சிக்மண்ட் ஃபிராய்டின் ஆளுமைக் கோட்பாடுகள்

0

-ர.நித்யா

 

முன்னுரை

உளவியல் வரலாற்றில் தனிமனித ஆளுமை பற்றிய தத்துவங்களும், கோட்பாடுகளும்  மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. ஆளுமை என்பதே நடத்தையியலைப் பற்றி விளக்குவதாகவே அமைந்துள்ளது. இது ஒரு விளக்க முறைக் கோட்பாடு ஆகும். நடத்தைக்கான காரணிகளைக் கண்டறியும் போக்கில் ஆளுமை உளவியல் தோன்றிற்று. ஆளுமை உளவியல் வரலாறும் , உளவியல் வரலாறும் இணைநிலையானவை. அறிவியலின் தொடக்கமானது கிரேக்கத் தத்துவத்திலிருந்து உருவானது போலவே உளவியலும் மனித உள மெய்ம்மைகளைக் கண்டறிய மூன்று வழிகளை மேற்கொண்டது. அவையாவன,

1.தத்துவம்
2.உடலியல்
3.மருத்துவம் ஆகியவைகளாகும்.

இந்த ஆளுமை உளவியல் மனிதனின் குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கொண்டு உள்ளத்தை தகவமைத்துக் கொண்டன. நடத்தையியலில் சமூக உறவுகளைப் படப்பிடித்துக் காட்டும் சமூக உளவியல் முக்கிய பங்கு வகித்தது. நடத்தை என்பது மனிதன் சமூகத்தில் எப்படிஞ்ள்ளாமல் நோய்வாய்ப்பட்ட மனிதர்களின் நடத்தைகளும் மருத்துவ உளவியலில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நோயாளிகளின் உள இயல்புகளைப் புரிந்துக்கொண்டு மருத்துவம் செய்வது மருத்துவ உளவியலின் முக்கியத்துவமாகும். மருத்துவ உலகிலிருந்து உளவியலை அறிவியல் உலகிற்கு மாற்றியவர்களுள் சார்கோ,பிச்னர், ஃபிராய்ட் போன்றோர் முன்னோடிகளாவர். தத்துவ உலகில் கிரேக்கத் தத்துவஞானி ஹெராகுலிடஸ் என்பவர் “மனித ஆளுமை எல்லையற்றது” என்கிறார். இவரிடமிருந்து துவங்கிய தத்துவார்த்த உளவியல் கோட்பாடுகள் அதன் பின் பரிணாம வளர்ச்சியடைந்தது. ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில் , ஹாப்பிஸ், ஜான் லான், நீட்சே போன்றோர்  தமது கருத்துக்களைத் தத்துவ முறை உளவியலுக்குக் கொடையாக வழங்கினர். இதிலிருந்து உளவியல் வரலாறு போல ஆளுமை வரலாறும் கிரேக்கர்களிடமிருந்தே துவங்கியது என்பதை அறியலாம்.

ஆளுமை விளக்கம்

”PERSONARE’ என்கிற இலத்தீன் சொல் அக்காலத்தில் நடிகர்கள் தாங்கள் இன்னார் என்பதைப் பிறர் இனங்கண்டு கொள்ளாமல் இருக்கப் பயன்படுத்திய முகத்திரையைக் குறித்தது. அதுவே நாளடைவில் நடத்தைகளோடு தொடர்புடைய ஆளுமைக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆளுமை என்பது வண்ணம் போன்றது. ஏனெனில் அனைத்துப் பொருள்களும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தைப் பெற்றிருப்பதைப் போல, ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட ஆளுமைப் பண்புகளைப் பெற்றுள்ளான். வெகுளி, அச்சம், கோவக்காரன், திமிர், பயந்தாங்கொள்ளி, நாணம் போன்ற சொற்கள் நடைமுறையில் பயன்படுத்துவதைக் காணலாம். இவை அனைத்தும் குறிப்பிட்ட மனிதர்களின் பண்புகளைப் விவரிக்கும் ஆளுமைக்கான குணநலன்களாகும். ஆளுமை வளர்ச்சி என்பது மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வளரும் தன்மையுடையது.

சிக்மண்ட் ஃபிராய்டு(1856-1939)  ஆளுமைக் கோட்பாடுகள்

ஃபிராய்ட் அவர்களின் கருத்துப்படி ஆளுமை என்பது மூன்று செயல்களின் கூட்டமைப்பே. அவை.

1.இட்
2.ஈகோ
3.சூப்பர் ஈகோ  போன்றவையாகும்.

இவர் இயக்க ஆற்றல் உளவியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். மனிதனின் வாழ்வுணர்ச்சியினையும், சாவுணர்ச்சியினையும் அடிப்படையாகக்  கொண்டு புதிய சமன்பாட்டை உருவாக்கினார். அவை B= f(LD). அதாவது நடத்தை(Behavior) என்பது இரண்டு உணர்வுகளின் (வாழ்வு மற்றும் சாவுணர்ச்சி) கூட்டமைப்பாகும் என்கிறார்.. இவர் தனது ஆளுமைக் கோட்பாடுகளை மருத்துவ தரவுகள் அடிப்படையில் அளிக்கிறார். நனவிலியே மனித ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்பதே இவரின் கருத்து. மேலும் குழந்தைப் பருவ அனுபவங்கள் மனித ஆளுமையில் பெரும்பங்கு வகிக்கிறது என்கிறார்.  தனியார் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஃபிராய்ட் உளப்பகுப்பாய்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருவரின் உள்ளம் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவரது ஆளுமையும் அமைந்திருக்கும். உள்ளம் என்பது பிறப்பிலிருந்தே வளர்வதாகும். மனிதனின் அனுபவங்களும், வாழ்க்கை முறைகளும் வேறுபட்டு இருப்பதால் உள்ளத்தின் கட்டமைப்பு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.

ஃபிராய்டின் இருமைவாதம்

ஃபிராய்டின் ஆளுமைக்கோட்பாட்டில் மிகவும் இன்றியமையாதது இருமைவாதம் ஆகும். இருவேறுப்பட்ட ஆளுமைப் பண்புகளை விளக்குவதாகும். நனவுமனம் என்று பிளவுபடுகிறதோ அன்று இரு வேறுப்பட்ட ஆளுமைகள் ஒருவரிடத்தில் உருவாகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரட்டை ஆளுமைப் பண்புகள் இருக்கும் என்கிறார். இரு வேறுபட்ட நடத்தைகளே இரட்டை ஆளுமைக்கான உதாரணமாகும்.

நனவிற்கும் , நனவிலிக்கும் தனித்த இயல்புகள் இருப்பதால் முரண்பாடு மற்றும் போரட்டம் ஆகிய அகநிலை சிந்தனைகளிலிருந்து மனித மனம் தப்பிக்க இயலாமல் ஒரு பிறழ்ந்த நிலை உருவாகும். ஃபிராய்டின் ஆளுமைக் கோட்பாட்டிற்கு இந்த இரட்டை ஆளுமையே அடித்தளமாக அமைகிறது. இவரது உளப்பகுப்பாய்வு முழுவதும் ஆளுமைக் கோட்பாடாக அமைகிறது. இவர் தனது ஆளுமைக் கோட்பாட்டில் உந்தல்கள், இறுக்கக் குறைப்பு மற்றும் உள்ளுணர்ச்சி ஆகிய மூன்று உளக்கூறுகளை முன்வைக்கிறார். ஃபிராய்டின் ஆளுமை வளர்ச்சி கோட்பாடு உள இயக்காற்றல் கோட்பாட்டின் சாராம்சமாகும். ஆளுமைக் கட்டமைப்பு செய்வினை மற்றும் படுவினை ஆகிய இரண்டு வழிகளின் கூட்டமைப்பாகும். அதே சமயம் அகச்சார்புடையதாகவும் , புறச்சார்புடையதாகவும் அமையப் பெறும். உளப்பகுப்பாய்விற்கு குழந்தைப் பாலினமே பிரதானமாகும்.

முடிவுரை

அறிவியல் முறை உளவியலின் முன்னோடியாகக் கருதப்படுபவர். ஜெர்மானிய உளவியாளர்களின் உளவியல் துறையில் பெரும் புரட்சி உண்டாக்கியவர். இவர் கண்டறிந்த ஆழத்து உளவியல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவரது மருத்துவ ஆய்வு முறையே அனைத்து ஆய்வு முறைகளுக்கும் உறுதுணையாக இருந்தது. நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதைப் போன்று , உள நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும் என்கிறார். மனிதனின் நடைமுறை வாழ்வில் உண்டாகும் சிக்கல்களினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உளக் குறைகளைக் குணப்படுத்துவது மனநல உளவியல் (Mental Health) ஆகும். இதற்கு நோயாளியின் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஃபிராய்டுக்கு முன்னிருந்த உளவியலாளர்கள் அனைவரும் நரம்பு நோய் ஆய்வில் நனவு நிலைக்கு (conscious) மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர். ஆனால் இவரது உளவியல் பார்வை முற்றிலும் வேறுப்பட்டு நனவிலி மனதிற்கு (unconscious) நிலைக்கு முக்கியத்துவம் அளித்தார் ஃபிராய்ட் அவர்களின் ஆய்வின்படி குழந்தைப் பருவ அனுபவங்கள் பெரும்பாலும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதற்குத் தற்காப்புணர்ச்சி முக்கியக் காரணியாகும். ஆனால் குழந்தைகள் தங்கள் தேவைகளைச் செய்வினையில் நிறைவு செய்து கொள்ள முடியாது. ஆதலால் படுவினையில் பூர்த்திசெய்து கொள்ள விரும்புகிறது. இந்த தேவைகள் முழுவதும் உடலோடு தொடர்புடையவையாகும். ஈகோவின் வளர்ச்சியைப் புறப் புலனறிவுகள் கட்டமைக்கத் தொடங்குகின்றன. குழந்தைகளின் ஈகோ வளர்ச்சி லிபிடோவின் மேலாண்மைக்கு உட்பட்டதாகும். இந்நிலையைப் படிம வளர்ச்சியாகக் கண்ட ஃபிராய்ட் லிபிடோ நிலைக்கேற்ப பாலுணர்ச்சிகளின் குறித்த குறிக்கோள், குறித்த புறநிலை, குறித்த ஆதாரம் ஆகியவை மாற்றத்திற்கு உள்ளாவதை ஈகோ வளர்ச்சியின் திருப்புமுனையாகக் காண்கிறார்.

பார்வை நூல்கள்

1.சிக்மண்ட் பிராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல்
தி.கு.இரவிச்சந்திரன் , அலைகள் பதிப்பகம்
சென்னை-24

2.உளப்போராட்டம்
சண்முகம். டி.இ.,கலைகளஞ்சியம்,தொகுதி-10
தமிழ் வளர்ச்சிக் கழகம்
சென்னை.

3. உளவியல் பன்முகப்பார்வை
பாரதியார் நூலரங்கம், எண்-7,ஆர்.கே நகர்
நாவாவூர் பிரிவு மருதமலை சாலை
கோவை-46

*****

கட்டுரையாளர்
முனைவர் பட்ட ஆய்வாளர்
அரசு கலைக் கல்லூரி
கோவை.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *