பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 1

-பேரா. பீ.பெரியசாமி

1:0 முன்னுரை

பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக, இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல், பசியட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்பு நனி சுருங்கல், கண் துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே என்றல், ஐயஞ் செய்தல், அவர் தமர் உவத்தல், அறனழிந்துரைத்தல், ஆங்கு நெஞ்சழிதல், எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல், ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல், கலக்கம் எனும் இருபதையும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.22) இம்மெய்ப்பாட்டினையும் இதனை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இவ்வியல் ஆராயவுள்ளது.

1:1 பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இங்கே தொல்காப்பியர் கூறியுள்ளதன் காரணத்தை,

“மேல் நடுவ ணைந்திணைப் பகுதியாகிய களவிற்கும் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் கைக்கிளைக் குரியவருமாறு உணர்த்தினான். இனி இச்சூத்திரத்தாற் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று” இவற்றுள், இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்திணை யல்வழி வரும் என்றவாறு.”  (இளம்.,மெய்.22)

என இளம்பூரணர் கூறியுள்ளார். முதலில் எண்வகை மெய்ப்பாட்டினைக் கூறிய தொல்காப்பியர் அதனைத் தொடர்ந்து அகத்திற்கும் புறத்திற்குமான மெய்ப்பாடுகளைக் கூறினார். அடுத்ததாக அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக ஆறு அவத்தைகளைக் கூறினார். அடுத்து பெருந்திணைக்குரிய இம்மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார்.

1:1:1 இன்பத்தை வெறுத்தல்

இன்பத்தை வெறுத்தலென்பது, “கோலஞ்செய்தல் முதலியனவற்றை வெறுத்தலும் தென்றலும் நிலவு முதலாயினவற்றை வெறுத்தலும் இவ்வாறு களவின்கண்வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண் வரிற் இயல்வழி மங்கல மின்றாம்.” (மேலது) எனவும், “யாழுங் குழலுங் பூவுஞ் சாந்தும் முதலாக இன்பத்திற்கேதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். அவை காமத்திற்கு ஒருவகையான் ஏதுவாகலின் ‘மன்னிய வினைய நிமித்த’ மெனப் படுமாகலான் அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக் கேதுவாகா தன்றேயாயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தமென வேண்டுமென்பான் ‘நலத்தக நாடின் அதுவே’ என்றானென்பது.” (பேரா.,மெய்.22) எனவும், “தனிப் படர்மெலியுங் காதலர், கூட்டத்தின் முன்னும் உடனுறைபொழுதும் தமக்கினி தாயவற்றையே பிரிந்து தனித்தவழி வெறுக்குங் குறிப்பு. நிலவு, தென்றல், ஆரம், ஆயம், மாலை, கண்ணி முதலிய இன்பப் பொருள்கள் பிரிவாற்றாக் காதலர்க்குத் துன்பமாதல் இம்மனவியல் பற்றியதாகும்.” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர் உரைகொள்வர். தலைவனோடு சேர்ந்திருக்கும் காலத்தில் இன்பத்தை ஏற்படுத்திய தென்றல், நிலவு முதலியன அவனில்லாத நேரத்தில் காணும்போது துன்பத்தை ஏற்படுத்தும். அதனால் இன்பத்தை ஏற்படுத்தியவற்றை வெறுத்து ஒதுக்குதலே இன்பத்தை வெறுத்தல் எனும் மெய்ப்பாடாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1127-ஐயும்; பாரதி குறள்.396 – ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர்,

நின்வலித்த மைவென் மன்னோ வல்கற்
புன்கண்
மதலையொடு பொருந்திக் கொடுங்கோற்
கல்லாக்
கோவல ரூதும்
வல்வாய்ச்
சிறுகுழல் வருந்தாக் காலே.” (அகம்.74)

எனம் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், “ஊதிப்பழகாத கோவலர்கள் (சிறுவர்கள்) ஊதுகின்ற வாயையுடைய சிறிய வேய்ங்குழலோசை வருத்தாக்கால் கல்லா  – என்னை வருத்துமென்றறியாத எனினுமாம் என்பதில் கோவலர்கள் ஊதுகின்ற குழலின் ஓசையின் இன்பத்தை வெறுத்து தலைமகன் பிரிவின்கண் தன்நிலையைத் தோழிக்கு தலைவி சொல்லியது. இதில் ‘இன்பத்தை வெறுத்தல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.  இதனை, ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கல்லாக் கோவல ரூதும், வல்வாய்ச் சிறுகுழல் வருந்தாக் காலே’ என்புழி இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கு ஏதுவாம் என்பது கருத்து என்றார், பேரா.” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.178) என ந.மு. வேங்கடசாமி கூறியுள்ளார். இது பேராசிரியர் கருத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாய் உள்ளது. மேலும் பேராசிரியர்,

“…………………… …………………. எல்லி,
மனைசேர் பெண்ணை மடிவா யன்றி
றுணையொன்று
பிரியினுந் துஞ்சா காணெனக்
கண்ணிறை
நீர்கொண்டு சுரக்கு
மொண்ணுத
லரிவையா னென்செய்கோ வெனவே” (அகம்.50)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், இரவில் மனையைச் சேர்ந்த பனையிலுள்ள மடிந்த வாயையுடைய அன்றில் தன் சேவலராகிய ஒன்று பிரியினுந் துயிலாது காண். அங்ஙனமாக நான் பிரிந்து யாது செய்வேனென்று கண்கள் நிறைந்த நீர்கொண்டு (பின் அதனை அழித்து) மறைப்பாளெனத் தோழி பாணனை நோக்கி கூறுகின்றாள். ‘கண்ணிறை நீர்கொண்டு சுரக்கும் ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ வெனவே’ என்பதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதே யொழிய இதில் இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது.

“‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து, இன்பத்தை வெறுத்தல் என்பது இன்பத்திற் கேதுவாய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல் என்று கூறி, அதற்கு ‘எல்லி மனைசேர்….. என் செய்கோ எனவே’ என்னும் பகுதியை எடுத்துக்காட்டினார், பேரா.” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.124) என ந.மு.வேங்டசாமி கூறியுள்ளார். இருப்பினும் இது எவ்வாறு பொருந்தாது என்பது மேலே கூறப்பட்டது.

1:1:2  துன்பத்துப் புலம்பல்

துன்பத்துப் புலம்பலென்பது, “துன்பத்தின் கண்ணே புலம்புறுதல்.” (இளம்.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாது துன்புறுங்காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறு கின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும் அக்கூட்டத்திற்கே நிமித்தமாகும் ஆராய்ந்துணரினென்றவாறு.” (பேரா.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் படருற்று மெலிந்து வருந்துதல், இதுவும் அழுகைக்குப் பொருளாக வரும்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகனின் பிரிவைத் தாங்க இயலாத தலைமகள் அதனை நினைந்து புலம்பல் துன்பத்துப்  புலம்பலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1162 ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் குறள்.1167 ஐயும்; மேலும், பாரதி குறள்.1162 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். மேலும் பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

நின்னுறு விழுமங் களைந்தோ
டன்னுறு
விழும நீந்துமோ வெனவே” (அகம்.170)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் நினது மிக்க துன்பை நீக்கினோள் தனது மிக்க துன்பத்தை நீக்குவாளோ? எனத் தலைவனிடம் கூறக்கேட்டு நண்டிடம் தலைவி கூறியது. இதில் ‘துன்பத்துப் புலம்பல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது இதனைக், “காக்கை பெடையோடு யாமத்து இறாக் கனவும் என்பதால், தலைவி, தலைவனுடன் கூடி, முன்பு பெற்ற இன்பத்தை நினைத்து வருந்துகிறாள் என்னும் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறது.” (நா.மீனவன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.113) எனவும், “ ‘இன்பத்தை வெறுத்தல்’  என்னும் சூத்திர உரையினும் இச்செய்யுளைப் பேராசிரியர் காட்டினார்.” (புலியூர்க் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.109) எனவும், “‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து  ‘நின்னுறு விழுமங்களைந்தோள், தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே’ என்பது துன்பத்துப் புலம்பல் என்னும் மெய்ப்பாடு ஆகுமென்றும் ………………. கூறினார் பேரா” (ந.மு. வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, மணிமிடை பவளம், ப.101) எனவும் அகநானூற்று உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். இதன்வழி இவ்வகப்பாடலில் இம்மெய்ப்பாடு பயின்று வந்துள்ளமைப் புலப்படுகிறது.

1:1:3 எதிர்பெய்து பரிதல்

எதிர்பெய்து பரிதலென்பது, “தலைமகன் முன்னின்றி அவனின்றாகப் பெய்துகொண்டு வருந்துதல்” (இளம்.,மெய்.22) எனவும், “உருவு வெளிப்பாடு; அது தலைமகனையும் அவன் தேர்முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்து கொண்டு பரிந்து கையறுதல்.” (பேரா.,மெய்.22) எனவும், “உருவெளி கண்டிரங்குதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகள் காதல் மிகுதியால் தலைமகன் தன்னெதிரே இல்லாத நிலையிலும் எதிரே இருப்பதாகக் கண்டு இரங்குதல் எதிர்பெய்து பரிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணர் குறள்.1123 ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் ஐங்.418 ஐயும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர், குறுந்.301.ஐயும்;  தாசன் குறள்.1126 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:4 ஏதம் ஆய்தல்

ஏதமாய்தலென்பது, “குற்றமாராய்தல்” (இளம்.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென்று பலவும் ஆராய்தல். அது நொதுமலர் வரையக் கருதுவர் கொல்லெனவும், பிரிந்தோர் மறந்து இனிவாரார் கொல்லெனவுந் தோன்றும் உள்ள நிகழ்ச்சி” (பேரா.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு இடையூறாம் தீமை பலவும் ஆராய்தலாம் ஆற்றிடைத் தலைவன் ஊற்றினுக் கழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தனர் கொல்லெனத் துயரல், ஏதிலர்வரைவின் தீதினையஞ்சல் போல்பவை யெல்லாம் இதில்பாலடங்கும்.” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

 ஏதமாய்தலென்பது குறியிடத்தே கூட்டத்திற்கு வரும் தலைவனுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1165 ஐயும்; பாரதி குறுந்.268, 217, 307, கலி.11 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், குறுந்.307 ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

வாரார் கொல்லெனப் பருவருந்
தாரார்
மார்பநீ தணந்த ஞான்றே (அகம்.150)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தாரையணிந்த மார்பனே! நீ பிரிந்தகாலை வாரார்கொல் என்று துயருறுவாள் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை, “ஏதம் ஆய்தல்’  என்னும் மெய்ப்பாட்டிற்கு,  ‘வாரார் கொல் எனப் பருவரும் தாரார் மார்ப நீ தனந்த ஞான்றே’ என்பதை ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்துப் பேராசிரியர் காட்டினார்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், பக். 67-68) எனப் புலியூர் கேசிகன் தமது உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப. 63), “மா.பரமசிவம்” (மா.பரமசிவம் அகநானூறு, ப. 186) ஆகியோரும் தமது அகநானூற்று உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளனர்.

 1:1:5  பசியட நிற்றல்

பசியட நிற்றலென்பது, “உண்ணாமை” (இளம்.,மெய்.22) எனவும், “பசிவருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல்” (பேரா.,மெய்.22) எனவும், “தனிமை ஆற்றார் ஊண் உவர்த்துப் பிறரை அடும் பசிப்பிணியை அறவே தாம் அடும் ஆற்றல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தனக்கு பசி உண்டாகியும் உணவை உண்ணாது தலைவனின் பிரிவை எண்ணி வருந்துதல் பசியட நிற்றலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும். குறள்.1128 ஐயும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,

அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
பாலு
முண்ணாள் பழங்கண் கொண்டு
நனிபசந்
தனளென வினவுதி.” (அகம்.48)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், அன்னாய் வாழீ! நான் சொல்வதை விரும்பு. அன்னையாகிய நின்மகள் பாலும் உண்ணுகின்றிலள். துன்பங்கொண்டு மிகவும் நிறம் வேறுபட்டாள், என்று வினவுகின்றாய் என்பதில் பாலும் உண்ணாள் என்பது பசியட நிற்றலை வெளிக்காட்டியது. இதனை, “பாலும் உண்ணாள் என்புழி உம்மை உயர்வு சிறப்பு பாலும் உண்ணாள் எனவே ஏதும் உண்டிலள் என்றாயிற்று. ஈண்டுச் செவிலி கூற்றைத் தோழி கொண்டு கூறிய  ‘பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள்’ என்பது புணர்ச்சிக்கு நிமித்தமாகாதன போன்று காட்டி ஆராய்வார்க்குப் புணர்ச்சி நிமிர்த்தமாகத் தோன்றுகின்ற மெய்ப்பாடுகளாம். இங்ஙனமாதலை – துன்பத்துப் புலம்பல், பசியட நிற்றல், பசலை பாய்தல், என்றோதுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். இவற்றுள் பசியட நிற்றல் என்னும் ஒரு மெய்ப்பாட்டிற்கே பேராசிரியர் “அன்னாய்………….  வினவுதி” என்னும் இவ்வடிகளை எடுத்துக்காட்டினர்.” (பொ.வே.சோமசுந்தரம், அகநானூறு, பா.48 உரை) என பொ.வே. சோமசுந்தரம் கூறியுள்ளார். மேலும் இதனை, “ந.மு.வேங்கடசாமியும் தமது அகநானூற்று உரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.” (ந.மு.வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, களிற்றியானைநிறை, ப.120) எனவே இம்மெய்ப்பாடு இவ்வகநானூற்றுப் பாடலில் வெளிப்பட்டுள்ளது.

1:1:6 பசலை பாய்தல்

பசலை பாய்தலென்பது, “பசலை பரத்தல்” (இளம்., (பேரா.,மெய்.22). எனவும், “கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவியர் காதற் நோயால் தம் மாமைக்கவின் இழந்தெய்தும் நிறவேறுபாடு.” (பாரதி.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் மாமைக்கவின் மாறி மேனி பசப்பூர நிற்றல். (பாய்தல்-பரவுதல்) இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் பொருள்கொள்வர். பசியட நின்ற தலைவி உடல் வலியிழந்தமையால் மேனியில் பசலை பரவுதல் பசலை பாய்தலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1188-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், குறுந்.27-ஆம் பாடலையும்; பாரதி, ஐங்.231, குறுந்.27 – ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், ஐங்.231-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை. 

 1:1:7. உண்டியிற் குறைதல்

உண்டியிற் குறைதலென்பது, “உணவு சுருங்குதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “பசியட நிற்றலேயன்றிச் சிறிது உண்டி யூட்டியவழிப் பண்டுபோலாது கழியவுஞ் சிறிதுண்டல்.” (பேரா.,மெய்.22). எனவும், “உற்றார் ஊட்டும் உணவை மறுப்பிற் கடுப்பரென்றஞ்சித் தன் வெறுப்பை மறைத்துட்கொண்டதுபோற் சிறிது உண்டுவைத்தல், முன் பசியட நிற்றல், தனிப்படர் மெலிவால் பசிப்பிணியுணராத கை கடந்த காதல்நிலை குறிக்கும்; இது, ஆனாக்காதலால் ஊண் ஒல்லாமையால், பண்டையளவினும் உண்டி சுருங்குதலைச்சுட்டும் “தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும்” (இ.வி.ப.573) எனும் பழைய பாட்டடி இவ்வியல்பை விளக்குவதறிக.” (பாரதி.,மெய்.22) எனவும், “தாயார் பரிந்து உணவு ஊட்டியவழி நனி உண்ணாது கழியவும் குறைத்துண்ணல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இயல்பாக உணவு உண்ணும் அளவினின்று தன் காதலர் பிரிவால் குறைத்து உண்ணுதல் உண்டியிற் குறைதலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,

பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு” (அகம்.48)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் பாலும் உண்ணாமல் இருக்கிறாள் என்பது எதையும் உண்ண மறுக்கிறாள் என்பதை வெளிக்காட்டுகிறது. இது பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இது பொருந்தாது. மேலும், இம்மெய்ப்பாட்டினை விளக்கப் பேராசிரியர், பாரதி, பாலசுந்தரம் ஆகியோர்,

தீம்பா லூட்டினும் வேம்பினுங் கைக்கும்
வாரா
யெனினு மார்வமொடு நோக்கு
நின்னிற்
சிறந்ததொன்  றிலளே
யென்னினும்
படாஅ  லென்னிதற் படலே.” (இ.வி.ப.௫௨௭)

எனும் இலக்கண விளக்கப் பழம்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், இனிய பாலை ஊட்டினாலும் அதனை வேம்பினைக் காட்டினும் கசப்பு என ஒதுக்குவாள். நீ வாராது போனாலும் உன்னுடைய வருகையை விருப்பத்தோடு நோக்குவாள். என் தலைவி நின்னைக் காட்டினும் சிறந்ததொன்று இல்லையென்பவள். எனது சொல்லினும் அமைகின்றிலள் – இதனைப்படுதலெப்படி? என்பதன்வழி இம்மெய்ப்பாடு வெளிப்படாது நின்றது. இது உணவை வெறுத்தல் என்பதை உணர்த்துதலால் பசியட நிற்றலென்பதின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது உணவைச் சிறிதளவு உண்ணுதல் இங்கு இப்பழம்பாடல் உணவு உண்ணாமையே உணர்த்துகிறது.

1:1:8 உடம்பு நனி சுருங்கல்

உடம்புநனி சுருங்கலென்பது, “உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “அவ்வுண்ணாமை உயிரிற் செல்லாது உடம்பிற் காட்டுதல்.” (பேரா.,மெய்.22). எனவும், “உணவில்லாமையும் தணப்பொல்லாமையும் நலிய உடல் நாளும் மெலிதல்.” (பாரதி.,மெய்.22) எனவும், “பசியட நிற்றலானும் உண்டியிற் குறைதலானும் மேனி மெலிவுறுதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். உண்ணாமை காரணமாகவும், சிறிதுண்ணலினாலும் உயிர்போகாது உடம்பு தன்னளவின்றி சுருங்குதல் உடம்புநனி சுருங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1234-ஐயும்;  பாரதியும் பாலசுந்தரமும் குறுந்.290-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:9. கண்துயில் மறுத்தல்

கண்துயில் மறுத்தலென்பது, “உறங்காமை” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “இரவும் பகலுந் துஞ்சாமை.” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22)., எனவும், “இது தண்டாக்காதல் கொண்டார் துயிலாமை” (பாரதி.,மெய்.22) எனவும், “உடம்பு சோர்வுற்ற காலையும் உள்ளம் உறங்க ஒருப்படாமையின் கண்துஞ்சாதிருத்தல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கண்துயில் மறுத்தலென்பது தலைவனைக் காணாததால் உண்டியிற் குறைந்து உடம்புநனி சுருங்கிய தலைவி உணவு மறுத்து உறக்கம் பெறாமல் தவித்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1168-ஐயும்; பாலசுந்தரம் குறுந்.6 ஆம் பாடலையும்; பாரதி குறள்.1179, குறுந்.6, 11, 329, 5, 365, கலி.6 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

புலர்குர லேனற் புழையுடை யொருசிறை
மலர்தார்
மார்ப னின்றோற் கண்டோர்
பலர்தில்
வாழி தோழி யவரு
ளாரிருட்
கங்கு லணையொடு பொருந்தி
யோர்யா
னாகுவ தெவன்கொ
னீர்வார்
கண்ணொடு நெகிழ்தோ ளேனே” (அகம்.82)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தோழியே! முற்றிய கதிரையுடைய தினைப்புனத்தின் ஒருபக்கத்தில் நின்றோனாகிய பரந்த தாரையணிந்த மார்பனைக் கண்டோர் பலர்தில். அவருள் ஆரிய இருட் கங்குலிலே படுக்கையொடு பொருந்தி நீர்வடியுங் கண்ணோடு நெகிழ்ந்த தோளையுமுடையேன் யானொருத்தியேயாகுதல் என்னையோ! என்பதில் படுக்கையில் உறங்காது தவிக்கும் தலைவியின் நிலை கூறப்பட்டுள்ளமையின் இது கண்துயில் மறுத்தலானது. மேலும் இதனை,  “ ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கண்டுயில் மறுத்தலென்பது’ இரவும் பகலுந் துஞ்சாமை; அது ‘புலர்குர லேனல் …… ……… ……………….. நெகிழ்தோளேனே’ எனவரும் எனவும் உரைத்தார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.82) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

1:1:10. கனவொடு மயங்கல்

கனவொடு மயங்கலென்பது, “கனவை நனவென மயங்குதல்” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற்கண்டு பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம்.” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22), எனவும், “நயந்தோர் பிரிவால் அயர்ந்தகாதலர் கனவிற்றுணைவரைக் கண்டுகளித்து விழித்தபின் காணாது வெருளுதலாகும்.” (பாரதி.,மெய்.22) எனவும், “தண்ணுணர்வின்றி ஒருகால் துயிலெய்தியவழி நேர்ந்த கனவிடத்துக் காதலனைக் கண்டு களித்து விழித்த விழிக் காணாமையின் கலங்குதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். காதலுணர்வு மேலோங்கிய காரணத்தால் கனவில் தலைவனைக் காணும் தலைவி அவனை நேரில் காண்பதாக நினைத்து மயக்கமுறுதல் கனவொடு மயங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1217-ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், கலி.128-ஆம் பாடலையும்; பாரதி குறுந்.30, குறள்.1213 மற்றும்,

“……………….. ……………………… ……யாழ, நின்
கோடேந்து
புருவமொடு குவவுநுதல் நீவி
நறுங்கதுப்
புளரிய நன்னர் அமையத்து
வறுங்கை
காட்டிய வாயல் கனவின்
ஏற்றேக்
கற்ற உலமரல்” (அகம்.39)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், நான் உன்னுடைய அழகிய புருவங்களையும் சிறிய நெற்றியையும், நறுமணக் கூந்தலையும் தடவ நினைத்து முயன்றேன். உன்னைத் தழுவுதல் போன்ற என் கையை வெறுங்கை ஆக்கிய பொய்யான அக்கனவை நினைத்து ஏற்பட்ட மனச் சுழற்சியை நீ அறியவில்லை. அதனால் நீ என்னை நினைத்ததும் உண்டோ? என்று ஊடல் கொள்கிறாய்! எனத் தலைவியை நோக்கி தலைவன் கூறுகின்றான். இதில் அவன் கனவை நனவாக மயங்கியமை வெளிப்பட்டுள்ளது.

 1:1:11. பொய்யாக்கோடல்

பொய்யாக் கோடலென்பது, “தலைவன் கூற்றுத் தன்னைப் பொய்யாகக் கோடல்.” (இளம்., தாசன், குழந்தை, இராசா, மெய்.22). எனவும், “மெய்யைப் பொய்யாக் கோடல்” (பேரா.,மெய்.22). எனவும், “காதல் மிகையால் மெய்யைப் பொய்யாகத் திரித்துக்கோடல்.” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தண்ணளி செய்யவும் பிரிவச்சத்தான் அதனைப் பொய்யாகக் கற்பித்துக் கொண்டு இனைதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைவன் கூறும் கூற்றையும்;  அவன் செய்யும் தண்ணளியையும் பொய்யாகக் கொள்ளுதல் பொய்யாக் கோடலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.88 – ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1311, கலி.88 ஆகிய பாடல்களையும்; குழந்தை கலி.68 ஆம் பாடலையும்;  பாலசுந்தரம் கலி.68, 41 ஆகிய பாடல்களையும்;  பேராசிரியர், கலி.68, 41 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியரும் இராசாவும்,

வருது மென்ற நாளும் பொய்த்தன
வரியே
ருண்கணீரு நில்லா.” (அகம்.144)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், தலைவன் வருவேனென்ற நாளும் பொய்த்தன; வரி பொருந்திய மையுண்ட கண்களில் நீரும் நிற்கின்றில எனும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதில் தலைவன் ஒரு காலத்தைக் குறிப்பிட்டு இக்காலத்தில் நான் திரும்பி வந்துவிடுவேன் எனக்கூறி தலைவியிடம் விடைபெற்று சென்றிருப்பான் அக்காலத்தின் வரவை இயற்கை உணர்த்திய உடனே அவன் வருவேனெனக் கூறிய காலம் வந்துவிட்டது; அவன் வரவில்லையே என அவன் கூறிய கூற்றைப் பொய்யென நினைத்தல் பொய்யாக் கோடல் ஆகும். எனவே இப்பாடலில் பொய்யாக் கோடலென்பது பொருத்தியாளப்பட்டுள்ளது. மேலும், இதனை, “பேரா. ‘பொய்யாக் கோடல்’ என்ற பகுதிக்கு உதாரணமாக “வருதுமென்ற நாளும் பொய்த்தன, வரியே ருண்கணீரு நில்லா” என்பதனைக் காட்டியுள்ளார்.” (மா. பரமசிவம், அகநானூறு, பக்.172-173) என மா.பரமசிவம் தமது உரையில் எடுத்தாண்டுள்ளார். இதனை மேலும், “புலியூர் கேசிகன்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.56,), “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப.52) ஆகியோரும் தமது உரையில் எடுத்துக்காட்டியுள்ளனர்.

[தொடரும்…]

*****

கட்டுரையாசிரியர்
தமிழ்த்துறைத்தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
விளாப்பாக்கம், ஆற்காடு.

 

 

Share

About the Author

has written 1071 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.