பரிபாடல் – கடல்சார் பதிவுகள்

 

 

 

 

கா.பெரிய கருப்பன்

முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழ்த்துறை

தியாகராசர் கல்லூரி,

மதுரை-09

 

முன்னுரை

மிகப்பழமையும், தொன்மையும் வாய்ந்த நம் தமிழ்மொழியின் அடையாளங்களுள் குறிப்பாக விளங்குவன சங்கஇலக்கியங்கள். அச்சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஐந்தாவது நூலான பரிபாடலில் இடம்பெறும் கடல்சார் பதிவுகளை இக்கட்டுரை ஆராயவிருக்கிறது.

பரிபாடல் விளக்கமும் சிறப்பும்

திருமாற்கு இரு நான்கு செவ்வேட்கு முப்பத்

              தொருபாட்டு@ காடுகாட்டு ஒன்று மருவினிய

              வையை இருபத்தாறு மாமதுரை நான்கு என்ப                    

             செய்ய பரிபாடல் திறம்”                    (பரிபாடல், அணிந்துரை,பொ.வே.சோ.உரை, ப.13)

எனும் செய்யுளால் சுட்டப்பெறும் பரிபாடலின் கண்ணும் தற்போது கிடைத்துள்ளதாக தமிழ்ச் சான்றோர்களால் சுட்டப்பெறும் இருபத்திரண்டு பாடல்கள் வழியும் ஆய்வுபோக்கு அமைகிறது. பரிபாடல் என்பது பா வகைகளுள் ஒன்றெனக் குறிக்கின்றனர். இதன் இயல்பை “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிருபாவினும்”(தொல்காப்பியம், அகத்.சூத்-56, ப-70) தொல்காப்பியம் கூறுகிறது. “இது உறுதிப்பொருள் நான்கனுள் (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) இன்பத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு பாடப்பெற்றுள்ளது என்று பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்” (தொல்காப்பியம், இளம்பூரணர் உரை)

அதனோடமையாது, ‘ஓங்கு பரிபாடல்’ என்றும் ‘துங்கமலி கடலுள் அரிதின் எழுந்த பரிபாட்டமுதம்’ என்றும் தமிழ்ச் சான்றோர்களால் குறிக்கப்பட்டுள்ளது.

கடல்-நூல்கள் தரும் விளக்கம்

கடல் பற்றி பல்வேறு நூல்களும் அகராதிகளும் விளக்கம் தந்துள்ளன. அவற்றுள்,

“உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு கொண்ட நீர்நிலையே” (அபிதான சிந்தாமணி ப.385,ஆகஸ்ட் 2010)   கடல் என்கிறது அபிதான சிந்தாமணி.

“புவியின் மேற்பரப்பில் 71% உப்பு நீர்ப்பரப்பிலானது. இந்நீர்ப்பரப்பின் பகுதிகள் கடலெனப்படுகிறது” (அபிதான சிந்தாமணி ப.385,ஆகஸ்ட் 2010)

“இதன் ஆழமானது 14,00,00,000 (பதினான்கு கோடி சதுரமைல்கள் கொண்டது” (அபிதான சிந்தாமணி ப.386,ஆகஸ்ட் 2010) என்றும் தொடர்ந்த விளக்கங்களை அந்நூல் குறிப்பிடுகின்றது.

கலைக்களஞ்சியமோ, உலகைச் சூழ்ந்த நீர்ப்பரப்பு. இது பெரும்பாலும் உப்புநீர் கொண்டது. அவ்வாறு இருப்பதற்குப் பல காரணங்கள் கூறுகின்றனர். உலகம் முதலில் அக்னி கோளமாகவும் இருந்தது. அது வரவரக் குளிர்ந்து பூமியாக, அதிலுள்ள உப்புச் சேர்ந்த பொருள் கரைந்து கலப்புற்றதெனவும் மலை, மரம் பூமிகளுடன் இயற்கையில் சேர்ந்துள்ள உப்புகள் நெடுங்காலமாக ஆற்றினால் கொண்டு சேர்க்கப்படுவதாலும் உப்புநீராகக் கடல் உள்ளது (கலைக்களஞ்சியம், தொகுதி மூன்று,ப.49)

மொழிப் பயன்பாட்டு வழி கடல்சார் பதிவுகள்

இலக்கியத்தில் மொழிப்பயன்பாடு என்பது இன்றியமையாதது. அம்மொழிப்பயன்பாட்டு நிலையில் கடல்சார் பதிவுகள் காணலாகிறது.

உவமப்பொருள் – கடல்

அதனை,

அகரு வளழ ஞெமை ஆரம் இணையத்

            தகரமும் ஞாலமுந் தாரமுந் தாங்கி

            நளி கடல் முன்னியது போலுந் தீநீர்

            வளிவரல் வையை வரவு (பரிபாடல் (12/5-8) வையை)

என்ற பரிபாடலின் வழி

அகிலும், சுரபுன்னையும், ஞெமை மரமும், சந்தன மரமும் வருந்தும்படி செய்து தகரமரம், ஞாழல்மரம், தேவதாமரம் எனும் இவற்றைச் சாய்த்து ஏந்திக் கொண்டு காற்றுப்போல விரைந்து வருகின்ற வைகை ஒரு பெருங்கடலை ஒக்கும் என்று நல்வழுதியார் எனும் ஆசிரியர் வையை ஆற்றைக் கடலோடு ஒப்பிட்டுக் கூறிச் சென்றுள்ளதன் வழி பரிபாட்டுப் புலவரின் கற்பனை நயம் வியக்கத்தக்கதே

காட்சிப்பொருள்

மொழிப் பயன்பாட்டு நிலையில் காட்சிப்பொருள் என்பது புலவர்களிடம் இன்றியமையாக் களனாக கைக்கொண்டுள்ளனர் என்பதை,

மன்றல் கலந்த மணிமுரசி னார்ப்பெழக்

             காலொடு மயங்கிய கலிழ் கடலென

             மால்கடல் குடிக்கும் மழைக் குரலென

             ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென

             மன்றல் அதிரஅதிர மாறுமாறு அதிர்க்கும்நின்

             குன்றம் குமுறிய உரை   (பரிபாடல், (8/30-32) செவ்வேள்)

என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

அதாவது,

மதுரையில் திருமண விழாவில் முரசு முழங்கியது எனவும், அம்முழக்கம் கடலிலே காற்று வீச எழுகின்ற அலைகளின் ஊடே உண்டாகும் ஓசை போலவும், நீரை முகக்கும் மேகமுழக்கம் போலவும், இந்திரனது இடியேற்றின் அதிர்ச்சி போலவும் இருந்தது. ஆனால் பரங்குன்றில்; முழங்கிய முழக்கம் அதற்கு மாறாக இருந்தது என்று கூறுமிடத்து, கடலை பல நிகழ்வுகளோடு சேர்த்து ஒரு காட்சிப் பொருளாகக் கூறிச் சென்றுள்ளார். அங்ஙனம் புலவர் நல்லந்துவனார் கடல் எனும் நெய்தல் நில முதற்பொருளை மருதநிலத்து நிகழ்வோடு கூறும் முகத்தான் கடலை ஒரு காட்சிப் பொருளாகக் கொண்டு சென்றுள்ளதன் வழி புலவரின் மொழிப்;பயன்பாட்டுத் திறன் வெளிப்படை என்றே கூறலாம்.

மரபு வழிப்பயன்பாடு கடற்சார் பதிவுகள்

கடலின் தன்மை

மரபுச் செய்திகள் இலக்கியத்தில் புலவர்களால் அவ்வப்போது குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

மலைவரை மாலை அழிபெயல் காலைச்

             செலவரை காணாக் கடல் அறைக்கூட

             நிலவரை அல்லல் நிகழ்த்த விரிந்த

             பலவுறு ‘போர்வைப் பருமணல் மூஉய்” (பரிபாடல், (10/1-4) வையை)

 

என்ற பரிபாடலின் வழி விளக்குகிறார் கரும்பிள்ளைப்பூதனார்.

அதாவது ஆறு என்றால் அது தோன்றி மறையும் இடம் என்று ஒன்று வேண்டுமல்லவா? அம்மரபுப்படி வையை ஆறானது மலையிடத்தே பெய்த பெருமழையின் காரணமாக காலைப்பொழுதிலே கடலோடு கலக்கும் காட்சியைப் புலவர் மரபு வழுவின்றி எடுத்துரைத்துள்ள பாங்கு வெளிப்படை

இதன்வழி       ஓர் ஆறானது தோன்றி வரும் வழிகளில் வளம் கொழிக்கச் செய்து பின் கடலிலே கலப்பது தான் மரபு என்ற செய்தி பரிபாடலில் சுட்டப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

மலைப்பொழிவும் – கடலும்

பரிபாடலில் மழைப்பொழிவு எவ்வாறு உண்டாக வேண்டும் அதற்குக் நிலைக்களனாவன எவை? எவை? என்பதை மரபின்வழி நின்று விளக்கும் முகத்தான்,

காலைக் கடல்படிந்து காய்கதிரோன் போயவழி

            மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான்

            வானாற்று மழைதலைஇ மரனாற்று மலர் நாற்றம்

தேனாற்று மலர்நாற்றஞ் செறுவயல் உறுகாலை (பரிபாடல், (20/6-9) வையை) என்ற பரிபாடல் வரிகளின் மூலம்

 

‘மேகமானது காலைப் பொழுதிலே கடலிலே படிந்து அக்கடல் நீர் குறைவுபட முகந்து சுடாது நின்று ஞாயிறு போன வழியே. மேற்கு திசைபோய் மாலைப்பொழுதிலே மலையை அடைந்து இம்மண்ணுலகத்து வாழும் உயிர்களை எல்லாம் உறங்கா நின்று இராப்பொழுதெல்லாம் தானுறங்காதே வழங்கி மழை பெய்தலானே’ என்று மழை பெய்யும் மரபினைச் சுட்டுமிடத்து அம்மலைக்கு நீரை அளிப்பது கடல் என்று ஆசிரியர் நல்லந்துவனார் சுட்டிச் செல்கிறார். இக்கருத்தை வலியுறுத்தும் விதமாக பிறிதோரிடத்தில்

 

நிறைகடன் முகந்துராய் நிறைந்துநீர் துளும்புந்தம்

            பொறை தவிர் பகைவிடப் பொழிந்தன்று வானம்

           நிலமறை வதுபோன் மலர்புன றலைத்தலைஇ (பரிபாடல், (6/1-3) வையை)

 

என்ற வரிகளில்

மேகங்கள் நீர் நிறைந்த கடலின் கண் உள்ள நீரை முகந்து கொண்டு வானத்தின் கண் எங்கும் பரவி நீர் நிறைதலாலே தம்பாறம் தீர்ந்து இளைப்பாறுதற் பொருட்டுப் பெய்வது போல  என்ற இடத்தில்

மழைபெய்யும் நிகழ்வினை மரபு மாறாது கூறிச்செல்லும் கணம் மழை பெய்வதற்குக் கடலின் இன்றியமையாத் தேவையை மறைமுகமாகச் சுட்டிச் சென்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

தொன்மைக்கு சான்றாகும் கடல்

மக்களுடைய வாழ்க்கை நிலையை அறிய தொன்மைச் செய்திகள் சான்றாகிறது. அத்தொன்மைச் செய்திகளை அறிய இலக்கியங்களும் சான்றாக அமைகின்றன.

அங்ஙனம், செவ்வேள், திருமால், வையை குறித்தப் பரிபாடலில் கடல் எனும் நெய்தல் நில முதற்பொருளை அப்பாடல் செய்த புலவர்கள் உவமை தோன்றக் கூறியுள்ளனர். அதில்,

பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்

            சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம ருழக்கித்

            தீயழல் துவைப்பத் திரியவிட் டெறிந்து

            நோயுடை நுணங்கு சூர் மாமுதல் தடிந்து (பரிபாடல், (5/1-4) செவ்வேள்)

என்கிற பரிபாட்டு வரிகளில், தீய குணம் கொண்ட சூரபன்மனாகிய கொடியவனை முருகப்பெருமான் பிணிமுகம் என்றும் யானை ஏறிக் கொன்ற தொன்மைச் செய்தியைக் கூறுமுகத்தான் ஆசிரியர் கருவனிளவெயினனார் கடலில் அதன் குளிர்ந்த தன்மை கொண்ட பாறைகள் நொறுங்குவதாகவும் கூறிச்செல்கிறார். இதன்கண் செவ்வேள் குறித்தப் பதிவுகளில் கடல் பற்றிய பதிவுகள் கிடைப்பதைக் காணமுடிகிறது.

மற்றொரு இடத்தில் ஆசிரியர் நல்லந்துவனார்,

ஒய்யப் போவாளை யுறழ்ந் தோளிவ் வானுதல்

வையை மடுத்தாற் கடல் எனத் தெய்ய

நெறிமண னேடினார் செல்லச் சொல் லேற்று

செறிநிறைப்பெண் வல்லுறழ் பியாது தொடர்பென்ன (பரிபாடல், (20/40-44) வையை)

என்கிற வரிகளை உடைய பாடலில்,

தோழியர் கூட்டம் தலைவனைப் பற்றி உரையாடவும், அது கேட்ட பரத்தை அத்தோழியர் கூட்டத்தினூடே சென்று மறைந்து கொண்ட செய்தியைக் கூறுமிடத்து வையையை பரத்தைக்கும், கடலை மகளிர் திரளுக்கும் உவமை தோன்றக் கூறிச் சென்றுள்ளார் நல்லந்துவனார்.

இதன்வழி ஆசிரியர் நல்லந்துவனார் கடலை உவமை தோன்றக் குறிப்பிட்டுச் சென்றுள்ளமை வெளிப்படை. மேலும் வையை ஆறானது கடலிலே சென்று புகுந்தாற்போன்று எனக் குறிப்பிட்டுள்ளமையால் வையை ஆறானது பரிபாடல் செய்யப்பட்ட காலத்தில் கடலில் கலந்த தொன்மைச் செய்தியை நல்லந்துவனார் வழி நாம் அறியமுடிகிறது.

இவ்வாறு பரிபாடலிலும் தொன்மைச் செய்திகள் குறித்தப் பதிவுகளில் கடல் என்னும் நெய்தல் நில முதற்பொருள் சுட்டப்பெற்றுள்ளது.

திருமால்

திகழ்பெழ வாங்கித் தஞ்சீர்ச்சிரத் தேற்றி

            மகர மறிகடல் வைத்து நிறுத்துப்

            புகழ்சால் சிறப்பின் இடுதிறத் தோர்க்கும்

            அமுது கடைய.. இருவயினாணாகி (பரிபாடல், (23/65-68) திருமால்)

என்ற பரிபாடல் வரிகளில் காணமுடிகிறது.

அதாவது திருமால் அமிழ்தம் கடைய வேண்டி மந்தரமலையை ஆமை உருக்கொண்டு கடைந்த தொன்மை நிகழ்வினை உறுதிபடுத்தும் விதமாக தொல்காப்பியச் செய்யுளியலில் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டிச் சென்றுள்ள பரிபாடல் வரிகளில் கடல் குறித்தப் பதிவுகள் காணப்படுகின்றன.

இவ்வாறாக கடல்சார் பதிவுகள் பரிபாடல் எனும் சங்க இலக்கிய நூலில் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. அது மொழிப்பயன்பாட்டு திறத்தின் கண்ணும்,  மரபுச்செய்திகள் வழியும் தொன்மைச் செய்தியை நிறுவும் முகத்தானும் நமக்கு என்றும் துணைநிற்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

முடிவுரை     

  1. கடல் குறித்த விளக்கத்தை நோக்குமிடத்து ஆறு (6) வகையான பொருட்கள் கலந்த நீர்நிலையே கடல் என்பதும் இங்கு தெளியப்பெறுகிறது.
  2. மொழிப்பயன்பாட்டு நிலைகளை ஆராயும்போது கடலினை உவமப் பொருளாகவும், காட்சிப்பொருளாகவும் சுட்டிச் சென்றுள்ளமையை பரிபாடல் புலவர்கள் வழி அறியமுடிகிறது.
  3. பரிபாடலில் மரபு வழிச் செய்திகளை ஆராயுமிடத்து கடல் குறித்த பதிவுகள் காணலாகிறது.
  4. வையை கடலில் கலக்கும் செய்தியை நல்லந்துவனார் வழி நம்மால் அறியமுடிகிறது.
  5. ஆறானது தோன்றி வரும் வழியெங்கும் வளம் கொழிக்கச் செய்வதே அதன் மரபு என்பது கரும்பிள்ளைப்பூதனார் வழி இங்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது.
  6. மழைப்பொழிவிற்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும் கருவிகளுள் கடல் என்பது இன்றியமையா இடத்தைப் பெற்றுள்ளது என்பதுஉம் திண்ணம்.
  7. தொன்மை நிகழ்வுகளை கூறுமிடத்து பரிபாடற் செய்த புலவர்கள் கடல் என்ற நெய்தல் நிலமுதற்பொருளை உவமை தோன்ற எடுத்துக் கையாண்டுள்ளனர் என்றே கூறவேண்டும்.
  8. செவ்வேள் குறித்தப் பதிவுகளில் சூரபன்மனை அழித்த தொன்மை நிகழ்வைச் சுட்டுமிடத்து உவமப் பொருளாக கடலை ஆசிரியர் சுட்டிச்சென்றுள்ளமை வெளிப்படை.
  9. திருமால் குறித்தப் பதிவுகளில், திருமால் அமிழ்தம் வேண்டி மந்தரமலையை கடைந்த தொன்மை நிகழ்வுகளை எடுத்து இயம்புமிடத்து கடல் குறித்தப் பதிவுகள் காணக்கிடக்கின்றன.

Share

About the Author

has written 1019 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.