நிர்மலா ராகவன்

உண்மையாக இருத்தல்

உண்மையைச் சொல். என் கதை நன்றாக இருக்கிறதா?’ அரும்பாடுபட்டு, ஒரு கதை எழுதி அது பிரசுரமும் ஆனபின், எழுத்தாளராகும் கனவுடன் பலரும் கேட்கும் கேள்வி இது.

நானும் கேட்டேன், `நன்..றாக இருக்கு!’ என்று யார் கூறுவார்கள் என்று தேடி! ஒரு தோழி மாட்டிக்கொண்டாள். தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று புரிந்து, அவளும் ஆமோதித்தாள்.

`சும்மா சொல்றே!’ என்றாலும், பெருமையாகத்தான் இருந்தது. புகழவேண்டும் என்றுதானே அவளைத் தேடிப் பிடித்தேன்!

`எப்பவோ வந்தமாதிரி இருக்கே!’ `நம்ப குடும்பத்திலே நடக்கறதையே எழுதியிருக்கா!’ என்றெல்லாம் நமட்டுச்சிரிப்புடன் உண்மையைச் சொல்பவர்களை நமக்குப் பிடிக்காமல் போகும்.

புள்ளி விவரங்கள், நாம் காண்பது, கேட்பது எதிலுமே உண்மை கிடையாது. நுண்கலைகளில் பொய் உண்டு. ஆனால், அவைமூலம் உண்மையை அறியலாம்.

கதை

ஊர் சுற்றிப்பார்க்கவென்று தன் தூரத்து உறவினரான முரளியின் வீட்டுக்குப் போயிருந்தாள் பூரணி. போனவள் ஒரு மாத காலம் தங்கிவிட்டாள். அவளை எப்படிக் கிளப்புவதென்று முரளிக்கும், மனைவிக்கும் புரியவில்லை. வாக்குவாதம் நிகழ்ந்தது.

`நான் என்ன ஹோட்டலா நடத்தறேன்! ஓயாம சமைக்க வேண்டியிருக்கு! நான் சமைக்கிறதிலேயும் ஆயிரம் லொட்டு லொசுக்கு!’ என்று மனைவி கத்த, `வந்தவளை எப்படிப் `போ’ன்னு சொல்றது!’ என்று முரளி தயங்கினார். இதன் சம்பந்தமாக அடிக்கடி அவர்களுக்குள் தகறாறு எழுந்தது.

ஒரு வழியாக அங்கிருந்து புறப்பட்ட விருந்தாளி பூரணி, பார்ப்பவர்களிடமெல்லாம், `பாவம், நம்ப முரளி! பெண்டாட்டி பிசாசு! எப்பவும் கத்தறா!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

யாராவது அபூர்வமாக, `இதை ஏன் எங்கிட்ட சொல்றே?’ என்று முகத்தைச் சுளித்தால், `உண்மையைத்தானே சொல்றேன்!’ என்பாள் பூரணி.

யாருக்கும் பயனில்லாத உண்மையை, பிறருக்குச் சங்கடம் விளைவிக்கும் உண்மையை, சொல்லாதிருப்பதே மேல். பூரணியிடம் ஒரு சமாசாரத்தையும் சொல்லக்கூடாது, ஒன்றைப் பத்தாக்கிவிடுவாள் என்ற பயம் அவள் உறவினருக்கு வந்தது. பொய்யைப் பரப்புகிறவர்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை.

நன்மை விளையும் என்றால், பொய்யே சிறந்தது. உடல் நிலை மோசமாக இருக்கும் ஒருவரைப் பார்த்து, `சீக்கிரமே குணமாகிவிடுவீர்கள்!’ என்று ஆறுதல் சொல்வதில்லையா, அதுபோல்தான்.

கதை

நான் அடிக்கடி போகும் வாசகசாலையில் இருந்த காதரீனுக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கும். சில சமயம், குழந்தைமாதிரி அன்புடன் பழகுவாள். பிற சமயங்களில் மரியாதை இல்லாது கத்துவாள்.

ஒரு முறை, என்னிடம் மன்னிப்பு கேட்கும் பாவனையில், “எனக்கு மனநிலை சரியில்லை. மருந்து சாப்பிடுகிறேன்,” என்றாள்.

சில மாதங்களுக்குப்பின், அவளுக்குப் பதில் அவ்விடத்தின் சொந்தக்காரி மேரிதான் இருந்தாள்.

“காதரீன் இல்லையா?” என்று கேட்டாள் புத்தகம் இரவல் வாங்க வந்த ஒருத்தி.

“இப்போதெல்லாம் வருவதில்லை,” என்று பதில் வந்தது.

காதரீனின் நிலைமை மோசமாகி, அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

“இப்போ எங்கே வேலை செய்கிறாள்?” (தெரிந்து இவளுக்கு என்ன ஆகப்போகிறது!)

“தெரியாது!” வெடுக்கென்று சொல்லிவிட்டு, “என்னிடம் சொல்லவில்லை,” என்று சமாளித்தாள் மேரி.

மேரி உரைத்தது பொய்தான். ஆனாலும் உண்மையைச் சொன்னால் அவதூறு பேசுவதுபோல் ஆகிவிடாதா! அவள் செய்தது சரிதான் என்றே தோன்றியது.

உண்மையே பேசுகிறாளாம்! காந்தி என்ற நினைப்பு!

மன நிறைவுக்கு உண்மை அவசியம். உண்மை எப்போதும் ஒன்றுதான். மாறுவது கிடையாது.

தனக்குத்தானே உண்மையாக இருப்பவர்கள் பிறரிடமும் உண்மைதான் பேசுவார்கள். இக்குணத்தால் நிறைய எதிரிகளைச் சந்திக்க நேரலாம். இருந்தாலும் அவர்கள் மாற விரும்புவதில்லை.

இப்படியெல்லாம் அவதிப்பட்டுக்கொண்டு எதற்காக உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் பலருக்கும் தோன்றிப்போகிறது. தம்மைப்போல் இல்லாதவர்களைப் பழிக்கிறார்கள்.

முகமூடி மனிதர்கள்

தம்மைப்பற்றிய கசப்பான உண்மைகளை ஏற்க முடியாதவர்கள் பிறர் தம்மை எப்படி ஏற்பார்கள் என்பதற்கேற்ப நடக்கிறார்கள். அதாவது, மனிதருக்கு மனிதர் மாறுகிறார்கள்; வெவ்வேறு முகம் காட்டுகிறார்கள். அப்படிச் செய்தால்தானே பிறரது பாராட்டு கிடைக்கும்!

கதை

சங்கரின் இளமைக்காலம் பொறுக்க முடியாததாக இருந்தது. சிறு வயதிலிருந்தே, முடிந்தவரை வீட்டில் தங்காது, நண்பர்களுடன் பேசி, விளையாடுவதிலேயே கழிக்க ஆரம்பித்தான். அவன் போக்கிற்காகத் தந்தை தண்டிக்க, இன்னும் விலகிப்போனான். மகிழ்ச்சி என்றால் தெரிந்தவர்களுடன் ஓயாது, உரக்கப் பேசிச் சிரிப்பது என்று தோன்றிப்போயிற்று.

பெரியவன் ஆனதும், தன்னைப்பற்றிச் சிறிதும் நினைக்க விரும்பாது, பிறருக்குத் தன் சக்திக்குமீறி உதவி செய்து, அவர்களது புகழ்ச்சியில் ஆறுதல் பெற்றான்.

`இவன் சரியான ஏமாளி!’ என்று பலரும் சங்கரைப் பயன்படுத்திக்கொண்டனர், ஏமாற்றினர். வருத்தம் மிகுந்தது. யாரையும் நம்ப முடியவில்லை. இருந்தாலும், அவனால் மாற முடியவில்லை.

பிறரிடம் ஒருவர் பொய்முகம் காட்டிவருவது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுபோல்தான். தன்னையே புரிந்துகொள்ள முடியாது போய்விடும். இதனால் சுற்றி நடப்பவைகளையும் புரிந்துகொள்ள முடியாது போகிறது.

அனுபவித்துச் செய்வது

சமீபத்தில் ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அடிக்கடி எழுந்த கைதட்டல் பலமாக ஒலித்தாலும், என் முகத்தில் ஏன் மகிழ்ச்சியுடன் கூடிய புன்னகை வரவில்லை என்று யோசித்தேன். பிறரை எப்படிக் கவர்வது என்று யோசித்துச் செய்ததுபோல் இருந்தது. அதாவது, நாட்டியமணியின் அங்க அசைவுகள் அவள் மனத்தின் ஆழத்திலிருந்து வரவில்லை! காதலியின் பாவத்தைக் காட்ட, அவளாகவே மாறும் திறமை, முயற்சி, இருக்க வேண்டும்.

இதேபோன்று, இசை, நடிப்பு, எழுத்து எல்லாமே ஒருவர் அனுபவித்துச் செய்யும்போதுதான் பிறரிடமும் அதன் எதிரொலி எழும்பும். கதாபாத்திரமாக நம்மையே எண்ணிக்கொள்ளும்பொது அவர்களுடைய உணர்ச்சிகளை நடிப்பிலோ, எழுத்திலோ வடிக்க இயலுகிறது.

நமக்கே உண்மையாக இருக்க

`நான் ஏன் இப்படி இருக்கிறேன்?’ என்று கேட்டுக்கொண்டால், நமக்கு உண்மையான விடை கிடைக்கும்.

`எனக்கு ஏன் வருத்தமாக இருக்கிறது?’ என்று உங்களையே கேட்டுப்பார்த்தால், உங்களை எது பாதிக்கிறது என்று புரியும். என்றோ நடந்தது இன்னமும் உங்களைப் பாதித்தால், அதைத் தாண்டி வரும் துணிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

அறியாப்பருவத்திலிருந்தே பலவகைத் துயரங்களுக்கு ஆளாகியிருப்போம். காரணமில்லாமல் பெற்றோர் அல்லது ஆசிரியை தண்டித்தது, உறவினர் செய்த பாலியல் வதை, உற்ற நண்பரின் துரோகம் – இப்படி.

நடந்து முடிந்ததை மாற்ற முடியாது என்ற நிலையில், தீமை இழைத்தவர்களை மன்னித்து, மறக்கலாம். `நான் என்ன, மகாத்மாவா?’ என்று கோபிப்பவர்களுக்கு: வேண்டாதவர்கள் நினைவை மானசீகக் குப்பை மேட்டில் சேர்த்துவிடலாம். அல்லும் பகலும் ஒருவரது நினைவு உங்களைக் கடுமையாகப் பாதித்தால் அதைப் போக்கும் வழி: பாறாங்கல்லில் அவரைக் கட்டி, கடலில் எறிந்துவிடுவதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். மீண்டு வரமாட்டார். (இதெல்லாம் நான் எப்போதோ படித்து, பின்பற்றி, மனப்பாரத்தை இறக்கிவைத்த வழிகள்).

அன்றாட வாழ்க்கையில் சுடுசொற்களாலும் செயல்களாலும் நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் பொறாமையால்தான் அப்படிச் செய்கிறார்கள். `நம் மீது குற்றம் இல்லையே,’ என்று தெளிந்தாலே போதும். அமைதி குன்றாது.

இதேபோல், `மனம் லேசாக, மகிழ்ச்சியாக இருக்கிறதே, எப்படி?’ என்று கேட்டுக்கொள்வதும் நம்மை நாமே புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

நான் ஒரு முறை அப்படி கேட்டுக்கொள்ள, நான் ஆசையாக நட்டுவைத்த செடியின் கிளை பிழைத்து, அதில் துளிர் விட்டிருக்கிறதுதான் காரணம் என்று புரிந்தது.

சிறு குழந்தை முதன்முதலாக முகம் பார்த்துச் சிரிக்கும்போது, தவழும்போது என்று எத்தனை மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள் இல்லை நம் வாழ்வில்! இவைகளை விடுத்து, வேண்டாத நினைவுகளை ஏன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *