வரவேற்போம் வாருங்கள் !

எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

         தைபிறந்தால் வழிபிறக்கும்

               தானென்று நாம்நினைப்போம்

        தைமகளும் சேர்ந்துநின்று

               சித்திரையை வரவேற்பாள்

         பொங்கலொடு கிளம்பிவரும்

                புதுவாழ்வு தொடங்குதற்கு

         மங்கலமாய் சித்திரையும்

                 வந்துநிற்கும் வாசலிலே  !

 

         சித்திரை என்றவுடன்

                அத்தனைபேர் மனங்களிலும்

         புத்துணர்வு பொங்கிவரும்

                புதுத்தெம்பு கூடவரும்

         எத்தனையோ மங்கலங்கள்

                 எங்கள்வீட்டில் நிகழுமென

          மொத்தமாய் அனைவருமே

                   முழுமனதாய் எண்ணிடுவார் !

 

           உழவரெலாம் மகிழுதற்கு

                    உதவிடட்டும் சித்திரையும்

            உழைப்பவர்க்கு மனநிறைவை

                     ஊட்டிடட்டும் சித்திரையும்

             நாட்டினிலே அமைதிவர

                      நல்வரவாய் இருந்திடட்டும்

             நமையெல்லாம் மகிழ்விக்க

                      சித்திரையை வரவேற்போம் !

 

               ஈழத்தில் சித்திரையும்

                       இனிப்பாக இருக்கட்டும்

               இந்தியாவில் சித்திரையால்

                        எல்லோரும் சிறக்கட்டும்

                வாழவந்த நாட்டினிலும்

                          மனங்குளிரச் செய்யட்டும்

                 வாழ்த்திநின்று சித்திரையை

                           வரவேற்போம் வாருங்கள் !

Share

About the Author

ஜெயராமசர்மா

has written 342 stories on this site.

பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர். தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார். பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.