காலமும்  வரலாறும்

 கணியன்பாலன்

காலம் குறித்தப் புரிதலோ, காலம் குறித்தத் தெளிவோ இன்றி எழுதப்படும் வரலாறு, ஒரு முழுமையான வரலாறாக இருக்க முடியாது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும், கி.பி. 21ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமிடயேயான வேறுபாடுகள் உள்ளன. இந்த இரண்டு காலகட்ட உலகமும் வேறு வேறானவை. அதில் வாழ்ந்த, வாழ்ந்து வருகிற மனிதர்களும் வேறு வேறானவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம். சான்றாக 17ஆம் நூற்றாண்டு தமிழன் ஒருவனால், 21ஆம் நூற்றாண்டுத் தமிழனின் வாழ்வை கற்பனை கொண்டுகூட பார்க்கமுடியாது. இரண்டு வாழ்வுக்குமிடையேயான வாழ்க்கை, வசதிகளும், சமூகத் தனிமனித உறவுமுறைகளும், அரசியல், பொருளாதாரம் கலை, இலக்கியம் போன்றவைகளும் கற்பனையிலும்கூட காணமுடியாத அளவு மாற்றம் அடைந்துள்ளன. ஆகவே வரலாற்றில் காலம் மிகமிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டாகவேண்டும். நவீன இயற்பியலில் வெளி, காலம்(SPACE & TIME) ஆகிய இரண்டும் அனைத்து அறிவியலுக்குமான அடிப்படையாகக் கருதப்படுகிறது. வெளி-காலம் ஆகியவற்றால் ஆன பொருளாக நமது அண்டம் இருக்கிறது எனவும், காலம் என்பது நமது அண்டத்தின்(UNIVERSE) நான்காவது பரிமாணமாக(FOURTH DIMENSION) இருக்கிறது எனவும் நவீன அறிவியல் கூறுகிறது. நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன் ஆக்கிங் அவர்கள் எழுதிய “காலம்” என்ற நூல் அண்டம், காலம் முதலியன குறித்த விரிவான விளக்கத்தைத்தருகிறது என்பதோடு காலத்தின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

பழந்தமிழர் மரபும் காலமும்:

“முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்

இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே” என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம், அகத்திணையியல்-4). இங்கு ‘நிலம்’ என்பது இடம் அல்லது வெளி என்ற பொருளிலும், ‘பொழுது’ என்பது காலம் என்ற பொருளிலும் சொல்லப்பட்டுள்ளது. நமது பழந்தமிழக மரபுப்படி, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றிலும் முதற்பொருள் என்பது அனைத்திற்கும் அடிப்படையாகக் கருதப்பட்டது. நவீன அறிவியல், வெளி, காலம் ஆகிய இரண்டையும் அனைத்திற்கும் அடிப்படையாகக் கருதுவதுபோன்றே தொல்காப்பியரும் இடம், காலம் என்பதை அனைத்திற்கும் அடிப்படையான முதற்பொருள் எனக் கூறியுள்ளார். அதனால்தான் மொழியியல் அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள், “மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும்”(one  of  the finest  monuments of human intelligence) என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று தொல்காப்பியம்” எனக்கூறியுள்ளார் எனலாம்(1).

எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்தத் தொல்கபிலர் ஒரு தமிழர் ஆவார் என்பதோடு அவர் ஒரு பொருள்முதல் மெய்யியல் அறிஞரும் ஆவார். அவர் வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் எனவும், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை எனவும் கூறியுள்ளதாகக் கூறுகிறார் கிரபின் என்கிற உருசிய அறிஞர்(2). இந்த எண்ணியச்சிந்தனையை அடிப்படையாகக்கொண்டுதான் இடம், காலம் ஆகியவற்றின் இயல்புகள்தான் முதற்பொருள் என்கிறார் தொல்காப்பியர். ஆகவே நமது முன்னோர்கள் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு தொல்கபிலரும்,  தொல்காப்பியருமே  சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆவர். அறிவியல், மெய்யியல் ஆகியவற்றில் காலம் எந்தளவு முக்கியமானதோ அதைவிட ‘வரலாறு’ என்பதில் காலத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஆகவே காலம் பற்றிய தெளிவு இன்றி படைக்கும் வரலாறு ஒரு முழுமையான வரலாறாக இருக்காது.

பழந்தமிழக வரலாற்றில் காலம்:

பழந்தமிழக வரலாற்றில் காலம் குறித்தத் தெளிவு இதுவரை உருவாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சேரன் செங்குட்டுவன், பரணர், அதியமான் போன்றவர்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் அவர்களை கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதுகிற அவலநிலை இருந்துவருகிறது. இரண்டுக்குமிடையே நான்கு நூற்றாண்டுகள் கால இடைவெளி இருக்கிறது. முன்பு கூறியதுபோல் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களை கி.பி. 21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதுவதுபோல்தான் இதுவுமாகும். “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுகள், இந்தியத் தமிழகத் தத்துவ வரலாறு, வெளிநாட்டார் குறிப்புகள், வட இந்திய வரலாறு, உலக வரலாறு, இனக்குழு வரலாறு & நகர அரசு உருவாக்கம் போன்ற பலதளங்களில், பலகோணங்களில் ஆய்வு செய்து நமது பழந்தமிழக வரலாற்றின் காலத்தை ஓரளவு துல்லியமாகவே உறுதி செய்துள்ளது.

அதன்படி சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான காலகட்டம் என வரையறை செய்யப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட வேந்தர்கள், வேளிர்கள் போன்ற ஆட்சியாளர்களின் காலகட்டம் என்பது கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டமாகும். சங்க இலக்கியங்களான பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகை நூல்களும், பத்துப்பாட்டில் 2 முதல் 9 வரையான எட்டு பாடல்களும், தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் முதலியனவைகளும் சேர்ந்து ஆகமொத்தம் உள்ள 2000க்கும் மேற்பட்ட பாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு நமது வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.

தொல்கபிலர் காலம்:

எண்ணியம் என்கிற சாங்கியம் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது எனவும் மகாபாரதத்திலேயே சாங்கியம் சநாதமானது(காலங்கடந்தது) எனக் கூறப்பட்டுள்ளது எனவும், உபநிடதங்கள் கூட சாங்கியம் அவற்றுக்கு முந்தையது எனக்காட்டுகின்றன எனவும் சாங்கியம் புத்தருக்கு முந்தையது எனக் கார்பேயும், கெச்.பி. சாத்திரியும் வாதிடுகின்றனர் எனவும் சட்டோபாத்தியாய கூறுகிறார்(3). மேலும் மெய்யியல் அறிஞர்கள் பலர் சாங்கியம் கிட்டத்தட்ட வேதத்துக்கு முந்தைய ஆரியமில்லாத சிந்தனைப்போக்கு எனக் கருதுகின்றனர் எனவும்(4), கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்கிற தொன்மை உபநிடதங்களின் காலத்தைக்குறிக்கிறது எனவும் ‘இந்தியாவில் மெய்யியல்’ என்கிற நூல் கூறுகிறது(5). சாங்கியம் என்கிற எண்ணியத்தின் மூலவர் வடமரபுப்படி கபிலர் எனவும் சங்க இலக்கியங்களைப் பாடியுள்ள தொல்கபிலரே சாங்கியத்தின் மூலவர் எனவும்  அவர் தமிழர்தான் எனவும் பல கோணங்களில் ஆய்வு செய்து உறுதி செய்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(6). ஆகவே மிகப்பழங்காலத்தைச் சேர்ந்த, மகாபாரதத்துக்கும் உபநிடதங்களுக்கும் முந்தைய சாங்கியம் என்கிற எண்ணியத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பதால் சாங்கியத்தின் மூலவரான தொல்கபிலரின் காலம் கி.மு. 750 ஆகும்.

தொல்கபிலர் பாடிய ஆறு பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. தொல்கபிலரது தொன்மையையும், அவரது சிறப்பையும் குறிக்கும் விதத்தில்தான் சங்க இலக்கியம் இவரைத் தொல்கபிலர் எனக் குறித்துள்ளது. இந்திய மொழிகளில் சாங்கியம் என்கிற எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது பக்குடுக்கை நன்கணியாரின் புறம் 194ஆம் பாடல் ஆகும். சங்ககாலப் புலவரான இவர் மகாவீரர், புத்தர் ஆகியோரின் சம காலத்தவராக, அதாவது கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்(7). ஆகவே தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார் ஆகியவர்களின் காலங்களைக் கொண்டு சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் தொடங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு:

முத்தொள்ளாயிரம் என்கிற நூல் பாண்டியன் மாறன் வழுதி, சோழன் நலங்கிள்ளி, சேரன் குட்டுவன் கோதை ஆகிய மூன்று சமகால வேந்தர்களைப் பற்றிப் பாடுகிறது என்பது எமது ஆய்வில் கண்டறியப்பட்டது. அந்நூலின்படி சோழன் நலங்கிள்ளி உச்சயினிவரை படையெடுத்தான் என்பதும் அறிந்து கொள்ளப்பட்டது. டி.டி. கோசாம்பி அவர்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் தெற்கேயிருந்து வந்த சாதவாகனர்கள் உச்சயினியைத் தாக்கி சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தனர் என்கிறார்(8). சுங்கவம்சத்தின் ஆட்சிக்காலம் என்பது கி.மு. 187 முதல் கி.மு. 75 வரை ஆகும். சாதவாகன அரசுகள் பற்றிய ஆய்வில் கி.மு.180-124 வரை சதகர்ணி என்பவன் ஆண்டான் எனவும், அதன் பின் வந்தவர்கள் பலவீனமானவர்கள் எனவும் அதற்குப்பின் வலிமையாக இருந்தவன் புலுமாயி(கி.மு.30-6) என்பவன் எனவும் அறியப்பட்டது. ஆகவே கி.மு. 124 முதல் கி.மு. 30வரை சாதவாகனர்கள் மிகவும் பலவீனமாக இருந்தார்கள்(9). ஆதலால் அவர்களால் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில்(கி.மு.100-75) உச்சயினியைத் தாக்கியிருக்க முடியாது என்பது அறியப்பட்டது. எனவே தெற்கேயிருந்து வந்த வேறுயாரோதான் உச்சயினியைத் தாக்கி சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தார்கள் என முடிவு செய்ய முடிந்தது.

தலைவடிவ நாணயங்களை வெளியிட்ட பாண்டியன் வெள்ளியம்பலத் துஞ்சிய பெருவழுதி, சேரமான் மாக்கோதை ஆகியவர்களுக்குப் பின் வந்தவர்கள்தான் முறையே பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன் கோதை ஆகிய வேந்தர்கள் ஆவர். இந்தத் தலைவடிவ நாணயங்களை வெளியிட்டவர்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி என்பதால் அதன்பின் ஆட்சிக்கு வந்த   பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன்கோதை ஆகியவர்களின் ஆட்சிக்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் துவக்கம் ஆகும். பாண்டியன் மாறன்வழுதி,   சேரமான் குட்டுவன்கோதை ஆகிய இருவரும்  முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்ற  சோழன் நலங்கிள்ளியின் சமகாலத்தவர்கள் ஆவர். மேலும் குட்டுவன் கோதை வெளியிட்ட நாணயம் கி.மு. முதல் நூற்றாண்டு என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதலால் சோழன் நலங்கிள்ளியின் ஆட்சிக்காலம் கி.மு. முதல்நூற்றாண்டின் துவக்கம்(கி.மு.100-75) என முடிவு செய்யப்பட்டது. அவன் உச்சயினி மீது படையெடுத்தான் என முத்தொள்ளாயிரம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே சோழன் நலங்கிள்ளிதான் கி.மு. முதல் நூற்றாண்டின் துவக்கத்தில்(சுமார் கி.மு.85-80), உச்சயினி மீது படையெடுத்து சுங்கவம்சத்தின் வலிமையான கட்டமைப்பைத் தகர்த்தவன் என முடிவு செய்ய முடிந்தது.

இறுதிக்காலம்:

நலங்கிள்ளிக்குப்பின் ஆட்சிக்கு வந்த அவனது மகன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னிதான் சங்ககால இறுதிச் சோழவேந்தன் ஆவான். இவனது ஆட்சிக்காலம் கி.மு. 75-50 வரையான ஆண்டுகள் ஆகும். சேர, பாண்டிய வேந்தர்களின் ஆட்சிக்காலமும் கி.மு. 50க்குள் முடிவடைகிறது. இவர்களுக்குப்பின் வந்த வேந்தர்கள் குறித்தக் குறிப்புகள் சங்ககாலப் பாடல்களில் இல்லை. ஆகவே சங்ககாலத்தின் இறுதிக்காலம் என்பது கி.மு. 50 என வரையறை செய்யப்பட்டது. ஆகவே தொல்கபிலர் காலம் சங்ககாலத்தின் தொடக்ககாலம் என்பதால், சங்ககாலம் என்பது கி.மு.750 முதல் கி.மு.50 வரை என முடிவு செய்யப்பட்டது.  இந்த சங்ககாலத்தில் இருந்த ஆட்சியாளர்களின் காலத்தை(கி.மு.350-50) பத்து காலகட்டமாகப் பிரித்து, அவர்களின் காலகட்டங்களையும், ஆண்டுகளையும் துல்லியமாகக் கண்டறிந்து, அவர்களின் காலவரிசைப்படியான  வரலாற்றை “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலில் கட்டமைப்பதற்குக் கீழ்கண்ட சில சிறப்பம்சங்கள் அடித்தளமாக இருந்துள்ளன.

சிறப்பம்சங்கள்:

1.திட்டவட்டமான சான்றுகளைக்கொண்ட உலக வரலாற்றுக்காலத்தை அடிப்படையாகக்கொண்டு தமிழக வரலாற்றுக்காலத்தை கணித்துக் காலநிர்ணயம் செய்தது. கிரேக்க வீரன் அலெக்சாந்தரின் இந்தியப் படையெடுப்பு ஆண்டுகளைக் கொண்டும், மகத அரசில் ஏற்பட்ட நந்தர்-மௌரியர் ஆட்சி மாற்ற ஆண்டுகளைக் கொண்டும், அசோகனின் கல்வெட்டு ஆண்டுகளைக்கொண்டும், மாமூலனாரின் காலத்தையும், செருப்பாழிப் போரின் ஆண்டையும் கணித்துக் காலநிர்ணயம் செய்தது.

2.பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகைநூல்களையும் பத்துப்பாட்டில் 2-9 வரையான எட்டு பாடல்களையும், தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகியவற்றின் ஒரு சில விடயங்களையும் மட்டும் பயன்படுத்திக் கொண்டது; சிலப்பதிகாரம், கலித்தொகை, பரிபாடல் ஆகிய பிற்கால நூல்களில் உள்ள விடயங்களை, மேலே குறிப்பிட்ட ஆதார இலக்கியங்களின் தரவுகளோடு இணைந்து போகும்பொழுது மட்டுமே பயன்படுத்திக்கொண்டது.

3.சங்ககாலப் புலவர்கள் பெரும்பாலும் நிகழ்கால நிகழ்வுகளையே தங்கள் பாடல்களில் பாடியுள்ளனர் என்பதைக் கண்டறிந்து அதனை சங்க காலத்துக்கான காலவரிசைப்படியான வரலாற்றைக் கணித்துக் கால நிர்ணயம் செய்யப் பயன்படுத்திக் கொண்டது.

4.புலவர்கள் பாடிய தலைவர்கள், தலைவர்களைப் பாடிய புலவர்கள் என்கிற தலைவர்கள்-புலவர்கள் தொடர்பை ஒரு முறைப்படுத்தி, வரையறுத்துத் தொகுத்து, அதனைக்கொண்டு கோட்டியல் வரைபடமுறையை உருவாக்கி, தலைவர்கள்-புலவர்களின் கால கட்டங்களையும், அவர்களின் ஆட்சி ஆண்டுகளையும் கணித்துக் கால நிர்ணயம் செய்து தமிழக வரலாற்றைக் காலவரிசைப்படி தொகுத்தது.

5.இனக்குழு நிலையில் இருந்து அரசு உருவான காலகட்டம் வரையான வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தை மார்கன், ஏங்கெல்சு, டாங்கே ஆகியவர்களின் நூல்களில் உள்ள சிவப்பிந்திய, கிரேக்க, உரோம, இரிக் வேதகால இனக்குழுக்களின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை தமிழக சங்ககாலத்துக்கும் அதற்கு முந்தைய காலத்துக்கும் ஒப்பிட்டு சங்ககாலம் என்பது அரசு உருவாகி நிலைபெற்ற காலம் என்பதை நிறுவியது.

6.அசோகன் கல்வெட்டு, காரவேலன் கல்வெட்டு, புகளூர்க் கல்வெட்டு, சம்பைக் கல்வெட்டு போன்றவைகளின் ஆண்டுகளையும், முதுகுடுமிப் பெருவழுதி நாணயம், தலைவடிவப் பெருவழுதி நாணயங்கள்,  கொல்லிப்பொறை, மாக்கோதை, குட்டுவன் கோதை நாணயங்கள் போன்றவைகளின் ஆண்டுகளையும், இரண்டாம் தூமகேது தோன்றிய ஆண்டையும் நமது சங்ககால இலக்கியக் கணிப்பு ஆண்டுகளோடு பொருந்திப் போகச் செய்து, தமிழக வரலாற்றைக் காலவரிசைப்படி வரையறுத்து நிர்ணயித்திருப்பது.

7.தொன்மங்கள், புராணங்கள், வாய்மொழிக்கதைகள் போன்றனவற்றை வரலாற்றுச் சான்றாதாரமாகக் கொள்ளாது, முழுமையாக அவைகளைத் தவிர்த்திருப்பது, பிற சான்றாதாரங்களுக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் அவைகளை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தியிருப்பது; பதிகம், பாயிரம், அடிக்குறிப்புகள் போன்றனவற்றைப் பிற சான்றாதாரங்களோடு இணைத்துப் பயன்படுத்தியிருப்பது.

பார்வை:

1.உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண் பதிப்பகம், 2009,  பக்: 64, 68-71.

2.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ வி.கிரபின், இரசிய நூல், முன்னேற்றப் பதிப்பகம், 1987, மாஸ்கோ பக்:45, 46..

3.இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, பக்: 196.

4,5.இந்தியாவில் மெய்யியல், மிருணாள் காந்தி காங்கோபாத்யாயா, தமிழில் சா. செயராஜ், டிசம்பர்-2011, NCBH, பக்: 23, அணிந்துரை-XII.

6.க.நெடுஞ்செழியன், தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும் சரக சம்கிதையும், 2009, பக்: 21.

7.க.நெடுஞ்செழியன், ‘சங்கஇலக்கியக் கோட்பாடுகளும், சமயவடிவங்களும்’ இரண்டாம்பதிப்பு, 2009, பக்: 21

8.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, தமிழில்-ஆர்.எசு. நாராயணன், செப்டம்பர்-2006, NCBH,  பக்:388.

9.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 275, 310-313.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பழந்தமிழக வரலாறு -2

  1. மிகவும் வரவேற்று அடிக்கடி படிக்கவேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *