க. பாலசுப்பிரமணியன்

 

முயற்சி திருவினையாக்கும்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கேரள மாநிலத்தைச் சார்ந்த ஒரு இளைஞர் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். தன்னுடைய வெற்றிப்படிகளை அடைந்ததற்கான வழிகளையும் முயற்சிகளையும் அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். “நான் சிறுவனாக இருந்த பொழுது ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்தேன். ஒரு வேளை உணவுக்குக்கூட மிகவும் கஷ்டப்பட்டிருக்கின்றேன். மூன்று வேளை  உணவு என்பதோ பகல் கனவாக இருந்தது. ஆனால் இன்று பல கோடிகளை சேர்த்திருக்கும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானவனாக இருக்கின்றேன்.” இவ்வளவு கடினமான குடும்பச் சூழ்நிலைகளிலும் அவர் பல மைல்கள் நடந்து சென்று ஒரு அரசுப் பள்ளியில் தன் தாய்மொழி மூலம் கல்வி பெற்று தொழிற்கல்வி பயின்று மேலும் இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐ. ஐ. எம்) படித்து வளர்ந்ததற்குப் பின்னணி என்ன இருக்கின்றது? .. உழைப்பு!. முயற்சி!!.

தன்னுடைய சொந்த அறிவையும் திறனையும் நம்பி ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்ட அவர் “இட்லி,தோசை” மாவுகளை இரசாயனக் கலப்பின்றி தயாரிக்கும் ஒரு தொழிலை ஆரம்பித்து உலக அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டார். அவர் மாணவர்களுக்கு கொடுத்த அறிவுரை என்ன?  “தன்னம்பிக்கையை எப்பொழுதும் கைவிட்டுவிடாதீர்கள்”

நாம் என்ன தொழில் செய்கின்றோம் என்பதை விட செய்கின்ற தொழிலில் நமது ஈடுபாடு எவ்வளவு உள்ளது. அதில் கவனம் எவ்வளவு உள்ளது. அதில் நாம் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டிருக்கின்றோமா? அதில் வளர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றதா? அந்தத் தொழிலை நாம் நேர்மையாகச் செய்து கொண்டிருக்கின்றோமா ?- என்ற கேள்விகளுக்கான பதில்கள் நம்மிடம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் கீழே விழுந்து விழுந்து மேலே எழுந்தவர்கள் எத்தனை பேர் சாதனையாளர்களாக மாறியிருக்கின்றனர்? ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை சரிதம் எத்தனை வியப்பைத் தரக்கூடியது? தோல்விக்கு மேல் தோல்வியை ஒவ்வொரு படியிலும் சந்தித்தும் அவர் தன்னுடைய நம்பிக்கையை விட்டு விடாமல் வளர்ந்தவர் அல்லவா?

தோல்வியைக் கண்டு துவளுவதும் வெற்றியைக் கண்டு ஆர்பரிப்பதும் ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதனுக்கு அறிகுறி அல்ல. இரண்டையும் நடுநிலையுடனும் நிதானத்துடனும் எடுத்துக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும். இதுவே உணர்வுசார் புத்திக்கூர்மைக்கு (Emotional Intelligence) அடையாளம். மனித வளத்தின் வளர்ச்சிப்பாதையில் மூன்று விதமான புத்திக்கூர்மைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அவசியத்தின் தேவையை மனநல வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அவை:  அறிவுசார்  புத்திகூர்மை ( Cognitive Intelligence) , உணர்வுசார் புத்திகூர்மை, (Emotional Intelligence) திறன்சார் புத்திகூர்மை (Skill-Quotient). இவற்றில் உணர்வுசார் புத்திகூர்மை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றது. இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படையாகக் கருதப்படுகின்றது. கல்வியின் அடிப்படை நோக்கமும் இதுவே. தன்னுடைய உணர்வுகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாதவர்களும் தன்னுடைய கட்டுப்பாடற்ற உணர்வுகளுக்கு அடிமையாகி விட்டவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகச் சரித்தரமே இல்லை !

ஒவ்வொரு மனிதனும் தன்னுள் எல்லையற்ற வளங்களைத் தன்னடக்கிக் கொண்டிருக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் அறிவு மற்றும் திறன் சார்ந்த வளங்களின் ஊற்றுக்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆனால் நம்மில் பலரும் தம்முடைய சொந்தத் திறன்களையும் உணர்வுகளையும் மறந்து மற்றவர்களைப் பார்த்தது ஏங்கிக் கொண்டும் அவர்களுடைய வாழ்க்கையை நாம் வாழவேண்டும் என்ற தவறான குறிக்கோளிலும் தவித்துக்கொண்டிருக்கின்றோம். துரதிருஷ்ட வசமாக, நம்முடைய கல்வித்திட்டங்களும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களைப்போல மாணவர்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. பெற்றோர்களும் தங்களுடய குழந்தைகளின் உண்மையான திறன்களையும் கனவுகளையும் ஒதுக்கிவிட்டு அவர்களை தங்களுடைய நிறைவேறாத கனவுகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் மாற்றம் நிச்சயமாகத் தேவை.

உள்ளமைந்த திறன். மூளை எதையாவது படைப்பதற்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கின்றது. அதற்கு உரமிட வேண்டும். கற்றலை வெறும் புதையலாக்கி நிலத்திற்கு அடியில் புதைத்து வைக்க முயற்சிக்கக்கூடாது.  அதை எப்படி உபயோகிப்பது என்று சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. ஒரு முறை ஒரு வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பொழுது அங்கு கரையோரத்தில் உள்ள ஒரு இயற்கைசார் விடுதியில் தங்கியிருந்தேன். மாலையில் அந்தப் பரந்த இடத்தைச் சுற்றி வரும்பொழுது அங்கே இருந்த பலகையில் “விளையாட்டு கிராமம்” (Games Village) என்று எழுதப் பட்டிருந்தது. அதற்கான நுழைவுக்கட்டணம் பத்து டாலராக இருந்தது. கூட இருந்தவர்கள் “உள்ளே சென்று பார்க்கலாமே” என்று விரும்பியபோது “இவ்வளவு பணம் செலவழித்து உள்ளே சொல்லவேண்டுமா” என்ற தயக்கம். ஆனால் மற்றவர்களின் விருப்பத்தை மதித்து உள்ளே சென்ற எனக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே முதல் விளையாட்டாக சுமார் பத்து அடி நீளத்தில் செய்யப்பட்ட ஒரு பல்லாங்குழி மண்ணில் புதைக்கப்பட்டு சோழிகளுடன் விளையாடுவதற்குத் தயாராக இருந்தது. இதென்ன விளையாட்டு?  சிறிய வயதில் நாம் எவ்வளவு விளையாடியிருக்கின்றோம் ? இதைக் காசு கொடுத்துப் பார்க்க வேண்டுமா? என்று நினைத்துக்கொண்டே அடுத்த விளையாட்டிற்குச் சென்ற பொழுது அது “ஆடு புலி ஆட்டம்: !

இப்படி ஒவ்வொரு விளையாட்டும் சிறிய வயதில் நம்முடைய தமிழ்நாட்டில் நான் மதுரையில் வாழ்ந்தபோது விளையாடிய ஆட்டங்கள் ! மனம் நொந்து போய் “இதற்கா பத்து டாலர் ஒருவர்க்கு கொடுத்தோம்?’ என்று நினைத்து அதை நிர்வகிக்கும் அந்த நாட்டின் நபரிடம் கேட்ட பொழுது , அவர் இதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இதை கண்காணிப்பவர் வேறு ஒருவர் என்றும் சொல்லி அவரை அழைக்க, அவரோ தமிழ்நாட்டைச் சார்ந்தவர்,. தனது பெயரைத் “தங்கபாண்டி” என்று சொல்லி “நான் தூத்துக்குடியைச் சார்ந்தவன் ” என்றதும் நான் கேட்டேன் ” இது என்னய்யா.. ஏமாற்று வேலைபோல இருக்கிறது.. இதெல்லாம் நாங்கள் சிறு வயதில் விளையாடியது அல்லவா?” என்றதும் அவர் கூறிய பதில் வியப்பாக இருந்தது. “அய்யா, பல நாட்டு மனிதர்கள்  இங்கு வந்து தங்கி பகலும் இரவும் இந்த விளையாட்டுக்களை விளையாடுகின்றார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவையும் தருகின்றது. இதற்காக அவர்கள் நிறையப் பணமும் செலவழிக்கின்றார்கள். நான் என்னுடைய அறிவில் என்ன இருக்கின்றதோ அதை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றேன். இதில் என்ன தவறு?” எனக் கேட்டார். அவர் பதிலுக்குத் தலை வணங்கியது மட்டுமின்றி அவருடைய புத்திக்கூர்மைக்கும் திறனுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தேன். அறிவையும் திறனையும் உபயோகித்து மற்றவர்களை ஏமாற்றாமல் நேர்மையான முறையில் எந்தத் தொழில் செய்தால் என்ன? தன்னைத் தானே தோற்கடித்துக்கொண்டு மூலையில் முடங்கி நம்முடைய தோல்விக்கு மற்றவர்களை இரையாக்கிக் கொண்டிருப்பதில் பயன் என்ன ?

வாழ்ந்து பார்க்கலாமே !

 

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *