பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

பார்கவ் கேஷவ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “படக்கவிதைப் போட்டி (156)

  1. சந்திரபிம்பம்!!
    ============
    வெய்யில் மங்கி இரவுவர
    வெட்டவெளிக்கருமையை
    விரட்ட வந்து ஒளிபாய்ச்சும்
    வெண்ணிலவின்வெளிச்சம்
    மண்ணுலகின் மகுடம்!!!..
    கண்ணுறங்கும் நேரத்திலே
    விண்ணிருந்து காட்சிதரும்
    வதனத்துச் சந்திரனின்
    வரவினுக்கேங்கி நின்ற
    நிலமகளுக்குள்ளாறே
    நிழல்படிமம் நிஜம் போல!!
    அதனியக்கம்கடவுள்ரூபம்!
    ஆகாயச் சேதி சொல்ல
    ஆனந்தமாய் ஓடி வந்து
    அறிவிக்கும் நிலவுக்குள்ளும்
    அடியெடுத்து வைத்தாச்சு!!
    ஆனாலும்அண்டசலாசரத்தின்
    ஆதியென்ன? அந்தமென்ன??
    அறுதியிட இயலவில்லை..
    நூலிலை மாறாது இயங்குகிற
    நுட்பத்தினால் வையகத்தை
    வழிநடத்தும் இயற்கையன்னை
    எழில் வாழி!! எப்போதும்தப்பாது
    இயக்கும்இறை நீடு வாழி!!!
    (ஏ.ஆர்.முருகன் மயிலம்பாடி..
    பவானி..ஈரோடு..
    9442637264..).

  2. இரவா…? பகலா….?
    என வியக்கும்
    மயங்கொலி
    பிழை….
    கார்மேகத்தின்
    மடியில்
    கதிரவனின்
    கிரணங்கள்
    கண்ணுறங்கும்
    தாய்மை கோலம்….
    இரவுக்கும் பகலுக்கும்
    இடையிலான
    எழிலோவியம்….
    வான்மேகம்
    புகையுண்ட
    ஓவியமாய்
    எழில்கொண்ட காட்சி…
    விண்மீனை
    வரவேற்கும்
    அந்தி வானத்தின்
    சிவப்பு கம்பள
    வரவேற்பு…..

  3. சூரியகாந்தி
    ___________

    வானத்து இளவரசன்
    இங்குமங்கும் வீசி விளையாடும்
    வட்டத்தட்டு

    மஞ்சளாய்ச் சிதறி பூவலம் முடித்து
    செம்மஞ்சளாகிச் சாயம் போகும்
    சாகசக்காரன்

    நீர் நிலைகளில் பிம்பமாகி மிதக்கும்
    குளிர்-நிலா

    வெண்மேகத் திரைச்சீலைளின்
    பின்னால் கண்ணாம்பூச்சியாடும்
    மாயத்திரள்

    மேகங்களுக்கு அப்பால் ஒளிரும் நம்பிக்கை

    வானெங்கும் தங்கமென பரவியிருக்கும்
    பிரபஞ்ச ஜோதி

    கருமேகங்கள் கடத்திப் போயிருக்கும்
    மெய்ப்பொருள்

    உதிப்பதும் பின் மறைவதுமாய்
    கேலிக்கும் காதலன்

    பரிமாணங்கள் பல அணிந்தாலும்
    உயிர்கட்கு ஆதாரமாகி
    சோறூட்டிச் சீராட்டும்
    நீயே எங்கள் சாமி – உன்
    சேயே இந்த பூமி

  4. அவ்விடத்தில் தெரிந்த அந்தி வானம்….!
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    வானக் கூரையின் வண்ண விளக்கு…
    காணக் கண்களுக்கு படைத்தவோர் விருந்து…!
    கொண்டல்கள் நுரையாய் செங்கடல் வானில்..
    தென்படும் காட்சி தெவிட்டாத அமுது…!

    அலைப்பேசிக் கோபுரமொன்று ஒய்யாரமாய் நின்று…
    தொலைவானும் தொட்டுவிடும் தூரமேயென்குது போலும்…!
    நிலையாய் நிற்கின்ற காற்றாலை விசிறிகள்…
    அலையலையாய் வீசும் காற்றுக்கேங்குது போலும்…!

    கடல்போல் தெரிந்த ஏரிகள் குளங்கள்…
    சடம்போல் மனதினைக் கொண்ட மனிதரால்…
    பரப்பில் சுருங்கி குட்டையாய்க்குறுகி இருக்கின்றபோதும்…
    நிறைவாய்த் தெரிந்தது ஆதவனின் பிம்பம்…!

    செம்மையும் கருமையும் ஒருங்கே தெரிவது…
    இம்மையும் மறுமையும் இங்குதான் என்குது…!
    இருளும் ஒளியும் ஒருங்கே தெரிவது…
    இறைவன் உறையும் மனமே என்குது…!

  5. வெண்ணிலவே

    மயக்கும் மஞ்சள் வெய்யில் பரவி நின்றதே

    தன் ஒளியை நீரிலும் மேகத்திலும் பாய்ச்சுதே

    கருமேகங்கள் இடையே மறைந்து காணுதே

    தன்னொளி வீசி வெண்ணிலவாய் காட்சியளிக்குதே !

    இனிய மாலை பொழுதில் தென்றலாய் வீசுகின்றாய்

    காதலர்களுக்கு இன்ப உணர்ச்சியை ஊட்டுகின்றாய்

    எங்களுக்காக காற்றாலை இயக்கி மின்சாரம் அளிக்கின்றாய்

    நாட்டிற்கும், வீட்டிற்கும் ஒளி தந்து உதவுகின்றாய் !

    கைம்மாறு கருதாது இனிய இரவை குளிர்விக்கின்றாய்

    கருமுகில்கள் உன்னை மறைத்தாலும் ஒளி தருகின்றாய்

    மேகங்கள் இடையே எழில் ஓவியமாய் காட்சியளிக்கின்றாய்

    நீரில் உன்முகம் ஒளி பிம்பமாய் தெரிகின்றாய் !

    அந்தி வானமே இரவின் எழிலோவியம்

    உன்னை கண்டு காதலர்கள் பாடுவதோ காதலோவியம்

    தாரகையோடு இருந்து தனித்தே அழகாய் காண்கிறாய்

    காதலியை வர்ணிக்க நீயே எடுத்துக்காட்டாய் இருக்கின்றாய் !

    ரா.பார்த்தசாரதி

  6. மனிதமென்னும்  தீபம்

    எங்கும்  உதிக்கின்ற  சூரியன் 
    ஒன்றுயே  தானாகும்
    எங்கும்  விரிகின்ற  பூமி 
    ஒன்றுயே  தானாகும்

    உறக்கங்கள்  வேறு 
    கனவுகள் ஒன்றுயே  தானாகும்
    இலக்குகள்  வேறு 
    இலக்கங்கள் ஒன்றுயே  தானாகும்
    மொழிகள்  வேறு 
    மனங்கள் ஒன்றுயே  தானாகும்

    இங்கு  எல்லா 
    உயிர்களும்  ஒன்றுயே
    இந்த  ஒற்றுமை
    காணவதே  நன்று

    மனசிலே   ஏற்றுவோம்
    மனிதமென்னும்  தீபம்
    இதில்  பொசிங்கிட்டுப்போகும் 
    சுயநலமென்னும்  பேதம்

    உதிக்கட்டும்  நாளை
    புதிதான விடியல்
    பிறக்கட்டும்  நாளை
    முறையான  மாற்றம்

       – ஜீவா நாராயணன்

  7. கனல் சக்தி, எரிசக்தி, மின்சக்தி

    சி. ஜெயபாரதன், கனடா

    வீட்டில் மின்விளக்கு யாவும்
    கண்மூடி விட்டன !
    தேர்வுக்குப் படிக்க முடியாது !
    மின் விசிறியும்
    விழித்துக் கொண்டு நிற்கிறது !
    எழுந்து கொண்ட பேபி
    அலறல்
    செவிப்பறை கிழிக்குது !
    மிக்ஸிக்கு
    மூச்சுப் போய் விட்டது !
    மாவரைக்க
    முடியாமல் போச்சு !
    மின்சக்தி இன்றேல், வீட்டில்
    நாட்டில் எல்லாம்
    வேலை நிறுத்தம் தான் !
    சூரியன்
    ஊழியம் செய்து
    விடை பெற்றுப் போகுது !
    காற்றாடி களுக்கும்
    கை ஓய்ந்து
    கரன்ட்டில்லையே
    பராபரமே !
    ஓலை விசிறி எடப்பா !
    அரிக்கேன்
    விளக்கைத் துடைப்பா !

    ++++++++++++++

  8. நீயே சொல்…

    காலையில் கிழக்கே பணிதொடங்கி
    காசினி முழுதும் ஒளிகொடுத்து,
    மாலை வானை அழகாக்கி
    மண்ணில் நீர்நிலை முகம்பார்த்தே
    மேலைக் கடலில் பணிமுடிக்கும்
    மேன்மை மிக்கக் கதிரவனே,
    வேலை செய்யா மனிதரவர்
    வாழ்ந்திட வழியைச் சொல்வாயே…!

    செண்பக ஜெகதீசன்…

  9. அந்திப்போது..!
    =============

    அந்திசாயும் நேரத்தில் மட்டுமே வருவாள்
    ……….ஆதவனைத் தேடும் பணிமேற் கொள்வாள்..!
    மந்திரம் செய்வித்தது போலவன் மறைவான்
    ……….மாற்றமிலாமல் நிகழும் நித்தமிது இயற்கை..!
    சந்தி ரோதய மென்றவளை அழைப்போம்
    ……….சூரிய அஸ்தமன மென்றவனைக் கூறுவோம்..!
    சந்திரனும் சூரியனும் காதல்செய்யும் நேரம்
    ……….செவ்விதழ் போலக் கடலேழும் காட்சிதரும்..!

    காலையில் ஆதவனும் இரவினில் சந்திரனும்
    ……….காலமாற்றம் செய்கின்ற காதலர்கள் ஆவரோ..!
    மாலைத் தென்றலும் மலர்ச்சோலை புகுந்து
    ……….மணம் வீசும்! அக்காதலர்களை வாழ்த்துதற்கு..!
    கோலமிட்டு அவர்களை வரவேற்பது போல்
    ……….கடலில் விண்மீனும் தண்ணீரில் புள்ளியிடும்..!
    பாலமாக அமையும் அங்கே அந்திப்போது
    ……….பாங்காக அவர் களிருவரும் சந்திப்பதற்கு..!

  10. ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு நித்திரைக்கலை ஒத்திகை!!

    கருத்திரையுமொளித்திரையும் ஒருமியே விழித்து உறைந்திடுமப்போதிலே
    பருத்திரையுள் புகுந்த கதிர் நீரிலுறை விளம்பிட நித்திலத்துகிலாகுதோ?
    மேருவெனவசையாமல் நிற்கிற விசிறிகாள் சாமரமங்கு வருதோ?
    மருமலரெடுத்துவோ நெடியமுகிலேழும் தாரேந்தி வாழ்த்தும் வலமோ?
    பெருமண்ணே விணாதியாய் மெய்மொழிக்கூறுதோ திருவிக்ரமக்கோபுரம்?
    பருதிமதி பருதியும் பாரும் கடல்விசாலமும் பூராயன் இல்விலாசமோ?
    திருமருகத் தாவரப்பட்சியும் மாக்களும் மக்களும் தொழுதெழுந்து விரைக!
    ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு நித்திரைக்கலை ஒத்திகை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *