-மேகலா இராமமூர்த்தி

நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே அளவிற் பெரியது, ஆற்றல் வாய்ந்தது எனும் பெருமைக்குரியது யானை. அதனால்தான் பண்டை அரசர்கள் களிறுகளை (ஆண்யானைகள்) போர்க்களங்களில் பயன்படுத்தினர். அவற்றை வெல்வதை வீரத்தின் அடையாளமாய்க் கருதினர்.

’களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ என்று ஆடவரின் வீரக் கடமையை வியனுலகுக்கு உணர்த்தினார் பொன்முடியார் எனும் புலவர் பெருமாட்டி.

ஒரு களிற்றைக் கொல்பவனையே வீரன் எனப் போற்றிய தமிழ்ச் சமூகம் ஆயிரம் யானைகளை ஒருவன் போர்க்களத்தில் கொன்றால் என்ன செய்யும்?

அவன்புகழ் தரணியெங்கும் பரவும் வகையில் பரணியே பாடிவிடும்.

ஆம்!

”ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி”
என்று இச்செய்தியைக் குறிக்கின்றது இலக்கண விளக்கம் எனும் இன்தமிழ்ப் பனுவல்.

வடிவத்தில் மட்டுமன்று…மற்ற நிலவாழ் விலங்குகளைக்
காட்டிலும் பெரிய அளவிலான மூளை உடையதும் யானையே. மனிதர்களின் மூளையிலுள்ள நியூரான்களைவிட மூன்று மடங்கு அதிகமான நியூரான்கள் (நரம்பு செல்கள்) யானையின் மூளையில் உள்ளன என்று கண்டறிந்துள்ள அறிவியல், அவற்றின் புத்திக்கூர்மைக்கு இந்த நியூரான்களின் எண்ணிக்கையே காரணம் என்கின்றது. அறிவில் மட்டுமா யானைகள் சிறந்தவை…அல்ல… அல்ல! அன்பெனும் உயர்பண்பிலும் ஈடு இணையற்றவை அவை!

இதற்கு எண்ணிறந்த சான்றுகளைச் சங்கத் தமிழ்ப் பனுவல்கள் நமக்களிக்கின்றன.

அவற்றிலிருந்து சில…

வறண்ட பாலைநிலம் அது! அங்கே தன் இன்துணையான பிடி (பெண்யானை), நா வறட்சியால் வருந்திநிற்கக் காண்கின்றது களிறு. அதன் தாகத்தைத் தீர்க்க நீர்தேடி நெடுந்தூரம் அலைகின்றது. வெகுதொலைவுக்கு அப்பால் ஓர் ஊற்று தென்படுகின்றது; அதனடியில் சிறிதளவு நீர் இருப்பதைக் கண்ணுற்றது களிறு. மீண்டும் பிடியைத் தேடிச்சென்று அதனை இத்துணைத் தொலைவு அழைத்துவருவதைக் காட்டிலும் நாமே நீரை முகந்துசெல்வதே அறிவுடைமை என்று தெளிந்த அக்களிறு, தன் சொரசொரப்பான துதிக்கையில் நீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டு காதல் பிடியை நாடி ஓடுகின்றது.

…கல்லூற்று  ஈண்டல  கயன்அற  வாங்கி
இரும்பிணர்த்
 தடக்கை நீட்டி  நீர்நொண்டு
பெருங்கை
 யானை  பிடியெதி  ரோடும்… (நற்: 186)

பிறிதொரு சமயம் களைத்திருந்த பிடியானையை மலையோரம் உறங்கவைத்த களிறு, அதற்கு உண்ணுதற்கு வேண்டிய பழங்களைப் பறித்துவருவதற்காகச் சிறிதுதொலைவிலிருந்த வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்தபடியே உறங்கிக்கொண்டிருந்த பிடி பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதையும் அவ்வப்போது கவனித்துக்கொண்டுதான் இருந்தது. வாழைப்பழக் குலையை முறித்தெடுத்துக்கொண்ட அது, மீண்டும் தன் பார்வையைப் பிடியை நோக்கித் திருப்பியபோது, உறங்கிக்கொண்டிருந்த பிடியை அங்கே காணவில்லை. அச்சமும் கவலையும் கொண்ட களிறு பெருங்குரலில் பிளிறத்தொடங்கியது.

உண்மையில் பிடியென்னவோ அதே இடத்தில்தான் நிம்மதியாக உறங்கிக்கொண்டு இருந்தது. அவ்வேளையில் வானத்தில் நகர்ந்துகொண்டிருந்த மஞ்சு (மேகம்) ஒன்று, சரியாக அந்த மலைப்பக்கம் வரவே, அது துஞ்சிக்கொண்டிருந்த பிடியை, களிற்றின் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது; அவ்வளவுதான்! அதற்கே அந்தக் களிறு அப்படி ஓலமிட்டுத் தன் வேதனையை வெளிப்படுத்தியது என்றால் அந்த விலங்குக் காதல் மனிதக் காதலினும் புனிதமானது என்பது திண்ணமாய்த் துலங்குகின்றது அல்லவா?

…..பலவுடன்
வாழை ஓங்கிய வழையமை சிலம்பில்
துஞ்சுபிடி மருங்கின்  மஞ்சுபடக் காணாது
பெருங்களிறு பிளிரும் சோலை வர்
சேண்நெடுங் குன்றம் காணிய நீயே.      (நற்:  222 – கபிலர்)

பொதுவாக ஆண் விலங்குகள் தம் காமவேட்கை தீர்ந்தவுடன், (அதனைத் தீர்த்த) பெண் விலங்கை கழற்றிவிட்டுச் சென்றுவிடும் இயல்புடையவை. ஆனால் அதிலும் வேறுபட்டது களிறு. காமம் தீர்ந்ததும் பிடியின் பிடியிலிருந்து தப்பிச்செல்லும் குணம் அதற்கில்லை. தன் உயிர்போகும் அளவும் தன் பெண்துணையைப் பிரியாது வாழும் உயர்ந்த ஒழுக்கமுடையது அது!

அவ்வாறு காதல் வாழ்வில் களிப்புற்றிருந்தன ஒரு களிறும் பிடியும். அந்தப் பிடியானை கருவுற்றது. அது கன்றினை ஈனுவதற்கு வசதியாக மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்த, நிழல்மிகு மலைப்பக்கத்தில் அதனைத் தங்க வைத்தது களிறு. சின்னாட்களில் கன்றினை ஈன்றது பிடி. களிறுகொண்ட களிக்கு அளவேது?

பால்சுரந்த மடியோடும், சோர்வளிக்கும் பசியோடும் வாடியிருந்த பிடியைக் கண்ட அந்தக் கரிய களிறு, அதன் பசியைப் போக்குவதே தன் முதற்கடமை என்றுணர்ந்து அருகிலிருந்த தினைப்புனத்துக்குச் சென்று, அங்கே ஓங்கிவளர்ந்து வளைந்திருந்த தினைக்கதிர்களைக் கவர்ந்துகொண்டுவந்து பிடிக்கு உண்ணத்தந்து அதன் பசியாற்றிற்று.

நெடுங்கழை  நிவந்த  நிழல்படு  சிலம்பின்
கடுஞ்சூல்
 வயப்பிடி  கன்றீன்று  உயங்கப்
பாலார்
 பசும்புனிறு  தீரிய  களிசிறந்து
வாலா
 வேழம்  வணர்குரல்  கவர்தலின்….(நற்: 393 – கோவூர்கிழார்)

மற்றொரு நாள், கன்றீன்றிருந்த அந்தப் பிடியையும் அதன் கன்றையும் தாக்கி அழிப்பது எளிது என்று கருதிய புலி ஒன்று, அவற்றைக் களிறு காத்து நிற்பதை அறியாது, அவற்றைத் தாக்கமுற்பட, அருகே மற்றவர் பார்வையில் படாது மறைந்திருந்த களிறு பாய்ந்துவந்து புலியைத் தாக்கி வீழ்த்திவிட்டு, குருதிக்கரை படிந்த புலால்நாற்றம் வீசும் கோட்டோடு (தந்தம்) பிடியையும், இளங்கன்றையும் அணைத்தபடியே அவ்விடத்தைவிட்டு அழைத்துச்சென்று, தேனைச் சேகரித்துக்கொண்டிருந்த வண்டுகளெல்லாம் அஞ்சி ஓடுமாறு வேங்கைமரத்தின் பொன்போன்ற மலர்கொத்துக்களைப் பறித்துக் கன்றுக்கும் காதல் மடப்பிடிக்கும் ஊட்டி மகிழ்ந்தது.

புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்டு
ஒலிபன்
முத்தம் ஆர்ப்ப  வலிசிறந்து
வன்சுவல்
பராரை முருக்கிக் கன்றொடு
மடப்பிடி
தழீஇய தடக்கை வேழம்
தேன்செய்
பெருங்கிளை இரிய வேங்கைப்
பொன்புரை
கவழம் புறந்தருபு ஊட்டும்…(நற்: 202 – பாலை பாடிய பெருங்கடுங்கோ)

காலடிகளைத் தரையில் ஊன்றமுடியாதபடி கனல் பறந்துகொண்டிருந்த முதுவேனிற் காலத்தில் ஒருநாள், நீர் வேட்கையோடு களிறும் பிடியும் கன்றும் அலைந்துகொண்டிருந்தன. சிறிய ஊற்றொன்று அவற்றின் பார்வையில் பட்டது. குட்டியானை குதித்துக்கொண்டு முதலில் சென்று தன் அடியால் நீரைக் கலக்கி விளையாடத் தொடங்கியது. அவ்வூற்றில் சிறிதளவே நீரிருந்ததைக் கவனித்த களிறு, தன் பிடிக்கு முதலில் அச்சீன்னீரை ஊட்டிவிட்டு எஞ்சியிருந்தைத் தான் பருகியது.

அடி தாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப்  பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே  (கலி:11)

குடும்பத்தை அன்பாய்ப் பேணுவது எப்படி எனும் அரிய பாடத்தை ஆண்மக்கள் களிற்றியானையிடம் கற்க வேண்டும்.

அன்போடு இணைந்துவாழும் யானைக் குடும்பத்தில் யானைக் கன்று ஏதேனும் இறந்துபட்டால், மற்ற யானைகள் மண்ணுக்குள் தம் தலையைப் புதைத்துத் துக்கம் அனுசரிக்கும். இறந்த யானையின் உடல்மீது மண்ணைப்போட்டு அவ்வுடலைப் புதைக்கும் வழக்கமும் யானைகளிடம் உண்டு.

அதுமட்டுமன்று…விதியாலோ மனிதரின் சதியாலோ நீண்டகாலம் பிரிந்துவிட்ட யானையைக்கூட பார்த்த அளவிலேயே  அடையாளம் கண்டுகொள்ளும் அற்புத நினைவாற்றல் கொண்டவை யானைகள். குறுக்குவழிகளைக் கண்டுபிடித்துப் பயணிப்பதிலும் அவை மிகுந்த சாமர்த்தியசாலிகள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

யானைகளிடம் இருப்பவை அனைத்துமே நல்ல குணங்கள்தாமா? தீயவை என்று ஏதுமில்லையா என்று வினவுதிராயின்…

உண்டு என்றே சொல்வேன். ஆண் யானைகளுக்கு அவ்வப்போது மதம் பிடிக்கும். அவற்றின் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளிலிருந்து வழியும் மதநீரானது (musth/must) அவற்றை மூர்க்கமாய் மாற்றும் நீர்மையுடையது.

யானைகளுக்கு மட்டுமா…? மனிதர்களுக்கு மதம் பிடிக்கும்போதும் அதுதானே நடக்கின்றது!

மதமென்னும் அழிகுணத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் யானைகளிடம் நாம் அறிந்து பின்பற்றவேண்டிய அருங்குணங்களே மிகுதி என்று துணிந்து சொல்லலாம்.

*****

கட்டுரைக்கு உதவியவை:

1. நற்றிணை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை

2. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்

2. https://www.fbvideo.com/videos/1246294048836184

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு!

  1. மோனை முத்தமிழ் மும்மதமும் மொழி
    யானைமுன் வந்தெரிர்த்தவன் யாரடா ?

    என்று ஒட்டக்கூத்தர் அகந்தையுடன் பாட

    கூனமும், குடமும், குண்டு சட்டியும்
    பானையும் பண்ணும் அங்குசப் பயல்யான்.

    என்று ஒட்டக்கூத்தரை எதிர்த்து ஒரு குயவன் பாடியதாகக் கதை.

    சி. ஜெயபாரதன்

  2. மதமென்னும் அழிகுணத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் யானைகளிடம் நாம் அறிந்து பின்பற்றவேண்டிய அருங்குணங்களே மிகுதி என்று துணிந்து சொல்லலாம்…

    யானையின் பெருமை பற்றி 141 வது படக்கவிதைப் போட்டியில் எழுதியது…

    141-
    யானை வரும் முன்னே..
    அதன் பெருமை வரும் பின்னே.!
    ==========================

    கோட்பாடு கொண்டு பாலூட்டும் பாசக்குடும்பம்..
    ……….கோட்டுக்காக வேட்டைக் கிரையாகுமோர்க் களிறு.!
    வேட்டஞ் செய்மனிதரும் போற்றும் வகையில்நீ..
    ……….வேகமின்றி நிதானமாய் அற்புதச் செயல்புரிவாய்.!
    ஆட் கொண்டானுனை வாகனமாய் இறைவனும்..
    ……….அறிவிற் சிறந்து விலங்கில்நீ வேறுபட்டதாலே.!
    காட்சிப் பொருளாய் இன்றும்நீ காண்பதற்கரிய..
    ……….கண்ணுக்கு விருந்தளிப்பாய் சிலையாய் உயிராய்.!

    ஆகம சாத்திரத்தில் ஆனையும் ஓரங்கமாகும்..
    ……….ஆலய சிற்பங்களில் சிந்தனைக்கு விருந்தாகும்.!
    ஏகபோகம் எல்லாம் அனுபவிக்கும் ராஜாவும்தன்..
    ……….எதிர்பகை வெல்வானுன் படைத் துணைகொண்டு.!
    மேகவாகனுன் கரியநிறத்தை வெள்ளை யாக்கி..
    ……….மேல்சவாரி செய்ததால் மேலுலகத்திலும் புகழ்.!
    தேகப்பயிற்சி இலாமலே திரண்ட உடலமைப்பும்..
    ……….திகைக்கும் திறன்மிகு உன்தும்பிக்கை அதிசயம்.!

    வாகனமாய்க் கடவுளுக்குப் பணி செய்வாய்..
    ……….வேழமுக வினையகனாக வடிவ மெடுப்பாய்.!
    ஊகத்துடன் பாகனின் சைகையறிந்து செயலை..
    ……….உறுதியுடன் செய்வாய்!ஒன்றாகக் கூடிவாழ்வாய்.!
    பாகனிடம் பரிவுண்டு! ஆனால் மதம்பிடித்தால்..
    ……….பந்தாடி பரலோகம் அனுப்பிடுவாய் அறியாது.!
    சோகத்தை நிகழ்த்துகின்ற இச்செயலாலே உன்..
    ……….சாதனைக்கு இழுக்காக இதுவொரு பங்கம்தான்.!

    லோகத்தை இரட்சிக்கும் பரந்தாமனும் உன்மீது..
    ……….லாவகமாய்ப் பவனிவந் தவனியைக் காப்பான்.!
    சாகசத்தில் சர்க்கஸில் சறுக்கி விளையாடினும்..
    ……….சற்றுதுள்ளிக் குதிக்கத் தெரியாத அப்பாவியாம்.!
    பாகனின் அரையடி அங்குசமுனை அடக்கும்..
    ……….படுத்து எழுந்திருப்பதற்கு படுங்கஷ்ட மதிகம்.!
    வாகாக வளைத்துதன் தும்பிக்கைக் கொண்டுனை..
    ……….வணங்கும் பக்தருக்கு ஆசிர்வாதம் செய்வாய்.!

    https://www.vallamai.com/?p=82501

  3. என் கட்டுரைக்குச் சுவையான மேலதிகத் தகவல்களையும் பாராட்டையும் வழங்கிச் சிறப்பித்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *