-முனைவர் அரங்க.மணிமாறன்

வாழ்வின் உறுதிப்பொருட்கள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம்  வீடு ஆகியவை. இவை இலக்கியங்களுக்கும் பொருந்தும். அந்நான்கு உறுதிப்பொருட்களும் பெற்றவை பேரிலக்கியங்கள் என்றும் ஒன்றிரண்டு குறைந்து வருபவை சிற்றிலக்கியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்கள் தமிழ்மொழியில் அணிசெய்கின்றன. அவற்றுள் பரணி என்பதும் ஒன்று.

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி’1 என்று இலக்கண விளக்கம் பரணிக்கு விளக்கம் அளிக்கிறது.

தொல்காப்பியம் குறிப்பிடும் வாண்மங்கலம், களவேள்வி துறைகளின் வளர்ச்சியே இச்சிற்றிலக்கியம் மலர ஏதுவாகிறது.

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடுவது பரணி எனும் புறத்திணைச் சிற்றிலக்கியம் ஆகும். எண்ணிறந்த பரணி நூல்கள் தமிழில் அணிவகுத்தாலும் அவற்றுள் கலிங்கத்துப்பரணி முதன்மையானதாகவும் சிறப்புடையதாகவும் விளங்குகிறது. இதன் பெருமை கருதியே இதனை இயற்றிய செயங்கொண்டாரின் சமகாலத்தவரான ஒட்டக்கூத்தர் ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று சிறப்பித்தார். ‘பரணிக்கோர் செயங்கொண்டார்’எனவும் புலவர் சிறப்பிக்கப்படுகிறார்.

கலிங்கத்துப்பரணி:

முதற்குலோத்துங்கனின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமான் கலிங்கம் (ஒரிசா) மீது படையெடுத்துச் சென்று அனந்தவர்மனை வென்றதைக் கலித்தாழிசையில் செயங்கொண்டார் பாடியுள்ளார்.பரணி நூல்கள் பத்து உறுப்புகளைக் கொண்டிருக்கும். கலிங்கத்துப்பரணி பதின்மூன்று உறுப்புகளைக்கொண்டுள்ளது.

அவதாரம் இந்திரசாலம் இராசபாரம்பரியம் என்பவை இதில் தனித்தவை.பேரறிஞர் அண்ணாவை மிகவும் கவர்ந்த இதில் இராசபாரம்பரியம் பகுதியில் முதற்குலோத்துங்கனின் பாரம்பரியச் சிறப்பு கூறப்படுகிறது. அதனை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

நாரதர் சொன்ன நயமான வரலாறு:

‘குலவிச்சைக் கல்லாமல் பாகம் படும்’எனும் பழமொழிக்கு விளக்கமாக விளங்கியவன் கரிகாற்சோழன். தாயின் வயிற்றிலேயே அரசுரிமை பெற்றவன். நரைமுடித்து உரைமுடிபு கண்டவன். அக்கரிகால்பெருவளத்தான் வடக்கே இமயம் வரைசென்று பகைவென்று அதன் உச்சியில் தமது புலிக்கொடியைப் பறக்கச்செய்தவன். பொருநராற்றுப்படையும் பட்டினப்பாலையும் இவன் பெருமைகூறும் இலக்கியச்சான்றுகள்.

முக்கால ஞானியாகிய நாரதர் தோன்றி மகாபாரதத்தின் திருமாலும் நீயும் ஒன்றேயாகும் எனப் பூவைநிலையில் புகழ்ந்தார். ‘உமது சோழப்பரம்பரையின் வீர வரலாற்றை யான்கூறுவேன்.  அதனை இமய உச்சியில் உலகறிய நீ எழுதுவாயாக!’ என்று வாழ்த்தி உரைத்ததாக, தொன்மமாக கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியத்தில் விளக்குகிறார் செயங்கொண்டார்.

சோழப்பரம்பரையின் முன்னோர்கள்:

திருமாலின் உந்தித்தாமரையில் பூத்தவன் நான்முகன். அவனிடமிருந்து மரீசி உண்டானான். மரீசி மூலம் உருவானவன் காசிபன். அவனுக்கு சூரியனும் அவனிடமிருந்து மனுவும் அவனுக்கு மகனாக இக்குவாகுப் பிறந்தான். இக்குவாகுவின் மகன் காகுத்தன். அவனுக்குப்பின் முசுகுந்தன்.தேவருக்கு அமிர்தத்தை தந்த பிருதுலாட்சன் தோன்றினான். அப்பரம்பரையில் சிபிச்சக்கரவர்த்தி தோன்றினான்.

முதல் தோன்றல்:

இவர்கள் அனைவருக்கும் முன் சுராதிராசன் என்பவனே சோழப் பரம்பரையின் முதல் தோன்றலாகும். அவனுக்குப்பின் இராசகேசரி-பரகேசரி எனும் இருவர் உலகம் முழுதும் புலிக்கொடி ஏற்றி ஆண்டனர்.சோழன் கிள்ளிவளவன் காவிரியை சோழ நாடு கொணர்ந்த சுவேரன் எமனிடம் நீதிகேட்ட மிருத்யுசித்  கடலில் கால்வாய் வெட்டிய சமுத்திரசித் நீர்வேட்கைகொண்ட ஐந்து இயக்கர்களுக்கு தனது இரத்தநாளங்களை அறுத்து குருதிதந்த பஞ்சபன் வானத்தின் அசைந்த மூன்று கோட்டை அமைத்து பலவகைத்தீமைகளைச் செய்த அசுரரை அழித்த ‘தூங்கெழில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’  பாரதப் போரில் உணவளித்த பெருஞ்சோற்றுதியன் ஆகிய இவர்களே உம் பரம்பரையை விளங்க வைத்தவர்கள் என்றார் நாரதர்.

வரலாற்று அடிப்படையில்:   

கோசரின் பாழியை அழித்த ‘செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி’ சங்க கால முதல் மன்னன். வெண்ணிப்பறந்தலைப் போரில் வென்ற கரிகாலன், கோச்செங்கணான் போன்றோர் சங்க காலத்தவர். பிற்காலத்தில் விசயாலயச்சோழன், முதலாம் பராந்தகன்,  தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக்கட்டிய இராஜராஜன்,  கங்கைகொண்ட சோழேச்சுரம் உருவாக்கிய முதலாம் இராஜேந்திரன், சோழபேரரசின் கடைசி மன்னனாகிய மூன்றாம் ராஜேந்திரன் ஆகியோர் வரலாற்று அடிப்படையில் அறியப்படுகின்றனர்.

சிபிச்சக்கரவர்த்தி:

வேடன் எய்த அம்பினால் பட்டு   தன்காலடியில் வீழ்ந்த புறாவைக் காத்து அதனையதன் தசைக்காக உரிமை கோரிய வேடனுக்கு அதன் தசைக்கு ஈடாக தன் தொடைத்தசையை அரிந்து ஈந்த வீரக்கொடையாளன் சிபிச்சக்கரவர்த்தி.

இதை முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரிய காப்பியமான சிலம்பில் இளங்கோவடிகள் கண்ணகி தன் குடும்ப பாரம்பரியத்தை பாண்டிய மன்னனுக்கு கூறும் முகமாக, 

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’2

என்று விளக்குகிறார்.

இதைக் கலிங்கத்துப்பரணியில்,

உடல் கலக்கு அற அரிந்து தசையிட்டும் ஒருவன்
ஒருதுலைப் புறவோடு ஒக்க நிறைபுக்க புகழும்’  3(191)

என்று செயங்கொண்டார் விளக்குகிறார்.

தனிநீதி கண்ட  மனுநீதிச்சோழன்:

பிள்ளைப்பேறின்றி வருந்தி  இறையருளால் பெறற்கரிய மகனாகப் பிறந்தவன் வீதிவிடங்கன். விளையாட்டாய்த் தேரைச்செலுத்தி ஒரு பசுவின் கன்றை அறியாது கொன்றான். தன் கன்றை இழந்த பசு வருந்தி மனுநீதிச்சோழனின் ஆராய்ச்சி மணியை அடித்தது. வாயற்ற ஜீவனாக இருந்தாலும் அதன் மாற்ற இயலாத துயரை நீக்க தன் ஒரே மகனையும் நீதியை நிலைநாட்டும்பொருட்டு தனது தேர்க்காலில் இட்டுக் கொன்றான்.

இதைச்  சிலப்பதிகாரம்,

வாயின் கடைமணி நடுநாநடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்
தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்’4
என்று கூறுகிறது.

இதனைச் செயங்கொண்டார்,

அரிய காதலனை ஆவினது கன்றுநிகர் என்று
எவ்வருக்கமும் வியப்ப முறைசெய்த கதையும்’5 (188)
என்று பாடுவதன் வழி அறிய முடிகிறது.

கங்கைகொண்டான்:

தன்னுடைய யானைப் படைகள் கங்கை ஆற்றுநீர் உண்டு களிக்கும்படி கங்கைக்கரை வரையிலும் படையெடுத்துச்சென்று பகைவரை வென்றவன் முதலாம் பராந்தக சோழன்.இவனே ‘கங்கைகொண்ட சோழன்’ எனப்படுகிறான்.

களிறு கங்கைநீர்  உண்ண மண்ணையில்
காய்சினத்தோடே கலவு செம்பியன்
குளிறு தெண்திரைக் குரை கடாரமும்
கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்’6(203)

என்று பாடுகிறார்.

ஒட்டக்கூத்தர் தனது மூவருலாவில்,

கங்காநதியும் கடாரமும் கைவர
சிங்காதனத்திருந்ந செம்பியர்கோன்’7

என்று குறிப்பிடுகிறார். விசயாலய சோழன் பாண்டியர்களை வென்றவன்.இலங்கையை வென்றவன்.தனது உடலில் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப்பெற்றவன்.

சீறும்செருவில் திருமார்பில்
தொண்ணூறும் ஆறும் படுதழும்பின் ஆகத்தோன்’8

என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார். திருமுறைகளைத் தொகுத்தளித்த இராஜராஜசோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டியவன்.

பாட்டுடைத்தலைவன் முதற்குலோத்துங்கன்:

இராசேந்திர சோழன் பேரனும் இராசராசனின் மகனுமாகிய முதற்குலோத்துங்கன் இக்கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன். கலிங்கம் வென்றதனால் ‘திரிபுவனச்சக்கரவர்த்தி’என்றும் சுங்க வரியை நீக்கியதால் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’எனவும் சிதம்பரம் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்ததால் ‘பொன்வேய்ந்த சோழன்’ எனவும் புகழப்பட்டவன். முதுபேய் இப்பெருமைகளைக் காளிதேவியிடம் கூறியது. காளி‘பூவுலகை எல்லாம் காக்கும் பெருமை பெறுவான்’என வாழ்த்தினள்.

உலகை எலாம் கவிக்கின்ற ஒரு கவிகை
சயதுங்கன் மரபின் கீர்த்தி
அலகை எலாம் காக்கின்ற அம்மை பூ
தலம் காப்பான் அவனே என்ன’ 9 (212)

பூமகளும் அவனைப் பெற்ற நாளினும் அவன் குலப்பெருமையும் புகழும் கேட்ட இந்நாளில் ஆனந்தப்படுகிறேன் என வாழ்த்தினாள். 

முடிவுரை:

சோழர் பெருமை சொல்லில் அடங்காதது. கேட்டவை கேட்டு உரைத்தவை  ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு பதச்சோறு. நம் முன்னோர் மரபும் பெருமையும் நம்மை ஊக்கப்படுத்தும் என்பது திண்ணம்.

அடிக்குறிப்பு:

1.இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர் நூற்பா .839
2.சிலப்பதிகாரம் (வழக்குரை காதை) 51-52(தென்னிந்திய நூற்பதிப்புக் கழகம் சென்னை)
3.கலிங்கத்துப் பரணி – இராச பாரம்பரியம் பாடல் வரி 191(உமா பதிப்பகம் மண்ணடி-சென்னை)
4.சிலப்பதிகாரம் வழக்குரை காதை 53-55
5.கலிங்கத்துப் பரணி 188
6.மே.கு.நூல் 203
7.மூவருலா -ஒட்டக்கூத்தர் 34 (சிட்டு நூலகம் சென்னை 17)
8.மே.கு.நூல் 50
9.கலிங்கத்துப் பரணி 212.

*****

கட்டுரையாளர்
முதுகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி
செங்கம்-606701
திருவண்ணாமலை  மாவட்டம்
பேசி: 99430 -67963.

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கலிங்கத்துப் பரணியில் சோழர் வரலாறு

  1. எனது கட்டுரையை வெளியிட்டமைக்கு வல்லமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!வல்லமையின் சேவை பல்லூழி வளர்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *