வ.சுப.மாணிக்கனாரின் மொழிச்சிந்தனைகள்

0

 

    முனைவர் செ.செந்தில்பிரகாஷ்,

                     உதவிப் பேராசிரியர்,

                     தமிழாய்வுத்துறை,

     அ.வ.அ.கல்லூரி (தன்.),

     மன்னன் பந்தல்,    

     மயிலாடுதுறை.

 

 

ஞால முதன்மொழியாய் உயர்தனிச் செம்மொழியாய் வீற்றிருக்கும் தமிழ்மொழி தான் தோன்றிய காலந்தொட்டு இன்று வரை பல்வேறு வகைப்பட்ட தாக்குதல்களுக்கும் அழிப்பு வேலைகளுக்கும் ஆட்பட்டே வருகின்றது. இத்தகைய வரலாற்று நிகழ்வுகளைத் தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றளவுமான நெடிய வரலாற்றுப் பாதையில் நம்மால் காணமுடிகின்றது. இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் மொழிப்போராட்ட வரலாற்றில் தமிழ்த்தாய்க்குத் துணை நின்ற தமிழறிஞர்களுள் ஒப்பற்ற மணியாய் திகழ்பவர் வ.சுப.மாணிக்கனார் ஆவார். இவர் தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழ் வளர்ச்சி பற்றியே சிந்தித்து தமிழின் சிறப்புகள் பற்றி பல ஆய்வுகள் செய்தமையால் `தமிழ் இமையம்’ என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்டவர். தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் நூல்கள் பல படைத்தவர். தமிழ் கலைச்சொற்கள் பல உருவாக்கியவர். தன் வாழ்வில் படிப்படியாய் உயர்ந்து தான் வகித்தப் பதவிகளுக்குப் பெருமை சேர்த்தவர். தமிழின் உரிமையினை நிலைநிறுத்த சிதம்பரம் கோயிலில் திருமுறைகள் பாடப்பெற வேண்டும் என்று தமிழ் ஆர்வலர் துணையோடு போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். தமிழ் வழிக் கல்வி இயக்கம் தொடங்கி தமிழ் நலக்கருத்து பரப்புரை செய்து மழலையர் பள்ளிகள் எல்லாம் தமிழ் வழிப்பள்ளிகளாக விளங்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தவர். இவர் படைத்த நூல்கள் யாவிலும் தமிழ் மொழி, இனம், நாடு குறித்த சிந்தனைகள் பெரிதும் மிளிர்வதைக் காணலாம். அவற்றுள் தலைவர்களுக்கு என்ற தலைப்பில் எழுதப்பட்ட கடித வகையிலான நூலில் தமிழ்மொழி குறித்த சிந்தனையோடு இந்திய மொழிகளின் எதிர்கால நிலை குறித்த சிந்தனைகளும் இடம்பெறுவதைக்காணலாம்.

வ.சுப.மாணிக்கனாரின் தலைவர்களுக்கு

       வ.சுப.மாணிக்கனாரால் கடித வடிவில் எழுதப்பட்ட தலைவர்களுக்கு என்ற தலைப்பிலான 25 கடிதங்களைக் கொண்ட இந்நூல் இந்திய மொழிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான சிந்தனைகளை முன் வைப்பதோடு இன்று நிலவும் மொழிச்சிக்கலுக்கான தீர்வினைக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்நூல் எழுதப்பட்ட சூழலானது மிக நீண்ட வரலாற்றுப் பின்புலத்தினைக் கொண்டுள்ளது. அவற்றை இக்கட்டுரையின் முதல் பகுதியில் காணலாம்.

பன்மொழி தேசிய கூட்டாட்சி நாடாக உருவாக்கப்பட வேண்டிய இந்தியத் துணைக்கண்டம் ஒரு மொழித் தேசியமாகக் கட்டப்படுகின்றது. இதனால் பிற மொழித் தேசியங்கள் நசுக்கப்பட்டு வருகின்றன. இந்தியானது இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதால் மொழிச்சிக்கல் உருவாகின்றது. இதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்தால் இந்தியா பல பகுதிகளாக உடையும் என்பதையும் கணித்த வ.சுப.மாணிக்கனார் இந்திய ஒருமைப்பாடு என்பது சிதையாமல் காக்கப்பட அவர் முன்மொழியும் மொழிச்சித்தாந்தங்களை இக்கட்டுரையின் பின்பகுதியில் காணலாம். மாணிக்கனார் நூல் எழுதப்புகுமுன் மூன்று முத்தான கருத்துக்களை முன் வைத்தே தொடங்குகிறார். அவற்றில் உடன்பாடு உள்ளோரே மேற்கொண்டு தன் கடிதத்தைத் தொடரவேண்டும் என்று தெளிவுறுத்துகிறார். அவை,

  1. வன்முறை எதற்கும் என்றும் எவரும் கையாளக்கூடாது.
  2. பாரதத்தின் ஒருமை பாழ்படக்கூடாது.
  3. அடிப்படை உரிமையில் ஏற்றத்தாழ்வு கூடாது.

என்பதுவேயாகும். இவற்றின் மூலம் அவரின் உண்மையான இந்திய ஒருமைப்பாட்டுணர்வு புலப்படும். மேலும் ஒவ்வொரு கடிதத்தின் இறுதியிலும் தன்னை `இந்தியத் தமிழன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இவ்வுணர்வுடனேயே அவரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டே இக்கட்டுரையும் எழுதப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்றேன். ஏனெனில் இந்தித் திணிப்பிற்கு எதிராகப் பேசுபவர்கள் இந்திய நாட்டிற்கே எதிரானவர்களாகவும் இந்தியை ஏற்றுக் கொள்பவர்களே இந்திய தேசபக்தர்கள் என்று பார்க்கப்படும் தவறான போக்கு இன்று பெருகிக் கொண்டிருப்பது முதன்மைக் காரணியாகும்.

நூல் இயற்றப்படுவதற்கான வரலாற்றுப் பின்புலம்

       இன்று இந்தியா என்றழைக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட இப்பெரு நிலப்பரப்பு வரலாற்றில் ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் ஒருங்கே இருந்தது இல்லை. இப்பெரு நிலப்பரப்பினை ஆட்சி செய்து வந்த மன்னர்கள் தங்கள் வலிமையின் வழி ஒருசில பகுதிகளைத் தவிர்த்த ஒற்றைப் பேரரசாகவோ பலநூறு குறுநில மன்னர்களால் ஆளப்படும் பகுதிகளாகவோ பல காலகட்டங்களில் மாறுதல்களுக்கு உட்பட்டே இருந்தது. ஓர் பகுதியை பிறமொழி இனத்தவர்கள் வந்து ஆள நேரிட்டபோதிலும், மக்கள் மொழியே நீதி மன்றங்களிலும் அலுவல் நிலைகளிலும் ஆட்சிமொழியாகப் பயன்பட்டு வந்தது. முகலாயர் ஆட்சியில் இந்நிலை சற்று மாறினாலும் பாதிப்பு பெருமளவு இல்லை. ஆனால் ஆங்கிலேயர் இம்மண்ணைப் பிடித்து ஆட்சி செய்ய முற்பட்டபோதுதான் ஆட்சிமொழி பற்றிய சிக்கல் ஏற்படத் தொடங்கியது. இந்தியத் துணைக்கண்டம் பற்பல நாடுகளாகவும் சிற்றரசுகளாகவும் சுதந்திரம் உள்ளவை, சுயாட்சி பெற்றவை, கப்பம் கட்டுபவை என மூவகையாக இருந்து வந்தன. எனவே இந்தியப் பேரரசு என்பது இல்லாது இருந்ததால் மத்திய அரசு என்ற ஒன்று

இருந்ததில்லை. இவ்வாறாக அதுவரை இல்லாத இந்தியத் துணைக்கண்டத்தினையே ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி தன் துப்பாக்கியின் வலிமையால் ஒரு நாடாக உருவாக்கியது. ஆங்கிலேயர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காகப் பலமொழி பேசும் மக்களை ஒன்றாக இணைத்து ஆளும் மாகாண ஆட்சி முறையைப் புகுத்தினர். இம்மாகாண ஆட்சி முறையில் மக்களின் மொழிகள் பயன்படுத்தப்படாமல் ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டது. பல்லாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த பாரத துணைக்கண்டத்தின் பல தேசிய இனங்கள் ஒன்றிணைந்து ஓரு குடையின்கீழ் நின்று தங்களது விடுதலைக்காக போராடி வந்த நிகழ்வுகளை வரலாற்றில் நாம் கண்கூடாகக் காணலாம்.

இந்திய ஒன்றியத்தின்கீழ் ஏற்பட்ட மொழிச்சிக்கல்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலை எடுத்தபோது விடுதலைப் போராட்டத் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையில் அடுத்து எவ்வகை அரசு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களும், மத அடிப்படையில் இஸ்லாமியர்கள் செறிவாக உள்ள மாகாணங்களும் உள்ள இந்தியத் துணைக்கண்டத்திற்கு `மாகாண சுயாட்சி’ ஏற்றதாக இருக்கும் என்ற கருத்து நிலவியது. மாநில சுயாட்சி என்ற அரசியல் தீர்வு பல்வேறு மொழிவழித் தேசிய இனக்கோரிக்கைகளை நிறைவு செய்யவல்லது என்பது பல இந்தியத் தலைவர்களும் ஆங்கிலேயர்களும் கண்ட முடிவு. ஆகவேதான் 1935இல் மாநில சுயாட்சி என்ற அமைப்பை ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். அக்கால காங்கிரஸ் கட்சியும் மாநில சுயாட்சியை மிக வலிந்து கோரியது. 1920ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிய வேண்டும் என்ற கொள்கையை பலமுறை காங்கிரஸ் உறுதி செய்தது.

ஆனால் இந்திய விடுதலையின் போது நடந்தது என்பது வேறு கதை. இந்தியா இரண்டாகப் பிரிந்த நிலையில் கலவரங்களும் வன்முறைகளும் நிகழ்ந்ததைக் காரணம் காட்டி ஒரு வலிமையான மத்திய அரசை காங்கிரஸ் உருவாக்கியது. இந்நிலை ஒற்றை மொழி வளர்ச்சிக்காகவும் ஒற்றை ஆதிக்க தேசிய இன மேலாண்மைக்காகவும் வட இந்தியப் பெரு முதலாளிகளின் ஒட்டுமொத்த சுரண்டலுக்கும் நிலைக்களனாக அமைந்தது. மொழிவழி மாநில சுயாட்சி உருவாக்கப்பட்டு தங்கள் மொழிசார்ந்த கலை, பண்பாட்டுக் கூறுகள் மேம்பாடடையும் என்று எண்ணியிருந்த மொழியுணர்வாளர்களின் தலையில் பேரிடியாக விழுந்தது. இந்தியா முழுவதும் மொழிவழி மாநிலம் வேண்டி போராட்டங்கள் எழ ஆரம்பித்தன. சிலபகுதிகள் மாநிலங்களாகப் பிரிந்தன. மேலும் கிளர்ச்சிகள் தோன்ற 1956ஆம் ஆண்டு பசுல் அலி என்பவர் தலைமையில் மாநிலச் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. 15 மொழிகள் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன. இன்று 22 மொழிகள் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தேசியமொழிகளாக இடம்பெற்றுள்ளன. இன்னும் சில மொழிகள் வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

 

பயனற்ற மொழிவழி மாநிலம்

1956இல் ஏற்படுத்தப்பட்ட மொழிவாரி மாநிலங்கள் இவர்களது தேசிய இன உணர்வின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை. ஏனெனில் 1950ஆம் ஆண்டே இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. இறையாண்மையற்ற தேசிய இன வரையறையற்ற, அதிகாரமற்ற மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் மத்திய அரசிற்கு ஆடும் கைப்பாவை போல மாநிலங்கள் அமைக்கப்பட்டன. மேலும் சுயமாக நடக்கக் கூடிய மாநில அரசை கலைப்பதற்கு இந்திய அரசுச் சட்டம் 356 ஏற்படுத்தப்பட்டது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஒரே இரவில் கலைத்துவிடலாம். இந்திய அரசியல் வரலாற்றில் பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டும் உள்ளன.

தேசிய இனங்களின் மொழிப்போராட்டம்

தேசிய இனங்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களுக்கு இடையில் ஆட்சிமொழி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற ஆய்வுக்குழு தந்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஆட்சிமொழிச் சட்டத்தை 1963 ஏப்ரல் 13ஆம் நாள் அன்றைய உள்துறை அமைச்சர் இலால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். அதில் 26.01.1965 ஆம் நாள் முதல் இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி மேலும் ஆங்கிலம் இந்தியுடன் கூடுதல் மொழியாகப் பயன்படுத்தலாம் எனப்பட்டது. இதில் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று அதில் உறுதியாகச் சொல்லப்படவில்லை. இது இந்தி பேசாத மாநில மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 26.01.1965 க்குப் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மத்திய அரசால் இந்தியில் வெளியிடப்படும் மத்திய அரசுச் சட்டங்கள், ஆணைகள், கட்டளைகள், நெறிமுறைகள் ஆகியவை மட்டும்தான் அதிகாரப்பூர்வமானவை. மாநில அரசுகள் மைய அரசினை தொடர்பு கொள்ளும்போது இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு மாநில ஆளுநர் அனுமதியுடன் வெளியிடப்பட வேண்டும். 1965 செப்டம்பர் முதல் I.A.S மற்றும் I.P.S போன்ற மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை ஆங்கிலத்தோடு இந்தியிலும் எழுதுவதற்கு இந்தி ஆட்சி மொழிச்சட்டம் வகை செய்தது.

நூல் எழுந்த காலச்சூழல்

இந்தி மொழியின் தடையில்லா வளர்ச்சி காரணமாக இந்தி பேசும் மக்கள் அரசுப்பணி, நிர்வாகம், நீதித்துறை என அனைத்துத் துறைகளிலும் மேம்பாடு அடைந்து வருவர் அதற்கு மாறாக இந்தி பேசாதவர்கள் மொழி மூலமாக வாய்ப்பு மறுக்கப்படுவதால் தாழ்வு அடைகின்றனர். தங்களின் உரிமைகளை இழந்த இந்தி பேசாத மாநில மக்கள் தங்கள் மாநிலங்களில் இந்திய அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினர். இதில் இந்திய ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு நடத்தியப் போராட்டம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இப்போராட்டத்தில் பல ஊர்களில் உள்ள அஞ்சலகங்களும் தொடர்வண்டி நிலையங்களும் காவல்துறை வண்டிகளும் மட்டுமல்லாமல் இராணுவ வண்டி பஞ்சாலை திரையரங்கம் என பல தீக்கிரையாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்போராட்டத்தை கலைக்கவும் அடக்கவும் தமிழகக் காவல் துறையினர் 33,000 பேர்களும் ஆந்திர, மைசூர், கேரளா, மகாராட்டிரம், மத்தியப்பிரதேச காவல் துறையினர் 4,000 பேர்களும் 5,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். காவலர்கள் ஆர்ப்பாட்டக் கூட்டத்தினரைக் கலைக்க 70க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு இடத்தில் மட்டும் இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்ததாகத் தெரிகிறது. ஆனால் 70 பேர்களே இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காவலர்கள் 4பேர் இறந்தனர். 210பேர் காயமுற்றனர். ஐம்பது நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில் மொத்தம் 6 மொழியுணவாளர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்தும் 2பேர் நஞ்சுண்டும் இறந்தனர். இவ்வாறாக தமிழர்கள் தங்கள் உடல் உறுப்புகளையும் உடைமைகளையும் இழந்து இன்னுயிரையும் ஈகம் செய்து நடத்தப்பட்ட இத்தகைய போராட்டச் சூழலை மையமிட்டே மாணிக்கனாரின் தலைவர்களுக்கு என்ற கடித நூல் எழுதப்பட்டது. இதில் இந்திய ஆட்சிமொழி குறித்துச் சிந்தித்த இந்தியத்தலைவர்கள் தெளிவுற வேண்டிய இடங்கள் குறித்தும் இந்தி மொழியானது பிற இந்திய தேசிய மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதால் ஏற்படும் மொழிச்சிக்கல்கள் குறித்தும் அதற்கு தீர்வுகள் கொடுக்கும் அவரது சிந்தனைகளையும் இனிக் காணலாம்.

சிதையும் தேசிய மொழிகள் குறித்தச் சிந்தனை

இந்தியத் துணைக்கண்டமானது பன்மொழித் தேசிய இனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அவற்றுள் இந்தி ஒரு திசை வழக்கு, தமிழ் ஒரு திசை வழக்கு இவை போல பல மொழிகள் உள்ளன. இவற்றுள் இந்தியை மட்டும் பொதுமொழியாகவும் நடுவணரசின் வளர்ப்பு மொழியாகவும் இருப்பதனால் பிறமொழிகளின் வாழ்வு தடைபடும். பிறமொழி வட்டாரங்களில் எல்லாம் இந்தி வழக்குப் பெருகும். எல்லா மாநிலங்களிலும் இந்தித் தாய்மொழியாளர் என்ற புதுவினம் இடையிடையே முளைக்கும். இந்தி ஒரு திசை வட்டார வழக்கு என்ற தன்மை ஒழிந்து பரந்து வழங்கும் பாரத மொழியாகிவிடும். அரசுக்கு எது மதமோ அதுதான் நாடெங்கும் பரவும், அரசுக்கு எது மொழியோ அதுதான் நாடெங்கும் சிறக்கும். அதுபோல அரசுக்கு எது மொழியோ அதுதான் நாடெங்கும் ஆதிக்கம் செலுத்தும். மற்ற தேசிய மொழிகளை மிகச் சிறுமொழி, குறுமொழியாக்கிவிடும். முன்னர் வடக்கே வாழ்ந்த முண்டா பெருமொழியும் அதன் கிளை மொழிகளான சந்தாலி, முண்டாரி, சவேரா, கரியா போன்ற மொழிகள் தன்னிலையிலிருந்து திரிந்தன. வடக்கில் வாழ்ந்த திராவிட மொழிகளான ஒரோவான், மால்டோ, கோந்து, கோலமி, பிராகூய் முதலானவை சுருங்கிக் குன்றிப் போனமைக்கு வட இந்திய மொழிகளின் ஆதிக்கமே காரணமாக அமைந்தது. இம்மொழியாளர்களுக்கு நாளடைவில் வட இந்திய மொழிகளே தாய்மொழிகளாகிவிட்டன. என்ற எடுத்துக்காட்டோடு தேசிய மொழிகளுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுவிடும் என்று வ.சுப.மாணிக்கனார் எச்சரிக்கை செய்தார்.

 

 

இந்தி ஒன்றே பொதுமொழி என்பதால் அதனைப் பாரத அரசு கோடி கோடிப் பொருள் செலவிட்டு அதிகாரத்தோடு மூலை முடுக்கெல்லாம் பரப்புகிறது. அதனால் பழைய மதமாற்றம் போன்று புதிய மொழிமாற்றம் ஏற்படும். ஏனைய மொழியினர் வாழ்வு நச்சி இந்தியைத் தாய்மொழியாகவே தழுவும் நிலை வரும். வந்தால் அஞ்சத்தக்க விளைவுகளும் கொடுமைகளும் உண்டாகும். இந்தியை மட்டும் படித்தால் போதும், தன் மாநிலத்திலும் வேலை கிடைக்கும், பிற மாநிலங்களிலும் வேலை கிடைக்கும். மத்திய அரசிலும் வேலை கிடைக்கும், மதிப்பு உயரும், பொருள் உயரும், பதவி உயரும், அதிகாரம் உயரும் என்று எண்ணுவதுதான் உலகியல். இப்படிப் போவதுதான் உயிரியல், வாழ்வியல், தமிழ் ஒன்றே பொதுமொழியானாலும் மற்ற மொழிகளானாலும் பிற மொழியினத்தவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும். வேலை வாய்ப்பை எங்கும் தரும் இந்திப் பட்டதாரி ஆவதையே எல்லோரும் விரும்புவர். தமிழில் சொல்லிக் கொடுக்கும் பொறியியல், கலையியல், மருத்துவ இயல் எல்லாம் அணிலாடு முன்றில் போல மாணவர் தொகையின்றி எடுபட்டுவிடும். தமிழிற்கு ஆள் வரவில்லையே, மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பவில்லையே, தமிழ்ப்பற்று இல்லையே என்று இன்றுபோல் அரசு ஒப்பாரி வைக்கும் நிலை வரும் என்று மாணிக்கனார் கூறியது இன்று உண்மையாகிவிட்டது.

மக்களின் மொழிச்சிந்தனை

இந்தி ஒன்றே பொதுமொழி, தென்னக மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் இணை மொழியாக இருக்கும் என்பது அரசின் நிலை. ஆனால் மக்களோ எப்படியும் சட்டப்படி ஒருநாள் இந்தி பொதுமொழியாகிவிடும். அதற்குண்டான நடவடிக்கைகளை நடுவணரசும் செய்து கொண்டிருக்கிறது என்பதால் நாள் தள்ளிப் படிப்பதை விட இப்போதே படிக்க முந்திக்கொண்டு விடுவோமே என்று படிக்கத் தொடங்கிவிடுவர். குழந்தைகளையும் படிக்கச் செய்வர். ஆங்கிலம் அகலும்போது அவ்விடத்தை இந்தி கைப்பற்றுமாதலின் என்றும் மாநில மொழிகள் வளராது. இவற்றுக்கு ஒருநாளும் விடுதலை இல்லை. இம்மொழிகளுக்கு தனி வளர்ச்சி என்பது இல்லை. என்று தொலைநோக்குப் பார்வையுடன் எழுதிய வ.சுப.மாணிக்கணாரின் கருத்துக்கள் இன்று எந்த அளவு மெய்யாகி இருக்கின்றன என்பதை நாம் உணரலாம். இந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தமிழ் மக்களே இன்று சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சேர்க்கப் பாடுபடுகின்றனர். சமச்சீர் பாடத்திட்டத்தால் பதின்மப் பள்ளிகள் (மெட்ரிகுலேசன்), ஆங்கிலோ – இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பாடத்திட்டப் பள்ளிகள் போன்றவற்றின் பாடத்திட்டங்கள் ஒழியும் என்பதால் பதின்மப் பள்ளிகளைத் திறக்கலானார்கள், இது மட்டுமல்லாமல் இன்று தமிழகத்தின் பன்னாட்டுப் பாடத்திட்டப் பள்ளிகளும் பெருமளவில் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு மக்களின் வரவேற்பும் மிகுதியாக உள்ளது. இப்பள்ளிகளில் படித்து முடித்தவுடன் தங்களின் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவிடலாம் என்ற

 

எண்ணம் பெற்றவர்களுக்கு உருவாகிவிட்டது. இப்படி வளரும் குழந்தைகளுக்கு எப்படித் தாய் நாட்டுப்பற்று வளரும்? `தாய்மொழிப் பற்றே தாய் நாட்டுப் பற்றை உருவாக்கும்’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் சொன்னதை நாம் நினைவுகூற வேண்டாமா? நாட்டுப்பற்று இல்லாத நாடு பிற நாட்டினரின் கையில் எளிமையாக அடிமையாகிவிடும் என்ற வரலாறு சொல்லிக் கொடுத்த பாடத்தை நாம் மறக்கக்கூடாது.

தென்னாட்டு வடநாட்டுத் தலைவர்களின் மொழிச்சிந்தனை

       நாட்டுப்பற்றில் ஓருணர்வு கொண்ட நம் தலைவர்கள் மொழிப்பற்றில் ஈருணர்வு கொண்டவர்களாக விளங்குகின்றனர் என்பதாக வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். இந்தி மக்களும் இந்தித் தலைவர்களும் தங்களுடைய மொழிப்பற்றில் எந்தவித வேறுபாடுமின்றி உள்ளனர். வடநாட்டைச் சார்ந்த தலைவர்கள் இந்தி மக்களின் தலைவராகக் கருதிப் பேசுகின்றனரேயன்றி, இந்திய மக்களின் தலைவராகக் கருதிக் கருத்துக்களை தெரிவிப்பது இல்லை என்பதை ஜவகர்லால் நேரு, வினோபாபாவே, மாவ்லங்கர் போன்ற தலைவர்களின் கூற்றினை ஆராய்ந்து இந்நூலில் தெளிவுறுத்துகின்றார். சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் இலக்குமணசாமி முதலியார் 1951 இல் பாராள்மன்றத்தின் அவை நாயகராக இருந்த திரு மாவ்லங்கருக்கு ஒரு நற்கடிதம் எழுதினார். ஐ.நா. அவையில் ஒரே சமயத்துப் பன்மொழி நடப்புக்களை மொழிபெயர்க்கும் கருவிகள் உள எனவும் அக்கருவிகளை நம் மன்றத்திலும் வைத்துக் கொள்ளலாம் இதற்கு மூன்று இலட்ச ரூபாய் இருந்தாற் போதும், சபையின் நடப்புக்கள் உறுப்பினர் எல்லாருக்கும் புரியும் என்று எழுதினார். இதற்குத் தலைவர் மாவ்லங்கர் `இவ்விதம் செய்தால் இந்தி பரவுமா, பரப்ப உதவியாகுமா?’ என்று விடைகூறினார் என்பதை எடுத்துரைக்கும் மாணிக்கனார் வடநாட்டுத் தலைவர்கள் இந்தியத் தலைவர்களாக இல்லாமல் வெறும் இந்தித் தலைவர்களாகவே இருக்கின்றனர் என்பதற்கு சான்று பகர்வதாக அமைகின்றது.

தென்னாட்டுத் தலைவர்களோ தென்னாட்டு மக்களின் மொழியுணர்வோடு கலக்காமல் பேசுகின்றனர். தென்னாட்டு மக்களின் மொழியுணர்வை வளர்க்காமலும் இந்தி மொழிக்கு ஒப்ப விடுதலை செய்து வளர்க்கும் அன்புத் துணிவு இல்லாமலும் இருக்கின்றனர். இவர்கள் தம் மொழிகளுக்குத் தலைமையுரிமை கொடாமல் நாட்டொருமை சுட்டியும், ஆட்சியெளிமை சுட்டியும் வேலைவாய்ப்புச் சுட்டியும் இன்னொரு மொழிக்கே எக்காலத்தும் தலைமை வழங்கும் அறியாமை தென்னாட்டுத் தலைவர்களிடம் வளர்ந்தோங்கிவிட்டது என்று சாடுகின்றார். மேலும் இந்தித்திணிப்பு என்றபொழுது நாம் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஆங்கிலத்தை நாமே திணித்துக் கொள்கின்றோம். ஆங்கிலம் என்றால் இமயம் முதற்  குமரி வரை ஆங்கிலமே இருக்க வேண்டும். தாய்மொழிகள் என்றால் அவரவர் தாய்மொழிகளே இடம்பிடிக்க வேண்டும் என்ற சமநிலைக் கருத்தினை வ.சுப.மாணிக்கனார் முன்மொழிகின்றார்.

 

மொழியுரிமைச் சிந்தனை

மக்களுரிமைகளுள் தலை சிறந்த உரிமையாகக் கருதப்படுவது மொழியுரிமையே ஆகும். நாடு சீராக இயங்க வேண்டுமானால் அடிப்படை உரிமைகளுள் கை வைக்கக்கூடாது. உரிமையில் கைவைப்பது உயிரிற் கை வைப்பதற்கு ஒப்பாகும் மக்களுரிமையினைக் காப்பாற்றுவதே ஓர் நல்லரசிற்கான இலக்கணமாகும். உரிமைகளை மேடைப் பொருளாகவோ தேர்தற் பொருளாகவோ, கட்சிப் பொருளாகவோ வாக்கெடுப்புப் பொருளாகவோ மக்களுரிமையை நிறுத்தக் கூடாது. மாறக்கூடிய மதவுரிமை, கட்சியுரிமைகளிலும் மாற இயலா தாய்மொழி உரிமை தலையானது. அதுவே பிறப்புரிமை என்று மொழியுரிமைக்கான முதன்மைத்துவத்தை இந்நூலின் பல இடங்களில் வலியுறுத்திச் செல்வதைக் காணலாம்.

ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டகன்ற பின்னர் நம்மவர்கள் ஆட்சியில் தலைமையிடம் பெற்றனர். கல்வித்துறையிலும் பிற துறைகளிலும் தலைமையிடத்தை அடைந்தனர். தாங்கள் தலைமை பெற்றது போலத் தங்கள் மொழிகளும் தலைமையிடம் பெற வேண்டும் என்று சிந்திக்காமல் விடுத்தனர். விடுதலைக்கு முன் இருந்த துணிவும் தியாகமும் விடுதலைக்குப்பின் இல்லை என்றே கூறலாம். நாட்டுக்கு உரிமை பெற்ற நாமே நம் மொழிகளை அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டோம். அதனால் உரிமைப்பெற்றதன் முழுப்பயனை நுகரமுடியாமல் வளர்ச்சிகளைச் சிந்தனை செய்யாமல் இடையூறுகளையே சிந்தனை செய்துகொண்டிருக்கின்றோம்.

நம் நாட்டு மொழிகளையெல்லாம் நம்பிக்கையோடு துணிவாக உயர்த்தி மொழிப்புரட்சி செய்துவிட்டோமானால் கங்கை, காவிரி பாய்ந்த நிலம் போல வளம் பல பெருக காணலாம். இதனால் உடல் நலம் பெருகும், கல்வித்தெளிவு உண்டாகும், அறிவுப் புரட்சி ஏற்படும், எண்ணவீறு செறியும், இனிய உறவு தழைக்கும், ஒற்றுமையுரன் கூடும், உள்ளம் உயரும், நோபல் பரிசு வாங்கும் பல்லுயிர்கள் பிறக்கும் நிலை உருவாகும் என்பதை மாணிக்கனார் தன் உள்ளத்தெளிவுடன் கூறுகிறார்.

ஆங்கிலப் பயன்பாட்டளவு

       நம் தாய்மொழிகள் பல துறையில் ஆழ்ந்து அகன்று ஆக்கம் கூறுவதற்கு ஆங்கிலத்தைத் தவிர வேறு துணையில்லை. ஆங்கில மொழியின் உலக மதிப்பையும் இந்திய உறவையும் நாம் புறக்கணித்துப் பேசுவது தற்கொலைக்கு ஒப்பாகும். ஆங்கிலமே ஞாலத்திற்கும் இந்தியாவிற்கும் ஒரு நூற்றாண்டிற்கு மேல் அறிவுப் பாலமாக இருந்து வருகின்றது. தற்கால நிலைமைக்கு நம் மொழிகள் 20 விழுக்காடு கூட வளராத நிலையில் நம் மொழிவளர்ச்சிக்கு நாம் ஆங்கிலத்தையே சிக்கென பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஆங்கிலத்திற்கு பதவிநிலை கொடாது உதவிநிலை பெறும் முறையே சிறந்ததாகும். ஆங்கிலத் தேவைக்கு சட்டம் இயற்றத் தேவையில்லை. பொதுமொழிப் பதவிநிலை வேண்டியதில்லை. ஆங்கிலத்திற்குச் சிறப்பு அதன் பதவியைப்

பொறுத்தது அன்று அறிவு வளர்ச்சிக்குச் செய்யும் உதவியைப் பொறுத்ததாகும். ஆற்றலற்ற ஆற்றல் சேரவேண்டும் என்று நினைக்கின்ற ஒன்றுக்குத்தான் பதவியளிக்க வேண்டும். நம் நாட்டு மொழிகள் தற்கால வளர்ச்சி பெறவில்லை. பெறும்படி செய்வதற்கு ஆட்சிப்பீடத்தில் தூக்கி வைக்க வேண்டும் என்று நம் இந்திய மொழிகளையும் ஆங்கிலத்தையும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நுட்பத்தினை இந்நூலின் ஏழாவது கடிதத்தில் கூறிச்செல்கின்றார்.

மொழிச்சிக்கலுக்கான தீர்வுச்சிந்தனை

பாரதப் பங்கு எல்லா மொழிகளுக்கும் இருக்குமாறு, பாரதப் பற்று எல்லா மொழி மக்களுக்கும் பிறக்குமாறு, பாரத எண்ணம் எல்லா மொழி நிலத்தும் படியுமாறு பாராள்மன்றம் பதினான்கு மொழி (அட்டவணை மொழி 22) மன்றமாக ஆங்கிலத்தையும் பல்லாண்டு தழுவிப் பதினைந்து மொழி மன்றமாக இயங்க வேண்டும் என்பதுவே மாணிக்கனாரின் எதிர்பார்ப்பாகும். மேலும் பன்மொழி வைப்பு பல குழப்பத்தைத் தரும் என்று கூறுவதை விடுத்து ஒருமொழி வைப்பால் ஏற்படும் ஒற்றுமைக் குழப்பத்தை சிந்திக்க வேண்டும். ஒருமொழி வைப்பால் ஏற்படும் ஒற்றுமைச் சிக்கலை விட பன்மொழி வைப்பால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல் பெரிது இல்லை. என்று கூறிப் பன்மொழி வைப்பால் ஏற்படும் நிர்வாகச் சிக்கலுக்கு வழிமுறைகளையும் கூறுகிறார். அவை

  1. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியிலேயே பேசவேண்டும். அவர்கள் கற்ற, சிந்தித்த மொழியிலேயே தங்கள் எண்ணங்களைப் புலப்படுத்த வேண்டும் என்று மொழியுரிமை வழங்குதலே குடியரசு முறை, அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் தாய்மொழியில் பேசும் பேச்சுக்களை மொழிபெயர்ப்புக் கருவி அமைத்தும் மொழிபெயர்ப்புச் சிறுதுறை அமைத்து மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தும் பாராளுமன்ற நடவடிக்கைகளை நடத்த வேண்டும்.
  2. பன்மொழி வைப்பு நம் நாட்டிற்கு எளிது; ஏற்றது; ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் தனிநிலம், தனிமக்கள், தனி வளர்ச்சியுண்டு. மத்திய அரசுக்கோ பாராள் மன்றத்துக்கோ வேண்டிய மொழி நடவடிக்கைகளையும் அச்சுக்களையும் பதிப்புகளையும் மாநிலங்களிடம் ஒப்படைத்துவிடலாம். இவை பற்றிய செலவினங்களை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும். மத்திய அரசுக்குப் பெருகும் மொழிச்செலவு இராது. ஒரு மொழிச் சார்வு என்ற மாசும் வராது. மாநில ஆட்சி முழுவதும் வட்டார மொழிகளில் நடக்கும் போது அப்படியே அம்மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாகவும் தழுவிக் கொள்வது தானே படிமுறை? அதனால் மேலும் எளிமைக்கும் சிக்கனத்துக்கும் இடமுண்டல்லவா? மத்திய ஆட்சி என்பது தனியாட்சியன்று, மாநில அரசுகளின் கூட்டாட்சி, பாரதம் என ஒரு தனிநிலம் இல்லை. மாநிலங்கள் கூடிய பரப்பே பாரதம். பாரதமொழி என ஒன்று இல்லை, ஒன்றை உருவாக்குவதும் உருப்படியாகப்

 

போவதில்லை. மாநில மொழிகளே பாரத மொழிகளாகும். இங்ஙனம் சிந்திப்பதே இயற்கை சிந்திப்பு, ஆதலின் வீட்டுமொழி, வட்டாரமொழி, பாரதமொழி என்று மொழிப்பிரிவினை செய்யாது முத்தன்மையும் எல்லா மொழிகளுக்கும் கிடைக்குமாறு மொழியுரிமை அளிப்பதே குடியரசு முறையாகும்.

  1. அஞ்சலகம், வருமான வரியகம், உயிர்க்காப்பகம், புகைவண்டி நிலையம், வானொலி நிலையம் முதலான பல பொதுத்துறைகளுள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ளன அல்லவா? இம்மத்தியத் துறைகளில் மாநில மொழிகள் ஆட்சி செய்ய வேண்டும்.
  2. வானொலியை மாநிலங்களின் மொழிகளை பண்பாட்டினைக் காக்கும் சாதனமாக பயன்படுத்த வேண்டும். (அக்காலத்தில் தொலைக்காட்சி இல்லை) ஆனால் திரைப்படம் இருந்தது. ஆகையால் திரைப்படத்தினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுரை கூறுகிறார். திரைப்படம் என்பது குழந்தை, பெண்டிர் முதலான எல்லா நிலையினர்க்கும் வாழைப்பழத்தில் ஊசிபோல எளிதில் மொழியுணர்ச்சி ஊட்டும் வழியாகும். இப்படங்களில் மாநில மொழிகளின் இடங்களை இந்தியும் ஆங்கிலமும் பறித்துக் கொள்கின்றன. இது குடியரசு முறையன்று இயல்பான தாய்மொழி உணர்ச்சிக்கும் பெருந்தடையாகும். தமிழ் நாட்டில் காட்டப்படும் ஒவ்வொரு செய்திப் படத்திலும் தமிழ் வாசகங்கள் திரையில் இடம்பெற வேண்டும். ஏனை மாநில மொழிகளும் அவ்வவ்நிலத்து இடம்பெற வேண்டும்.
  3. இந்திய நாடு பன்மொழி நாடாதலின் அப்பன்மொழியும் நிகரான வளம் பெற்று வாழ வேண்டும் என்பது நம் விழைவாதலின் செய்ய வேண்டுவது என்ன? ஒவ்வொரு மாநிலத்தும் இந்தி என்னும் ஒரு மொழி மட்டுமின்றிப் பன்மொழி பரவுதற்கு அடிகோல வேண்டும். பன்மொழி நிலையங்கள், பன்மொழி பெயர்ப்பாளர்கள் பன்மொழிச் சிறு நூல்கள் எல்லாம் நகரங்கள் தோறும் பேரூர்கள் தோறும் பரவ வழி காணவேண்டும். பன்மொழிக் காற்று இமய முதற் குமரி வரை நாலாறு திசையிலும் வீச வேண்டும். இக்காற்று வீசினால், நம் பாராள் மன்றம் நாலைந்து மொழியளவில் இயங்கும் மன்றமாக விளங்கக் காண்பீர்கள். மத்திய அலுவலர்கள் சில முக்கிய மொழிகளைக் கற்றிருத்தல் காண்பீர்கள். குடியரசு என்னும் கோடாச் செல்வி இந்திய கோல் ஏந்தி இனிய நடை பயின்று எங்கும் உலாவி வரக்காண்பீர்கள்.
  4. மத்திய அலுவலகங்கட்கும் மாநில அலுவலகங்கட்கும் இந்தியப் பொதுமக்கள் எத்திசையிலிருந்து எம்மொழியிற் கடிதம் எழுதினாலும் எழுதிய மொழியிலேயே பதில் பெற வேண்டும்.
    7. பன்மொழி ஆட்சிமொழிகளாக உள்ள சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, பின்லாந்து, கனடா, யூகோசுலேவியா, இரசியா, மலேசியா முதலான நாடுகளுக்கும் ஐக்கிய நாட்டவைக்கும் மொழிக்குழுக்களை அனுப்பி ஆட்சி நடைமுறைகளைப் பார்த்து வரச்செய்ய வேண்டும்.

என்பனவாகப் பல முத்தாய்ப்பான கருத்துக்களைக் கூறும் வ.சுப.மாணிக்கனார் தனது 24வது கடிதத்தில், தான் நூல் முழுவதும் கூறிய மொழிபற்றிய கருத்துக்களைத் தொகுத்து ஒரு வரிச்செய்தியாக கருத்துத் தெளிவுடன் படிப்போர் யாவரும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் 12 கருத்துக்களாகக் கூறியுள்ளார்.

  1. இந்தி ஒன்றே பொதுமொழியாதல் கூடாது.
  2. இந்தி ஆங்கிலம் என்ற இரட்டையாட்சி கூடாது.
  3. மத்திய அரசுக்கு ஒருமொழிச் சார்பு கூடாது.
  4. ஆங்கிலம் கல்வித்திட்டத்தில் பேரிடம் பெறுக.
  5. பதினான்கும் (அட்டவணை மொழிகள் 22) பாரதப் பொதுமொழிகள் ஆகுக.
  6. பதினான்கும் (அட்டவணை மொழிகள்22) பாராள்மன்ற மொழிகள் ஆகுக.
  7. பதினான்கும் (அட்டவணை மொழிகள்22) பாரதப் பணித்தேர்வு மொழிகள் ஆகுக.
  8. தாய் மொழியைத் தன்னிறைவாக்குக.
  9. நம்மொழிகள் உயர்கல்வி மொழியாக ஆண்டு குறிக்க.
  10. பன்மொழியறிவை நாட்டிற் பரப்புமின்.
  11. பங்கு நல்கிப் பற்று வளர்மின்.
  12. வன்முறை என்னும் சின்முறை ஒழிமின்.

என்று மாணிக்கனார் அரசுக்குக் கூறும் அறவுரை மொழிகள் இக்காலக்கட்டத்திற்கும் பொருந்தும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இன்று உயிர்ப்புடன் பலத்த உத்வேகத்துடன் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நடுவணரசின் மொழிப்பரப்புத் திட்டம் என்ற ஆலமரத்தின்கீழ் மாழில மொழிகள் என்ற சிறு செடிகள் வளர முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்று மாநில அரசுகள் தங்களது மாநில ஆட்சிமொழித் திட்டத்தில் மட்டுமல்லாமல் கல்வித் திட்டத்திலும் தோல்வியடைவதற்கு ஆங்கில மோகம் என்பதோடு இந்தியின் வல்லாதிக்கமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. நடுவணரசு படிப்பில் சலுகைகள் தந்தும் வேலையில் சலுகைகள் தந்தும் புகட்டப்படும் கல்வியே வெற்றிபெறும். தமிழ் படித்தால் தமிழில் படித்தால் தமிழ் நாட்டளவில் மட்டுமே வேலை வாய்ப்பு; ஆனால் இந்தியில் படித்தால் இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு; ஆங்கிலம் படித்தால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு பெறலாம் என்ற நிலையில் தமிழ் படிப்பதற்கும் தமிழில் படிப்பதற்கும் யார் முன் வருவார்கள்? இந்நிலை தமிழகத்திற்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். எனவே இத்தகைய நிலையிலிருந்து இந்தியாவில் வதியும் தேசிய மொழிகளைக் காக்க அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழிகளாக்கும் திட்டம் வகுத்து செயல்படுத்த  வேண்டும். அப்பொழுதுதான் இந்தியா, மொழிச்சிக்கல் இல்லாத உண்மையான குடியரசு நாடாகத் தோற்றம் தரும்.

நிறைவாக

மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் பண்பாட்டு அயர்ச்சிக்கும் அவனிடம் தோன்றும் சிந்தனை இன்றியமையாத்து ஆகும். அச்சிந்தனை செயற்பாட்டிற்கும் பரவுவதற்கும் மொழி மிகவும் இன்றியமையாதது ஆகும். அப்படிப்பட்ட மொழியைப் பயன்படுத்துவதற்கு அரசிடம் சிக்கல் தோன்றுமானால் அங்கு தெளிந்த அறிவு வளர்ச்சிக்கு இடம் இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்து மொழிச்சிக்கல் அறிவுக்குத் தடை, நாட்டன்புக்குத் தடை என்று கூறி இந்திய மொழிச்சிக்கலுக்குத் தீர்வினை வழங்கியவர்தான் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஆவார். அவரின் மொழிக்கொள்கைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருந்தால் மொழிச்சிக்கல் என்ற தொல்லை என்றோ ஒழிந்து பிரிவினைக் கொள்கை அழிந்து அடிமையுணர்வு அகன்று நாம் இந்தியர் என்று மெய்யாக மார்தட்டிக் கொள்ளும் நிலை பிறந்திருக்கும். ஆனால் இன்றோ நாம் இந்தியர் என்ற உணர்வு திரைப்படத்தின் மூலமாகவும், மட்டப்பந்து விளையாட்டின் மூலமாகவும் பள்ளிப்பாடத்திட்டத்தின் மூலமாகவும் விளம்புகை செய்வதின் மூலமாக மட்டுமே மேலோங்கி உள்ளது. இதை விடுத்து ஒரு மாணவன் இந்த மாயையிலிருந்து விடுபட்டு ஆராயும்போது சிந்திக்கும்போது இவையெல்லாம் உடைபட்ட பொம்மையின் விரிசல் தெரியாமல் இருக்க பூசப்பட்ட மேல்பூச்சு என்ற குட்டு மண் பொம்மை உடைவது போல உடைபட்டுப் போகின்றது. இந்நிலையில் நாம் ஒன்றை முழுமையாக நம்பி அதன்வழி நடந்து அதுவே தன் வாழ்க்கையாக எண்ணி நடந்து வருபவர்க்கு தான் நம்பியது பொய் என்ற உண்மை தெரியும் இடத்தில் எந்த அளவிற்கு மன வலியும் நெருடலும் தோன்றுமோ அந்த நிலை ஏற்படுகிறது. முன்பு தமிழகத்தில் மட்டும் காணப்பட்ட இந்தித்திணிப்பு எதிப்புப் போராட்டம் இன்று இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பரவியிருப்பதை நம்மால் காணமுடிகின்றது. எனவே மொழியுணர்வாளர்களை தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்துவது இந்திய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் சதிச்செயல் என்பதை உணர்ந்து, மொழியறிஞர்களின் சிந்தனைகளை மதித்து செயலாக்கி இந்திய அரசாங்கம் இந்திய மொழிச்சிக்கலைத் தீர்த்து தேசிய இனங்களின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும். இது இன்று கூர்மையாகிக் கொண்டிருக்கும் மொழிச்சிக்கல் எதிர்காலத்தில் பெரிய மொழிப்போராக வெடிக்காமல் இருப்பதற்கான வழியாகும் என்பதை புரிந்து செயல்படவேண்டும்.

——————————————-

 

துணைநூற் பட்டியல்

  1. வ.சுப. மாணிக்கம் – இந்திய ஆட்சிமொழி – சாரதா பதிப்பகம் – சென்னை.
  2. செ. செந்தில் பிரகாஷ் – மொழிப்போர் வரலாற்றில் தமிழகம் – முனைவர் பட்ட ஆய்வேடு – தமிழ்ப்பல்கலைக்கழகம் – தஞ்சாவூர்.
  3. அ. இராமசாமி – என்று முடியும் இந்த மொழிப்போர்? – செம்புலம் பதிப்பகம் – மதுரை.
  4. த. சுந்தரராசன் – தமிழ் ஆட்சிமொழி – மணிவாசகர் பதிப்பகம் – சென்னை.
  5. 02.2000 – தினகரன் வசந்தம் இதழ், ப.20.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *