-சேசாத்திரி சிறீதரன்

வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில்.

இது ஒரு பாடல்பெற்ற தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களைத் தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனை கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித்தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாகக் கல்வெட்டுகளைத் தேய்த்துக்கரைத்து அழித்துவிட்டனர்.  இரத்தினசபை வாயிலைத் தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்கு கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதேநேரம் அந்த இரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்குச் சுவரிலும்  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.   (படம் 1)

கோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள். (படம் 2&3)

கோயில்தூண்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படிப் புடைப்புச் சிற்பங்கள் ஏதும்  இல்லை. இலை, மரம், பூ, தெய்வ வடிவுகள்தாம் உள்ளன. இக்கோயிலிலும் விசயநகர ஆட்சியில் குதிரை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரேயொரு சிற்பம் மட்டும் புராண நிகழ்வைக் குறிக்கிறது. அரக்கர் மதிமயங்கி அமிர்தம் உண்பதை மறந்து மோகினிக்காக ஏங்கித்தவிக்கத் திருமால் மோகினியாக உருவெடுத்து தேவர்களை மட்டும் அமிர்தத்தை உண்ண  அனுமதித்தபோது அவர்களுக்கு மட்டும் ஏன் மதி கிறுகிறுக்கவில்லை? அவர்கள் உணர்வு அற்றவர்களா? என்ற கேள்வி என்னில் பலகாலம் ஒலித்தபடியே உள்ளது. சிலை வடித்த சிற்பியே கிறுகிறுத்துப் போய்தான் சிற்பம் வடித்துள்ளான் என்றால் நேரில் மோகினியைக் கண்ட அரக்கர்கள் மட்டும் அமைதியாகவா இருக்கமுடியும்? நீங்களும் அந்த மோகினியைக் காணுங்களேன் ஒருகணம். அடுத்து மோகினிச் சிற்பம் உள்ள குதிரை மண்டபம்.

     

தலைக்கோபுரம்

இரயிலடி 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அதிலும் அடிக்கடி super fast local விடுவதால் சாதாரணக் கட்டணத்தில் இங்கு வரமுடிகிறது. காலை 5.30 மணிக்கு சென்ட்ரலில் தொடங்கி 6.45மணிக்கே இரயில் திருவாலங்காடு வந்துவிடுவதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு சென்னையிலிருந்து வருகிறார்கள். வேலூரில் இருந்தும் வருகிறார்கள்.

சிவன்கோயில்கள் தோற்றத்திலும், அளவிலும் மாலியக்கோவில்களை விடவும் கம்பீரமாகவுள்ளன. அதிகக் கல்வெட்டுகளையும் பெற்றுள்ளன. பொதுவாகப் பண்டு அரசர்கள், வேந்தர்கள் கோயில்களை ஆறுபாயும் இடங்களில்தான் ஊரமைத்து கோயில் கட்டினார்கள். அந்தவகையில் பார்த்தால் இக்கோவில் உள்ள ஊரில் ஏதேனும் ஓர் ஆறு பாயவேண்டும் ஆனால் என்னவோ கொசத்தலையாறுதான்  சில கிலோ  மீட்டர் தள்ளித்  கிழக்கில் பூண்டி அணைநோக்கி ஓடுகிறது. பண்டு கொசத்தலை இவ்வூர் அருகே ஓடியிருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் எளிய மக்களிடம் காசுப் புழக்கம் இல்லாத பண்டைக் காலத்தில் கோவிலின் தடையற்ற இயக்கத்திற்கும், கோயில் பணியாளர்க்கும்  கூலியாக விளைநிலங்களை ஒதுக்கி அதில் பயிர்செய்து  பிழைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு நீர்ப்பாசனம் தேவை என்பதால்தான் ஆற்றின் அருகே ஊர் அமைப்பும், கோவில் கட்டுமானமும் மேற்கொள்ளக் காரணம்.  கொசத்தலை ஆறு பாயுமிடங்களில் 12க்கு மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளன என்கின்றனர்.

https://www.google.co.in/maps/place/Kosasthalaiyar+River/@13.2995634,80.1086905,11z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a527956dec6497b:0xb572296a37c13b17!8m2!3d13.2996017!4d80.2487789

திருவாலங்காட்டில் கோவிலுக்கு அருகில் அரசு கரும்பாலை அமைந்துள்ளது. மற்றபடி இவ்வூரின் முதன்மைத் தொழில் வேளாண்மைதான். சென்னைக்  கோயம்பேடு, வில்லிவாக்கம் சந்தைகளுக்கு இங்கிருந்துதான் அதிக காய்கறிகள் அன்றாடம் செல்கின்றன.

இவ்வூரில் தமிழரில் வன்னிய ரெட்டியார்களும், முதலியார்களும், தெலுங்கரில் ரெட்டிமார்களும், நாயுடுகளும் மிக அதிகமாக வாழ்கின்றனர். இவர்களுக்குத்தான் இங்கத்து விளைநிலங்களும் சொந்தம். அவ்வளவு ஏன்? வடதமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் 90% இந்த நான்கு சாதியருக்கு  மட்டுமே சொந்தமாகவுள்ளன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் என்றாலும் முதலியாருக்குப் பதிலாக வேறு பிற தமிழ்ச் சாதிகள் இடம்பிடிக்கின்றனர். தெலுங்கு சாதிகள் மட்டும் அங்கேயும் இதே சாதிகள்தான்.  தமிழ்நாட்டில் எந்த மன்னர் ஆட்சி போனாலும் எந்தப் புதிய மன்னராட்சி வந்தாலும் அவர்களைத் தமக்கு ஆதரவாக்கிப் பலநூற்றாண்டுகளாக இவ்விளைநிலங்களை இவர்கள் தமக்கு மட்டுமே உரிமையாக வைத்துள்ளனர். மற்ற தமிழ்சாதிகள், ஒடுக்கப்பட்ட  தலித்துகளுக்கு விளைநிலங்களில் உரிமை கிடையாது. இதுதான் இன்று வரை தொடரும் சமூக அநீதி நிலைமை (social  injustice) என்பதை யாவரும் உணரமுடியும். ஆனால் பாருங்கள் வெள்ளையர் ஆட்சியில் ஆங்கிலேயருக்குக் கைகட்டி செய்யும் வேலைகளை அதிகமாக பிராமணர்கள் ஆக்கிரமித்து கொண்டு உள்ளனர் என்று கூக்குரல் கொடுத்த சமூக நீதிப் போராளிகள் என்னவோ இந்தச் சாதிகளில் இருந்துதான் அதிகம் வந்தார்கள். ஆனால் ஏனோ அவர்கள் கருத்திற்கு தம்முன்னோர் விளைநிலங்களைத் தம்  சாதிகளுக்கு மட்டுமே உரிமையாக்கி வைத்திருப்பது ஆக்கிரமிப்பாக, சமூக அநீதியாக  தோன்றவில்லை. இது தமக்கு ஒரு நியாயம் பிறர்க்கு ஒரு நியாயம் என்பதன் பாற்படும்.

சமூக அநீதி நிலக்கிழமையால் தான் பேரளவில் நிகழ்ந்தது, நிகழ்கிறது. தமிழக மக்கள்தாம் வரலாற்றில் இந்தச் சமூக அநீதி குறித்த விழிப்பை  அறிந்துகொள்ள வேண்டும். இப்போது சிலர் விகிதாசார அடிப்படையில் அந்த அந்தச்சாதி மக்களுக்கு தேர்தலில், தொகுதி ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று பேசிவருகிறார்கள். ஆனால் விளைநிலம் என்று வரும்போது மட்டும் இந்தச் சாதி விகிதாசார அடிப்படையை அவர்கள் பொருத்திப்பார்க்க மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்த விகிதாசார அடிப்படை பற்றிப் பேசுபவர்கள் பெரும்பாலும் இந்த நிலக்கிழமை சாதிகளை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மைக்கு உண்மையாகும்.  விளைநிலங்கள் அனைத்தும் தனியார் உரிமையிலிருந்து நீங்கிக் கூட்டுறவின் கீழ் கொண்டுவரப்பட்டு வேளாண்மை ஒரு தொழிலாக செய்யப்பட்டு  அதில்  ஒதுக்கீட்டு முறையில் எல்லாச் சாதியாருக்கும் இந்த விளைநிலம் கிட்ட  ஏற்பாடு ஆகின்றவரை இது சமூக அநீதியாகவே தொடர்ந்துகொண்டு இருக்கும்.

திருவாலங்காடு கல்வெட்டுகளின் படங்கள் 17 முதல் 23 முடிய
உள்ளவையுடன் 11-ஆம் படத்தையும் படித்ததில் கிடைத்தவை;

படம்-17

யுடைய (முழான்)….ராயன்
……….ட்டை (ஸ்ரீ) ..க்கோ …… காச்யபன்
…..திருவாலங்காடு……….(சாவா) மூவாப்

படம்-18

…ராயன்   வடுகநாதன் ….நத
காச்யபன் திருச்சிற்றம்பல பட்ட(னும்)
சாவா மூவாப்பெரும் பசு (4?)  இ

படம்-19   – படிக்க இயலவில்லை

படம்-20

வரங்கில் அண்டமுற் ந…
பட்டனும் ஆத்ரேயன்  ச

படம்-21

……கோட்டத்து …
ண்டமுற்  ந… மாந்த..
ஆத்ரேயன் சந்த்ரசேகர (பட்டனும்)

படம்-22

…பழையனூர் நாட்டு…
ளிய  நாயநார் திருமு(ன்)
(ப0ட்டனும் காச்யபன் கா..

படம்-23

திருமுன்பு வைத்த சந்(தியா தீபம்)
கா…பட்டனும்

விளக்கம்:   கோயிலில் நந்தா தீபம் எரிக்கப் பசுக்கொடை அளித்தது பற்றிய கல்வெட்டு.  கோயிலில் எழுந்தருளிய நாயநார் (இறைவர்) திருமுன்பு (கருவறையில்) நந்தா விளக்கு எரிப்பதற்காக (நான்கு?) பசுக்கள் கொடையளிக்கப்படுகிறது. இப்பசுக்கள் சாவா மூவாப்பெரும்பசுக்கள் என்று குறிக்கப்படுகின்றன. கல்வெட்டுகளில் கொடையாகக் குறிக்கபெறும் ஆடு, பசு ஆகியவற்றைச் ”சாவா மூவா’” என்னும் அடைமொழி கொண்டு குறிப்பது வழக்கம். இந்தக் கால்நடைகள்  இடையர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்வதால் இறப்புகள் நேர்ந்தபின்னும் புதிய கால்நடைகளின் பிறப்பால், அவற்றின் எண்ணிக்கை குறையாதிருக்கும் என்பதால், “சாவா மூவா”  என்னும் குறிப்பு. கொடையாளி,  உயர் அதிகாரிகளில் ஒருவனாக இருக்கவேண்டும். அவனுடைய முழுப்பெயர் கல்வெட்டில் புலப்படவில்லை எனினும், “யுடைய முழான்…. ராயன் வடுகநாதன்    என்னும் துண்டுச் சொற்கள் கொடையாளி ஒரு பெரிய அதிகாரி என்று உணர்த்துகின்றன.

கொடைப்பொருள்கள், கோயிலின் பூசை உரிமை பெற்ற சிவப் பிராமணர் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. அச் சிவப்பிராமணர்கள், காச்யப கோத்திரத்துத் திருச்சிற்றம்பல பட்டன், ஆத்ரேய கோத்திரத்து சந்திரசேகர பட்டன் முதலியோர் ஆவர்.

இன்னொருவர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனும் காச்யப கோத்திரத்தான் எனத் தெரிகிறது. திருவாலங்காட்டின் இருப்பிடம் பழையனூர் நாட்டுப்பிரிவு எனத்தெரிகிறது.  (அடுத்த கல்வெட்டுப்படம்-11-இல் இப்பழையனூர் நாட்டுப்பிரிவு, மேல்மலைப் பழையனூர் எனவும், மணவில் கோட்டத்தைச்சேர்ந்தது எனவும் குறிப்பிடப்படுகிறது.

படம்-11

1 (மண்ட)லத்து மணவிற்கோட்டத்து மேன்மலைப் பழைய..
2 (ச)ண்டேசுரப் பெருவிலை ஆகத் திருநாமத்துக்காணி
3 …கோலாலளந்து கண்ட குழி இருநூற்றுக்கும்
4 ர  சோழர(ச)…க்கு விற்றுக்குடுத்துக் கைக்கொ(ண்ட)

விளக்கம்:  மேலே கூறியவாறு, திருவாலங்காடு, மணவில் கோட்டம்,மேல்மலைப் பழையனூர் நாட்டுப்பிரிவில் இருந்த குறிப்பு இக்கல்வெட்டின்முதல் வரியில் காணப்படுகிறது.  கோயிலுக்கு நிலங்களைக் கொடையாக அளிக்கும்போது (சில கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளவாறு)  இறைவன் பெயரில் உரிமை பதிவு செய்யப்படும். இவ்வகை நிலங்கள், திருநாமக்காணி என்று வழங்கும். அதாவது, இறைவன் நாமம்; காணி = உரிமை.

இவ்வாறு, திருநாமத்துக்காணியாக இருந்த கோயில் நிலம் ஒன்று, ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல விற்பனை, சண்டேசுரப்பெருவிலை

என்று வழங்கப்படும். ஏலத்தின்  மூலம் கிடைக்கப்பெறும் உயர்வான ஒரு விலைப்பணம் கோயிலுக்கு அமுதுபடி, திருப்பணி, திருவிழா ஆகிய செலவினங்களுக்குப் பயன்படும். கல்வெட்டு, இவ்வாறான ஒரு நிலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது. நிலத்தின் அளவு, இருநூறு குழி. நிலம், இருநூறு குழி என்று ஓர் அளவீட்டுக் கோல் மூலம் அளக்கப்படுகிறது. இவ்வகையான அளவீட்டுக் கோல்கள், 12 அடிக்கோல், 16 அடிக்கோல், 18 அடிக்கோல் எனப் பலவகை இருந்தன. இக்கோல்களுக்குப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றும் அறிகிறோம். சில கோயில்களில், கல்வெட்டுகளுக்கிடையில், கோலின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். – திரு. சுந்தரம், கோவை. கல்வெட்டை வாசித்துப் பொருள் கூறியவர்.

பி.கு.: மணவில் இன்று மணவூர் என்ற பெயரில் வழங்குகிறது. https://en.wikipedia.org/wiki/Manavur  இங்குள்ள கோவிலிலும் கல்வெட்டுகள் நிரம்ப உண்டு என்று தெரிகிறது. . https://soki.in/manavoor-tiruvelangadu-thiruvallur.அன்று மணவூரில் திருஆலங்காடு இருந்தது. இன்று திருவாலங்காட்டில் மணவூர் அடங்கிவிட்டது.

படம் 11 கீழே

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “திருவாலங்காடு – இரத்தினசபை

  1. மிகுந்த சிரத்தையுடன் எழுதப்பட்டிருக்கிற விழிப்புணர்வு தரும் ஆய்வுக்கட்டுரை. தமிழகத்தில் தெலுங்கர் ஆதிக்கம் பற்றி மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் இருக்கிற உண்மையான விடயங்கள் வெளிவந்திருக்கின்றன.

  2. கருத்தை சரியாக, திருத்த்மாக புரிந்து கொண்டு பதிவிட்டுள்ள ஒளவைமகளுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *