].

  5. அன்பர் ஆ.செ அவர்கள் காக்கை பற்றி காளமேகப் புலவர் பாடியதைத் தெரிவித்து, மேலும் சற்று மிகையாக நம் “காக்கைத் தோழனுக்கு” புகழ் சேர்த்திருக்கிறார்.

    அன்றாடம் காக்கைக்கு உணவு வைக்காமல் நான் உணவருந்தியதில்லை. அலுவலகத்திலும் எனக்கு காக்கை நண்பர்கள் உண்டு.

    மேலான கருத்துப் பதிவுக்கு மிக்க நன்றி திரு செந்தில்குமார்.

    இதுபோல ஒவ்வொரு வல்லமை வாசகரும் தத்தமது கருத்துக்களை வெளியிட்டால், எழுதுபவருக்கும், படிப்பவருக்கும் மேன்மேலும் படிக்க வேண்டும் எனத் தோன்றும். ஆனால் ஒரு காலத்தில் வல்லமையில் நிறைய கருத்துப் பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தேன், இப்போது நேரமின்மை காரணமாக குறைந்துவிட்டது. இருந்தாலும் கருத்துப் பதிவுகளைப் படிக்கும்போது, நாம் நிறைய விஷயங்களை அறிய முடியும், அது ஒரு சமய்ம் நாம் அறிந்திராதவையாகக்கூட இருக்கலாம்….

    நன்றி…

  6. அன்பர் ஆ.செ அவர்கட்கு,

    காளமேகப் புலவரின் சிலேடைப் பாடலைப் படித்துவிட்டு, சிறுவயதிலேயே எனக்கு அவர்மீது ஈடுபாடு வந்ததால், அவ்வப்போது காளமேகப் புலவரின் சிலேடைத் திறனைக் கண்டு வியந்திருக்கிறேன்…

    தாங்கள் புலவரின் பாடலுக்கும் மிக அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள்.

    இதுபோல், இன்னும் எழுதுங்கள், அனைவரும் பயன்பெறுவோம்

  7. இணையத்தில் இப்படி ஒரு பதிவையும் படித்தேன்…

    “காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’

    என்னது காக்கா கறி சமைச்சு கருவாடு தின்பவர்தான் சைவர்களா என பதற வேண்டாம்..
    இது அப்படியே புரிஞ்சிக்கிட்டா இதன் தமிழ் விளையாட்டும் அர்த்தமும் புரியாமல் போகும்…

    காக்கை =கால் கை அளவு
    கறி சமைத்து= காய்கறி சமைத்து
    கரு வாடு =கரு எனும் உயிர் வாடும் என்று
    உண்பர் சைவர்= உண்பவர்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்

    அதாவது சிவனை வழிபாடு செய்யும் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்
    கால் வயிறு மட்டும் உண்பார்கள்..இதுதான் அவர்களது அடிப்படை நியதி…
    இதனல்தான் சிவனடியார்கள் எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள்
    இப்படி இருந்தால்தான் முக்திக்கு வழிகாட்டியான தவம்,யோகம் பயில முடியும்!!

  8. சகோதரர் திரு. பெருவை பார்த்த சாரதி ஐயா அவகளுக்கு, மிக்க நன்றி. இந்த பாடல் எனக்கும் சிறு வயது முதலே பிடிக்கும். தற்காலத்தில் விரல் நுனியில் உலகம் அடங்கியுள்ளது. இணையத்தில் தேடி பதிவிட்டுள்ளேன்.

    “காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்’’ விளக்கம் அருமை. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *