பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி (155)

  1. இழந்த வாய்ப்பு… 

    கொடியில் காய்ந்த சேலை
    கோடை வெயிலிலும்
    குளம் குட்டைகளில் நட்புடன்
    கூடி மீன்பிடிக்கும் வேலை

    செய்யவோ களைப்பில்லாத கலை
    சேர்ந்து விளையாடி
    நிற்காமல் துள்ளும் மீன்பிடிக்க
    நீரில் போடும் வலை

    எழிலான கிராமத்தில் இருந்து
    ஏக்கம் இல்லாமல்
    துள்ளித் திரிந்து தோழருடன்
    தூண்டில் போட்ட விருந்து 

    அகப்பட்ட துணியுடன் சென்று
    ஆறு குளங்களில்
    வலை வீசி மீன்பிடிக்க
    வாய்ப்புகள் இல்லாமல் இன்று 

    கிராமங்கள் நகரமாகி நிற்குதே
    கீழிறங்கும் வெயிலால்
    மழையின்றி ஆறுகுளம் வற்றி
    மாசுடன் குடிநீரும் விற்குதே! 

    … நாகினி 

  2. ஆம். எல்லோரும் உணர்ந்தாலும் சரி செய்யும் வழிக்கு ஒருவரும் முன் வருவதில்லை. மிகவும் வேதனை தருகிறது

  3. சிறு வயதில்…
    °°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    ஐப்பசி மாசம் அடமழ…
    அப்பவும் குட்ட நெரம்பல…
    முட்டியளவு தண்ணிக்குள்ளே…
    குட்டி குட்டி மீனுங்க…
    கொசகொசன்னு மேயுது…
    கொண்டு வாடா துண்டத்தான்…
    கொஞ்சமாச்சும் பிடிக்கலாம்…
    அஞ்சு நாளு பள்ளிக்கூடம்…
    அதுக்கு பெறகு லீவுடா…
    அப்ப அங்க போகலாம்…
    அத பாஞ்சிபாஞ்சி பிடிக்கலாம்…
    ஒன்னு ரெண்டு மூனுடா…
    சொல்லி துண்ட வீசுடா…
    கெண்ட சிக்கும் பாருடா…
    கெண்ட ரெண்டு சிக்கிகிச்சு…
    கெட்டியாக பிடிச்சுக்கோ…
    நமக்கு கெடச்ச ரெண்டுமே…
    நழுவி ஓடப் பாக்குது…
    கொண்டு போயி சேக்கனும்…
    கொழம்பு வச்சி திங்கனும்…!

  4. கிராமத்திலே…

    வலையைப் போட்டு மீன்பிடிக்க
    வசதி யில்லா வேளையிலே,
    தலையில் கட்டும் துண்டெடுத்துத்
    துணிவாய் நீரில் அரிக்கின்றார்,
    கலைந்து செல்லும் சிறுமீன்கள்
    கண்ணி வலையில் சிக்காதே,
    நிலையை யுணர்ந்த செயல்பாட்டை
    நீங்களும் பார்க்கலாம் கிராமத்திலே…!

    -செண்பக ஜெகதீசன்…

  5. மீனும் நானும்
    _____________

    கொஞ்சம் கொஞ்சமாய்
    மெல்ல அடங்கியது மூச்சு
    முதலில் துள்ளி
    பின் துவண்டு விழுந்தது
    உயிர் துறந்தும்
    எமக்குணவாகியது
    குழம்பில் தக்கையாய்
    கொதித்த போதும்
    அதன் உடலெங்கும் சேலை வாசம்
    ஏனோ
    என் தொண்டைக் குழியில் தான்
    மாட்டிக் கொண்டது முள்

  6. பருத்திச்சேலைத்துண்டோ தாவணியோ வேட்டித் துண்டோ போதுமே!
    ஏரித்தண்ணி – கொளத்துத்துத்தண்ணிய குடிநீராக்க உதவுமே !
    எங்க பாட்டன்தாத்தான் சொல்லிப்போன தூய்மைப்பாட்டு சேதியை
    அகிலமெங்கும் சொல்லி சொல்லி நம்மைப் போற்றுறாங்க பாருங்க!

    ஒசத்தியான வடிகட்டிங்க! செலவில்லாத வடிகட்டிங்க! -ஓஹோ!
    வாட்டமான வடிகட்டிங்க! சுலபமான வடிகட்டிங்க!
    காலராக்கிருமி முதல் பாசி, முட்டைப்புழு பூச்சி வரை
    எல்லாம் தள்ளிப் போக்குத்துங்க ! எல்லாம் தள்ளிப்போகுதுங்க!

    ஒத்தயாப்போடாதீங்க ரெட்டையா-நாலாப் போட்டிடுங்க!
    மடிச்சிமடிச்சிப் போடும்போது சல்லிக்கண்ணு சிறுத்திடுதே!
    ரெண்டுன்னா நாப்பது நாலுன்னா இருபது! மைக்ரான் அளவு அப்படி!
    சேலைக்கொண்டு வடிகட்டினா நீரை அப்படியே குடிக்கலாம்!

    அமெரிக்காவின் பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச் சேலை வடிகட்டி!
    ஐரோப்பா பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
    கீழைநாட்டுப் பாடத்திலயும் நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
    செய்து பார்த்து வியக்குறாங்க! வாழ்த்தி வாழ்த்தி வணங்குறாங்க!

    எங்க பள்ளிக்கூடப் பாடத்துக்கு நிரூபணம் பண்ணறோங்க – நாங்க
    நிரூபணம் பண்ணறோங்க! ஏரிக்குள்ள வடிகட்டிய கசண்டு
    கொண்டு காட்டணுங்க! கசண்டுக்குள்ள கிருமியோட்டம் காட்டணுங்க!
    பளிங்கு போல தண்ணி ஜோரா வடியுதே! நீங்க பார்த்திடுங்க!

    சேலை கொண்டு குளத்து நீரை வடிகட்டி முகர்ந்துவருவது என்பது நம் கலாச்சாரம்.
    வீட்டில் கிணறு இருந்தால் கூட, குடிக்கிற நீருக்கு, குளத்து நீரை மட்டுமே பயன்படுத்துவர்.
    குடமெடுத்துக் குளத்துக்குச் சென்று நீரைக் கொணர்வது என்பது பெண்களின் நித்தியக் கடன்.
    இவ்வாறு, குளத்தில் நீர் முகரும்போது, சேலை (அல்லது சன்னவேட்டி) ஒன்றின் துண்டத்தை உடன் எடுத்துச் செல்வர்.
    அந்தத் துணித்துண்டத்தை மடித்து, குடத்தின் வாயில் நன்கு பரத்திப்போர்த்தி, வாகாய் நடுவில் ஒரு குழி அமைத்து, புனல் போல் வடிவம் தந்து, அக்குடத்துள், குளத்து நீரை முகர்வர். இவ்வாறு வடிகட்டி எடுத்து வரப்பட்ட நீரை அப்படியே பருகுவது வழக்கம்.
    பலபெண்கள் பிரத்யேகமாகத் துணித்துண்டம் எடுத்துச் செல்லாமல்தான் அணிந்திருக்கும் சேலையின் முந்தானையையே வடிகட்டப் பயன்படுத்துவர்.

    இந்தப் பழக்கம் எத்தனை உயர்வானது. பொதுச் சுகாதாரத்திற்கு – தூயக்குடிநீருக்கு – குடிநீர் பாதுகாப்பிற்கு எததனை சாதகமாய் இருக்கிறது என்பதை அறிவியல் உலகம் தெளிவுற ஆராய்ந்து உறுதிப்படுத்திவிட்டது. குறிப்பாக, செலவில்லாதது என்ற வகையிலும் – வேறெந்த வடிகட்டிக்கும் இல்லாத வடிகட்டும் திறனை உடையது என்ற வகையிலும் சேலை வடிகட்டிக்கு உலக அரங்கில் மவுசோ மவுசு. வெறுமனே பாராட்டிப் புகழ்வதோடு மட்டும் நின்று விடாமல், உலகின் பல் நாடுகளிலும், பள்ளி தொடங்கி – பல்கலைக்கழகம் வரை உள்ள பல்வேறு பாட திட்டங்களில் இந்த சேலை வடிகட்டியை ஒரு செய்முறையுடன் கூடிய விஞ்ஞானக் கல்விப்பாடமாகவே இணைத்த்துள்ளனர்.

    எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், ஒன்பதாம் வகுப்பு உயிரியல், பத்தாம் வகுப்பு சுற்றுச் சூழலியல், பதினோராம் வகுப்பு தொற்றுநீக்கியல் ஆகிய பாடப்புத்தகங்களில் இந்தப் பாடத்தை இணைத்திருக்கிறார்கள். பல்கலைகழக அளவில், பொதுச்சுகாதாரப் பொறியியலில் சேலை வடிகட்டி ஒரு முக்கிய அங்கமாகும். இந்தப்பாடத்தைப் படிக்கும் மாணாக்கர்கள் வகுப்பறைக்கு வெளியே உண்மை உலக விடயமாக சேலை வடிகட்டி முறையை நீர் நிலைகளில் நிரூபணம் செய்யும் ப்ராஜெக்ட்டுக்களையும் வழங்குகிறார்கள். மாணவர்கள் இருவராகவோ அல்லது நான்கு பேராகவோ இணைந்து சேலை வடிகட்டி ப்ராஜெக்ட்டுகளைச் செய்வர்.

    பாசி, தூசிகள், பூச்சிகள், பூச்சி முட்டைகள், மற்றும் காலராக்கிருமிகள் உள்ளிட்டக் கொள்ளை நோய்களையும் தொற்று நோய்களையும் உருவாகும் கிருமிகளையும் -என யாவற்றையும் நீரிலிருந்து ஒட்டுமொத்தமாய் அனாயாசமாய் வடிகட்டி எடுத்துவிடும் அசாத்திய சல்லிக்கண் அளவு பருத்திச்சேலையில் உள்ளது அதுவும், அதனை ஒற்றையாய்ப் போடாமல் இரட்டையாய்ப் போடும்போது அதன் சல்லிக்கண்ணின் அளவு வெகுவாய்க்குறைகிறது (40 மைக்ரான்கள் – ஒரு மைக்ரான் என்பது ஒன்றின் கீழ் பத்து லட்சம் மீட்டர் எனும்படியான நுண்துளை). நான்கு மடிப்பாய்ப் போட்டால் சல்லிக்கண்ணின் அளவு 20 மைக்ரான் மட்டுமே!

    இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் பருத்தியன்றி செயற்கை இழையாலான சேலைக்கு இவ்வாறான வடிகட்டும் திறன் இல்லை என்பதே.

    இது நிற்க.

    நம்மூர் பெருமை அசலானுக்குத் தெரிகிறது! உலகமெங்கும் சேலை வடிகட்டியை அறிவியல் பாடமாய் வைத்து மாணாக்கர்கள் செய்து பார்த்து மகிழ வாய்ப்பு தந்திருக்கிறபோது. நம்மூர் நிலவரம் வெற்றாய் இருக்கிறது.

    இங்கு ஒரு தீர்க்கதரிசனக் காட்சியாக சேலை வடிகட்டியை ப்ராஜெக்ட்டாக, நிசமான ஏரியில், நிசமான நீரில், இரு மாணவர்கள் உண்மையாய்ப் பரிசோதனை நடத்தி மகிழ்வதைக் காண்கிறோம்.

    பருத்திச் சேலையா – ஏன் சேலையே மறைந்து வரும் கலாச்சாரச் சூழலில் – குடிநீர் என்பது கொள்ளை வாணிபமாய் மாற்றிவிட்டிருக்கிற அவலநிலையில் – கொள்ளை நோய்கள் – அவ்வப்போது வெகுண்டெழுந்து வாட்டிடும் ஆபத்தில் – நம் குழந்தைகளுக்குக் கல்விப்பாடமாக சேலை வடிகட்டியை வழங்குவோமெனில் – அந்த இளம் உள்ளங்கள் புதிதாய் சிந்தித்து இந்த மும்முகப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வைக் கண்டுபிடிப்பர் என்பது திண்ணம்.

    சிந்தனையைத் தூண்டிய சிறந்த படம் இது.

  7. கவி இதனோடு நின்று விடுகிறது
    மற்றதெல்லாம் விளக்கம்

    பருத்திச்சேலைத்துண்டோ தாவணியோ வேட்டித் துண்டோ போதுமே!
    ஏரித்தண்ணி – கொளத்துத்துத்தண்ணிய குடிநீராக்க உதவுமே !
    எங்க பாட்டன்தாத்தான் சொல்லிப்போன தூய்மைப்பாட்டு சேதியை
    அகிலமெங்கும் சொல்லி சொல்லி நம்மைப் போற்றுறாங்க பாருங்க!

    ஒசத்தியான வடிகட்டிங்க! செலவில்லாத வடிகட்டிங்க! -ஓஹோ!
    வாட்டமான வடிகட்டிங்க! சுலபமான வடிகட்டிங்க!
    காலராக்கிருமி முதல் பாசி, முட்டைப்புழு பூச்சி வரை
    எல்லாம் தள்ளிப் போக்குத்துங்க ! எல்லாம் தள்ளிப்போகுதுங்க!

    ஒத்தயாப்போடாதீங்க ரெட்டையா-நாலாப் போட்டிடுங்க!
    மடிச்சிமடிச்சிப் போடும்போது சல்லிக்கண்ணு சிறுத்திடுதே!
    ரெண்டுன்னா நாப்பது நாலுன்னா இருபது! மைக்ரான் அளவு அப்படி!
    சேலைக்கொண்டு வடிகட்டினா நீரை அப்படியே குடிக்கலாம்!

    அமெரிக்காவின் பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச் சேலை வடிகட்டி!
    ஐரோப்பா பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
    கீழைநாட்டுப் பாடத்திலயும் நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
    செய்து பார்த்து வியக்குறாங்க! வாழ்த்தி வாழ்த்தி வணங்குறாங்க!

    எங்க பள்ளிக்கூடப் பாடத்துக்கு நிரூபணம் பண்ணறோங்க – நாங்க
    நிரூபணம் பண்ணறோங்க! ஏரிக்குள்ள வடிகட்டிய கசண்டு
    கொண்டு காட்டணுங்க! கசண்டுக்குள்ள கிருமியோட்டம் காட்டணுங்க!
    பளிங்கு போல தண்ணி ஜோரா வடியுதே! நீங்க பார்த்திடுங்க!

  8. வாழ்வுக்கும் தொழிலுக்கும்
    வகையாயொரு யோசனை..!

    உப்புநீரில் மீன்பிடிக்க ஓராயிரம் வழியுண்டு
    ……….ஓரளவு தேர்ச்சிபெற்றால் மட்டுமே சாத்தியம் *
    கப்பலிலே சென்று மீன்பிடிக்கும் வகையால்
    ……….கரைசேராமல் தவிக்கும் அபாயம் அதிலுண்டு *
    தப்பாமல் கரைதிரும்பி வந்து விடுவாரெனத்
    ……….தகுந்த பதிலொன்றும் சொல்வ தற்கில்லையே *
    அப்பாவை எதிர்பார்த்து அவர் குழந்தைகள்
    ……….அலைகடலை நோக்கி நாளும் காத்திருக்கும் *

    வெப்பம்மழை சூறாவளி சுழலும் பேரலையிவ்
    ……….விதுவெலாம் இவர்களுக் கொரு பொருட்டல்ல *
    சிப்பாய்கள் சீருடையில் சிட்டாகப் பறந்துவந்து
    ……….சிறை யெடுப்பார்!தானியங்கித் துப்பாக்கியுடன் *
    முப்போதும் விழித்து மீன்பிடிக்கும் தொழிலில்
    ……….முதலில் கரைசேருவதுதன் அதிலே முக்கியம் *
    இப்போதும் கரைதிரும்பாத எண்ணற்ற பலர்
    ……….இருந்தும்..யாரும் கண்டுகொள்ளா நிலைதான் *

    ஒப்பாரி வைத்தழுதால்கூட இங்கு ஒருவருமே
    ……….உதவிக்கு வரமாட்டார் ஒதுங்கியே நிற்பாரவர் *
    எப்போதுமிருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டு
    ……….இதற்கொரு வழியும் மீன்வளமும் தேடவேணும் *
    இப்பவும் நாம் பார்க்கின்றோம்…கிராமத்தில்
    ……….இருகையால் வலைவீசி மீன்பிடிப்பதை!அதிலும்*
    துப்பட்டாவை விரித்து மீன்பிடிக்கும் சிறுவர்
    ……….செயலே சிறந்ததுபோல் சிலசமயம் தோன்றும் *

Leave a Reply to அவ்வைமகள்

Your email address will not be published. Required fields are marked *