-மேகலா இராமமூர்த்தி

இந்த மூதாட்டியின் முகத்தில் தெரிவது சோகமா? தவிப்பா? இல்லை எல்லா உணர்வுகளையும் அவித்துப் பெற்ற ஞானவரம்பான மோனநிலையா?

திரு. முத்துக்குமாரின் கைவண்ணத்தில் உருவான இந்தக் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தெரிந்தெடுத்துத் தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞருக்கும் தேர்வாளருக்கும் என் நன்றி!

உலகில் கலப்படமில்லாத் தூய்மையுடையது தாய்மை. அத்தாய்மை சுமந்துநிற்கும் தன்னலமற்ற தாயை, அவளுடைய முதுமையில் தனித்துவிடாது அரவணைத்துக் காக்கும் அரும்பொறுப்பு அவளின் பிள்ளைகளுடையது!

 இனி கவிஞர்களின் முறை…! வாருங்கள் கவிஞர்களே! தாருங்கள் உங்கள் சிந்தனையில் முகிழ்த்த நன்மலராம் கவிதைகளை!

*****

கருவைச் சுமப்பதோடு கருணையையும் சேர்த்தே சுமக்கும் தாயைப் பாரமாகக் கருதும் பிள்ளைகளால் தம் முதுமைக்காலத்தில் தனிமையில் வாடுகின்றனர் தாய்மார்கள் என்று வருந்துகிறார் திரு. ஆ. செந்தில் குமார்.

முதுமையில் தனிமை…!

பெற்றெடுத்த பிள்ளைகள் மனதில் சற்று
ஈரம் குறைந்ததால் ஏற்பட்டதன் விளைவோ?
கற்றுத் தெளியா வாழ்க்கை நெறியொடு
சுற்றத்தைப் புறக்கணித்து வாழ்ந்ததன் விளைவோ?

மனிதம் மறந்த மனித சமுதாயம்
பணமே முதன்மையெனக் கொண்டதன் விளைவோ?
புனிதம் நிறைந்த பாசப் பிணைப்புகள்
கணக்குப் பார்த்து காசுக்கலைவதன் விளைவோ?

வெளிநாட்டு வேலைகள் டாலர் கனவென
இளைஞர் பலரும் பறந்ததன் விளைவோ?
களிப்பென்றெண்ணும் எந்திர வாழ்க்கையில் நாம்
தொலைத்துவிட்ட கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் விளைவோ?

நீதிக்கதைகள் போதிக்க நேரமின்றி பிள்ளைகட்காய்
பாதிவாழ்வைத் தொலைத்து பொருளீட்டியதன் விளைவோ?
ஆதிக்கம் செலுத்தி பிள்ளைகள் மனதில்
சாதிக்க தன்னலத்தை விதைத்ததன் விளைவோ?

காரணம் பல நூறு இருந்தாலும்
கருணை உள்ளம் கொண்டவரை
இருகரம் நீட்டி அரவணைத்து
அருமருந்தெனும் அன்பைச் சொரிந்திடுவோம்!

*****

அசைவற்று நிற்கும் இந்த அன்னையின் பார்வையில் தெரியும் வருத்தம்…அன்பாய் வளர்த்த மகனை விபத்தில் பறிகொடுத்த வேதனையால் வந்ததோ? என்று ஐயுற்று வினவுகின்றார் திரு. ஏ.ஆர்.முருகன் மயிலம்பாடி.

மாதாவின் மகிமை!!

ஜன்னலுக்கு அந்தப்புறம்
அன்னையின் பார்வையில்
மின்னுகிற வருத்தங்களில்
என்னென்ன சேதிகளோ???
சொத்து சுகம் சேத்துவச்சு
கெத்தாய் வாழ்ந்த மகராசி
மகன் போனவேதனையில்
மதிகெட்ட சோதனையோ???
வளமோடுவளந்தபிள்ளை
வாகனவிபத்தில்பலியான
சேதிவந்த நாள்முதலாய்
சித்தபிரமையின்மவுனமோ?
அகல்விளக்குநெய்தீர்ந்து
அணைவதுண்டு,ஆதவனாம்
அம்மாவின் உயிர்துடிப்புக்கு
அஸ்தமனம் எப்போதோ???
அதுவரையில்சளைக்காமல்
அகலத்திறந்தகண்ணொளி
அங்கிங்கு அலைபாயாமல்
நிலைகுத்தி நிற்கிறதோ???
அத்தனைக்கும் உதாரணம்
அகிலத்தில்நிரம்ப உண்டு
பெற்றவளின்பிரியத்துக்கு
உற்ற உவமைஉலகிலேது???

*****

”பிள்ளைகள் எனும் கிள்ளைகள் வெளியே பறந்துவிட, கூண்டுக்கிளியானாள் அன்னை. சன்னல் கம்பிகளுக்குப் பின்னே நின்றுகொண்டிருக்கும் தாயிவளின் பிள்ளைகளைத் தேடுவோம்!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன் வேதனையோடு.

தேடுவோம்…

கிளிகள் பறந்துவிட்டன
வெளியே,
கூண்டுக் கிளியானாள்
அன்னை..

பிள்ளைகளுக்குப் பலவேலை,
பறந்துவிட்டார்கள் வெளியே-
பெற்ற தாயை மறந்து..

பெற்றவளுக்கு ஒரே வேலை,
ஒரே நினைவு-
பிள்ளைகளின் நல்வாழ்வு..

ஆனாலும்,
அவளுக்கும் உள்ளதே
வாயும் வயிறும்..

இப்படி
சன்னல் கம்பிகளுக்குப்பின்
காத்திருக்கும்
அன்னையர் ஆயிரம்,
அத்தனைபேர் எண்ணமும் ஒன்றாய்-
பிள்ளைகள் பிள்ளைகள் என்றே..

ஆனால் பிள்ளைகள்-
தேடுவோம் அவர்களை…!

*****

”தாயே! வதனத்தில் விசனம் வீற்றிருக்கும் காரணம் என்ன? கெட்ட சகுனம் கண்டதால் வந்த வாட்டமா? இறையைத் தரிசிக்க வேண்டும் என்ற நாட்டமா? எண்ணவோட்டத்தால் வார்த்தை மறந்து கொண்ட மோனமா?”  என்று அன்பாய் வினவுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

விசனம் வதனமிடும் விண்ணப்பம் ஏதோ?

அசனம் மிகுந்தவோ இல்லிடை காட்டமோ?
கசனம் விரைந்தவோ வல்லுரை வாட்டமோ?
மசனம் நிறைந்தவோ மல்லுறை கொட்டமோ?
திசனம் மறந்தவோ இறையுறை கோட்டமோ?
உசனம் நினைந்தவோ சொல்லுரை தேட்டமோ?
நிசனம் குறைந்தவோ கண்ணுறை வெட்டமோ?
வசனம் உறைந்தவோ உள்ளுறை ஓட்டமோ? – அம்மே!
விசனம் வதனமிடுமுன் விண்ணப்பம் ஏதோ?

*****

”உதிரத்தைப் பாலாய்க் கொடுத்துவளர்த்த தாயை மதியாது, முதியோர் இல்லத்தில் அவளைத் தள்ளிவிடும் பிள்ளைகளே! முதுமை உமக்கும் ஒருநாள் வரும்! வாழ்க்கை என்றால் என்ன என்ற பாடத்தை அது உங்களுக்குக் கற்றுத்தரும்” என்பது திரு. பழ.செல்வமாணிக்கத்தின் கவிதை தரும் பொருள்பொதிந்த கருத்து. 

துணையான தனிமை

சோகமே உருவாய், ஒரு தாய்!
தனிமையே துணையாகக் கொண்டிருந்தாய்!
யாரின் வரவுக்காய், காத்திருந்தாய்?!
பிள்ளையை எதிர்பார்த்தா நின்றிருந்தாய்?!
முந்நூறு நாள் சுமந்தாய்!
கருவில் உயிர் வளர்த்தாய்!
வலிகள் நீ பொறுத்தாய்!
உறக்கம் நீ தொலைத்தாய்!
பத்தியம் நீ இருந்தாய்!
உயிரைப் பணயம் வைத்து
பிள்ளையைப் பெற்றெடுத்தாய்!
உன் உதிரத்தைப் பாலாய் நீ கொடுத்தாய்!
கண்ணை இமை காப்பது போல்
பிள்ளையை காத்திருந்தாய்!
நீ வளர்த்த பிள்ளைக்கு உன் அருமை புரியவில்லை!
உன்னைத் தன்னோடு வைத்திருக்க ஏனோ மனமில்லை!
முதியோர் இல்லத்தில், சேர்த்து விட்டான் உன் பிள்ளை!
நீயே அனைத்தும் என்று இருப்பவள் உன் தாயே!
இதை நினைக்க ஏனோ மறந்தாயே!
உனக்கும் ஒரு நாள் முதுமை வரும்!
கொடுத்தது திரும்பி வரும்!
முதுமையில் தனிமை கொடுமை என்பது!
உனக்குக் கட்டாயம் புரிய வரும்!
தாயை அரவணைக்க மறக்காதீர் பிள்ளைகளே
உயிர் கொடுத்த உத்தமியை ஒதுக்காதீர் பிள்ளைகளே!

*****

அறையெனும் சிறையில் தனிமையில் வாடும் தன்னேரிலாத் தாயுள்ளத்தின் சிறப்பை நினைந்தழும் மகனைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ளார் திரு. எம். திவான் முகம்மது.

அறையின் சிறையில் அன்பில் உள்ளம்
அவள் மனதின் சிறையில் என்றும்
மகனின் உள்ளம்…. 
துள்ளி ஓடும் மானாய் இருக்கும் உன்னை 
துள்ளாத மீனாய் மாற்றி கூண்டில் அடைத்தது ஏனோ?
சமுத்திர நீராய் இருக்கும் உன் கண்ணீரை
நிறுத்த வருவது யாரோ?
சிந்தும் மழைகூடச் சிதறிவிடும்
ஆனால் உன் அன்புக் கண்ணீர் என்றும் சிதறாது
என் புகழ் பேச கடலாய் இருந்தாய் ஆனால் நான்
உன் புகழ் பேச அணையாய் இருந்து விட்டேன்
அன்பு அறையில் அடைந்தாய் ஆனால் நான்
இரவுச் சிறையில் அடைந்து விட்டேன்
ஆற்று நீராய் இருந்ததால் 
உன் மனம் எங்கும் பார்க்க முடிந்தது
கானல் நீராய் இருந்ததால் 
தூரத்தில் மட்டும் பார்க்கமுடிந்தது
ததும்பிப் ததும்பி என் அருகில் வந்தாய்
வெதும்பி வெதும்பி அழ வைத்து விட்டேன்
                                                        -அழுகையுடன் அன்பு மகன்

*****

சுயநலப் பிண்டங்களைப் பெற்றதால் கவனிப்பாரன்றிச் சன்னல் கம்பியே பற்றுக்கோடாய் நிற்கும் அன்னையின் அவலத்தைத் தன் கவிதையில் அழகாய்ப் படம்பிடித்திருக்கிறார் திருமிகு. புதுவைப் பிரபா. 

காத்திருப்பு!

தவமிருந்து பெத்தெடுத்தேன்
மொத்தமா நாலு புள்ள
அதுல ஒன்னுகூட
இப்போ என்கூட இல்ல

அந்த மனுஷன் பென்ஷன்னுல
வயித்துக்குச் சாப்புடறேன்
துணைக்கந்த சாமியத்தான்
அப்பப்போ கூப்பிடுறேன்

பெத்ததலாம் பத்தி நான்
கண்ட கனவு ஏராளம்
ஒன்னுகூடப் பலிக்காம
பொய்யாப் போச்சு பூராவும்

அதில் பெருசா ஏமாந்தேன்
எதைஎதையோ நம்பி நான் – இப்போ
என் பிடியில் இருப்பதெல்லாம்
இந்த ஜன்னல் கம்பிதான்

சுயநலமா வாழும் நாலு
பிண்டங்களப் பெத்துட்டேன்
அவங்களோட செய்கை பார்த்து
எப்பவோ நான் செத்துட்டேன்

ஆனாலும் எப்பத்தான்
எனக்கந்த மரணமுன்னு
காத்துக்கிட்டு கெடக்குறேன் நான்
சீக்கிரம் வரணுமுன்னு!

*****

அன்புக் கணவனைக் காலன் கொண்டுபோக, பெற்று வளர்த்த பிள்ளைகளோ அன்னைமீது அணுவளவும் அன்பின்றி அவளை முதியோர் இல்லத்தில் சேர்க்க, நிர்க்கதியாய் நிற்கும் மூதாட்டியின் மனக்குமுறலை மனந்தொடும் வண்ணம் பாவாக்கியிருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

முதுமையின் அனுபவம்..!

பதிவிரதை என்னனுபவத்தை இங்கே பகிர்கிறேன்
……….பகட்டான வாழ்க்கை தந்தானென் அன்புக்கணவன் *
அதிசயித்துப் பார்க்கிறேனென் கடந்தகால வாழ்வை
……….அனைத்து வசதிகளையும் அனுபவித்து உய்ந்தேன் *
கதியேயென் கணவன்தானென இருந்தேன்! விதியால்
……….காலனும் கடிதேயவரை அழைத்துக் கொண்டான் *
அதிட்டமில்லையோ?எனச் சொல்லியே அழுவேன்
……….ஆருக்கும் இந்நிலை வேண்டாமென வேண்டுகிறேன்*

உதிரத்தைக் கொட்டித்தான் ஒவ்வொரு தாய்மாரும்
……….உயிராய் மதிக்கும்தன் பிள்ளையை வளர்ப்பார்கள் *
எதிர்காலம் நினைக்காமல் எதிர்பார்ப்பு இல்லாமல்
……….என்றைக்கும் இருக்கின்ற மனம்தான் தாய்ப்பாசம் *
துதிப்பாட்டு பாடுதற்கு தனக்கோர் துணையொன்று
……….தேடிக்கொண்ட சந்ததியும் வெறுக்கிறார் தாயையும் *
அதிர்ச்சி யாயிருக்கும் அன்றாடமிதை நினைத்தால்
……….அன்னை நானே உணர்ந்தாலனைத்தும் மறையும் *

பொதிசுமந்து பிள்ளையை வளர்த் தாளாக்கினேன்
……….பொறுப்பில்லை! போற்றும் குணம் அவரிடத்தில்லை *
சதிசெய்தார்கள்! சேர்த்தவென் சொத்தைப் பிரித்து
……….சாதிக்கிறார் கிடைத்ததைப் பங்கு போட்டுக்கொண்டு*
முதியோர் இல்லத்திலின்று…முகம்தெரியா நபர்களே
……….முகமலர்ந்த அன்பைப் பொழிந்தாலும்! நான்நிர்க்..
கதியாய் நிற்கிறேன்! எதிர்ஜன்னலில் எனைப்போல
……….கலங்குவோர்கள் இன்னும் எத்தனைபேர் உளரோ.?

*****

’இளமையில் கொடுமை வறுமை’ என்பதுபோல் ’முதுமையில் கொடுமை தனிமை.’ ஒரு தாயின் தனிமையை உணர்வுபூர்வமாகத் தம் கவிதைகளில் வடித்தெடுத்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன்.

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது இனி…

அவருக்கெனக் காத்திருந்த
கன்னிப்பொழுதெல்லாம்
கடந்த காலம்!

சீராட்டிய பிள்ளைச் செல்வங்களை
எதிர்பார்த்துப் பூத்திருந்தது
முடிந்த கணங்கள்!

பேரப்பிள்ளையின் தளிர்நடையைக்
காண விழித்திருக்கிறது
முதுமையின் மிச்சம்!

மாறிக்கொண்டே இருந்த காலவோட்டத்தில்
மாறாத ஒன்றாக
எனது காத்திருப்பு!

காத்திருப்பின் பதட்டத்தை;
துருவேறிய கம்பிகளின்
தடம்சுமந்த என் கைகள்
அழியாச் சாட்சி சொல்லும்!

கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் பேரப்பிள்ளைகளுக்காகவும் காத்திருந்து காத்திருந்தே பெண்ணின் காலங்கள் கொன்னே கழிகின்றன. அவர்கள் வரும் வழிபார்த்து வழிபார்த்தே அவளின் விழிகள் பூத்துப்போகின்றன.

காலம் மாறிக்கொண்டே இருந்தாலும் இந்தக் காத்திருப்பில் மட்டும் மாற்றமில்லையே?! துருவேறிய சன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் பெண்மையின் கைத்தடமே இதற்குச் சாட்சி! என்று மாறுமோ இந்தக் காட்சி? எனும் உளந்தொடும் கவிதையை வளமான வார்த்தைகளில் கோத்துத் தந்திருக்கும் திருமிகு. சக்திப்ரபாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 153-இன் முடிவுகள்

  1. மிக்க நன்றி.

    கவிதைவரிகளை படமாக்கிய முத்துகுமார் அவர்களுக்கும் பொறுப்பாசிரியர் சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும், ஊக்கமளித்த மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், படத்திற்கு அற்புத மழை பொழிந்த கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *