இந்துமத நூல்கள் பாடிய இசுலாமியப் புலவர்கள்

0

-முனைவர் இரா.வெங்கடேசன்

இந்திய வரலாறு என்பதே கட்டமைக்கப்பட்டதாகும். திட்டமிட்டே இங்கே வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒருநாட்டின் மேலாண்மை, சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் சார்ந்த நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ள வரலாறு ஒருபக்கச் சார்பு அடையாங்களைத் தாங்கியே நிற்கின்றது. இந்திய வரலாறு என்பது வட இந்திய வரலாற்றையும் தமிழக வரலாறு என்பது உயர்நிலையில் இருப்போரின் வரலாற்றையும் மட்டுமே பேசுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு. அருணாசலம் பிள்ளை, சமண நூல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘குண்டலகேசி, நீலகேசி கதைகளும் பின்னால் வந்த யசோதர காவியக் கதைகளும் கதைகள் என்ற அளவில் மட்டரகமான கதைகள். குண்டலகேசி ஒரு பெரிய பிசாசாவாள் என்று கூறியுள்ளார். தமிழில் மறுக்கமுடியாத ஆய்வாளராக இருக்கக்கூடிய மு.அருணாசலம். பிறமத நூல்களை (சமண, பௌத்த) இழிவாகக் கூறியதனை நாம் எவ்வாறு ஒப்புக்கொள்வது.

இதே போன்ற பல சிக்கல்கள் தமிழ் இலக்கிய வரலாறு முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாகச் சைவம், வைணவம், கிறித்துவம் சார்ந்த நூல்களைப் பேசிய அளவு இசுலாம் இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதை இலக்கிய வரலாற்று நூல்கள் தவிர்த்திருக்கின்றன. குறிப்பாக இசுலாம் மதத்தைச் சார்ந்த புலவர்கள் இந்து மத விடயங்கள் குறித்துப் பாடிய நூல்களைப் புறந்தள்ளியுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைத்தவர்களால் திட்டமிட்டே இது நிகழ்ந்திருக்கிறது.

இந்திய மண்ணில் இசுலாம் குறித்த புரிதல்கள் மிகக் குறைவே. எந்தவொரு மதமும் தனிமனிதரால் உருவாக்கப்படவில்லை. திடீரென்று தோன்றிவிடுவதுமில்லை. சமூகச் சிந்தனையின் ஒட்டுமொத்த விளைபொருளாகவே மதங்கள் தோன்றியுள்ளன. இசுலாமும் அப்படியாகவே தோற்றம்பெற்றது. அராபிய தேசமெங்கும் மக்கள் தாராளச் சிந்தனை கொண்டிருந்தனர். பழமையான மதத்தை நம்பியிருந்த அவர்கள் புதிய விடியலுக்காகக் காத்திருந்தனர். முகமது நபி (ஸல்) புதிய மதத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்பே அராபியர்கள் இசுலாம் சாராம்சம் அரபு மக்களின் ஆன்மீக உணர்வுகளில் கலந்திருந்தது.

“சமூகச் சிதைவு ஆன்மீக அவநம்பிக்கை ஆகியவற்றின் கடுமையான இருளில் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, அராபிய இறைத்தூதரின் நற்செய்தியானது நம்பிக்கை தரும் ஒரு விளக்காகக் காட்சியளித்தது. இம்மை, மறுமை குறித்து புதிய மதம் கூறிவந்த கருத்துக்கள் சாமான்ய மக்களின் சிந்தனையைக் கவர்ந்தன. இம்மண்ணுலக வாழ்க்கைக்கான போராட்டத்தில் தோல்வியுற்று எந்தப் பிடிப்புமின்றி கடவுளின் இருப்பு என்ற மூடநம்பிக்கையில் தங்களை ஈடுபடுத்தியிருந்த விரக்தி கொண்ட மக்களின் ஆன்மாக்களை இசுலாத்தின் வெற்றி முரசொலி விழிப்படையச் செய்தது.” (எம்.என்.ராய், 1999:40) 

விரக்தியின் விளிம்பிலிருந்த மக்களின் முன்னால் இசுலாம் புதிய நம்பிக்கைக்கான பாதையைத் திறந்து காட்டியது. கடுந்துறவறம் என்ற நிலையைக் கடந்த இசுலாம் சிந்தனை மக்களுக்கு புதிய வெளிச்சத்தைத் தந்தது.

“கி.பி.ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவிலேயே ஒரு புது வித ஞான ஒளி தோன்றியது. மறம் போக்கி அறம் புகுத்த முகமது நபிகள் (ஸல்) தோன்றினார். அவரின் அன்பாலும் திருநெறியாலும் அரேபியர்கள் ஈர்க்கப்பட்டனர். புத்துணர்ச்சி பெற்றார்கள். (அப்துல் ரஹீம்:1957:13).”

இசுலாம் மதம் மக்களின் மனங்களில் நிரம்பியது. வாழ்க்கையைக் காட்டிய மதத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் எகிப்தில் வாழ்ந்து வந்த சில அரேபியக் குடும்பங்கள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபின் கொடுங்கோல் ஆட்சிக்கு அஞ்சிக் கடல்வழியாகப் பாண்டிய நாட்டிற்கு வந்தனர். தமிழ்நாட்டிற்கு 1923ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமிஷ்கைச் சேர்ந்த அபுல்பிதா இசுலாமியர்களும் தமிழர்களும் ஒற்றுமையோடு வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“கி.பி.13ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் முகம்மது இப்னு கலாவூனின் கொடுமை தாங்க முடியாமல் சில அரேபியக் குடும்பங்கள் வைசயித் ஜமாலுத்தின் அவர்களின் தலைமையில் காயல்பட்டினத்தில் வந்து குடியேறினர்.” (அப்துல் ரஹீம்:1957)

தமிழகத்தில் வாழத் தொடங்கிய இசுலாமியர்கள் அமைச்சர்களாக, போர்வீரர்களாக, நகரப் பாதுகாப்பாளர்களாக, பொற்காசு செய்து தருவோராக, வணிகர்களாக விளங்கினர். மக்கள் இவர்களை மரக்காயர், லெப்பை, இராவுத்தர், சாகிபு என்ற பல பெயர்களால் அழைத்தனர். இசுலாமியர்களை மன்னர்கள் ஏற்றுக்கொண்டதால் மக்களும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இசுலாம் மதம் இந்து மதத்தை அழிக்க வந்த மதமாக இந்துக்கள் கருதவில்லை. அதனால் சாமானியர்களான இந்துக்களுக்குள்ளும் இசுலாமியர்களுக்குள்ளும் நல்ல உறவு ஏற்பட்டது. இதைத்தாண்டிய இரு சமூகத்திற்குமிடையிலான வணிக உறவென்பது முக்கியமானது. இயற்கையாகவே வணிக நோக்குடைய இசுலாமியர்கள் இந்துக்களோடு கலக்கும்போது புதிய வெளிகள் வணிகத்தில் உருவாக்கப்படுகிறது. இடைவெளியை இருசமூகமும் அனுமதிக்காததால் புரிந்துணர்வு என்பது முக்கிய இடம்பெறுகிறது.

“அரேபியாவின் குதிரைகளைத் தமிழ் மன்னர்கள் பெரிதும் விரும்பினர். தமிழகத்திற்கு அரபு நாடுகளிலிருந்து குதிரைகள் கொண்டு வரப்பட்டன. இந்தக் குதிரை வணிகம் இருநாடுகளிடையே பெரும் நட்புறவை ஏற்படுத்தியது. இந்த உறவு தமிழகத்திற்கு அரபு வணிகர் வந்து தங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அரேபியக் குதிரைகளைப் பராமரிக்கவும் உணவு கொடுத்துப் பேணி வளர்க்கவும் பயிற்சி பெற்றோர் அந்நாளில் தமிழகத்தில் அரிதாகவே இருந்தனர். எனவே இந்தப் பணிகளைச் செய்ய அரபு நாடுகளிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்களில் பலர் இங்கேயே தங்கியிருந்து தமிழ் மக்களோடு ஒன்றிணைந்து மண உறவு கொண்டு வாழ்ந்து வரலாயினர்.” (எஸ்.ஏ.முகம்மது இபுராகிம் 2009:41)

இந்துக்களோடு வாழ்ந்து வரக்கூடிய இசுலாமியர்களைத் தமிழ்ப் புலவர்கள் செய்த படைப்புக்களோடு இசுலாமியர்கள் செய்த படைப்புக்களை ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சி இங்கே பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. இசுலாமியப் புலவர்கள் இசுலாம் மார்க்கம் குறித்து மட்டுமே பாடியுள்ளனர் என்ற மைய நீரோட்டத்திலிருந்து விலகிப்பார்த்தால் இசுலாம் புலவர்கள் இந்து மதம் குறித்துப் பாடியுள்ளனர். இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே சமூக உறவு மட்டுமல்லாது இலக்கிய உறவு மேம்பட்டிருந்தது. இந்துப் புலவர்கள் இசுலாம் மதத்தை உயர்வாகப் பேசுவதும் இசுலாம் புலவர்கள் இந்துப் பண்பாட்டை உயர்வாகப் பேசுவதும் இலக்கியரீதியாகத் தமிழில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்து ஆவணப்படுத்தல் மிகக் குறைவாக நடைபெற்றுள்ளது.

“1868இல் பீர்காதர் ஒலி ராவுத்தர் திருவாசகத்தைப் பதிப்பிக்கின்றார். 1835ஆம் ஆண்டிலிருந்தே சுமார் ஆறு ஏழு பதிப்புக்கள் ராவுத்தர் பதிப்பிற்கு முன்னரே வெளிவந்திருக்கின்றன. ஆனால் திருவாசகத்தின் தொடக்கமாக உள்ள சிவபுராணம் என்ற பகுதி முன் பதிப்புக்களில் எல்லாம் சிவபுராணத்து அகவல் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அப்படி அதனை அகவல் என்று குறிப்பிடுவது தமிழ் இலக்கண மரபின்படி பிழையானது என்பதையும் உண்மையில் அது கலிவெண்பா என்பதை யாப்பருங்கலம், தொல்காப்பியம் நூற்பாக்களின் வழியாக நிரூபித்து அந்தச் செய்யுள் வெண்தளையால் அமைந்த கலிவெண்பா என்று சரியாகக் குறிப்பிடுகின்றார். பின்னர் இன்று வரை வந்த பதிப்புக்கள் அனைத்தும் ராவுத்தர் பதிப்பை அடியொற்றி அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.” (பொ.வேல்சாமி, 2014:30).

இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பலரைப் பற்றிய பதிவுகள் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாறுகளிலும் இசுலாம் இலக்கிய வரலாறுகளிலும் பதிவாகவில்லை. அவ்வாறு புறக்கணிப்புக்கு உள்ளானவர்களின் சாந்தாதி அசுவகம் (மகாபாரதம்) மகாபாரத அம்மானை பாடிய சையது முகம்மது அண்ணாவியார், பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமிமீது கும்பாபிஷேக வழிநடைச்சிந்து பாடிய அப்துல்காதிறு ராவுத்தர் போன்றோர் முக்கியமானோர். இவர்கள் பிறப்பால் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டவர்கள். மானுட சமூகத்தின் மீதான சமத்துவத்தையும் மதிப்பையும் கொண்டவர்கள். அதனால் மதங்கள் அனைத்தும் சமமே என்ற கொள்கையோடு இவர்கள் வாழ முடிந்தது.

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செய்யிது முகமது அண்ணாவியார் பாண்டி நாட்டினர். பிறருக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து அதன்வழி மொழியையும் சமயத்தையும் வளர்க்கும் அண்ணாவியார் எனும் குடும்பத்தினர். அண்ணாவி என்பது கிராமத்து ஆசிரியர்களைக் குறிக்கும் சொல்லாகும். கவி பாடுவதிலும் பெருங்காப்பியங்கள் செய்வதிலும் இனிமையைக் கண்டவராதலால் இவரை மக்கள் அமிர்தகவி என அழைத்தனர். சமயப் பொறை கொண்ட இவர் தமிழ்ப்புராணங்கள் வடமொழிப் புராணங்கள் சிலவற்றைக் காவியமாக்கினார். இவர்தம் கவிதை முருகனைக் காட்டிய வரலாறு கொண்டது. யமகம், திரிபு, அந்தாதி, மாலைமாற்று முதலான அரிய பாடல்களை விரைந்து பாடும் ஆற்றல் கொண்டவர். நாகூரில் சில காலம் கல்வி கற்பித்தார். பிற்காலத்தில் ஜவ்வாது புலவர் என்று பாராட்டப் பெற்ற பீர்ஜவ்வாது இவரிடம் கல்வி கற்றவர்.

சையிது முகம்மது அண்ணாவியார் நாகூரில் இருந்தபோது ஷைரு வஹாபுதீன் என்ற ஆன்மீகப் பெரியோரின் நட்பு கிடைத்தது. அவரால் தீட்சை பெற்றார் அண்ணாவியார். பின்னர் ஐயம்பேட்டையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அதிரையில் திண்ணைப் பள்ளியில் கதிர்வேலு உபாத்தியாயர் தம்மிடம் இருந்த மந்திரக் கலையைக் காட்டி மக்களை அச்சுறுத்தி வாழ்ந்து வந்தார். அச்சம் கொண்ட மக்கள் கதிர்வேலு உபாத்தியாயரை அடக்க மாந்திரீகக் கலையில் வல்லவரான அண்ணாவியாரை லெப்பைத் தம்பிமரக்காயர் என்னும் பெருவள்ளல் ஒத்துழைப்போடு அழைத்து வந்தனர். அண்ணாவியார் அதிரைக்கு வந்தவுடன் மக்கள் அச்சமின்றி நடமாடினர். இதனைக் கண்ட கதிர்வேலு உபாத்தியாயர் நட்போடு பழகுவதுபோல் அண்ணாவியாரிடம் நடித்தார். ஒருமுறை காவடி எடுக்கப் பழனிக்குச் செல்கிறேன் என்று உபாத்தியாயர் கூற முருகனைக் காணப் பழனி ஏன் செல்ல வேண்டும் இங்கேயே முருகன் வருவான் எனக் கூறுகிறார் அண்ணாவியார்.

“நாளும் இடமும் குறிக்கப்பட்டன. செழியன் குளத்தருகே பந்தல் போடப்பட்டது. மக்கள் வெள்ளம் கரைகட்டி நின்றது. அண்ணாவியாரும் உபாத்தியாயரும் எதிரும் புதிருமாய் அமர்ந்தனர். சையிது முகம்மது அண்ணாவியார் முன்னரே தாம் பாடி வைத்திருந்த ஏட்டை எடுத்தார். கதிர்வேலு கையில் கொடுத்தார். ‘ஏட்டிலிருக்கும் மந்திரக் கவிகளை உரக்கப்படியும் உமது வேதம் காட்சி நல்கும் என்றார். கதிர்வேலு படித்தார். பதினான்கு கவிதைகள் (சுப்பிரமணியர் பிரசன்ன பதிகம்) வரை உரக்கப் படித்தார். என்ன விந்தை! கதிர்வேலு தம் கந்தவேளைக் கண்ணாரக் கண்டு கொண்டார். அண்ணாவியாரின் ஆற்றலை அறிந்துகொண்டார். அண்ணாவியார் இவ்விடத்தில் காட்டியது ‘தொலை உணர்தல்’ (டெலிபதி) எனும் தொலைக்காட்சியாகும்.” (தா.கோ.பரமசிவம், 2004:சு)

அண்ணாவியார் பத்துப்புராணங்களை இயற்றியுள்ளார். நூர்நாமா, அலிநாமா, சாந்தாதி அசுவமகம், பாரத அம்மானை போன்றவை குறிப்பிடத்தக்கவை. சையது முகம்மது அண்ணாவியார் சுப்பிரமண்யரை வரவழைத்த செய்யுட்கள் அடங்கிய சிறுநூல் ‘சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம்’ என்ற பெயருடன் மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன. அதற்குப் பல இந்தத் தலைவர்களே சாற்றுக்கவிகள் பாடியுள்ளனர். மேலும் அண்ணாவியார் பாடிய மகாபாரத அம்மானையின் பதிப்புகளால் அஷ்டாவதானம் இராமசாமிப்பிள்ளை அப்பதிகம் பத்தாவது செய்யுள் பாடிய தருணம் அங்ஙனம் சூழ்ந்த சர்வவீரர்களும் மயிர்க்கூச்சலிட்டு நின்றனர். இது ஒரு நிகழ்வே போதும். இந்து சமயத்தின் மீதான அண்ணாவியார் கொண்டிருந்த பற்றுதலைச் சொல்வதற்கு. அண்ணாவியார் அலிநாமா நூலை அரங்கேற்றியபோது லெப்பை தம்பி மரக்காயர் அவருக்குச் சரியாசனம் வழங்கிக் கனகமாரி பொழிந்தார் என்பது வரலாறாகும்.

மகாபாரதத்தின் ஒரு சிறிய பருவத்தை 4100 பாடல்களில் பாடிய இப்புலவர் பாரதக்கதை முழுவதையும் பாடியிருந்தால் அது ஒரு லட்சம் கவிதைகளையும் தாண்டியிருக்கும் அதிராம்பட்டினத்தில் பள்ளிவாசலின் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாவியாரின் மகனார் சையிது மீராலெப்பை தந்தை இறந்தபிறகு அவரது மீது சமரகவி பாடினார். ஜீவரத்னகவி என்ற சிறப்புப் பெயருடன் விளங்கினார். மனை அலங்காரம், மதீனக்கலம்பகம், வாள்விருத்தம், பரிவிருத்தம், யானை விருத்தம் போன்றவை பாடியுள்ளார்.

அண்ணாவியார் எடுத்தாண்ட உவமைகளும் உருவகங்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. சீவகசிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் காணப்பெறும் இலக்கிய மரபுகளை முற்றிலும் அடியொற்றிய கவிகளைப் பாடியுள்ளார்.

“காவெலாம் மலரின் கூட்டம் கனியெலாம் தேனின் கூட்டம்
பூவெல்லாம் மிஞிறின் கூட்டம் பொருப்பியக் கோட்டின் கூட்டம்
மாவெலாம் குயிலின் கூட்டம் வரம்பெலாம் வாழைக்கூட்டம்
நாவெலாம் பாவின் கூட்டம் நாடெலாம் செல்வக் கூட்டம்”

என்று குருநாட்டின் வளத்தைக் காட்டுமிடத்துக் கம்பன் அயோத்தி வளத்தை காட்டுவதைப் போல் காட்டியுள்ளார். அண்ணாவியாரின் சமயப்பொறை வியப்புக்கும் பாராட்டுக்கும் உரிய நிலையில் காணப்படுகிறது.

எடுத்துக்கொண்ட கதை பாரதக்கதை. பாரதக்கதையின் மூலவேர் கண்ணன் எனவே கண்ணனை அவர் வாழ்த்திப்பாடுகின்ற பாடல்கள் ஆழ்வார் ஒருவர் பாடும் உருக்கத்துக்கு இணையானவை எனில் அது மிகையாகாது.

“கருதரிய பெரும்சலதிச் சலசவனப்
புதுமை சொல்லக் கடவர் யாரோ?
அரவில் நடித்ததும் மருது சகடை உதைத்
ததும் சிலைபெண் ஆக்கி கங்கை
விரவ அரன் முடிதரிக்க உதவுபதத்
தின்பெருமை வினாவப் பொன்னின்
நிருதனைச் சென்று அருமறையை வெளிக்கொணர்ந்த
பெரும் பொருளை நேசிப்போமே”                   (சாந்தாதி. சயிந்தவ.1)

இப்பாடலில் திருமாலின் அவதாரங்கள் அடுக்கப்பெற்று வாழ்த்தப்பெறுகின்றன. நிரல் நிரையில் அவதாரங்கள் பின்னிலிருந்து முன்னர்க் கூறப்பட்டுள்ளன.

அண்ணாவியாரின் சாந்தாதி அசுவமகம் கவனம் பெறாமல் போனது போலவே M.K.M. அப்துல் காதிறு ராவுத்தர் அவர்கள் இயற்றிய பாம்பன் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து நூலும் கவனம் பெறாமல் போனது வரலாற்றுப்பிழையாகும். இந்நூல் மதுரை ஸ்ரீ மீனாம்பிகை பிரசில் பதிக்கப்பெற்று 1904ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இச்சிந்து நூல் 30 கண்ணிகள் கொண்டது. இந்நூலில்,

“இது சிவகங்கை வக்கீலும், இந்திரகுல ராஜவம்ச அகம்படியார் டிஸ்டிரிக் ட்டுசலைப் பிரஸிடெண்டும் தமிழபிமானியும், சீமானும், சிவநேசச் செல்வரும் ஆகிய மகா – ஸ்ரீ எஸ். சீனமுருகுபிள்ளையவர்கள் நடாத்தும் பாம்பன் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேக தரிசனைக்குச் செல்வார் பலருள் ஒரு தலைவன் தனது ஆருயிர்க்காதலிக்கு அச்சிவகங்கையிலிருந்து பாம்பன் நகர் வரையுமுள்ள மார்க்க விஷேடங்களையும் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷகப் பெருமை பலவற்றையும் எடுத்துக் கூறுந்தன்மையில் விளங்கி நிற்பது.” (M.K.M. அப்துல்காதிறு ராவுத்தர், 1904:முகவுரை). 

என்று முகவுரையில் கூறியுள்ளார். காப்புச் செய்யுளில் முருகனுக்கும் சரஸ்வதிக்கும் துதி பாடியுள்ளார். தன் காதலிக்கு வழி காண்பித்துச் செல்லும் கவிகள் இன்பச் சுவைகளைத் தரக்கூடியவை.

“தாலுகாக் கச்சேரி யீதே அது
தானேதெப் பக்குளம் மாதே அருள்
தங்கும் கௌரி விநாயகர் கோவில் ரா
ஜாக்கள் அரண்மனை பாராய் இனித்
தான்கடை வீதியும் நேராய் இதில்
தக்கவியாபாரம் சீராய் செயும்
சாமர்த்தியத்தைநீ தேராய் விலை
தந்தாலெது வுந்தாமத
மின்றாயுட னின்றீகுவர்
சற்புத்தியில் வெர்மிஞ்சுவர்
ஒப்பற்றவ ணிகதந்திரர்
சரசத்திலி தம்பற்பல
சொலிமிக்கத னம்பெற்றவர்
தருமத்திலும் நினைவுற்றவர்
இனிமற்றுள தெதிர்நிற்பது” (பத்மினி)

என இவ்வாறு வழியைக் காட்டிக்கொண்டு செல்லும்போதே முருகனின் பெருமைகளை விரிவாகப் பேசியுள்ளார். இந்நூலை இசுலாமியப் புலவர் ஒருவர் பாடுவதாக நாம் நினைக்க முடியாது. அருணகிரியார் பாடுவதைப் போலப் பாடியுள்ளார்.

அண்ணாவியாரின் சாந்தாதி அசுவமகம் M.K.M, அப்துல்காதிறு ராவுத்தரின் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து இரண்டு நூல்களும் பதிப்பு நெறிப்படி பதிப்பிக்கப்பட்டுள்ளது. செய்யுள் முதற்குறிப்பு அகராதி, நூலைப் புரிந்து கொள்வதற்கான முன்னுரை, ஏடு கிடைத்த முறை போன்றவை தரப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு நூல்களிலும் உரை இல்லை. தமிழில் நல்லிணக்கண  நூல்களாக உள்ள இந்நூல்கள் உரையுடன் வெளிவரவேண்டும். சமயப்பொறையை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல இந்நூல்களின் வழியை நாடலாம்.

உசாத்துணை நூல்கள் 

  1. கோவிந்தசாமி (தமிழாக்கம்) எம்.என்.ராய் 1999இ இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம், விடியல் பதிப்பகம்.
  2. அப்துல் ரஹீம் 195இ முஸ்லீம் தமிழ்ப் புலவர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் சென்னை
  3. எஸ்.ஏ. முகம்மது இபுறாகிம் 2009 கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு, சிராஜும் முனீர் நற்பணி மன்றம் கடையநல்லூர்.
  4. பொ.வேல்சாமி 2014 வரலாறு என்பது கற்பிதம், முகம் வெளியீடு, கோவை – 5.
  5. எம்.கே. எம். அப்துல்காதிறு ராவுத்தர் 1904 பாம்பன் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து, மீனாம்பிகை பிரஸ் மதுரை.

*****

கட்டுரையாளர்,
இணைப்பேராசிரியர்,
இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *