நந்திக்கலம்பகத்தில் மெய்ப்பாடுகள்

க.கவின்பிரியா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி , (தன்னாட்சி), சேலம்-7

முன்னுரை

தமிழ்மொழி வரலாற்றில் தொன்மையான நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் மிகச்சிறந்த இலக்கிய, இலக்கண நூலாகத் திகழ்கிறது. பண்டைத் தமிழின் இயல்புகளை இயம்புவதோடு, இன்றைத் தமிழையும் இனிதே வழிநடத்திச் செல்கிறது. தொல்காப்பிய இலக்கணக் கூறுகளுள் ஒன்றான மெய்ப்பாடுகளை, சிற்றிலக்கிய கலம்பக நூல்களுள், காலத்தால் முற்பட்ட இலக்கியமான நந்திக்கலம்பகத்தில் ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

மெய்ப்பாடு

உள்ளத்தில் தோன்றும் அக உணாச்சிகள் புறத்தில் உள்ள உடல் உறுப்புகளால் வெளிப்படுத்துவது மெய்ப்பாடாகும். தொல்காப்பியர் எண்வகை மெய்ப்பாடுகளை பின்வரும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்..

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப (தொல்.மெய்.247)

நகை, அழுகை முதலிய எண்வகை மெய்ப்பாடுகளையும், அதன் நிலைக்களன்களையும் மட்டுமே இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

நகை

நகை என்னும் மெய்ப்பாடு பின்வரும் நான்கு பொருண்மைகளில் தோன்றுவதாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

எள்ளல் இளமை பேதைமை மடனென்று

உள்ளப்பட்ட நகைநான்கென்ப   (தொல்.மெய்.248)

நந்திக்கலம்பகத்தில் நகை என்னும் மெய்ப்பாடு எள்ளல், பேதைமை, மடன் என்னும் பொருண்மைகளில் இடம்பெற்றுள்ளது.

 

 

எள்ளல்

பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். பாணன் தலைவனை வரவேற்குமாறு தலைவியிடம் வேண்ட, தலைவி பாணனை இகழ்ந்து கூறும் பின்வரும் பாடல் எள்ளல் எனும் பொருண்மையில் இடம்பெற்றுள்ளது.

ஈட்டு புகழ்நந்தி பாண! நீ எங்கையாதம்

வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்

பேயென்றாள் அன்னை பிறா நாரியென்றனா தோழி

நாயென்றாள் நீ என்றேன் நான்(நந்தி.பா.101)

பாணனே, என் தங்கையாரின் வீட்டிலிருந்து விடியும்வரை பாடும் ஓசை கேட்டு, என் அன்னை காட்டில் அழுகின்ற பேயின் குரல் என்றாள். பிறா நாரி ஊளையிடும் குரல் என்றாள். தோழி நாயின் குரைப்பொலி என்றாள், நானோ நீ பாடுகின்ற பாட்டின் குரல் என்று கூறினேன் எனத் தலைவி கூறுவதாக அமைந்த இப்பாடல் நகைச்சுவை ததும்ப பாணனை எள்ளி நகைப்பதாக அமைந்துள்ளது. இதே பொருண்மையில் பின்வரும் அகநானூற்றுப்பாடல் வரிகளும் பாணனை இகழ்ந்து நகைக்கும் வகையில் அமைந்துள்ளது.

நகையாகின்றே தோழி நெருநல்

மணிகண்டன்ன துணிகயந்துளங்க   (அகம்.பா.56)

பரத்தை மனைக்குச் செல்லும் வழியில் கன்றீன்ற பசு தன்னை நோக்கிப் பாய்ந்ததால் எதிர்பாராமல் தலைவியின் மனைக்குத் திடீரெனப் புகுந்த பாணனை எள்ளி நகைப்பதாக இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன.

பேதைமை

தலைவியின் உடல் மெலிவைக் கண்டு, வெறியாட்டு நிகழ்த்த எண்ணிய செவிலியிடம் வெறிவிலக்குமாறு கூறிய பின்வரும் பாடல் பேதைமை எனும் பொருண்மையில் நகை எனும் மெய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

மாட்டாதே இத்தனை நாள் மால்நந்தி வரன்வரைத்தோள்

பாட்டாதே மல்லையாகோன் பாரியானைப் பாரிச்சுவடு

காட்டாதே கைதைப் பொழிலுலவும் காவிரிநீர்

ஆட்டாதே வைத்தென்னை ஆயிரமும் செய்தீரே(நந்தி.பா.46)

வேலனின் குறையெனக் கருதி, வெறியாட்டு நிகழ்த்துவதை விடுத்து, தலைவனின் புகழைப் பாடச் செய்தும், அவன் உலா வந்த யானையின் காலடித்தடத்தை காண்பித்தும், காவிரி நீரைக் கொண்டு வந்துஎன்னை முழுக்காட்டவும் செய்திருந்தால் என் நோய் தீர்ந்து இன்படைந்திருப்பேன் எனத் தலைவி தமாரின் அறியாமையைக் கூறும் இப்பாடல் நகை எனும் மெய்ப்பாடு தோன்ற அமைந்துள்ளது.

மடன்

தலைவியின் பேரழகை நினைந்து தலைவன் தன் நெஞ்சோடு கூறுவதாக கீழ்வரும் பாடல் மடன் எனும் பொருண்மையில் இடம்பெற்றுள்ளது.

மாதா இவரோடுறுகின்றாய் வாழி மற்றென்மட நெஞ்சே(நந்தி.பா.10)

தலைவியை எண்ணி அவளது நினைவாகவே இருக்கும் அறியாமை உடைய மனமே என்று தலைவன் தன்நெஞ்சிற்கு கூறுவதாக அமைந்த பாடல் மடன் எனும் பொருண்மையில் இடம் பெற்றுள்ளது.

அழுகை

அழுகை எனும் மெய்ப்பாடு இழிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கு நிலைகளில் தோன்றும் என கீழ்வரும் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

இழிவு இழவே அசைவே வறுமையென

விளிவில் கொள்கை அழுகை நான்கே(தெல்.மெய்.249)

இழவு

உயிரானும், பொருளானும் இழக்கும்போது அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றும். நந்திவர்மன் இறந்தபின்பு பாடப்பட்ட கையறுநிலைப்பாடல் அழுகைச்சுவையில் இடம்பெற்றுள்ளது.

வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

(நந்தி.பா.108)

நந்தி மன்னனின் குளிர்ந்த முகம் நிலவிலும், அவனது பெருமை அலைகடலிலும், வீரம் புலியிடமும், கொடைக்கரங்கள் கற்பக மரத்தையும் சோந்தன. இனி நானும் என் வறுமையும் எங்கு செல்வோம் என்று மனமுருகிப் பாடப்பட்ட இப்பாடல் அழுகைச் சுவையில் இடம்பெற்றுள்ளது.

அசைவு

தலைவனின் பிரிவை நினைத்து, உடல் மெலிந்து, கூந்தல் சடை திரண்டு, அழுது அழுது கண்ணீரினால் ஆடை நனைந்து தலைவி வருந்திய நிலை பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.

வனைவர்குழல் வேணியும் வாடை கணீர்

நனைவர் துகிலும்இவை நாளும் இரா

வினைவர்கழல் நந்தி விடேல்விடுகின்

கனையா முரசொத்தது கார்அதிர்வே(நந்தி.பா.13)

இப்பாடலில் அசைவு எனும் பொருண்மையில் அழுகை எனும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது.

குறித்த கால எல்லை வந்துவிட்டதையறிந்து தலைவன் தேர்ப்பாகனிடம், தலைவி கண்ணீருடன் உடல் மெலிந்து, தெருவில் நின்று நம் தேர் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பாள். ஆகவே விரைவாகத் தேரைச் செலுத்து என்று கூறுவதாகப் பின்வரும் பாடல் வரிகள் அழுகை  என்னும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளன.

மொழியார் தொண்டைப் பன்மலா முற்றும் தெருவந்து

விழியாள் என்றும் மேனி வெளுத்துற மெலிவாளே(நந்தி.பா.43)

இக்கருத்தொடொப்ப, பின்வரும் நற்றிணைப்பாடலில் தலைவன் தோப்பாகனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

கல்சுடா சேருங் கதிர்மாய் மாலைப்

புல்லென் வறுமனை நோக்கி மெல்ல(நற்.பா.32)

இளிவரல்

இளிவரல் எனும் மெய்ப்பாடு மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கு நிலைக்களன்களில் தோன்றும் என்று தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

மூப்பே பிணியே வருத்த மென்மையொடு

யாப்புற வந்த இளிவரல் நான்கே(தொல்.மெய்.250)

மூப்பு

பகைவேந்தன் ஒரு தூதுவனை அனுப்பி தனக்குப் பெண் கொடுக்குமாறு கேட்டதற்கு, ஒரு வீரன் எனது வில் ஒடிந்து தேய்ந்துள்ளது எனக்கருதியும், நான் மூப்பில் தளர்ந்து போயிருக்கின்றேன் எனவும் கருதி, என் மகளை மணம் பேசவந்தாய் என்று வெகுண்டு, தன் தலைவன் நந்திவர்மனின் வீரத்தைக் கூறுவதாக பின்வரும் பாடல்வரி அமைந்துள்ளது.

அம்பொன்று வில்லொடிதல் நாண்அறுதல் நான்கிழவன் அசைந்தேன்

(நந்தி.பா.77)

இப்பாடல்வரி மூப்பின் காரணமாக இளிவரல் எனும் மெய்ப்பாடு தோன்றியதை உணர்த்துகின்றது.

வருத்தம்

தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி, தனது ஆற்றாமையை குருகிடம் கூறி தூது விடுப்பதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

பொழுது கண்டாய் அதிர்கின்றது போகநம் பொய்யற்கென்றும்

தொழுது கொண்டேன் என்று சொல்லு(நந்தி.பா.3)

தலைவன் கூறிய பொய்மொழிகள், அவன் தகுதிக்கு குற்றமாகும் எனக் கூறி குருகை தூது விடுப்பதாக அமைந்த இப்பாடல் வருத்தம் எனும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

மருட்கை

புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கு பொருண்மைகளில் மருட்கை எனும் மெய்ப்பாடு பிறக்கும் என்பதை கீழ்க்காணும் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே(தொல்.மெய்.251)

புதுமை

தலைவனின் அருளையும், நிலவொளியையும் ஒப்பிட்டு தலைவி கூறுவதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

படக்குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பாரறியத்

துடக்குடையாரையல்லால் சுடுமோ இச்சுடாப்பிறையே(நந்தி.பா.65)

தன்னைத் தவிர மற்ற அனைவருக்கும் அருள் செய்யும் தலைவனைப்போல, இப்பிறை நிலவும் வெப்பத்தைக் கொடுக்குமோ? என்று தலைவி வியந்து வருந்துவதாக புதுமை எனும் பொருண்மையில், மருட்கை எனும் மெய்ப்பாட்டில்  இப்பாடல் அமைந்துள்ளது.

பெருமை

நேற்று, கிழிந்த கந்தல் ஆடையை இடுப்பில் சுற்றி, பல வீடுகளுக்குச் சென்று யாசகம் வேண்டியலைந்த பாணன் இன்று நல்ல மணமிக்க மாலை அணிந்து கொன்றை மரத்தின் புதுமலரைப் போன்ற பொன்னாலான பொன்னாடையும், அணிகலன்களும் அணிந்துகொண்டு யானை மீதேறி வருகிறான். சொல்ல முடியாத புகழுடைய நந்திவர்மனின் வேலின் சிறப்பினை பாடியிருப்பானோ என்னவோ என்று கண்டோர் வியந்து கூறுவதாக பின்வரும் பாடல் வர்ரிகள் அமைந்துள்ளது.

மாவௌளாற்று மேவலாக்கடந்த

செருவேல் உயாவு பாடினன் கொல்லோ(நந்தி.பா.23)

இப்பாடலில் பெருமை காரணமாக மருட்கை எனும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது.

அச்சம்

அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை எனும் நான்கு நிலைகளில் அச்சம் தோன்றும்.

இறை

இறை எனும் பொருண்மையில், நந்திவர்மனின் தோள்கள் வெற்றியுடைய வேந்தர்களின் மனதை அஞ்சச் செய்வன என்று அச்சம் எனும் மெய்ப்பாட்டில் பின்வரும் பாடல் இடம்பெற்றுள்ளது.

மறமத காரிதிசை நிறுவின மணிநகை யவர்மனம் நகுவன

விறலரசாகள் மனம் நெகிழ்வன(நந்தி.பா.7)

விலங்கு அச்சம்

அச்சம் தரத்தக்க விலங்குகளைக் காணும்போதும் அச்சம் எனும் மெய்ப்பாடு தோன்றும்.

சென்றஞ்சி மேற்செங்கண்வேழம் சிவப்பச் சிலாதிகைப்ப

அன்றும் சினத்தார் இனமறுத்தார் போலும் அஃதஃதே

குன்றஞ்செய்தோள் நந்தி நாட்டம்குறிக் குருக்கோட்டையின்மேல்

சென்றஞ்சப்பட்டதெல்லாம்படும் மாற்றலா திண்பதியே

(நந்தி.பா.16)

குருக்கோட்டை எனுமிடத்தில் நந்தியின் போர் யானைகள்  சினந்து தாக்க மக்களும்,அரசர்களும் அஞ்சியோடினர். நந்திவர்மனின் சினத்திற்கு ஆளாகி அஞ்சியொடுங்கி அடிபணிந்து நின்றவர் நிலை போலவே பகைமன்னர்களின் நிலையும் இருக்கும் என்று கூறுவதாக அமைந்த இப்பாடல் அச்சம் என்னும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

பெருமிதம்

கல்வி, தறுகண், புகழ், கொடை என்ற நான்கு பொருண்மைகளில் பெருமிதம் தோன்றும்.

கல்வி, தறுகண், புகழ், கொடையெனச்

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே(தொல்.மெய்.253)

கல்வி

நந்திவர்மன் பழமையான இலக்கிய நூல்களின் எல்லைகளை முழுமையாக அறிந்தவன் எனும் பொருளில் பெருமிதம் எனும் மெய்ப்பாட்டில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

தொல்லை நூல்வரம்பு முழுது கண்டான் நந்தி(நந்தி.பா.3)

 

தறுகண்

விண்தொடுதிண் கிரியளவும் வீரம் சொல்லும்

விடேல்விடுகு நீ கடவும் வீதிதொறும்

திண்தறுகண் மாத்தொழுத பாவைமாக்கு (நந்தி.பா.74)

வானளவு உயாந்துள்ள வலிமைமிக்க வடவேங்கட எல்லையளவும் தன் வீரச் சிறப்புச் செல்ல ஆள்கின்ற நந்திவர்மன் என்று இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதால் தறுகண் எனும் பொருண்மையில் பெருமிதம் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளன.

கொடை

சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களும், வடநாட்டு மன்னர்களும், கப்பப்பொருளாக கொடுத்த யானைகள், குதிரைகள், போன்றவற்றை இரவலாக்கு கொடுத்த கொடையின் பொருட்டு பெருமிதம் எனும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடல் வரிகளில் அமைந்துள்ளது.

சேர சோழரும் தென்னரும் வடபுலத்தரசரும் திறைதந்த

வீரமதகாரியிவை பாரியிவை இரவலா கவர்வரே(நந்தி.பா.27)

வெகுளி

உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என நான்கின் அடிப்படையில் வெகுளி எனும் மெய்ப்பாடு தோன்றும்.

உறுப்பறை குடிகோள் அலை கொலை என்றன

வெறுப்ப வந்த வெகுளி நான்கே(தொல்.மெய்.254)

உறுப்பறை

பாண்டியமன்னனின் கோட்டைக்குள் நுழைந்து வாட்போரில் வல்ல பகைவர்கள் உடல்கள் துண்டு துண்டாக வெட்டி இருப்பிடம் சென்ற தொண்டைவேந்தன் எனக் கூறும் கீழ்வரும் பாடலில் உறுப்பறை பொருட்டு வெகுளி எனும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது.

சுரிகைவிஞைப் பகைஞர்உடல் துண்டம்ஆகத்

துயிலுணர்ந்த வல்லாண்மைத் தொண்டை வேந்தே(நந்தி.பா.எ.4)

குடிகோள்

குடிகோள் என்பது கீழ்வர்ழ்வோரை நலிதலாகும். இம்மண்ணுலகில் எங்கும் அரசாட்சி முறையே, ஆகையால் திறைப்பொருளை செலுத்தி, நந்தியின் திருவடிகளில் அடைக்கலம் புகுவதைத் தவிர, வேறுவழியில்லை என்று நந்திவர்மனின் வீரன் ஒருவன் பகைவர்களை நோக்கி வஞ்சினமொழி கூறவதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

துறைவிடுமின் அன்றி உறைபதியகன்று

தொழுமின் அலதுய்ந்தல் அரிதே(நந்தி.பா.எ.4)

 

உவகை

செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கு நிலைகளில் உவகை எனும் மெய்ப்பாடு தோன்றும்.

செல்வம் புலன் புணாவு விளையாட்டென

அல்லல் நீத்த உவகை நான்கே(தொல்.மெய்.255)

புலன்

தலைவன் தலைவியின் நலம் புனைந்துரைப்பதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

மறிந்துளதே பவளவாய் மருங்கில் ஆகும்

வல்லியிடை மணிமுறுவல் முத்துச் சால(நந்தி.பா.60)

பவளவாய், முத்துப்பற்கள், குவளை போன்ற நெடிய கண்கள், மூங்கில் போன்ற தோல்கள், வில் போன்ற புருவங்கள் என்று தலைவன் தலைவியின் அழகை மகிழ்ந்து புகழ்தலால் உவகை எனும் மெய்ப்பாடாகும்.

விளையாட்டு

மகளிர் தலைவனைப் புகழ்ந்து பாடி ஊசல் ஆடும் வகையில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்

ஊத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்(நந்தி.பா.29)

விளையாட்டு எனும் பொருண்மையில் உவகை எனும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

முடிவுரை

உள்ளத்து உணர்ச்சிகளை மெய்யின்கண் வெளிப்படுத்துவதே மெய்ப்பாடு என்றும், நந்திக் கலம்பகத்தில் எண்வகை மெய்ப்பாடுகளும், அதன் பொருண்மைகளோடு இடம்பெற்றுள்ளதையும் இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது.

துணைநின்ற நூல்கள்

1.நந்திக்கலம்பகம் – பு.சி.புன்னைவனநாத முதலியார் உரை

2.தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணர் உரை

3.அகநானூறு  வே.சிவசுப்பிரமணியன், உ.வே.சா நூல்நிலையம், சென்னை-90

4.நற்றிணை மூலமும் விளக்கவுரையும், ஓளவை சு.துரைசாமிப்பிள்ளை, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

5.திருவருணைக்கலம்பகம், சோம.இளவரசு(உ.ஆ), மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.

 

Share

About the Author

has written 1003 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.