தமிழ் இலக்கியங்களில் பன்முகச் சிந்தனைகள்

1

பவள சங்கரி

 

ஒரு நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் என்பது அந்நாட்டின் சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரின் நற்சிந்தைகளையும் ஊக்குவிக்கக்கூடிய சிறந்த ஆக்கங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இலக்கியம் என்பது ஒரு காலத்தின் கண்ணாடி எனலாம். அந்த இலக்கியம் உருவாக்கப்பட்ட காலத்தின் மொழி, பண்பாடு, கலை, வாழ்வியல் கூறுகள் போன்ற அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு களமாகச் செயல்படக்கூடியது.
இலக்கியங்கள் என்பது காலத்தின் கண்ணாடி. அதுமட்டுமன்றி இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட மொழியின் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை பகுத்தாய்வுச் செய்யக்கூடிய களமாகவும் விளங்கக்கூடியது.

மொழி என்பது மனிதருக்கிடையில் கருத்துப் பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி எனக்கொள்ளலாம். மொழியைப் பேசுகின்ற அந்த இனத்தின் கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கங்கள், ஒழுக்கநெறிகள், அரசியல், சிந்தைகள் போன்ற பல வாழ்வியல் கூறுகள், பண்பாட்டு நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் வெளிப்படை விளக்கமாக இருப்பதாகும்.

வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் அரசியல், பண்பாட்டு, வணிகத் தொடர்பிலான சூழ்நிலைகளால் ஒரு மொழி பிறமொழிகளுடன் தொடர்பு கொள்ள நேரிடுவதால் அதன் வழக்காற்றில் பல பிறமொழிச் சொற்களும் இணைந்துவிடுகின்றன. இது மொழி வரலாற்றில் சுவையானதொரு பிரிவாகவும் அமையும். இயற் சொற்களிலும் பிற மொழிச் சொற்களிலும் தொடர்ச்சியான பொருள் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. சமுதாயத்தில் காலத்திற்குக் காலம் ஏற்படும் மாற்றங்களை எதிரொலிக்கும் வகையில் ஒருசொல் தன் பொருள் எல்லையிலிருந்து வேறொரு எல்லைக்கு மாறும் நிலையில் அந்தப் பொருள் அமைப்பில் ஒரு மாற்றத்தை உணர்த்துகின்றது. அதே வேளையில் மாற்றத்திற்கு உட்படாமல் இருக்கும் மொழி இறந்தமொழி எனப்படும். எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்ற வகையில் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாகக் கருதப்படும்.

ஏதேனும் ஒரு மொழி குறித்து பேசும்போதெல்லாம் அம்மொழியின் இலக்கியம் குறித்து பேசுவதும் இயல்பாகிறது. அதாவது இலக்கியம் குறித்து பேசாத மொழியின் உரையாடலிலும் சுவை இருப்பதில்லை என்பதோடு அவை முழுமையடைவதுமில்லை என்பதே நிதர்சனம். இலக்கியம் என்பது அத்தனை அவசியமானதா என்ற வினாவும் எழாமல் இல்லை. பள்ளிப் பாடத்திட்டங்களிலும் இலக்கியத்திற்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படும் காரணமும் இதுதான். ஆகவே இலக்கியத்தின் வழியாக மட்டுமே ஒரு மொழியை நாம் செம்மையாகக் கற்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது என்பதும் உண்மை.

ஆக, மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளுக்கு இலக்கியங்களையே முதன்மையாகக் கொள்ளப்பட வேண்டியதாகிறது. அந்த வகையில் இந்த இடத்தில் இலக்கியம் பற்றி குறிப்பிடும்பொழுது அதிகத்தரம் வாய்ந்த நூல்கள் என்ற வரையறைக்கு உட்படுத்தாது அனைத்துப் பொருட்களையும் சுட்டும் உரைநடை அல்லது செய்யுள் வடிவில் உள்ள நூல்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பின்னரே எளிய மனிதரும் புரிந்துகொள்ளும் வகையில், நொண்டிச்சிந்து, கட்டபொம்மன் கும்மி, ராமப்பையன் அம்மானை போன்ற இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில், பாமர மக்களின் பேச்சுவழக்குகள் கொண்ட நாடகங்கள், புதினங்கள் ஆகியவற்றைக் காண்கிறோம். இவை பேச்சு வழக்கினை ஆராய்வதற்கு இன்றியமையாதன எனலாம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் எல்லீஸ், கால்டுவெல் போன்றோர் எழுதிய சிறந்த நூல்களும் உள்ளன.

வரலாறு என்பதும் காலத்தின் கண்ணாடி தான் என்றபோதும், இலக்கியத்தின் பரிமாணங்கள் அந்த வரலாற்றையே மாற்றக் கூடியதாகத் திகழ்கின்றது. அந்த இலக்கியம் பிரதிபலிக்கும், வாய்மொழி இலக்கியம், ஏட்டு இலக்கியம் என்று பல்வேறு முகங்கள் பன்முகச் சிந்தைகளை வெளிப்படுத்தும் ஆளுமைகளாகவும் அமைகின்றன.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பன்னிரு திருமுறைகள் போன்ற இலக்கியங்கள் இத்தகைய ஆளுமைகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேற்குறிப்பிட்ட சங்க இலக்கிய நூல்களில், தமிழர்களுக்கு மட்டுமன்றி உலக மாந்தர் அனைவருக்குமான வாழ்வியல் நெறிகள் என்ற அறக்கோட்பாடுகளே தலையாய நோக்காக உள்ளது.
குவலயக் குடும்பம் (Global Family) என்று இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற உலகமயமாதல் தொடர்பான அணுகுமுறைகள் குறித்து நம் தமிழர்கள், பல நூற்றாண்டுகளுக்கும் முன்பாகவே,

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”

என்ற மாபெரும் தத்துவத்தைச் சொல்லிச் சென்றுள்ளனர். மிகப்பெரிய உயரிய வாழ்வியலை உணர்த்தக்கூடிய இத்தகைய அறநெறி உலகிற்கெல்லாம் பொதுவானதொன்றல்லவா.

அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளில் வாய்மை, பொய்யாமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன் இல் விழையாமை, புறங்கூறாமை, பயன்இல சொல்லாமை, புலால் மறுத்தல், ஈகை, கள்ளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை போன்ற அனைத்து சிறப்புக் குறிப்புகளும் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சுட்டியுள்ள வாழ்வியல் அறநெறிகள் ஆகும். இதுமட்டுமன்றி குறுந்தொகை, புறநானூறு போன்ற பாடல்களில் அரசியல், சமூக நலம் சார்ந்த பல அறநெறிகளும் சுட்டப்பட்டுள்ளன.

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” – புறத்திணை பாடல் – 312

ஒரு தனிமனிதர் தம் வாழ்வில் அமைதிபெற, பிறரிடம் வேண்டும் அனைத்துப் பண்புகளையும் தானும் பெற்றிருக்கவேண்டும் என எண்ணி வாழ்வதே அவர்தம் சிறந்த வாழ்வியல் அறநெறிகளாகின்றன. அந்த வகையில் சமூகத்தில் முழுமையும் மகிழ்ச்சியும், அன்பும், பண்பும், அமைதியும் நிலவ வேண்டுமெனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும், ஒழுக்க நெறிகளையும் விதித்துக்கொண்டு அதை முழுமையாகப் பின்பற்றவும் வேண்டும். அதுவே எதிர்கால சமூகத்தின் அமைதிக்கும், ஆரோக்கியத்திற்கும் நாம் இன்று சரியான பாதையில் எடுத்து வைக்கக்கூடிய அடியாகவும் இருக்கும்.

இதுபோன்ற கருத்தரங்கங்கள் மூலமாக இளைஞர்கள் மத்தியில் நற்சிந்தைகளுக்கான விதைகளை ஊன்றுவது சமுதாயத்திற்கும் செய்யும் சிறப்பான சேவை என்றே கொள்ளக்கூடும் என்பதால் இக்கருத்தரங்கம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற உளமார வாழ்த்துகிறோம்.

பி.கு. “தமிழ் இலக்கியங்களில் பன்முகச் சிந்தனை” என்ற தலைப்பில் நாமக்கல், செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 27, 2018, நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் என் வாழ்த்துரை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழ் இலக்கியங்களில் பன்முகச் சிந்தனைகள்

  1. சிந்தனையை தூண்டும் கட்டுரை. இலக்கியம் மாதொருபாகனாக வாழ்வியலுக்கு அமைகிறது. மொழி அதன் கருவி. ஒவ்வொரு மொழியிலும் உயர்ந்த படைப்புகள் உளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *